இறைவனே அனைவரின் குறிக்கோளாக அமையட்டும் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பார்வதி சுயம்வரா விருட்சம்

காலத்தைப் படைத்து காரண காரியத்துடன் மனிதர்களையும் படைத்த இறைவன் தம் கருணையைப் பல விதங்களில் மக்களுக்கு வாரி வழங்குகிறான். மனிதன் உயரமான இடத்தைச் சென்றடைய ஏணி, லிப்ட் போன்றவை எப்படி இணைப்புப் பாலமாக அமைகின்றனவோ அது போல், கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருப்பையில் இருக்கும் உயிருக்கும் உணவு தரும் இறைவனைப் பக்தி நிலையில் நாம் சென்றடைய உத்தம குரு உறுதுணையாக உன்னதப் பாலமாக விளங்குகிறார்.
இவ்வாறு மனிதன் இறைவனை அடைய இணைப்புகள் பலவுண்டு, அதே போல இறைவனும் தம் கருணையை மக்களுக்குப் பல வடிவங்களில், பரிமாணங்களில் வெளிக்காட்டுகிறான். துன்பத்தால் துவண்டு, வறுமையால் வாடி, அச்சத்தால் அல்லல்படும மனித இனத்தைக் காக்கத் திருமண்ணாகவும், திருக்குள நீராகவும், திருமரங்களாகவும் (ஸ்தல விருக்ஷம்) ஆகிய பல ரூபங்களில் தன் சக்தியை வியாபிக்க செய்து அவன் அருள் பாலிக்கின்றான்.

கோவிலுக்குள் குழந்தைகள் சிறுநீர் கழித்து விட்டால் அதற்குப் பரிகாரம் உண்டா? இக்கேள்வியை நாம் குருமங்கள கந்தர்வாவிடம் சமர்ப்பித்த போது அவர் தந்த அருள்வாக்கு இதோ..
நம்முடைய வழிபாட்டு முறைகளில் குழந்தைகளுக்கென்று தனிச்சலுகைகள் என்றும் உண்டு.. கோவிலுள் குழந்தை சிறுநீர் கழித்தால் உடனே ஒரு தேங்காய் எடுத்து வந்து உடைத்து அதன் இளநீரை, குழந்தை சிறுநீர் கழித்த இடத்தில் படும்படி செய்ய வேண்டும்.. இப்படிச் செய்வதே அதற்குப் பரிகாரம்.

உதாரணமாக சென்னையில் கோயம்பேடு என்ற திருத்தலத்தில் பெருமாள் கோயிலில் உள்ள பார்வதி சுயம்வரா விருட்சத்தைக் குறிப்பிடலாம். பல ஏக்கர் விஸ்தீரணமுள்ள கோயில் வளாகத்தில் ஒருபுறம் குசலவபுரீஸ்வர சமேத தர்ம சம்வத்தினி சிவன் கோயிலும், மறுபுறம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. நவ வியாகரண பண்டிதராகிய ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திக்குச் சிறு கோவிலுமுண்டு.
இங்குள்ள பெருமாள் கோவிலில் நந்தவனத்தை அடுத்துப் பார்வது சுயம்வரா விருட்சம் காணப்படுகின்றது. வில்வம், வேம்பு, வில்வம் ஆகிய மூன்று மரங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஒரு வில்வ மரமும், மற்றொரு வேப்ப மரமும் அடிப்பாகங்கள் இணைந்து நெருங்கிப் பின்னிப் பிணைந்தும், மற்றொரு வில்வ மரம் ஸ்ரீவிஷ்ணுவாகவும் தோற்றம் தருகின்றன.
கோயில் உழவாரத் திருப்பணி செய்த போது இவ்விருட்சங்களை சிறு செடிகளாகக் கண்டெடுத்து பராமரித்துப் பாதுகாக்கச் செய்தவர் நம் ஆன்மீக வாழ்வின் வழிகாட்டி ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சித்தர் ஸ்வாமிகளாவார். இவ்விருட்சங்களின் தெய்வீக அருள் வழங்கும் தன்மைகளையும், அவற்றை முறையாக வழிபட்டு மேன்மையுறும் வழிகளையும் நமக்கு எடுத்துரைப்பவர் குருமங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீ-ல-ஸ்ரீ சுவாமிகளே!
பல்வேறு காரணங்களால் வெகு காலமாகத் திருமணம் ஆகாது தடங்கல்களையே கண்டு வரும் ஆண்கள், பெண்கள் பார்வதி சுயம்வரா விருட்சத்தைப்  பக்தி சிரத்தையுடன் பின்வருமாறு வழிபட்டால் விரைவில் தமக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெற்று மகிழ்வர். எச்செயலைச் செய்வதற்கும், நம்பிக்கையே ஆதாரம். பரிபூரண நம்பிக்கையுடன் இவ்வழிபாட்டை மேற்கொண்டு பலனடைந்தோர் பலராவர்.
விடியற்காலையில் எழுந்து நீராடி அங்க சுத்தி செய்து கொள்ள வேண்டும். குண்டு மஞ்சளை எடுத்து அம்மியில் வைத்து அரைக்க வேண்டும். இலகுவாக மிக்ஸியிலோ, அரவை இயந்திரக் கடைகளிலோ அரைக்கக் கூடாது. மை போல் அரைத்த மஞ்சள்  விழுதையும், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், மஞ்சள், குங்குமம், எண்ணெய், திரி, அகல் விளக்கு ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு  வர வேண்டும்.
கோயில் நந்தவனத்தில் அமைந்துள்ள திருக்கிணற்று நீரால் விருட்சங்களின் அடிப்பாகத்தைத் தூய்மை செய்ய வேண்டும். பின் அரிசிமாக் கோலமிட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். மஞ்சள் விழுதை எடுத்து 3 மரங்களின் அடியிருந்து மேல் வரை (முடிந்த அளவு , குறைந்தது  1 அடியாவது) கைகளால் திட்டுத்திட்டாக இல்லாதபடி பூச வேண்டும். நன்கு பூசிய மஞ்சளின் மீது மீண்டும் அடியிலிருந்து மேல் வரை (மஞ்சள் பூசிய இடம் வரை) குங்குமம் இட வேண்டும். (வீட்டுக் கதவுகளில் வைப்பது போல) .. தமக்கு தகுந்த வாழ்க்கைத் துணை அமைந்து  இல்லறம் நல்லறமாக வேண்டும் என்ற வேண்டுதலுடன் பூக்களைச் சார்த்தி வணங்கி இவ்விருட்சங்களைச் சுற்றி வந்து நமஸ்கரிக்க வேண்டும்.
விஞ்ஞான அறிவு கொண்டு ஆராயாது மெய்ஞ்ஞான பக்தியுடன், உண்மையான நம்பிக்கையுடன் இம்முறையில் வழிபாடு செய்து வந்தால் இறைவனருளால் நற்காரியங்கள் நடைபெறும்.
நம் கோரிக்கைகளை இறைவனிடம் எடுத்துச் செல்லும் media வாக இணைப்பு பாலமாக இவ்விருட்சங்கள் விளங்கி நமக்கு அருள் பாலிக்கின்றன.

அடிமை கண்ட ஆனந்தம்

“ஏன் வாத்தியாரே! ஒவ்வொரு தடவையும் காஞ்சிப் பெரியவரைக் கொஞ்ச நேரம் தான் பார்க்க முடியறது, ரொம்ப நேரம் பேச முடியலையே”, எனச் சிறுவன் ஆதங்கத்துடன் பெரியவரிடம் பிரஸ்தாபித்தான்.
“அப்படியா! நீ ரொம்ப நேரம் அவரோட பேசற அளவுக்குப் பெரிய தொரையா? தொரைசாணிப் பையனா ?” எனப் பெரியவர் கிண்டலாகக் கேட்டார்
“இல்லே வாத்தியாரே! அவ்வுளவு கஷ்டப்பட்டு வெய்யிலிலேயும் மழையிலேயும் போறேன். ஒரு அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம் கூட அங்க இருக்க முடியலே!” எனச் சிறுவன் ஏக்கத்துடன் பெரியவரிடம் கூறினான்.

தான் என்ற எண்ணம் வளராமல் இருக்க வேண்டும் என்றால் தனித்து இயங்க வேண்டும் என்று நினைக்காதே. என்றுமே நான்கைந்து பேருடன் இணைத்துக் கொண்டு செயல்படு. சுய அகங்காரம் (self ego) வளராது.

பெரியவரோ, “அப்படியா! ஒரு பத்து நாள் கழிச்சுப் பார்க்கலாம்” என்று விஷயத்தை முடித்தார்.
பத்து நாட்கள் கழித்துப் பெரியவர் சிறுவனைப் பாத்து,”டேய் இட்லி! இட்லி ராமா! (நம் குருமார்களின் தாயகமான மங்கள கந்தர்வமண்டல லோகத்தில் நம்குரு மங்கள கந்தர்வா உறையும் பகுதி இட்லி வடிவத்தில்  அமைந்திருக்கும். எனவே தான் அவர் “இட்லி” என்று தம் சற்குருவால் அன்புடன் அழைக்கப் பெறும் பாக்கியம் பெற்றார்) காஞ்சி மகான் வந்திருக்காராம் ராயபுரத்துக்கு. போய் பார்த்துட்டு வரியா? நீ ரொம்ப நேரம் பார்க்கணும்னு சொன்னியே! ஓடு, ஓடு. ஊர்வலம் வந்திட்டிருக்கு. போய் பாத்துட்டு வா... ஓடு” என்று கூறி விரட்டினார். சிறுவன் குஷியுடன்  வெளியே ஓடி வந்தான்.... சாலையிலே திரண்ட கூட்டம் .....
ஒரு சைக்கிள் ரிக்ஷாவைத் தள்ளியவாறே ஸ்ரீ பரமாச்சார்யாள் சாலையில் வந்து கொண்டிருந்தார். சிறுவன் அவர் தரிசனத்தைப் பெற எட்டியும் குதித்தும் பலவாறு முயற்சி செய்தான். அனைவரும் இவனைவிட உயரமாக இருக்கவே இவனால் அவரைப் பார்க்கக்கூட முடியவில்லை.. ஏக்கத்துடன் ஒரு மேடை மீது  ஏறி நின்று தரிசிக்க முயன்றான்.
“அடே.... எறங்குடா”, என்று அவனைக் கீழே தள்ளிவிட்டுப் பத்துப் பதினைந்து பேர் அந்த மேடையில் ஏறி நின்றனர்.
வருத்தத்துடன் அந்த ஊர்வலம் செல்லும் வரை பார்த்துவிட்டுத் திரும்பினான் சிறுவன். நடந்தவற்றைச் சிறுவன் வாட்டத்துடன் கூறிய போது கோவணாண்டிப் பெரியவர் மௌனமாக இருந்தார். அவர்  ஒன்றும் பேசவில்லை.. இருவரும் அங்காளம்மன் சன்னதியைச் சுற்றி வந்தனர். “போய்ட்டு நாளைக் காலைல ஏழு, எட்டு மணிக்கு வாடா!” என்று கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுக்கு  விடைகொடுத்து அனுப்பினார்.
கோவணாண்டிப் பெரியவர் ராயபுரம் அங்காளம்மன் கோயிலில் இருந்தாலும் கூட அவரை எங்கும் பார்க்க இயலாது. எங்கிருந்து வந்தார், எங்கு இருக்கிறார், எங்கு போகிறார் என்பதே பிரும்ம ரகசியங்கள்.. “டேய், வாடா”, என்று ஒரு அசரீரி குரல் கேட்கும். உடனே சிறுவன் அங்காளம்மன் கோயிலுக்கு ஓடுவான். வழக்கமான தூண் ஓரத்தில் அவர் அமர்ந்து இருப்பார் “போய்ட்டு வா”, என்றால் திரும்பி வந்து விடுவான்.

ஆண்டான் ஆக வேண்டும் என்று என்றுமே ஆசைப்படாதே. அடிமையாகவே இருக்க நினை.

அச்சிறுவனுடைய குருகுல வாசம் அந்தக்  கோயிலில்தான் அமைந்தது. ஆனால்  அக்கோயிலில் அவரைக் காண்பதற்கு பலமுறை முயற்சித்த போது அது இயலவில்லை. அவராக “டேய் வாடா”, என்று அழைத்து அக்கோயிலுக்குச் சென்றால்தான் அவரைப் பார்க்க இயலும். பெரியவர் இங்குதான் இருப்பார். அவரைப் பார்க்கலாம் என்று எண்ணிச் சென்றால் பார்க்க இயலாது.
ஸ்ரீபரமாச்சார்யாளைக் கண்டும் நன்கு தரிசனம் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் தன் வீட்டுக்குத் திரும்பினான் சிறுவன். இரவெல்லாம் அழுத கண்களுடன் நித்திரையின்றி அவதியுற்று நடுஇரவில் சற்று கண் அயர்ந்தான்.
திடீரென்று தன் காலை யாரோ வருடுவது போல் தோன்ற கண் விழித்தான் அச்சிறுவனால் நம்ப முடியவில்லை. அவன் அருகே ஸ்ரீபரமாச்சார்யாள் அமர்ந்திருந்தார். கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்த சிறுவனிடம், “நான் தாண்டா தம்பி! என்னைப் பார்க்கணும், பார்க்கணும்னு துடிச்சியே. நான்தான் உன்கிட்டே இப்ப வந்திருக்கேனே“, என்று கனிந்த கனி அச்சிறுவன் அருகில்  இருந்தபடியே மொழிந்தார்.
“காலையிலே என்னைப் பார்க்கணும்னு துடிச்சியோன்னோ, அதான் நானே வந்திருக்கேன்”, என்ற ஸ்ரீபரமாச்சார்யாளின் அன்பு மொழிகளிலே சிறுவன் சிலிர்த்துப் போய் எழுந்து உட்கார்ந்தான்.
ஸ்ரீபரமாச்சார்யாள் தொடர்ந்து, “நீயே ஒரு சித்த புருஷரிடம் இருக்கே. சர்வ லோகத்தையும் கரையேற்றும் அற்புதமான சித்த புருஷர் அவர். மகான்களையே கரையேற்றும் சக்தியே அவரிடம் இருக்கு. அவரை விடாம பிடிச்சுக்கோ. அவர்கிட்டே இருந்து அவர் சொல்லும் நல்ல செயல்கள் எல்லாம் பண்ணு. நான் எப்பவெல்லாம் வரணும்ணு நீ பிரியப்படறியோ அப்ப எல்லாம் உன் முன்னாடி வருவேன். கவலைப்படாதே, உன் சற்குருவிற்கு என் பணிவான நமஸ்காரங்கள்”, என்ற ஸ்ரீபரமாச்சார்யாள் அங்கிருந்து மறைந்தார்..
சிறுவனுக்கு மகிழ்ச்சி கரை புரண்டது. இன்பத்தின் எல்லைக்கு மேலாகச் சென்று அயர்ந்து தூங்கினான்..
காலையில் எழுந்தவுடன், பல் தேய்க்கக்கூட மறந்தவனாய்க் கோவணாண்டிப் பெரியவரைப் பார்க்க ஓடினான் சிறுவன்.
“வாங்க, வாங்க, இப்படி வாங்க!” என்று தம் அருகில் துண்டை விரித்து அதில் சிறுவனை அமரச் சொன்னார் பெரியவர். சிறுவன் தயங்கியவாறே அவர் அருகில் சென்றான். அவருடைய பேச்சு அவனுக்குப் பிடிபடவில்லை.

திருஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
காஞ்சிபுரம்

“மகானைப் பக்கத்திலேயே வரவழைத்துப் பேசினவனாச்சே. மரியாதை கொடுக்க வேண்டாமா”, என்று கோவணாண்டிப் பெரியவர் கேட்டார்.
சிறுவனோ, “வாத்யாரே, இந்தப் பக்கம் ஸ்ரீபரமாச்சார்யாளைப் பார்க்க உனக்குக் குடுப்பினை இல்லேன்னு சொல்லிட்டு அப்புறம் அவரைத் தரிசிக்க அனுப்பி வைச்சு திருவிளையாடல் செஞ்சது எல்லாம் நீதானே குருவே. என்னே என் பாக்யம்,” என்று சிறுவன் கோவணாண்டிப் பெரியவரிடம் உணர்ச்சி பெருகக் கூறினான்.
சிறுவனின் உணர்வுப் பெருக்கத்தின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பெரியவர், “வாழ்க்கையிலே ஒவ்வொருத்தருக்கும் குரு அவசியம். குரு அற்ற வாழ்க்கை குருட்டு வாழ்க்கை. அப்படின்னா சற்குரு இல்லாதவங்க எங்க போய் அவரைத் தேடறது? அவங்க ஜகத்குருவையே தம் குருவாக ஏத்துகிட்டு ஆன்மீகச் சாதனைகளைச் செய்யணும். அப்படியொரு குருவை அடைஞ்ச நிலையிலே அவர்கிட்டவே எல்லா தெய்வங்களும், தேவதைகளும், மகான்களும் இருக்காங்க அப்படின்னு அவன் உணரணும் இதையே ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து என்று அபிராம பட்டர் சொல்றாரு”, என்று விளக்கினார்.
தம் விளக்கத்தைச் சிறுவன் ஆர்வத்துடன் கவனிப்பதை உணர்ந்த கோவணாண்டிப் பெரியவர். “பரமாச்சார்யாள் காஞ்சீபுரத்தில இருக்காரு, நீ ராயபுரத்தில இருக்கேன்னு நெனச்சா நீ இங்கதான்  எப்பவுமே இருப்பே. அப்புறம் எப்படி உன் நிழலையே பெரியவாளா பார்க்கப் போறே? ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ. என்னிக்கு உன் நிழலையே பெரியவாளா பார்க்கிறாயோ அன்னிக்குத் தான் ‘உன் குருவும் அதுவும் ஒன்று அதுவும் இதுவும் ஒன்றுனு உணருவே. அப்பதான் கோவில் கர்ப்பகிருகத்திலே இருக்கிற மூலவரை நீ உன் குருவாய்க் காண்பாய். அன்றுதான் தெய்வீகப் படிப்பின் முதல் படிக்கட்டில் நீ நிற்கிறேன்னு தெரிஞ்சுக்கோ. அதுவரைக்கும் உன்னைப் “பக்தன்” “குரு அடிமை” அப்பிடின்னு சொல்லிக்காதே. உன்னோட கர்மாவைக் கையிலே வெச்சிக்கிட்டு உன்னோட கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து ராப் பகலா உனக்காக வேண்டி வருகிற குருவையே உன்னால் உணர முடியலேன்னா வெளிலேயிருக்கும் மற்ற குருமார்களையா புரிஞ்சுக்கப் போறே? ஓர் உடம்பிற்கு ஒரு தலை, ஒருவனுக்கு  ஒரே குரு, பிடிச்சா ஒருத்தரையே குருவாக நினைச்சுகிட்டு கடைசிவரை பிடின்னு பெரியவங்க சொல்வாங்க.. இதை நீயும் புரிஞ்சிக்கிட்டு  மத்தவங்களுக்கும் சொல்லு”, என்றார்,
அந்தச் சிறுவன் குருமங்கள கந்தர்வாவாக மலர்ந்து இன்றைக்கு அருள் பாலிக்கின்ற நிலையில் இருக்கிறார். அவர் விரும்பும்போதெல்லாம் இன்றும் ஸ்ரீபரமாச்சார்யாள் அவருக்குத் தரிசனம் அளிக்கின்றார். இதற்கு மூலகர்த்தாவான சற்குருவின் (சிவ குருமங்கள கந்தர்வாவின்) குருகடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற்றவர் அவர் என்று எண்ணும்போதெல்லாம் மெய் சிலிர்க்கும். உடல் புளகாங்கிதம் அடையும், மகான்களை மகான்களே அறிவர்
“குருவை நம்பினோர் என்றும் அழிந்ததில்லை. நம்பிக்கையின் ஆழத்தைக் கொண்டே குருகடாட்சம் கிட்டுகிறது”.

ஸ்ரீராமனின் அருளாணை

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலுள்ள “சகஸ்ரலிங்கம்” மிகவும் விசேஷத் தாத்பர்யம் உடையது. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தம் திருக்கரங்களால் பிரதிஷ்டை அதிஅற்புத சக்தி வாய்ந்த சகஸ்ரலிங்கம் இது. 1008 லிங்கங்கள் இந்தச் சகஸ்ரலிங்கத்தில் ஒன்றாகக் கூடி பரிணமிக்கும். இந்தச் சகஸ்ரலிங்கத்தைப் பிரதட்சிணம் செய்தாலோ, அர்ச்சனை துதி செய்தாலோ அது ஆயிரத்தெட்டு மடங்காகப் பல்கிப் பெருகும் இந்தச் சகஸ்ரலிங்கத்தின் முன்னால் ஒருமுறை ‘ஓம் நமசிவாய’ என ஓதினால் இதில் ஒளிர்கின்ற ஆயிரத்தெட்டு லிங்கங்களையும் ஓம் நமசிவாய என்று துதித்த பலன் கிட்டும்.
ஸ்ரீராமர் இதனைப் பிரதிஷ்டை செய்தபோது, மனிதனாக வாழ்ந்து தன்னலமற்ற இறைத் தொண்டு புரிந்து, மக்களுக்குச் சேவை செய்தமையால் ஞானியரான 1008 ஆத்மாக்களை ஆவாஹனம் செய்து 1008 ஆத்மாக்களின் ஜோதிகளைத் திரட்டி சகஸ்ர ஜோதி லிங்கமாக இங்கு அமைத்தார்.
எனவே இறையைத் தேட, சற்குருவைத் தேடி, ஆன்மிகப் பணிகளை ஆற்றுகின்றவன், இந்தச் சகஸ்ரலிங்கத்தை நன்முறையில் தரிசித்தால் தக்க சற்குரு உடனே அவனை அரவணைப்பார். இது ஸ்ரீராமனின் அருள் ஆணை!

ஸ்ரீமகா அவதூது பாபா

என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகள் – 2 ஸ்ரீமஹா அவதூது பாபா 
பானுதாஸர் அமர்ந்திருந்த நதிக்கரையோரம் வந்த அரண்மனை காவலர்கள், “நேற்று ஸ்ரீவிட்டல் கோயிலில் திருடு போன நவரத்தின மாலை இந்தச் சன்னியாசி கழுத்தில் அல்லவா கிடக்கிறது.! இவனை அரசனிடம் கொண்டு செல்வோம்”, என்று பானுதாஸரை இழுத்துச் சென்றனர்.

நல்லவன் என்பது வேறு. நாணயமானவன் என்பது வேறு. Goodness and Truthfulness are two different things.

ராமராயன் சீற்றம் கொண்டு எதையுமே விசாரிக்காமல் பானுதாஸரைக் கழுவில் ஏற்ற உத்தரவிட்டான். காவலர்கள் பானுதாஸரைக் கழுவில் ஏற்றும்முன் கழுமரம் ஜோதி வடிவம் கொண்டு சந்தன மணம் நிறைந்து வீச, விண்ணோர்கள் மலர்மாரிப் பொழிய, ஆங்கே கழுமரம் கவின்மிகு கற்பகத் தருவாய் மாறி, பச்சை பசேலென்று இலை தழைகளுடனும் நறுமணம் கமழும் பூக்களுடனும் பூத்துக் குலுங்கியது.
அதன் அருகில், சர்வஞான ஜோதியாய் பானுதாஸர் கைகூப்பி, தொழுது , “விட்டலா! விட்டலா! விட்டலா! என்றும்
“ஸ்ரீ மஹா அவதூது பாபா கீ ஜெய்!
ஸ்ரீ மஹா அவதூது பாபா கீ ஜெய்!
ஸ்ரீ மஹா அவதூது பாபா கீ ஜெய்! “
என விண்ணை முட்டும் கோஷங்களுடன் மெய்மறந்த நிலையில் பரவசத்தோடு நடனமாட, ராமராயன் விரைந்தோடி வந்தான்.

வேலை (Work) என்று எடுத்துக் கொள்ளாமல் ‘சேவை செய்கின்றோம்’ என்ற மனப்பான்மையுடன் காரியங்களைச் செய்ய வேண்டும்.

கழுமரம் அருகில் ஜோதி சூழ பானுதாஸர் கைதொழுது நிற்க கழுமரக் கீழ்ப் பகுதியோ பசுஞ்சோலையாய்ப் பூத்துப் பிரகாசிக்க அசரீரியாய் எழுந்தது விட்டலநாதரின் தெய்வக் குரல் “ராமராயா! தவறு செய்து விட்டாயே! யான் பண்டரீபுரம் திரும்புகிறேன். பானுதாஸனுடன் என்னை அனுப்புவாயாக!”.
ராமராயன் தவறையுணர்ந்து திருந்தியவனாய் ஸ்ரீவிட்டல நாதரின் விருப்பப்படியே அவருடைய திருவிக்ரகத்தைப் பரிவாரங்கள் புடை சூழ, சகல மரியாதைகளுடனும், ஆராதனைகளுடனும் பானுதாஸருடன் பண்டரீபுரத்திற்கு அனுப்பி வைத்தான்.
ராமராயன் ஸ்ரீமஹா அவதூது பாபாவின் கோடானு கோடியான லீலா விநோதங்களை முற்றும் அறிந்தோர் சித்த புருஷர்களே!
அவற்றில் ஒன்றான ஸ்ரீவிட்டலநாதன் பண்டரீபுரம் மீண்ட இத்திரு நிகழ்ச்சி ஸ்ரீமஹா அவதூது பாபாவின் அருட்செயலின்பால் பட்டதாகும் என்ற ஆன்மீக ரகசியத்தை நமக்கு அருளியவர் சிவகுரு மங்கள கந்தர்வா ஆவார்.
ஸ்ரீமஹா அவதூது பாபாவுடன் நம் குருமங்கள கந்தர்வா   
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர்..... நம் சிவகுரு மங்கள கந்தர்வாவுடன், தற்போது சீனாதேசத்திலிருக்கும் மானஸ்ரோவர் புனித யாத்திரைச் சென்ற போது  காலை....
வழியில் இமயமலைச் சாரலில் கடும்குளிர் கேசாதி பாதம் கம்பளி ஆடைகளுக்குள் சிறுவனாகிய நம் குருமங்கள கந்தர்வா நிறைந்திருந்தார்.
.......ஆனால் சிவகுரு மங்கள கந்தர்வா வழக்கமான தம் கோவணத்தில் ...... அனாயாசமாகக் கைகளை வீசி ஆட்டிக் கொண்டு வெகுவேகமாகப் பனிக் கட்டிகளின் மேல் வெற்றுக் காலுடன் நடந்து கொண்டிருந்தார். அவரை அதிசயமாகப் பார்த்துக் கொண்டே சிறுவன் வேகமாகப் பின் தொடர்ந்தான்.         
“அதோ பார்! நம்ம கூட்டத்து  ஆள் வந்துக்கிட்டு இருக்காரு“  என்று பெரியவர் சுட்டிக் காட்டினார்.
சிறுவன் அங்கு உற்று நோக்கினான். அங்கே கிளைக்குக் கிளை குரங்கு தாவுவதைப் போல் ஓர் இளைஞன் நிர்வாண நிலையில் பல நூறு மைல்கள் இடைவெளிகளுள்ள மலை முகடுகளைத் தாண்டியவாறு வேகமாக வந்து கொண்டிருந்தான்.

எதையுமே புரிந்து கொள்ள முயற்சி செய்யாதே. Waste. The more you try to understand using your knowledge, the more you go deep into your mind, you will be getting more questions only. Just do what has been ordained and forget. This is the simplest thing.

20 ஆயிரம் அடிகளுக்கு மேல் உயரமுள்ள மலைச் சிகரங்களைத் தாண்டிக் குதித்து வருவதற்கு இவர் என்ன ஆஞ்சனேய சுவாமியா? எனச் சிறுவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
மார்க்கண்டேயன் போல் என்றும் மாறா இளமை ...... ஸ்வர்ண ரேகைகள் தகதகவென மின்னும் நிர்வாணமான பொன்மேனி ... ஜோதி ப்ரகாசமாய் ஜொலிக்கும் கண்கள்..
சிவகுரு மங்கள கந்தர்வாவும், அவ்விளைஞனும் ஒருவரையொருவர் நமஸ்கரித்துக் கொண்டனர். இனம் புரியா மொழியில் ஏதோ பேசினர். சிறுவன் வியந்து பார்த்தான்.
“இவன்தான் அந்தப் பிள்ளையாண்டான்! நல்லா கவனிச்சுக்கோ“ ...என்று பெரியவர் குரல் கொடுத்தவாறு, “டேய், நமஸ்காரம் பண்ணுடா”, எனச் சிறுவனை முடுக்கி விட்டார்.
“இவர் நமஸ்காரம் பண்ணச் சொன்னால் வந்தவர் பெரிய சித்தராகத் தான் இருக்க வேண்டும்” என மனக் கணக்கிட்ட சிறுவன் அவ்விளைஞன் காலில் விழுந்தான்.
சிறுவனால் எழுந்திருக்கவே இயலவில்லை. திண்டுமயமான கம்பளி ஆடைகளை ஊடுருவிய குளிரால் கை கால்கள் உறைந்து விட்டன. எழும்ப எத்தனித்தும் இயலவில்லை. பனிப்படலம் உடைகளை மறைத்து குளிரைப் பெருக்க ..... ஜில்லிட்ட உடைகளை மீறி உடலை அசைப்பது கூட பகீரதப் பிரயத்தனமாகி விட்டது.
தேஜோ ரூபனான இளைஞன் குனிந்து சிறுவனை லாலவகமாகப் பற்றி வாரியெடுத்து அணைத்து உச்சி முகர்ந்தான்.
சிறுவன் திகைத்தவாறே கண்களைச் கசக்கிப் பார்த்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விளைஞன் பல மலைச் சிகரங்களைத் குதித்துத் தாண்டியவாறே மறைந்தான். அவன் சென்ற இடமெல்லாம் தேஜோமயமான ஒளிக்கதிர்கள் பின் தொடர்ந்தன.
“யார் வாத்தியாரே?” சிறுவன் அப்பாவியாகக் கேட்டான். “அவர் தாண்டா நம்ப கூட்டத்தில்  ஒரு பெரிய ஆளு ஸ்ரீ மஹா அவதூது பாபா! புரிஞ்சுக்கிட்டயா?” என்றார் பெரியவர்..

நாம் ஒன்று நினைக்க பெரியவர்களோ வேறொன்று நினைக்கின்றனர்.

சிறுவன் ஸ்தம்பித்து நின்றான்..
“ஏன் வாத்தியாரே? முன்னாடியே சொல்ல மாட்டியா!” என்று கேட்டான்.
“சொன்னாக்க, நீ உடனே அத குடு, இத குடுன்னு அவரைப் புடுங்கி எடுத்துடுவே”, என்று பெரியவர் கண்ணைச் சிமிட்டினார்.
“அந்த ஆளோட ஏதோ பாஷைல பேசினியே. என்னதான் அப்படிப் பேசினே, வாத்தியாரே?” என்று சிறுவன் ஆவலுடன் கேட்கத் தொடங்கினான்.  “ஏண்டா உனக்குத் தெரியணும்னா நாங்க தமிழ்லேய பேசியிருப்போமே உனக்கெதுக்கு இதெல்லாம்”.
பெரியவர் cut and dried ஆகப் பேசினார். சற்குருவிடம் சேர்ந்து விட்டால் பெற வேண்டிய அனுகிரகத்தைப் பெற்றுத் தருவார்கள். நாம் எதையும் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதைச் சிவகுருமங்கள கந்தர்வா எடுத்துக்காட்டுகிறார்.
காலவரையன்றிப் பல கோடி யுகங்களாக இமயமலைச் சாரலில் திருஉலா வரும் ஸ்ரீமஹா அவதூது பாபாவின் தரிசனம் மட்டுமின்றி அவர் தம் தெய்வத்திரு தேகத்தின்  அரவணைப்பையும் பெறும் பாக்கியத்தைப் பெற்றவர் நம் குருமங்கள கந்தர்வா. இவரைச் சற்குருவாகப் பெற்றவர்கள் மாபெரும் பாக்கியம் செய்தவர்களன்றோ!

குலதெய்வ மகிமை

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் உண்டு. பாரம்பரியமாகப் பல்லாயிரம் குடும்பங்களுக்கு வம்ச வம்சமாக இந்தக் குலதெய்வம் அமைகிறது. கண்ணகி போன்று கற்பின் சிகரமாக விளங்கி பல நன்மக்களை ஈந்து நம் மூதாதையர் மேலுலகத்தின் அற்புதமான தெய்வீக சந்ததிகளையும், தம் கிராம மக்களையும் இன்றும் நல்வழி காட்டி அருள் புரிகின்றனர். மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. சித்த புருஷ்ர்களும், ஸ்ரீபரமாச்சார்யாள் போன்ற ஞானிகளும், ஒவ்வொரு மனிதனும் தன்னை நெறிப்படுத்திக் கொண்டு, பிறரை நன்னெறிப் படுத்துவதே சிறந்த தெய்வீகப் பணியென வழிகாட்டி நடமாடுந் தெய்வங்களாய் வாழ்ந்து வருகின்றனர்.
தம் திருச்சேவையினால் நம்முடைய மூதாதையர் அற்புதமான வாழ்க்கை வாழ்ந்ததற்காக இறைவன் அவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு அவர்களை அவரவர் கிராமங்களின் எல்லை தேவதைகளாகவும், குல தெய்வங்களாகவும் ஆன்மீக நிலையில் உயர்வடையச் செய்து பூலோகத்திற்கு அனுப்புகின்றான். அவர்களும்  இத்தகைய தேவதைகளாகி, தெய்வங்களாகிப் பல்லாயிரம் ஆண்டுகள் அருள் புரிகின்றனர். பிறகு ஏனைய தகுதியுடைய பிறர்க்கு இத்தகைய வாய்ப்புக்களை அளித்து மேலும் உன்னத ஆன்மீக நிலைகட்கு இட்டுச் செல்கின்றான்.

Negative force is omnipresent, omnipotent and omniscent. Positive force is also omnipotent. Positive force முன்னால் negative force செயல் இழந்து நிற்கிறது. அவ்வளவுதான். ஆனால் தன் சக்தியை முழுவதுமாக இழந்து விடுவதில்லை.

இவ்வாறாகப் பிறர்க்கென தன் வாழ்வைத் தியாகம் செய்து அரும்பணி ஆற்றுகின்ற மனிதர்களே தெய்வமாகின்றனர். இவ்விதம் தெய்வத் திருநிலைகளை அடைந்தவர்களே பித்ரு தேவதைகளும், கிராம எல்லை தேவதைகளும் ஆவர். பூலோகத்தில் அருந் தொண்டாற்றி, விண்ணுலகில் இருந்தும் அருள் பாலிக்கும் இவர்களுக்கு நன்றி செலுத்துவதே கிராமத் திருவிழாக்களாகும்.
நீர் மோர், பானக தானங்கள், அன்ன தானங்கள், வஸ்திர தானங்கள், காலணி தானங்கள் இவைகளால் பிறருக்குச் சேவை செய்து, வீர விளையாட்டுக்கள், சாகசங்கள் இவற்றால் இளைஞர்களை ஊக்குவித்து இவையனைத்தும் நிகழ்வது கிராம எல்லை தேவதைகளின் அருளால் தான் என்பதை உணர்த்துவதே கிராமத் திருவிழாக்களின் நோக்கமாகும்.
குல தெய்வங்களுக்கு முடி காணிக்கை அளிக்கின்ற வழக்கம் நம்மிடையே உண்டு. தலைமுடியானது, சாதாரணமாக உணவில் கலந்தால் வாந்தி, பேதி, மயக்கம் போன்ற உபாதைகள் உண்டாகின்றன. ஆனால் கருகருவென்ற, அடர்த்தியான தலைமுடியுடன் கருவில் வாழும் சிசுவால் தாய்க்கு எவ்விதத் தீங்கு ஏற்படுவதில்லை. இதற்கான ஆன்மீக விளக்கங்களைத் தர வல்லவர்கள் சித்த புருஷர்களே.
நம்முடைய பூர்வ ஜென்ம வினைகளைச் “சஞ்சித கர்மா” என்பர். அதில் ஒரு பகுதியைப் “பிராரப்த கர்மா” எனப் பகுத்து இப்பிறவிக்கான சில கர்மங்களைத் தொகுத்து இறைவன் நம்மைப் பூவுலகிற்கு அனுப்புகிறான். எனவே இப்பிறவியில் நாம் அனுபவிக்கும் , இன்ப துன்பங்கள் “பிராரப்த கர்மா” ஆகும். இது தவிர தொக்கியிருக்கும் பூர்வ ஜென்ம சஞ்சித கர்மாவின் ஏனைய வினைகளைக் கழிப்பதற்கு நாம் பல்லாயிரம் பிறவிகள் எடுத்தாக வேண்டும்.
சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாக இப்பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டிய பிராரப்த கர்மாவையே நம்முடைய இப்பிறவி வாழ்க்கையாக வாழ்கிறோம். இவ்வாழ்வில் மேலும் பல கர்மங்களைப் புதிதாக சேர்த்துக் கொள்கிறோம். இவை “ஆகாமி கர்மா” எனப்படும். இந்த ஆகாமி கர்மாவுக்கான எதிர் விளைவுகளை இப்பிறவியிலோ அல்லது எதிர்வரும் பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய சஞ்சித கர்மாவுடன் அவை சேரவும் கூடும்.

நவகிரக லிங்கங்கள்

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து நவக்கிரகங்களும் விசேஷமான லிங்க வடிவங்களில் அமைந்திருக்கும் தாத்பரியம் என்ன ?
இத்தகைய விசேஷமான நவக்கிரகங்களைப் பூலோகத்தைத் தவிர எந்த லோகத்திலும் தரிசிக்க இயலாது. இவற்றைத் தரிசிக்க பல்வேறு லோகங்களிலிருந்து கோடானு கோடி தேவர்களும், தேவதையரும் பூவுலகத்திற்கு வந்து செல்கின்றனர். பங்குனி உத்திரத் திருநாளன்று, பரப்பிரும்மமாம் சிவபெருமான் உமையவளை மணந்து அற்புதமான நடராஜ தத்துவ நடனத்தை ஆடி சர்வ லோகங்களுக்கு அருள் பாலிக்கிறார்.

நவகிரக லிங்கங்கள்
தஞ்சை பெரிய கோயில்

ஒருமுறை இத்தகைய சிவசக்தி ரூப லாவண்யத்தைக் கண்டு களிக்க அனைத்து யோகியர், ஞானியர், சித்தர்கள், ராட்சசர்கள், பித்ரு தேவதைகள், நவக்கிராதிபதிகள், ஏனைய தெய்வாதியரும் குழுமி இருக்க, ஈசன் தம் திருநடனத்தைத் துவங்க இருக்கிறார். அப்போது பூலோகத்தில் பதிமூன்று கோடி இறை நாமங்களை உச்சரித்துப் பாக்கியம் பெற்ற அற்புத ஜீவன்கள் பித்ருக்கள் வரிசையில் இடம் பெறும் அருள் பெற்றனர். இவர்களுக்குப் பின்னால் நவக்கிரகாதிபதிகள் அமர்ந்திருந்தனர்.
“கேவலம், பூலோக ஜீவன்களுக்குப் பின் நாம் அமர்வதா? பதிமூன்று கோடி இறை நாமங்களை உச்சரித்தமைக்காக இந்த அற்ப ஜீவன்கள் பித்ருக்கள் வரிசையில் இடம் பெறுவதா?” என்று சந்திரன் கொதித்தெழுந்தான். ஏனைய நவக்கிரகர்களும் வழிமொழிந்து சந்திரனை ஆதரித்து எழுந்து நின்றனர்.
அப்போது பிரஹஸ்பதி, “பொறுங்கள் சகோதரர்களே! பூலோகத்தில் இறை நாமம் ஜபிப்பது ஓர் அற்புதமான ஞான யோகம் ஆகும். அதிலும் 13 கோடி இறை நாமத்தை நாமஸ்மரணம் செய்திடின் அவர்களுக்குப் பகவத் தரிசனம் கிட்டும் என்பது தேவ விதியாகும். எனவே இவர்கள் பித்ருக்கள் வரிசையில் அமர்வதற்குத் தக்க இறையருள் உள்ளது”, என்று சமாதானப்படுத்தினார். ஆனால் நவக்கிரகர்கள் இதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
அவர்கள் சினம் அடைந்து தங்கள் ஆதங்கத்தை மகாவிஷ்ணுவிடம் சென்று வெளியிட்டனர். மகாவிஷ்ணுவும், “உங்கள் குறைபாடுகளைத் தீர்க்கின்ற புண்ணியத் தலம் அருணாசல ஷேத்திரமாகிய திருஅண்ணாமலை ஒன்றே ஒன்று தான். அங்குச் சென்று உங்கள் கோரிக்கைகளை முன் வைத்து கிரிவலம் வருவீர்களாக”, என்று அவர்களை ஆசிர்வதித்து அனுப்பினார்.
அனைத்து நவக்கிரகர்களும் திருஅண்ணாமலையை அடைந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரரைத் தொழுதனர். தங்களுக்குப் பங்குனி உத்திரத்தன்று பரமசிவன் உமையவள் திருமணக் காட்சியில் உன்னதமான இடம்வேண்டி கிரிவலத்தைத் தொடங்கினர். கோடானுகோடி யுகங்கள் கிரிவலம் வந்த பின்பு தரிசனம் தந்த சர்வேஸ்வரனை அனைத்து நவக்கிரகர்களும் தொழுது வணங்கினர். பரம்பொருளாம் ஆதிசிவன், “நீங்கள் யாவரும் பூலோக சிவாலயங்களுகுச் சென்று நவக்கிரக சக்திகளைப் பெருக்குவீர்களாக! எங்கு  நீங்கள் லிங்க வடிவம் பெறுகிறீர்களோ அங்கு நவக்கிரக லிங்கங்களாக அமர்ந்து அருள் பாலிப்பீர்களாக! தக்க சமயத்தில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம்”, என்று வரம் தந்தார்.
இவ்வாறு நவக்கிரகங்களும் பல சிவாலயங்களில் நவசக்திகளைப் பெருக்கி அருட்பணி புரிந்து வந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் அவர்கள் லிங்க ரூபமடைந்தனர். பின் அவர்கள் அனைவரும் அப்பிரஹதீஸ்வரர் ஆலயத்திலேயே லிங்கங்களாய் அமர்ந்து நவக்கிரக லிங்கேஸ்வரர்களாயினர்.

அந்த வருட பங்குனி உத்திரத் திரு நாளன்று திருக்கயிலாயமே ஆனந்தம் பூத்து குலுங்கினாற்போல் பொன்மயமாக ஜொலித்து அனைவரும் சிவபெருமானுக்காகக் காத்திருக்க, சிவபெருமானோ யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் பாவனை செய்தார்.
அப்போது சர்வ லோகங்களும் அதிசயிக்க, பொன்மயமான ஒளிக்கதிர்கள் பரஞ்ஜோதி மயமாய் ஒளிர நவக்கிரகர்களும் லிங்க சொரூபமாய் சர்வானந்தமயமாய்த் தோன்றினர். அவர்களைச் சிவபெருமானே முன்னின்று வரவேற்று முன்னிலை தந்து அமர்த்தினார். திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்ததினால் எத்தகைய தெய்வீக பாக்கியத்தை ஒருவர் பெற இயலும் என்பதைச் சர்வ லோகங்களுக்கும் காட்டுவதற்காகத்தான் சிவபெருமான் இத்தகைய திருவிளையாடலை நடத்திக் காட்டினார்.
இறைவனுடைய அருட் கருணையை அறிந்த நவக்கிரகர்களும், பூலோக ஜீவன்களை தவறாக எண்ணிய செயலுக்காக வெட்கி மனம் திருந்தினர். அன்று முதல் தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயத்தில் லிங்க ரூபமாய் திருஅண்ணாமலை கிரிவலத்தின் மிகிமையை அனைத்து ஜீவன்களுக்கும் எடுத்துரைத்து வரலாயினர்.
திருஅண்ணாமலையில் நவக்கிரக தரிசனம் என்ற அற்புத தரிசனம் ஒன்று உண்டு. இதைச் சற்குரு மூலமாகவே அறிய வேண்டும். இத்தகைய விசேஷமான நவக்கிரக தரிசனத்தைப் பெறுவோர் சர்வ லோகங்களிலும், அனைத்துப் பிறவிகளிலும் நவக்கிரகங்களுடைய அருளுக்குப் பாத்திரமாகவும், எப்போதும் சுப கிரகங்கள் பார்வையைப் பெற்றும் இன்பமுடன் வாழ்வர். அவர்களை எவ்விதத் துன்பமும் அணுகாது.

பயம் இருக்கும்வரைதான் மனிதன். பயம் இல்லாதவன் இறைவன் ஒருவனே.

எனவே தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயத்திலுள்ள லிங்க வடிவ நவக்கிரகங்களை நல்லெண்ணெய்க் காப்பிட்டு வழிபட்டு எள் சாதத்தை முறையாக அன்னதானமாக அளித்து நவக்கிரகங்களுக்கு உரித்தான வஸ்திரங்களையும், தானியங்களையும், நவரத்திரனங்களையும் தக்க முறையில் வசதிக்கேற்ப தான தர்மங்களாக ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட இவர்களுக்குத் திருஅண்ணாமலையில் கிரிவலத்தில் நவக்கிரக தரிசனத்தைச் சற்குரு பெற்றுத் தருகின்றார்.
திருஅண்ணாமலையே சிவலிங்கமாகத் தரிசனம் அளிக்கின்றது. தஞ்சைக் கோயிலில் லிங்கங்களாகக் காட்சி தரும் நவக்கிரகங்களையும் தரிசனம் செய்து தக்க தானதர்மம் செய்யும் பக்தர்களுக்கு அருணாசலத்தைப் பற்றிய உள்ளுணர்வினை, ஆத்ம ஜோதியின் பரிபக்குவ நிலையை இறைவன் ஊட்டுகின்றார். இவர்களுக்கு எதிர்பாராத முறையில் அருணாசல ஜோதி தரிசனமும் கிட்டும்.
மேலும் சமுதாயத்தில் நன்முறையில், அந்தஸ்துடன் வாழ விரும்புவோருக்கும், மிகுந்த செல்வாக்குடன் தார்மீக அடிப்படையில் வாழ்க்கை நடத்த விரும்புவோருக்கும் இந்த நவக்கிரக தரிசனம் அருள் பாலிக்கின்றது.
ஜனாதிபதி, கவர்னர், அயல் நாட்டுத் தூதுவர்கள் போன்ற கவுரவமான பதவிகளைப் பெற விரும்புவோருக்கு இந்த நவக்கிரகத்தின் அனுக்கிரகம் உதவும். இங்கு ஏனைய நவக்கிரகங்களை விடச் சந்திரன் சற்று உயர்ந்து காணப்படுகின்றான், ஏனெனில் சந்திரனே தேவதேவனாகிய சிவனின் பங்குனி உத்திரத் திருமண நாளன்று “நவக்கிரகங்களுக்குத் தனித்துவம் வேண்டும்” என்று குரல் கொடுத்த கிரகாதிபதியாதலின் உயர்ந்த ரூபம் பெற்றுக் காணப்படுகிறான்.
எனவே சந்திராஷ்டமப் பரிகாரம் செய்ய விரும்புவர்களுக்கும் சந்திரப் புத்தி, சந்திர திசையில் நிவாரணம் பெற வேண்டுவோருக்கும் நவக்கிரக லிங்க தரிசனம், அன்னதானம் போன்ற தான தர்ம அறங்களும் சிறந்த பலன்களை அளிக்கும்.

வருமுன் காக்கும் வரசித்த புருஷர்

சென்னை பூந்தமல்லியிலுள்ள ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவிலின் மஹிமை பலரும் அறியாதது. நூற்றுக்கணக்கான சித்தர்கள் இக்கோயிலின் தூண்களிலும், மாடங்களிலும், மேற்கூரைகளிலும் ஜீவ சமாதி பூண்டுள்ளனர். ஸ்ரீஆதிசங்கரர் இத்திருக் கோயிலுக்கு விஜயம் செய்து அண்ட சராசரங்களிலும் காண இயலாத இரண்டு யந்திரங்களைத் (சக்கர வடிவில்) தம் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகிலுள்ள ஸ்ரீவைதீஸ்வரன் கோயிலின் பூரண அம்சங்களைத் தாங்கி அதற்கு ஈடான முத்துக்குமார ஸ்வாமியாகத் திருமுருகன் அருள் பாலிக்கும் தலம் இது. அது மூல ஸ்தலம் என்றும் சென்னையில் உள்ளது பிம்ப ஸ்தலம் என்றும் சித்தர்கள் கூறுவார்கள். இங்குள்ள மூர்த்திகள் மூல வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ளவை போன்றே அமைந்து ‘இரண்டும் ஒன்றே’ என்று சித்தர்களால் பெருமை பாடும் அற்புதச் சிறப்பைத் பெற்றுள்ளன.

எதற்கும் கவலைப்படாதே. எது நடக்குமோ, அது நடந்தே தீரும். கவலைப்படுவதால் உடல் பாதிக்கப்படுகிறது. அதனால் தவறுகள் செய்வாய்.

இத்திருக்கோயிலில் பல ஆன்மீக  ரகசியங்கள் பொதிந்துள்ளன. ஸ்ரீதையல் நாயகி அன்னையின் சன்னதிக்கெதிரில், ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி தரிசனம் தரும் தூணின் பின்புறன் “ஸ்ரீ அவதூது ரோக நிவர்த்தீஸ்வரர்” என்ற சித்தர் பெருமான் ஜீவ சமாதி கொண்டு அருள் பாலிக்கின்றார்.
இவருடைய விசேடத் தன்மை என்னவெனில் இவர் எந்த நோயிலிருந்தும் ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள அருள் புரியும் அற்புத சித்தர். உதாரணமாக ஒருவருக்கு அம்மை நோய் பற்றும் அறிகுறி தென்படின் ஸ்ரீஅவதூது ரோக நிவர்த்தீஸ்வரரைத் தரிசித்து, இயன்ற அளவு நீர்மோர், இளநீர், குளிர்பானம், மிளகு சாதம் போன்றவற்றைத் தானமாக ஏழைகளுக்கு வழங்கி தன்னை அந்நோயினின்று தற்காத்துக் கொள்ளலாம்.
ஒரு குழந்தைக்குப் போலியோ தாக்கும் அறிகுறி ஏற்படின், இச்சித்தரைத் தரிசனம் செய்து இயன்ற அளவு ஊனமுற்றோர்க்குச் சக்கரப் பலகை, ஊன்று கோல், சக்கரவண்டி jaipur leg எனப்படும் செயற்கை கால் போன்றவற்றைத் தானமாக வழங்கி அக்குழந்தையைப் போலியோ நோயினின்று காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறாக எந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டாலும் அதற்குரிய தான் முறைகளுடன் கூடிய இந்தச் சித்தர் பெருமானின் தரிசனம் அந்த நோயினின்று எவரையும் தற்காக்கும். நோய் கண்டபின் அருள் பாலிக்கும் தெய்வங்கள், தெய்வ சன்னதிகள் பற்றி அறிந்துள்ளோம் . ஆனால் நோய் வரும்முன் காக்கும் ஸ்ரீரோக நிவர்த்தீஸ்வரரின் அருள் தன்மை மருத்துவத் துறைக்கே ஒரு சவாலாகும்.
அம்மகானுக்கு இப்படிப்பட்ட சக்தி எப்படி வந்தது ?

பிறவி நிச்சயம் உண்டு. உயர்ந்ததா, தாழ்ந்ததா என்பதுதான் மாறிக் கொண்டே இருக்கும். தவறே செய்யாமல் வாழவே முடியாது. தவறுகளைக் குறைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ‘நோய்களைத் தீர்ப்பதற்கு ஈசனுடைய பல லிங்க வடிவங்கள் இருப்பினும் நோய்கள் வரும்முன் காக்கும் லிங்க வடிவைக் கண்டு அருள் பெற்று, பிறவிப்பிணி நீக்க உதவ வேண்டும்’, என்று விருப்பம் கொண்டார் ஓர் உத்தமர். அவர் அத்தகைய லிங்கேஸ்வரரைத் தேடி பல யுகங்கள் அலைந்தவராய் முடிவில் இறையருளால் இமயமலைச் சாரலிலே “ரோகேஸ்வரர்” லிங்கத்தைக் கண்டார். அன்னாரே தாம் தேடிய பொக்கிஷம் என்பதை ஈசனுடைய அசரீரி ஒலியால் உணர்ந்தார். பிறகு அவ்விடத்தில்  இருந்து கொண்டு பல திருப்பணிகள் இயற்றி நோய் தடுக்கும் ரகசியங்களை ஈசனருளால் உணர்ந்து கொண்டார். இறைவனிடம், “ஐயனே! அடியேன் எங்கிருந்து கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும்?” என்று கேட்க ஈசனும், “நீ எந்தத் தலத்தில்  அவதூதாக மாறுகின்றனையோ அங்கு குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலிப்பாயாக!” என்று அருளினான்.
அவ்வாக்கின்படியே அந்த உத்தமர் அனைத்து உத்தமத் தலங்களையும் தரிசித்தவராக முடிவில் பூவிருந்த வல்லியை அடைந்து வைதீஸ்வரனைத் தரிசித்த வேளையிலேயே அவதூதாக மாறினார் .... பின் ஈசனுடைய விருப்பப்படி அங்கேயே சமாதி கொண்டு விட்டார் . அந்த உத்தமர் தாம் ஸ்ரீஅவதூது ரோக நிவர்த்தீஸ்வரர்.
“Prophylactic (prevention) is better than Cure” என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப வரு முன் காப்பது மருந்துகளை விடச் சாலச் சிறந்ததாகும். இம்முறையில் PROPHYLACTIC PROPHET ஆக  விளங்கும் ஸ்ரீரோக நிவர்த்தீஸ்வரர் பூலோகத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத, நோய் வராது காத்து அருளும் வரசித்த புருஷ்ராவார்.
லோக க்ஷேமத்திற்காக நற்செயல்கள் செய்து உண்மையாகப் பாடுபடும் சத்சங்கங்களில் நம்மைப் பிணைத்துக் கொண்டாலன்றோ, சத்சங்கத்தை மௌனமாக இயக்கும் சித்த புருஷ்ர்களிடமிருந்து மேற்கண்ட ஆன்மீகப் பொக்கிஷ்ங்களைப் பெற இயலும்...!!

அமுத தாரைகள்

மஹான்கள் எது செய்தாலும் அதில் ஓர் அர்த்தம் இருக்கும் ஒருமுறை நாம் குருமங்கள கந்தர்வாவுடன்  ஒரு திருமணவைபவத்திற்குச் சென்றிருந்தோம். அப்போது அங்கு முகூர்த்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாலி கட்டும்  நேரமும் வந்தது. அப்போது மணமக்களை ஆசிர்வாதம் செய்யச் சொல்லி அனைவருக்கும் உதிரி புஷ்பம் வழங்கப்பட்டது. குருமங்கள கந்தர்வாவிடம் பூக்கூடை வந்தபோது  அவர் கூடைக்குள் எட்டிப் பார்த்து கிளறித் தேடிச் சரமாக இருந்த புஷ்பத்தை எடுத்துக் கொண்டு சிறிது உதிரி புஷ்பத்தையும் எடுத்து  வைத்துக் கொண்டார். நாம் அதன் காரணத்தை அறிந்து கொள்ள ஆசைப்பட்ட போது “சிறிது பொறுத்திருந்து பார்” என்று அவர் கூறிவிட்டார்.

அருணாசல தீர்த்தத்தால் அஷ்டமா சித்து பெறலாம். அசுத்தப் படுத்தினால் கஷ்டமா சித்தே வரும்.

நாமும் காத்திருந்தோம் அப்பொழுது மணப்பெண்ணின் தகப்பனார் அங்கு ஓடிவந்தார். கையில்  ஒரு தட்டில் தன் பெண் கழுத்தில் ஏறப் போகும் தாலியை வைத்திருந்தார் அவர் குருமங்கள கந்தர்வாவிடம், “ஸ்வாமி, நீங்கள் மாங்கல்யத்தை ஆசிர்வதிக்க வேண்டும்” என்று கூறினார். உடனே, குருமங்கள கந்தர்வா தான் பூக்கூடையிலிருந்து தேடி எடுத்து வைத்திருந்த பூச்சரத்தை திருமாங்கல்யத்தின் மேல் வைத்து ஆசிர்வதித்தார். பின் நம் பக்கமாகத் திரும்பி் புன்முறுவல் பூத்தபடி “இப்பொழுது உனக்குப் புரிகிறதா?” என்று கேட்க, நாமும் “புரியவில்லை ஸ்வாமி” என்று விழிக்க அவரோ “மணமாகி புக்ககம் செல்லும் பெண் தன் கணவனுடைய குடும்பம் உதிர்ந்து போகாமல் ஒன்று சேர்ந்து வாழ ஒரு கருவியாக (மாங்கல்ய கயிறாக) இருக்க வேண்டுமல்லவா! ஆகவே தான் பூக்கூடைக்குள் பூச்சரத்தைத் தேடினேன் (பல பூக்கள் ஓர் கயிற்றில் இணையும் போது அது சரமாகி விடுகிறதல்லவா!) “மாங்கல்யத்தைப் பூ சரம் வைத்துத்தான் ஆசிர்வதிக்க வேண்டும். உதிரிப் பூ கொண்டு  ஆசிர்வதிக்க கூடாது”, என்று விவரித்தபடி சொல்ல நாமும் மெய்மறந்து நின்றோம்...
அது சரி மணமகளின் தந்தை தாலிக் கயிற்றை எடுத்து வருவார் என்பது குருமங்கள கந்தர்வாவிற்கு  எப்படித் தெரியும் ? மகான்களுடைய சக்திக்கு எல்லையும் உண்டோ! எல்லாம் சித்தன்போக்கு சிவம் போக்குத்தான்!

திருப்பதி வெங்கடாஜலபதி

திருப்பதியில் ஸ்ரீவேங்கடாலபதியைத் தரிசனம் செய்யும் முறையாய்ச் சித்தர்கள் அருளியுள்ளதாவது :
முதலில் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதித் தாயாரைத் தரிசனம் செய்ய வேண்டும். இயன்ற மட்டும் கால்நடையாகவே மேல் திருப்பதி மலையை ஏறிச் சென்று தரிசனம் செய்வது உன்னதமானதாகும். ஏனென்றால் மலை நடைபாதையில் அற்புதமான தெய்வ வனங்கள் அமைந்துள்ளன.

ஒருவனுக்கு ஒருத்தி என்று உரை சொன்னதால் உயர் மணமாம் திருமணம் என்னும் முறை பிறந்தது.

ஸ்ரீஅகஸ்திய பெருமான் உள்ளிட்ட சித்த புருஷர்கள், மகரிஷிகள் தவமிருந்த இத்திருவனங்களில் பல மூலிகைகளின் அற்புதமான நறுமணமும் மூலிகைச் சத்துக்களைத் தாங்கி வரும் இயற்கைக் காற்றும் நம்முடைய தேகத்திற்கு ஆன்மீக ஒளியையும், ஆரோக்யத்தையும், தேக வலிமையையும் தர வல்லதாம், சுகபந்து என்ற மூலிகையின் நறுமணம் கொடிய சரும வியாதிகளைப் போக்கக் கூடியதாகும்.  AIDS வியாதியை அறவே போக்கக் கூடிய செருப்பட்டை என்ற மூலிகையைத் தங்கால் ஆஸ்ரமத்திலும் திருப்பதி மலையிலுமே காணமுடியும்..
திருப்பதி தலமானது பூலோகத்திற்கு உரித்தான நிலப்பரப்பன்று. வைகுண்டத்தின் ஒரு சிறு அணுப் பகுதியே திருப்பதி மலையாகும். சாட்சாத் வைகுண்ட புஷ்கரணியில் நீராடி ஸ்ரீஆதி வராக சுவாமியைத் தரிசனம் செய்து ஸ்ரீனிவாசனாம் வேங்கடாலசபதி சுவாமியின் திருக்கோயிலினுள் செல்ல வேண்டும்..
ஸ்ரீவேங்கடாசலபதியைத் தரிசனம் செய்யும் முறை :-
ஸ்ரீ பெருமாளின் திருவதனத்தைப் பாதங்களிலிருந்து துவங்கி திருப்பாதங்கள், திரு முட்டிகள், இடை, நாபி, புஜங்கள், மகாலட்சுமி வாசம் செய்யும் திருமார்பு, திருக்கண்டம் (கழுத்து), திருவாய், திருநாசி, திருக்கண்கள், திருநாமம், திருசிரசு, திருக்கிரீடம் இவ்வாறாகப் பாதாதி கேச தரிசனமே ஸ்ரீவேங்கடாசலபதியைப் பரிபூரணமாகத் தரிசனம் செய்யும் முறையெனச் சித்த புருஷர்கள் விதித்துள்ளனர்.
பாத நமஸ்காரம், பாத பூஜையின் மூலம் பகவானின் திருவடிகளை அடைந்த ஸ்ரீ மகாலட்சுமித் தாயார் இத்தகைய தரிசன முறையின் மூலமாகவே ஸ்ரீவேங்கடாசலபதி பெருமானின் திருமார்பில் உறையும்  பேற்றைப் பெற்றாக அருளியுள்ளார். எனவே இம்முறையில் தான் திருப்பதியில் ஸ்ரீ வேங்கடாசலபதியைத் தரிசனம் செய்தல் வேண்டும். இத்தகைய வழிபாடே ஸ்ரீமந் வேங்கடாசல நாராயண மூர்த்தியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் என்று சித்தர்கள் உரைக்கின்றனர்.

பேச்சில் விஷம் வைத்துப் பேசுபவனுக்கு மூச்சில் வரும் கோளாறு.

இதைத் தவிர இத்தலத்தில் ஏழை எளியோர்க்கு அன்னதானம் போன்ற தான தரும நற்செயல்களைச் செய்தல் ஸ்ரீபெருமாளின் அனுக்ரகத்தைப் பன்மடங்காகப் பெருக்கி நம்மைக் காக்கும்.
திருமலையானைத் தரிசனம் செய்ய இயலா ஊனமுற்றோர், குருடர்கள், தொழு நோயாளிகள், முதியோர், ஏழை, எளியோர் போன்றோருக்கு ஸ்ரீ சீனிவாசப் பெருமாளின் திவ்ய பிரசாதமாம் லட்டு இனிப்பினை அத்தகையோர்க்கு வழங்கினால் இறையருளைச் சுய நலமின்றிப் பகிரும் மனப் பக்குவத்திற்காக ஸ்ரீ ஏழுமலையானே விசேஷமான அனுக்ரகத்தை வர்ஷிக்கின்றார்.
இவ்வாறு இறைத் தலங்களைத் தரிசிக்கும் போது மனோஹரி சித்தி என்ற புண்ணியம் கிட்டுகிறது.. இதனால் நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கடக்கும் மன உறுதி கிட்டுகின்றது.
இத்தலங்களைத் தரிசிப்பதோடு நில்லாது அன்னதானம், பிரசாத தானம் ஆகியவற்றை ஏழை, எளியோர்க்கு வழங்கும் போது நம்முடைய சுயநலமின்மையைக் கௌரவிக்கும் பொருட்டு இறைவனே மனமுