நான் சிவனைப் போல் பரிபூர்ணமானவன் என்று உணர்வதே சிவராத்திரி - மாதா அமிர்தானந்தா

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீமகா அவதூது பாபா

பண்டரீபுரத்தில் அபரஞ்சித ஸ்வர்ண ரேகைகள் பாய்ந்த தங்க ஜோதித் தாமரையில் தவழ்ந்து உதித்த ஸ்ரீமஹா அவதூது பாபா இப்பூவுலகில் தம் திருவடிகளை எடுத்து வைக்க  ... அவர்தம் பொற்பாதங்கள் பதிந்த திருமண்ணைத் தேவர்கள் தத்தம் லோகங்களுக்கு எடுத்துச் சென்று அதன் மகிமையால் பல பேறுகளைப் பெற்றனர்.
தெய்வீக குழந்தையாம் ஸ்ரீமஹா அவதூது பாபாவிற்குச் சந்திர பகவானே தங்கக் கிண்ணத்தில் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி அருளிய திருக்கயிலாய அமிர்தம் சொரியும் அமுதினை ஊட்டுவித்தார். அன்றிலிருந்தே நிலாவைக் காட்டிக் குழந்தைகளுக்கு அமுதூட்டும் நற்பழக்கம் உருவாயிற்று.

If you are a boss, keep your servants always engaged. If you are a servant, keep your boss engaged always. பெரிய வாத்தியார் நம் சற்குருவின் மனது எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்படியே வைத்து இருந்தார். உதாரணமாக, கல்மண்டபம் அங்காளியை 1,008 முறை சுற்றியபின் திருஒற்றியூருக்கு 12 மைல் வேகமாக நடக்க வைத்தார். இடையில் எங்காவது சிறுநீர் கழிக்க ஒதுங்கினால் கூட, உடனே கண்ணில் படாமல் மறைந்து விடுவார். தேடியவாறே வேகமாக ஓடினால், பின்னால் இருந்து கூப்பிடுவார். இன்று வரை புரியாத புதிராகவே இருக்கின்ற விஷயம் இது.

அமுத நிலவொளியில் தாய் ஊட்டும் உணவைப் பெறும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஸ்ரீமஹா அவதூது பாபாவிற்கு தாயென முதலமுது ஊட்டும் பேறு பெற்ற சாட்சாத் ஸ்ரீசந்திர பகவானே மதிகாரகனாய் அவர்கள் கோளமைப்பின் நல்லிடத்தில் அமர்ந்து ஸ்ரீபாபாவின் அனுக்கிரகத்தையும் நன்மதியையும் அருளாசியாக ஊட்டி வழங்குகின்றான்.
ஸ்ரீசந்திர பகவானின் நிலவமுது உண்டு திளைத்த தெய்வீக குழந்தை, புனிதம் பெற்ற சந்திரபாகா நதியோரம் நடந்து செல்லலாயிற்று.
ஸ்ரீமஹா அவதூது பாபா அவதரித்தவுடன் விண்ணுலகில், “யானே இக்குழந்தையின் முதல் தெய்வீகத் திருப்பணியை நிறைவேற்றுவேன்” என்று பல்லாயிரக்கணக்கான அசரீரிகள் எழுந்தன. இவ்வாறு முதல் குரலை எழுப்பியவர் வைகுண்டப் பெருமாளாகிய ஸ்ரீமகாவிஷ்ணு ஆதலின் அவருக்கே அத்திருவாய்ப்புக் கிட்டியது.
ஸ்ரீநாராயண மூர்த்தி தம் திருக்கரங்களை அசைக்க, அங்கே அஷ்ட வசுக்கள் எழுந்தருளினர். பிரத்யுஷா என்னும் முதல் வசு முன்வந்து பெருமானை நமஸ்கரிக்க, “பிரத்யுஷா! எம் ஆசியுடன் ஸ்ரீமஹா அவதூது பாபாவின் முதல் திருப்பணியை நிறைவு செய்வாயாக. யாம் விட்டலாவதாரம் கொண்டு பின்னர் வருவோம்” என்று ஆசிர்வதித்தார்...
பிரத்யுஷாவான அந்த வசு பூலோகத்தை அடைய .....
ஒரு கோசாலையில் ஆயிரக்கணக்கான பசுக்கள் கோலாகலமாக. உலவ .... பாலும் , வெண்ணெயும் பாற்கடலெனத் திரண்டு ஓட...... தேவர்களும் , மனிதர்களும் கோபூஜையில் திளைத்துப் பரவசம் காண ..... கோடிக்கணக்கான தேவதைகளும், அனைத்துத் தெய்வங்களும் ஒன்றாகப் பரிணமிக்கும் ஒப்புயர்வற்ற ஜீவன்கள் அல்லவோ திருப்பசுக் கூட்டம்! பசுக்களின் பரப்பிரம்மமாம் காமதேனு தாய்மையுடன் பூரித்து நிற்க ... விண்ணோர்கள் தெய்வ நாதம் முழங்க காமதேனு ஓர் அழகிய ஆண்மகவை ஈந்தனள்., அவரே பிரத்யுஷா பசு!
ஆம் ஸ்ரீமந் நாராயணன் ஆசியுடன்  முதல் (அஷ்ட) வசு பானுதாஸர் என்னும் சிறு குழந்தையாய், சந்திரபாகா நதிக்கரையோரம் தவழ்ந்து சென்றார்....
எதிரே ஸ்ரீமஹா அவதூது பாபா தெய்வக் குழந்தையாய், அன்னநடை மிளிர, பானுதாஸரை அரவணைக்க, ஸ்ரீபாபா அற்புத ஜோதியாய் வானில் மறைந்தார். பின் பலகோடி மின்னல் கீற்றுகள் ஜோதிப்பிழம்பாய் தன்னுள் உறைந்ததை உணர்ந்து ஞானம் பெற்ற பானுதாஸர், “நாராயணா! நாராயணா!” எனக் குதூகலித்தவாறு, கோவிந்த நாம ஸ்மரணையில் திளைக்கலானார்.
ஆண்டுகள் பல உருண்டோடின சென்ற இடமெங்கும், ஸ்ரீதரனாம் வைகுண்டப் பெருமானின் பக்தியைப் பரப்பியவாறே பானுதாஸர் அற்புதமான இறைப்பணி புரிந்து வந்தார் .
(மஹா அவதூது பாபா அவதார காலத்திற்கும் , ஸ்ரீபானுதாஸர் காலத்திற்கும் இடையே பலகோடி யுகங்களில் நிகழந்த ஸ்ரீபாபாவின் அவதார லீலைகளை எடுத்துரைக்க யுகங்கள் காணாது. கால வரையறையில் குறுக்க இயலாக் கயிலாயப் பெருஞ் சித்தர் இவர். இதற்குப் பிறகு, ஸ்ரீபண்டரீபுர விட்டலநாதன் அவதாரம் பெறுகிறார். விட்டல சரிதம் அடியார்கள் அறிந்ததே... ஆதலின் விட்டல அவதாரத்தின் பின்னணியிலிருந்து ஸ்ரீமஹா அவதூது பாபாவின் அவதார லீலைகளைத் தொடர்கிறோம் ....,)

ஆம் ! ஸ்ரீவிட்டல நாராயணர் அவதரித்து விட்டார்! ஸ்ரீபானுதாஸரும், அவருடைய பல்லாயிரக்கணக்கான சீடர்களும், ஸ்ரீவிட்டல நாதனின் மஹிமையை யாங்கணும் பரப்பி வருகின்றனர்.
விஜய நகரத்தை ஆண்ட ராமராயன் பண்டரீபுர விட்டலனின் மஹிமையை உணர்ந்து தன் பரிவாரங்களுடன் பண்டரீபுரம் வந்து சேர்ந்தான். விட்டலநாதனின் திருஉருவம் அவன் கண்களை விட்டு அகலவில்லை . பேரரசனாயிற்றே! [ஆன்மீகப்] பேராசை கொண்டான்,
ஸ்ரீவிட்டலனின் திருவிக்ரகத்துடன் ஸ்ரீபண்டரீபுர கோயிலையே பெயர்த்தெடுத்துச் சென்று தன் நாட்டில் ஹம்பியில் புதுக் கோயிலை நிர்மாணித்தான். ஸ்ரீவிட்டலநாதனின் வழிபாட்டை உண்மையான பக்தியுடன் பரப்பி வந்தான். ஸ்ரீவிட்டலபுரத்தானோ மௌனமாக அனைத்தையும் ரசித்தவாறே திருவிளையாடல்களை நடத்திக் கொண்டிருந்தான்.
பானுதாசர், ஸ்ரீவிட்டலநாதரின் தரிசனத்திற்காக ஏங்கி ஏங்கி, உடலும் உள்ளமும் உருகத் துதித்துத் தன்னைக் குழந்தைப் பருவத்தில் ஆட்கொண்ட அவரைப் பண்டரீபுரம் மீட்க ஸ்ரீமஹா அவதூது பாபாவின் அருளை வேண்டினார்.
“பானுதாஸா! உன் மூலமாகவே ஸ்ரீவிட்டலநாதன் லீலா விநோதம் புரியத் துடிக்கின்றான். அதனை யாம் ஒரு கருவியாக நின்று நிறைவேற்றுவோம். ஹம்பிக்குச் செல்வாயாக!” என்று அருளாணையிட்டார் ஸ்ரீஅவதூது பாபா.
ஹம்பிக்குச் சென்ற பானுதாஸர் ஸ்ரீவிட்டலநாதனிடம், “விட்டலா! எப்போது உன் சொந்த ஊராம் பண்டரீபுரத்திற்கு வந்து சேருவாய்?” என நாத் தழுக்க வினவ, “பானு தாஸா! நாளைக் காலை இவ்விடம் வருவாயாக” என்று விட்டலநாதன் திருநகையுடன் பதிலளித்தான்.
மறுநாள் விட்டலனைத் தரிசிக்க நதிக்கரையில் தியானத்தில் ஆழ்ந்த பானுதாஸருக்கு ஸ்ரீவிட்டலநாதனே நேரில் காட்சியளித்து, தம் திருமார்பில் இருந்த நவரத்தின மாலையை எடுத்து அணிவித்தார்.
பேரரசன் ராமராயன் கனவில் தோன்றிய ஸ்ரீவிட்டலநாதன் , “ராமராயா! நீ ஏதேனும் தவறிழைத்தால் உன் நாட்டில் நான் தங்க மாட்டேன். அன்றே பண்டரீபுரம் சென்று விடுவேன், கவனமாக இரு” எனக் கூறி மறைந்தார்...!

அடிமை கண்ட ஆனந்தம்

ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில் பெரியவருடன் இருந்த சிறுவனுக்கு அதற்கு மேல் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை..
“ஏன் வாத்தியாரே! என்னமோ திடீர்னு திருச்சிக்குப் போகலாம்னு சொன்னீங்க ..அங்கே போய்த் தேடி ஐயர் வீட்டுல உறவுக் கதையெல்லாம் சொல்லி கணேசனைக் கூட்டிக்கிட்டு வந்து வேத பாடசாலையிலே சேர்த்து விட்டீங்க., அப்புறம் அங்கே கேலி பண்ணின பையனை முட்டியை ஒடைச்சித் திருந்த வைச்சு, பாடசாலை குருகிட்ட தாத்தா முறைன்னு சொல்லி ஒரு நாடகமாடி நிம்மதியா வந்துட்டீங்க.., இதெல்லாம் என்ன கூத்து வாத்தியாரே? இந்தப் பையனுக்காக இவ்வளோ தூரம் போய்ச் செலவழிச்சு பாடசாலையிலே சேர்க்கணும்னு என்ன விதி வாத்தியாரே?” என்று அடுக்கினான் சிறுவன்.
சிறுவனின் கட்டுக்கடங்காத ஆவலையும், கேள்விகளையும் கேட்டுப் புன்முறுவல் கொண்ட பெரியவர் பேசத் தொடங்கினார். “வேற ஒண்ணும் இல்லேடா, அந்தப் பையன் இருக்கானே கணேசன், அவன் ஆறு ஜென்மத்துக்கு முன்னாடி ஒரு பெரிய வேதியனாய் இருந்து வேதத்துக்காகவே தன்னை அர்ப்பணிச்சான். அதனாலே மேல் லோகத்தில் பெரிய உன்னத பதவியையும் பிடிச்சான். ஆனா என்ன ஆச்சு? கடவுள் மறுபடியும் அவன் கீழே போயி வேதத்தை வளர்க்கணும்னு விரும்பி முடிவு செஞ்சுட்டாரு. அதனாலே அவனைப் பூமிக்கு  அனுப்பிட்டாங்க..”

சேவை செய்ய கடவுள் வாய்ப்பு அளிக்கும்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு நேரம் இருக்கும்போதுதான் சேவை செய்வோம் என்று இருப்பது தவறு.

“அப்புறம் ஈசன் என்ன செஞ்சான் தெரியுமா? அந்தக் கணேசன் கருவில் இருக்கும் போதே அந்தப் பத்து மாசத்திலும் அவனைக் காப்பாத்தற பொறுப்பை ஒரு ரிஷியிடம் ஒப்படைச்சாரு. கருவிலிருந்து பத்திரமாய் வெளியே அவனைக் கொண்டு வர்ற பொறுப்பை இன்னொரு ரிஷிகிட்ட ஒப்படைச்சாரு. அவனுக்கு ஆறு வயசு ஆகிற வரையில் எந்தக் குறையுமில்லாம கவனிச்சுக்க இன்னொரு ரிஷியை ஏற்பாடு செஞ்சாரு. அவன் வேதம் கத்துக்கற வயசு வந்தவுடனே வேத பாடசாலையில் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பை நம்மகிட்ட விட்டிருக்காரு. இப்ப அந்த வேலையை முடிச்சுட்டோம். இதுக்கப்புறம் இவனைக் காசியிலே கொண்டு போய் சேர்க்கிறது இன்னொரு மகானோட பொறுப்பு. காசியிலே இவன் படிச்சு வித்வானாகி அங்கே வேதத்தை மத்தவங்களுக்குக் கத்துக் குடுக்கிறது எல்லாத்தையும் வேறொரு மகான் கவனிச்சுப்பார்.”

திருச்சி மலைக்கோட்டை

“இப்படியே அவனுக்கு இந்த ஜென்மா முடிஞ்சு ஈசனோட திருவடி போய் அடையற வரைக்கும் ரிஷிகளும், மகான்களும் மாத்தி மாத்தி duty  போட்டுக்கிட்டு அவனைக் கைதூக்கி விட்டுடுவாங்க. இந்த ரிஷிகள் duty  போட்டுக்கிட்டு காப்பாத்தறது மட்டும் அவனுக்குத் தெரிஞ்சா வேதமா ஓதுவான்? நம்ம பின்னாடி பைத்தியம் பிடிச்சு அலைய மாட்டான்? இப்படித்தாண்டா கடவுள் வகை வகையா விளையாடல் செஞ்சு நல்லவனைக் காப்பாத்தறான். இந்தப் பையனைக் கண்டு பிடுச்சு அவனை வேதபாடசாலைல சேர்க்கற வேலைய நமக்குக் கொடுத்தவர் காஞ்சி ஸ்ரீபரமாச்சார்யாள்.”
“அப்ப நீ பார்த்துக்கோ, ஒரு நல்ல ஆத்மாவைக் கருவிருந்து ஆரம்பிச்சு அது எந்த உடலில் எவ்வுளவு காலம் வாழுதோ அத்தனை நாள் வரைக்கும் அதை ஒவ்வொரு  stage லேயும் ஒரு மகான் கவனிச்சுக்கிறார். இதைத் தான் நீ புரிஞ்சுக்கணும். நல்ல ஆத்மாவைக் கடையேத்தறத்துக்காக எத்தனையோ மகான்கள், ரிஷிகள், சித்த புருஷர்கள் ஒண்ணு சேர்ந்து பாடுபடறாங்க அப்டீங்கறதை நீயும் புரிஞ்சுக்கோ. காலம் வரும்போது இந்த உலகத்துக்கும் எடுத்துச் சொல்லு”, என்று தம் சொற்பொழிவை முடித்தார் பெரியவர்.
சிறுவனோ மயிர்க்கூச்செறிந்து காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி நின்றான்.
பின்னர் கோவணாண்டிப் பெரியவர் சிறுவனை அழைத்து, “ டேய்! நேரா காஞ்சீபுரத்துக்குப் போயி அங்கே பெரியவாள் (பரமாச்சார்யாள்) இருப்பாரு.. அவர்க்கிட்ட போய், நீங்க சொன்ன வேலை முடிஞ்சது அப்படீன்னு சொல்லிட்டு வா.., அவர் புரிஞ்சுப்பார்”, என்று சிறுவனைக் காஞ்சீபுரத்திற்கு அனுப்பினார்.
சிறுவனுக்குக் “காஞ்சிபுரம் மகான்” என்றாலே ஒரு தனி குஷி, பலமுறை அவரிடம் அனுக்கிரகம் பெற்றவனாயிற்றே! “நம்ம பெரியவர்”, “நம்ம பெரியவர்” என்று குதித்துக் கொண்டே காஞ்சீபுரத்திற்குப் பயணமானான்.
காஞ்சி சங்கர மடத்துள் நுழைந்த சிறுவனுக்கு இம்முறை எந்தப் பிரச்சனைகளும் எதிர்ப்படவில்லை. ஸ்ரீபரமாச்சார்யாள் தம்முடைய மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மரத்தடியில் அமர்ந்திருந்தார். சிறுவன் கைக்கூப்பியவாறே அவர் அருகில் சென்றான். “ஸ்வாமி நீங்க சொன்ன வேலை முடிஞ்சுடுத்துன்னு எங்க வாத்தியார் சொல்லச் சொன்னார்”, என்று சிறுவன் கொச்சையாக உரைத்தான்..
அம்மகானோ தெய்வீகப் புன்முறுவலுடன், “தெரிஞ்ச விஷயம் தானே இந்தா! இதை வெச்சுக்கோ” என்று மொழிந்து விட்டுத் தம்முடைய பூக்குடலையிலிருந்து ஒரு சிவப்புச் செம்பருத்திப் பூவைச் சிறுவனிடம் அளித்தார்.

ஆசைகள் தொடரத் தொடர பிறவி தொடர்கிறது. எனவே, எதன் மேலும் ஆசைப்படாதே.

“கனிந்த கனி” என்று சித்தர்களால் அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேர்ந்திர சரஸ்வதி சுவாமிகளைத் தன் வாழ் நாளில் ஒவ்வொரு முறையும் சந்திக்கின்ற போதெல்லாம் அவருடன் சில வினாடிகளோ, சில நிமிடங்களோ உடனிருந்தால் கூட அந்த அனுபவத்தின் ஆன்மீகக் கிளர்ச்சி பல்லாண்டுகளுக்குத் தன் உள்ளத்தில்  ஆன்மீக ஜோதியாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிப்பதை அச்சிறுவன் உணர்ந்திருக்கின்றான். இவை அனைத்தும் குருவருளால் நிகழ்ந்ததன்றோ!
காஞ்சிப் பெரியவர் அளித்த சிவப்புச் செம்பருத்தியுடன் சிறுவன் கோவணாண்டிப் பெரியவரைப் பார்ப்பதற்காக ராயபுரம் ஸ்ரீஅங்காளம்மன் ஆலயத்திற்கு வந்தான்.
வழக்கமான தூணின் கீழ் அமர்ந்திருந்தார் கோவணாண்டிப் பெரியவர் சிறுவனைப் பார்த்ததும் அவர், “அடேடே! என்ன தேஜஸ்! என்ன தேஜஸ்! மகான்கிட்ட போய்ட்டு வந்தா ஒடம்பெல்லாம் ஜோதியாய்ப் பொங்குதடா”, என்று பலத்த சிரிப்புடன் சிறுவனை வரவேற்றார்.
“இந்த வாட்டி காஞ்சி மகானைத் தரிசிக்கறதுலே எந்தக் கஷ்டமும் இல்லை வாத்தியாரே!” என்ற சிறுவன் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான்.
“அப்படியா! எல்லாம் அந்த மகனோட அருள்டா”, என்று சிரித்தவாறே கையை நீட்டினார் பெரியவர்.

குரு சொன்னதைச் செய். அது கோடியா, அரையா, முக்காலா என்பதை குரு பார்த்துக் கொள்வார். உண்மை என்னவென்றால், குரு சொன்னதில் கோடியில் ஒரு பங்கு கூட செய்ய முடியாது.

அவர் கை நீட்டுவதன் காரணம் சிறுவனுக்குப் புரியவில்லை. ஏனெனில் அவன் அப்போது காஞ்சிப் பெரியவர் கொடுத்த சிவப்புச் செம்பருத்தியைப் பற்றி மறந்து விட்டான். “எதுக்கு வாத்தியரே கை நீட்டறீங்க? நான் ஒண்ணும் பிரசாதம் வாங்கி வரவில்லையே, அவர் ஒண்ணும் விபூதி, குங்குமம்னு குடுக்கலையே!” என்றான் சிறுவன்.
உடனே பெரியவர், “டேய்! அந்த வெள்ளைச் செம்பருத்தி பூவை எடுடா, உன் சட்டைப் பையிலே இருக்கே பாருடா”, என்றார்.
சிறுவன் அதிர்ந்து நின்றான். பின்னர் தன் சட்டைப் பையிலிருந்த அந்தப் பூவை அள்ளி எடுத்து அப்படியே பெரியவரிடம் சமர்ப்பித்தான். அதுவோ வெள்ளைச் செம்பருத்திப் பூவாய் மலர்ந்து நின்றது .
சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “காஞ்சி முனிவர் சிவப்பு பூ தானே கொடுத்தாரு எப்படி வெள்ளையாய் மாறிப் போச்சு?” என்று கேட்டுத் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான்.
பெரியவர் சிரித்தவாறே, “பூவைப் படைச்சவனுக்குப் பூவோட நிறத்தை மாத்த எவ்வுளவு நேரம் புடிக்கும்?” என்று கூறி வெள்ளைச் செம்பருத்திப் பூவையெடுத்துத் தம் பக்கத்திலிருந்த பூக்குடலையினுள் வைத்துக் கொண்டார். சிறுவனுக்கு இன்னும் வியப்பு அதிமாயிற்று. “அங்கேயும் பூக்குடலை. இங்கேயும் பூக்குடலை, எனக்கு ஒண்ணும் புரியலே”, என்றான்.
கோவணாண்டி பெரியவரோ, “ஆமாண்டா! பூக்குடையிலிருந்து வந்திச்சு. அது அங்கேயே போயிடுச்சு. எங்கிருந்து வந்ததோ அங்கேயே சங்கமம் ஆயிடுச்சு.. சரி! வா போகலாம்”, என்று சிறுவனைக் கூட்டிக் கொண்டு ஸ்ரீஅங்காளம்மன் சன்னிதிக்குள் சென்றார்.
மகான்களை மகான்களே அறிவர், அவர்களுடைய திருவிளையாடல்களைப் புரிந்து கொள்ளும் தகுதி யாருக்கு இருக்கிறது ?

புகை பழக்கம் மறைய

ஒருவர் தன் வாழ்நாளில் பயன்படுத்திய அனைத்து சிகரெட், பீடி, சுருட்டுத் துண்டுகளை மலையாகக் குவித்து அதற்கு நெருப்பிட்டால் எவ்வுளவு வெப்பம் உண்டாகுமோ அவ்வெப்பக் குழாய் வழியே “ TUNNEL OF FIRE ” அவருடைய ஆவி மரணத்திற்குப் பின் பயணம் செய்யும்.

எங்கே கேள்வி முடிகிறதோ, அங்கு நிறைவு ஏற்படுகிறது என்று அர்த்தம். எங்கே கேள்வி பிறக்கிறதோ, அங்கு ஏதோ குறை உள்ளது என்று அர்த்தம்.

அப்போது, வெப்பந் தகிக்கும் இந்த நரக வேதனையில் இருந்து மீள இயலாது. செய்த தவறுகளுக்கான தண்டனையன்றோ இது! புகை பிடிக்காதவர்களின் சாபங்களும், வசைச் சொற்களும் இந்நரக வேதனைகளைப் பன்மடங்காக்கும்.
இதை அறிந்த பிறகாவது புகை பிடிப்பவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். நச்சுப் புகையினால், தன் உடலையும் , பிற ஜீவன்களையும் வதைத்துச் சுற்றுபுற சூழ்நிலையில் விஷங் கலந்த கொடிய பாவங்கட்கு ஓரளவு பிராயச்சித்தத்தைச் சித்தர்கள் அருளியுள்ளனர்.

  1. இவர்கள் மனந்திருந்தி தங்கள் தவறுகளுக்கு இறைவனிடம் மனதார மன்னிப்புக் கோர வேண்டும்.
  2. காற்றினை மாசு பெறச் செய்ததற்காக, பரவெளியை ஓரளவேணும் ஆன்மீக முறையில் புனிதப்படுத்துவதற்காக அனைத்துக் கோயில்களிலும் குங்கிலியம், சாம்பிராணிப் புகை இட வேண்டும். இந்தக் குங்கிலய , சாம்பிராணி தூபமானது பனி படர்ந்தாற்போல் பரவுமாறு அடத்தியாகத் தூபமிட வேண்டும்.

பூக்களின் நறுமணம் (scented perfumes)  கலந்த சந்தனைத்தைச் சாம்பிராணிப் புகையில் சேர்த்தல் பரவெளியை மேலும் புனிதமாக்கும்.
தூப வைராக்கியத்தை இடைவிடாது பல ஆண்டுகள் வைராக்கிய திடமுடன் செய்தால், புகை பிடித்ததற்கான ஓர் அற்புதமான பிராயச்சித்தமாக அமைவதற்கு நல்வழி கிட்டும். பிறகு இத்தீய பழக்கம் கனவிலும் தோன்றாது மறைந்துவிடும்.

அமிர்த நேரம்

கோடானு கோடி என்று கூட வரையறுக்க இயலாத அமீபா முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரையான அனைத்து ஜீவன்களையும் ஆலகால விடத்தின் துன்ப நிலைகளிலிருந்து காத்து அற்புத வாழ்வு தந்தவன் சிவபெருமானன்றோ? இந்தத் திருவிளையாடலால் பிறர்கெனத் தன்னைத் தியாகம் செய்து வாழ்வதே ஒவ்வொருவருடைய வாழ்வின் லட்சியம் என்ற ஆன்மீக பெரு விளக்கத்தை இறைவன் அருள்கின்றான் அல்லவா? எனவே தான் இறைவன் ஆலகால விடத்தை உண்ட திரு நிகழ்ச்சியை மிக உன்னதமான பூஜையாக, பிரதோஷ பூஜையென அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆனால் அமிர்த நேரமானது பல கோடிப் பிரதோஷ  நேரங்களைவிடச் சொற்பொருள் நிலைக்கு அப்பாற்பட்ட புனித நேரமாகும்.

பிராயசித்தம் பலன் தர நம்பிக்கை தேவை. நம்பிக்கையே பலன் தருகிறது. எனவே, எதையும் துவங்குமுன் நன்றாக யோசித்து முடிவு எடு.

தியாகச் செம்மலாம் நீலகண்டனின் திருவிளையாடலைக் குறிக்கும் பிரதோஷம் தன்னை ஈந்து தியாகம் புரிந்து பிறர் நலனுக்காக வாழ்கின்ற சபதத்தை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதையே குறிக்கின்றது. எனவே வாழ்க்கையில் இறைவன் ஆலகால விடத்தை உண்ட நேரம் போல் நாம் பிறருடைய நலனுக்காகச் செலவழிக்கின்ற நேரமே நல்ல நேரம், உண்மையில் வாழ்ந்த நேரம் என்று சித்தர்கள் அருளியுள்ளனர்.
ஒவ்வொருவரும் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்றபோது தான் உண்மையாகப் பிறருக்காக வாழ்ந்த நேரத்தைக் கணித்துத் தம் எஞ்சிய வாழ்வில் மேலும் உண்மையாக வாழும் நாட்களைப் பெருக்குவதற்காகச் சரீர சேவைகள், அன்னதானம், வஸ்திர தானம், மாங்கல்ய தானம் போன்ற பிறர் நன்கு வாழ்வதற்கான நற்செயல்களைச் செய்து குருவருளுடன் இறையருளைப் பெற வேண்டும். காலத்தைப் படைத்துக் காலத்தை வென்ற கருப்பொருளாய் நம்மைக் காக்கின்ற பரமசிவனே தாம் படைத்த நேரத்தை வீணாக்குவது கிடையாது. நாம் வீணாக்குதல் உத்தமமா ?
பிரபஞ்சத்திலேயே உன்னதமான நேரமாகிய ஆலகால விடமுண்ட அற்புத நேரத்திலேயே மகான்களையும் ஞானிகளையும் சித்தர்களையும் இறைவன் படைக்கின்றான். இவர்களுடைய படைப்பு அதிஉன்னதப் படைப்பன்றோ! ஆனால் இந்த அமிர்த நேரமோ ஆன்மீக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நேரத்தில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்றால் மகான்கள், சித்தர்கள், ஜீவன் முக்தர்கள், ஞானியருடைய ஆன்மீக நிலையை என்னென்று எடுத்துரைக்க இயலும்!!!
சித்தர்கள் வகுத்த அமிர்த நேரத்தினால் மக்களுக்கு என்ன பயன்?

பிறர் நலம் பெற ..
குழந்தைகளுடன் பள்ளிக்குச் செல்லும் போது காயத்ரி மந்திரங்களையோ, வேறு மந்திரங்களையோ, தெய்வீகப் பாடல்களையோ, இறை நாமங்களையோ மனதிற்குள் துதித்து, “இறைவா! நான் துதித்த பாடல்களின் பலனை, என் கண்களில் படுகின்ற இக்குழந்தைகளின் நல்வாழ்விற்கென அர்ப்பணிக்கின்றேன்” என்று பிரார்த்திக்க வேண்டும். மகான்களால் தான் இருந்த இடத்தில் இருந்து அனைவர் நலனுக்காகவும் பிரார்த்திக்க இயலும். சாதாரண மனிதனால், அவனுடைய பூஜா நாமஸ்மரணை பலன்களைக் கொண்டு, அவன் கண்களில் பார்வைக்குட்பட்ட ஜீவன்களுக்குகாக மட்டுமே பிரார்த்திக்க இயலும். இவ்வாறு கடுகளவில், பிறர் நலனுக்காகப் பிரார்த்திக்கத் துவங்குகின்ற மனிதன், தன்னலமற்ற மனதால் விரிந்து, அவனுக்குரிய சிற்றறிவின் எல்லையைத் தாண்டி, இறைவனுடைய சாம்ராஜ்யத்திற்குள் எட்டிப் பார்க்கும் நிலையை, மஹான், யோகி, ஞானியருடைய நிலையையடைந்து நடமாடும் தெய்வம் ஆகின்றான்.

திருமணம், உபநயனம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற பல சுபச் செயல்களுக்குக் குறிக்கப்படும் ஹோரைகளில், லக்கினங்களில் எல்லாம் இந்த அமிர்த நேரம் உண்டு. ஓரிரு வினாடிகளாகவோ, சில நிமிடங்களாகவோ அமையும் இந்த அமிர்த நேரத்தில் நடைபெறும் செயல்களுக்குச் சிறந்த பலன்கள் கிட்டுமென்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்த பலர் இருக்கின்றனர்.
இந்தியாவில் மற்றெல்லா சுபச் செயல்களை விடத் திருமணம் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது. இத்திருமணத்திற்கெனக் குறிக்கப்படும் முகூர்த்த லக்கினம் சிறப்புடையது என்பதை உணர்த்தவே “சுப முஹூர்த்த லக்கினப் பத்திரிக்கை” என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. எனவே நல்ல லக்கினத்தில் ஏற்படும் திருமண பந்தம் தம்பதியரின் ஆண்டுக்கணக்கான இல்லற வாழ்வு நல்லறமாக அமைய உதவுகின்றது.

தாருகாவனம் திருப்பராய்த்துறை

சோதிட ரீதியாகவும் இந்த லக்கினம் சிறப்பைப் பெறுகின்றது. லக்கினாபதியின் தன்மையைப் பொருத்தே ஒருவர் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள் அமைகின்றன. இத்தகைய சிறப்புப் பொருந்திய லக்கினம் ஒவ்வொன்றிலும் சித்தர்கள் குறிப்பிடும் அமிர்த நேரம் சில வினாடிகளாவது இடம்பெறும்.
எனவே சுபலக்கினத்தில் அமையும் அந்த அமிர்த நேரத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து நடத்தும் திருமண வாழ்வின் திறவுகோலாகிய தாலியை அணிவிக்கும் போது மணமக்கள் நெடுங்காலம் இணை பிரியாது ஒருங்கிணைந்து வாழும்  ஆசியைத் தேவர்கள், தெய்வாதியர், சித்தர்கள் , மகான்கள், யோகியர், ஞானியர், தெய்வங்கள், வாரி வழங்குகின்றனர். நல்ல சந்ததி உருவாகும் பேறும் கிட்டுகின்றது.
சித்தர்கள் இறையருளால் தாங்கள் தோன்றிய அமிர்தநேரத்தின் ஓர் அம்சத்தினை இறையடியார்களுக்கென வழங்கச் சித்தமாயுள்ளனர். இவ்வாறு சித்தர்கள் மனமுவந்து வழங்கிய அமிர்த நேர அம்சமே சுபலக்கினங்களிலும ஹோரைகளிலும் ஆன்மீக இரகசியமாய் மறைந்து நின்று பல அற்புதங்களைப் புரிகின்றது.
எனவே திருமண முஹூர்த்தத்தைக் குறிக்கும் சோதிடர்கள் இவ்வமிர்த நேரத்தின் தன்மையுணர்ந்து அதற்கேற்ப நேரம் குறித்தல் அவசியம். சோதிடம் அறிந்த அத்தனை பேரும் அமிர்த நேரம் பற்றி அறிவாரா என்பது ஐயமே. ஆகவே சிறந்த சத்சங்கங்களை நாடி, அவற்றை நடத்தும் குருமார்களிடம் அனுக்கிரகம் பெற்று இவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அமிர்த நேரத்தில் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் ஆண்டவனின் பரிபூரண அனுக்ரகத்தை முழுமையாகப் பெறும் என்பது உறுதி. ஆவுடையார் கோயில் சிவாலயத்தில் மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தி சன்னதியின் முகப்பு நிலைவாசல் மேல் 27 நட்சத்திரங்களின் அமைப்பும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரக் கூட்டமைப்புக்களைக் குருவருளுடன் ஜோதிடர்கள் வழிபடில் அமிர்த நேரம் மட்டுமல்லாது ஜோதிட ஞானமும் எளிதில் கைகூடும். இவை உலகில் வேறேங்கும் காணக் கிடைக்காத நட்சத்திரச் சிற்பங்களாகும்.
குழந்தை வரம் தரும் ....
ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எக்குழந்தை வேண்டிடினும், உடனே செவி சாய்த்து அருள்கின்ற சிவலிங்கம் தமிழகத்தில் உள்ளது திருச்சி மாவட்டத்தில் புனிதமான காவிரி ஆற்றங்கரையிலுள்ள “திருப்பராய்த்துறை” சிற்றூரில் உறையும் சிவபெருமானாகிய ஸ்ரீதாருகாவனேஸ்வரரே நமக்கு வேண்டிய குழந்தையைத் தரும் வெண்ணீற்று இறைவன் எனினும்  இந்த லிங்கேஸ்வரனை வேண்டுதற்கு முன் ஆழ்ந்து சிந்தித்தல் ஞானத்தைத் தரும். பிச்சாண்டாராகத் தாருகா வனத்தில், தாம் கற்ற வேதத்தால் செருக்குற்ற வேதியர்க்குப் பாடம் புகட்டி அதே நிலையில் ஞான லிங்கமாய் சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள் மிகச் சிலவே. அவற்றுள் ஒன்றே இத்திருத்தலம்.

மப்பேடு சிவாலயம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேடு என்னும் சிற்றூரில் உள்ள சிங்கீஸ்வரர் சிவாலயத்திற்கு இவ்வருட மாசி மாத சிவராத்திரியன்று குருமங்கள கந்தர்வாவுடன் தல யாத்திரை செய்யும் தெய்வீக வாய்ப்புக் கிட்டியது.
பழம்பெரும் சிவாலயம் ... சாந்தமான கிராமியச் சூழ்நிலை  ... இடிபாடுகளிடையே நெடிதுயர்ந்த மதில் ..... கற்கண்டெனச் சுவை தரும் தாமரைக் குளத்துத் தீர்த்தம்.
குருமங்கள கந்தர்வா இத்திருக்கோயிலைப் பற்றிய ஆன்மீக ரகசியங்களைச் சுவையோடு எடுத்துரைக்க .. நூற்றுக்கணக்கான அகல் விளக்குகளின் ஒளியில் கோயில் வளாகமே ஜோதிர்மயமாய் ஒளி பூத்து நம் கண்களைப் பறிக்க ... தேலோகச் சிவராத்திரி வைபவத்தின் பாங்கினை அங்கே பெற்று மகிழ்ந்தோம்.
குருமங்கள கந்தர்வா அருளியதாவது :-
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பாட்டனாருக்கு முந்திய காலமது ..ரகு வம்சத்துப் பேரரசர் வம்ச விருத்தியின்றி கவலை கொண்டிருக்க ... குல குருவான வசிஷ்டரோ “யானறிந்த வான சாஸ்திரம், ஜோதிடம், அறநெறி வழிகளின்படி ரகுகுல வம்சம் சந்ததியின்றி வாடுவதன் காரணம் புரிபடவில்லை வாருங்கள் நாம் விஸ்வாமித்திரரை நாடி விளக்கம் பெறுவோம்” என்று உரைக்க .....

அற்புத காயத்ரீ மந்திரத்திற்குரிய ரிஷியான விஸ்வாமித்திரர் வசிஷ்டரின் தாள் வணங்கி, “ரகு குல வம்ச  விருத்தியின்மைக்குத் தங்களால் காரணம் காண இயலாவிடில் அதற்குக் காலம் கடந்த பொருளுண்டு என்பது தெளிவு .. ஆகையால், “கூவம்” என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில்  அருள்பாலிக்கும் “காலகாரணேஸ்வரர்” என்னும் சுயம்பு லிங்க மூர்த்தியைத் தரிசனம் செய்வோம்”, என்று அனைவரையும் அழைக்கின்றார்.
கூவம் அற்புதமான சிவத்தலம். அனைவரும் பக்திப் பெருக்குடன் ஸ்வயம்பு மூர்த்தியை வழிபட, “எம்மினும் உயர்ந்தோன் சிங்கீஸன். வம்ச விருத்திக்கு ஆவன செய்வோம்” என்று சிவபெருமான் அசரீரியாய் அங்கு அருள் புரிந்தார்.
விஸ்வாமித்திரர் அவர்களை மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோயிலுக்கு அழைத்து வருகிறார்.
கூவம் ஸ்ரீகாலகாரணேஸ்வரரைத் தரிசித்தே மப்பேடு சிங்கீஸ்வரரை வணங்க வேண்டும் என்று இறைவனே கோடிட்டுக் காட்டி விட்டானல்லவா?
கூவம் சிவாலயம் சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது, செங்கல்பட்டு வழியாகவும் செல்லலாம். இங்குள்ள சிவலிங்கத்தை அர்ச்சகர்கள் கூடத் தொட்டுப் பூஜிப்பதில்லை. எட்டி நின்றவாறே அபிஷேகம் செய்கின்றனர். உலகில் பெரும் போர், கலவரம் மூளுமாயின் சிவலிங்கத்தின் நிறம் மாறி இதை முன்னரே அறிவிக்கும். சிவலிங்கத்தின் எந்தப் பகுதியில் என்ன நிறம் உருவாகிறது என்பதைக் கொண்டு உலகின் நிலவரங்களை அறியலாம். பிரபஞ்சத்தின் ஆன்மீக உலகக் கோளமாக (DIVINE GLOBE) விளங்கும் இந்தச் சிவலிங்கம் விஞஞானிகளுக்கு ஒரு புதிராகவே விளங்குகிறது. சித்தர்களே இதன் தாத்பர்யங்களை அறிவர். ஜோதிடம் மூலமாகவும் மற்றும் பல பரிகாரங்கள் செய்தும் காரணங் காண இயலாத வருத்தம், துன்பங்களுக்கு இந்தச் சிவலிங்க தரிசனம் அற்புதமான முறையில் நிவாரணமளிக்கும்.
வசிஷ்டர், விஸ்வாமித்திரர், ரகுராஜன் முதலானோர் ஏனைய பரிவாரங்களுடன் சிங்கீஸ்வரர் ஆலயத்தை வலம் வருகின்றனர். விஸ்வாமித்திரர் இந்த ஆலய மஹிமைகளை அவர்களுக்கு விளக்குகிறார்.
கோயில் பலிபீடமானது அற்புதமான முறையில் ஒன்பது வரைக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. இதற்கு “நவ வியாகரண பலிபீடம்” என்று பெயர்.
கைலாயத்தில் சிவபெருமானின் திருச்சன்னதியில் வீணை மீட்டுகின்ற பாக்கியத்தைப் பெற்றுள்ளவர் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி. தினந்தோறும் இரவில் சித்த புருஷர்களும் யோகியரும் இந்த நவவியாகரண பலிபீடத்தில் அமர்ந்து கைலாயத்திலிருந்து ஒலிக்கும் ஸ்ரீஆஞ்சநேயரின் உள்ளத்தைத் தொடும் தெய்வீக வீணையிசையைக் கேட்டு இன்புறுகின்றனர். இசைக் கலைஞர்கள் இங்கு அன்னதானம் செய்திடில் தத்தம் துறைகளில் புகழ் பெறுவர். அவர்களுடைய இசை ஞானம் மேம்படும்.
நவ வியாகரண தத்துவங்களில் கரை கண்டவரான ஸ்ரீஆஞ்சநேயர் ஒலி ரூபத்தில் பரப்பிரம்மத்தைக் காணும் அருள் பெற்ற அற்புதத் தெய்வமாவார்.

ஒரு காலத்தில் நவகிரகங்களே எழுந்தருளாமல் இத்தலம் விளங்கியது. நம் சற்குருவின் தொடர்ந்த பிரார்த்தனையால் தற்போது தம்பதி சகிதமாக அனைத்து நவகிரக மூர்த்திகளும் எழுந்தருளி இத்தலத்தை சிறப்பிக்கின்றனர். தம்பதிகள் இடையே எழும் எத்தகைய பிரச்னைகளையும் தீர்த்து அவர்களிடையே ஒற்றுமையை மலரச் செய்வதே மப்பேடு என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ? மப்பேடு என்றால் மந்தகாச புன்னகையை எந்நேரமும் வர்ஷிக்கும் திருத்தலம் என்ற பொருளும் உண்டு. கணவன் மனைவியரிடையே எந்த பிரச்னை தோன்றினாலும் அதை அவர்கள் மந்தகாச புன்னகையுடன் எதிர்கொண்டால் குடும்பதில் சூறாவளி தோன்றுமா என்ன ? இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் புஷ்ப குஜாம்பாள் சாட்சாத் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி ஆவாள். பராசக்தியாம் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி அவதரித்த காலத்தைச் சேர்ந்த கோயில் இதுவெனில் இதன் காலத்தை நம்மால் கணிக்க இயலுமா? இன்றைக்கும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியை வழிபடும் மகான்களும், தேவர்களும் பூலோகத்தில் அவ்வன்னையைத் தரிசிக்க இங்குதான் வருகின்றனர். இந்த ஆன்மீக ரகசியத்தை அறிந்தவர்கள் சித்தர்களே.
எனவே இக்கோயிலின் சன்னிதியில் “மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே” என்ற அகஸ்தியர் பாடலையும், ஸ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தையும் பாராயணம் செய்திடில் இங்கு “புஷ்ப குஜாம்பாளாக” எழுந்தருளி இருக்கும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி மனமுவந்து தேவ பூஜைக்கான அனுக்ரஹங்களை வழங்குகிறாள்.
வசிஷ்டர், விசுவாமித்திரர், ரகு ராஜன் ஆகியோர் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியைத் தொழுதவாறே அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரே தனிச் சன்னதியில் உள்ள “வீர்ய பாலீஸ்வரர்” பெருமானைத் தரிசனம் செய்கின்றனர்.  “வீர்ய பாலீஸ்வரர் யார்” ?

விநாயக ஆஞ்சநேய தத்துவம்

பராபர குரு இடியாப்ப சித்தர் காட்டும் விநாயக ஆஞ்சநேய தத்துவம்
குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சித்தர்  April 13, 1980 தமிழ் வருடப் பிறப்பு அன்று மேற்கு மாம்பலம் பிரபா கேந்த்ராவில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி.
இருடிகள் ராமாயணம் என்று ஒரு ரகசிய ராமாயணம் உண்டு அதை எங்களுக்கென்றே சொத்தாய் வைத்துக் கொண்டிருக்கிறோம். பல கோடி சித்தர்கள் சேர்ந்து எழுதியது அது, இருபத்தியேழு ராமாயணங்கள் இருக்கு. பல ராமாயணங்கள் உண்டு. ஆனால் இருடிகள் ராமாயணம் என்பது இரகசிய ராமாயணம். இந்த ராமாயணத்தில் முக்கியமான ஒரு பங்கை ஏற்கிறார் மகா கணபதி. இந்தப் பங்கு தான் அதியற்புதமான பங்கு.. இன்று வரை எம்பெருமான் அருளால் குரு நாதரைத் தவிர வேறு யாரும் சொல்லாத பங்கு. குரு இன்று சொல்ல விரும்புகிறார் போலும்  “இன்னவன் கூறவே இருடிகள் ராமாயணத்தில் வந்த ஒரு பொருளினை அளிக்கின்றோம் பார்” என்கின்றார்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது உண்மையா? குரு தன் ஞானக் கண்ணைக் கொண்டு பார்க்க வேண்டும். ஊனக் கண்ணால் பார்ப்பது மட்டும் போதாது. சாதாரணமாக இருக்கும். குரு நினைத்தால் மட்டுமே குரு பார்வை கிட்டும்.

ராமனும் கலங்கல் உற்றான். எந்த நேரத்தில் என்றால் சக்தி ஆயுதம் பட்டு லக்ஷ்மண சுவாமி சாய்ந்து விட்டார்.
“அன்னவன் தந்தைக்கு என்ன சொல்லுவேனோ
அரு மகவு பெற்ற தாய்க்கு என்ன சொல்லுவேனோ
கொண்ட மனைவிக்கு என்ன சொல்லுவேனோ
அருமையுடன் இருக்கின்ற சோதரருக்கு என்ன சொல்லுவேனோ
கோசலைக்கும் கைகேயிக்கும் என்ன சொல்லுவேனோ
அனைத்துப் பேருக்கும் சொன்னாலும்
என்னைக் கண் இமைக்காமல் காத்திருந்தவனுக்கு
இப்பாவம் செய்யவோ வந்தேன் ராமன் நானே!”
என்று ராமர் கதறுகின்றாராம். அவனோட அம்மா, அப்பாவிற்கு என்ன சொல்லுவேன்? மனைவிக்கு என்ன சொல்லுவேன்? இத்தனை செய்தாலும் என்னை இரவும் பகலும் கண் தூங்காமல் காத்தவனுக்கு நான் வழி செய்ய முடியவில்லையே என்று கதறுகின்றாராம்.
“லக்ஷ்மணனோடு மட்டுமல்லாமல் என் கூட்டத்தில்  மகா பலசாலிகளாயிருந்த வானரங்கள் பல இறந்து விட்டனவே” என்று சுக்ரீவனும் கதறுகின்றானாம்,

திருப்பராய்த்துறை

இங்கு தான் கவனிக்க வேண்டும். அங்கு மாண்ட அசுரர்கள் எல்லாரையும் ராவணன் எரித்து விட்டான். ஆனால் முதல் நாளிலிருந்து லக்ஷ்மண சுவாமி விழுந்திருக்கிற வரைக்கும் இறந்த வானரக் கூட்டங்கள் வெட்டுண்ட மாதிரியும் துண்டுபட்ட மாதிரியும் அங்கேயே தான் இருக்கின்றன., யாரும் remove  பண்ணவில்லை. இதைப் பார்த்துப் பாத்துக் கதறுகின்றான் சுக்ரீவன். இருவரையும் பார்த்து மற்றவர்கள் கதறுகிறார்கள். இந்தக் காட்சியை ஜாம்பவான் பார்க்கின்றார் :
“அரசர் இருவரும் கதறினால் ஆகுமோ?
ஒருவராவது வழி தேட முயன்றனரோ?
அழைத்திடுவீர் எம்பெருமான் ஆஞ்சநேயனையே” என்றார். அன்னவன் துள்ளிக் குதித்தான்
“என்ன வேண்டும் ஜாம்பவான்? கூறிடுவீர், செய்திடுவேன் இக்கணத்தில் என்றான்,” ஆஞ்சநேயன்.
அப்பொழுது ஜாம்பவான் சொல்லுகிறார் ஹனுமாருக்கு :
“கொண்டு வா சஞ்சீவி எனவே இச்சஞ்சீவியால் வரும் பலன் பல அறிவாய் நீ யார் என்று உணருவாய் பார்”
“நீ யார் என்று உணருவாய்” என்று ஜாம்பவான் சொல்லுகிறார். அனுமனும் அக்கணமே பறந்தான். சஞ்சீவியை எடுத்து வந்தான் பார். சஞ்சீவியைத் தூக்கிண்டு வந்து விட்டார் ஆஞ்ச நேய சுவாமி .”எழுந்தான் லக்குமணன், பல நாள் போரில் மாண்டிருந்த வானரங்களும் எழுந்தன. அசுரர் ஒருவரும் இல்லையே எழுந்திருக்க” என்றார். அதற்கு முன்னால் ராவணன் இறந்தவர்களை clean பண்ணிவிட்டான்! அது தான் விதி. இப்பொழுது “ஆஞ்சநேயர் யார்” என்று யாருக்கும் புரியவில்லை. இருடிகள் ராமாயணத்தில் அகஸ்தியர் இதற்கு விளக்கம் கொடுக்கிறார்:  “அண்ணன் கதறிட நல்லருமை தம்பி உறங்கிட (லக்ஷ்மணன்) ஆறுமுக அண்ணலாய் வந்து உதவினான்! அஞ்சனா புத்திரனே!” ஆறுமுக அண்ணலாய் வந்து உதவினான்! அப்பொழுது ஆஞ்சநேய சுவாமிக்கு ஒரு பட்டம் கொடுத்தார்களாம். விக்ன விஜய விநாயக ஆஞ்சநேயன் என்கிற பட்டம். ஆகவே ஆஞ்சநேயன் தான் விநாயகன். விநாயகன் தான் ஆஞ்சநேயன் .இன்று பூரணமாகத் தெரிந்து கொள்ளுவீர். குருநாதன் அனுக்கிரகத்தால் ரிஷிகள் ராமாயணம் இது .. இன்று வரை வெளி வராத ஒரு ரகசியம்.
ஆஞ்சநேயன் தான் விநாயகன் என்பதற்கு இன்னொரு சான்று உண்டு. அதைப் பெரியவர்கள் சொல்கிறார்கள். திருமாலுடைய பெண்கள் பன்னிரெண்டு பேர் உண்டு. சுமதை என்று தொடங்கி எமதை என்று முடிகின்ற வரை பன்னிரெண்டு பெண்கள் உண்டு.. அவர்களை விநாயகப் பெருமான் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அப்பொழுது பெருமாள், ”அன்னவர்க்கு அளித்த வரம் தான் என்னே?” என்று கேட்டார். இதை அகஸ்தியர் கூறுகிறார்...
பெருமாள் கேட்டதற்குப் பிள்ளையார் பதில் கொடுக்கிறார் :
“மாலது மக்களை மணந்ததால் மாருதியாய் நான் வந்து உதவுவேனே”
பிள்ளையார் வாக்கில் வந்தது. இன்னொரு சான்று ஆஞ்சநேய சுவாமிதான் பிள்ளையார் என்பதற்கு. நீங்களும் பார்க்கலாம் சிவன் கோவிலில் ஹனுமார் இருப்பார். பெருமாள் கோவிலில் பிள்ளையார் இருப்பார். இவர்கள் இருவரும் இல்லாமல் நிச்சயமாய் எந்தக் கோவிலும் கிடையாது. அது மாத்திரம் இல்லை. பஞ்சமுக விநாயகர் இருக்கார். அதே போல் பஞ்சமுக ஆஞ்சநேயர் உண்டு. மற்ற சுவாமிக்கு இது கிடையாது. இதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் .

கிடைத்ததை உண். கொடுத்து உண். கெடுத்து உண்ணாதே.

ஏனென்றால் இவர்கள் இருவரும் தான் ஐந்தைந்து பூதங்களையும்  control  பண்ணியவர்கள். அதோடு மட்டுமில்லை  “நவ  வியாகரண பண்டிதன்” என்று முதலில் சொன்னேன். நவ வியாகரண பண்டிதத்தில் மூலாதார சூட்டை எழுப்பிக் கடைசி வரைக்கும் கொண்டு வந்து நிறுத்துகின்ற ஆஞ்சநேய சுவாமி பூரணமாகப் புஷ்கலையாக நின்றால் பிள்ளையாராய் நிற்பார்.
“அனுமன்தான் ஆஞ்சநேயன் அறிந்து கொள்வீர் பார் என்னவன் சித்தர்கள் இருடிகள் ராமாயணம் கூறவே அகத்தியன் எடுத்து இயம்பினான். அனைத்தும் புரிந்து கொள்வீரே..!”
 மீண்டும் கூறுகிறார் அகஸ்தியர். ஹனுமார் மலையைத் தூக்கிக் கொண்டு பறந்து வருகின்ற காட்சி “தும்பிக்கை தூக்கியது போல் ஆகுமே” என்றார்
அது மட்டும் இல்லை. Lemuria கண்டம் என்று ஒரு கண்டம் இருந்தது. அந்தக் கண்டம் இப்பொழுது கடலில் மூழ்கியிருக்கு. அந்தக் கண்டத்தில் எப்படி விநாயகரை வழிபட்டார்கள் என்றால் கஜமுகத்துடன் குரங்கு வால் கொண்ட உருவம் வைத்து வணங்கியிருக்கிறார்கள். இது பூரணமாக மூலத்தில் பார்த்தால் தெரியும். அது போல வானர ரூபத்திலும் விநாயகரை வணங்கியது Lemuria கண்டத்தில் இன்றும் இருக்கு.. வரப் போகிறது கொஞ்ச நாள் கழித்து நமது நாட்டிலும் அந்த வழிபாடு...!!
அப்பொழுது நாம் பூரணமாகப் பார்க்கலாம்.
ஸ்ரீஅகஸ்தியர் அனுக்ரஹத்தால் 13.4.1980ல் குருமங்கள கந்தர்வா தீர்க்க தரிசனமாக உரைத்தபடி விநாயகரை வானர ரூபத்தில் ஒன்றிய வழிபாடு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகவே அனுமன் தான் விநாயகன், அறிவீர் நன்று.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam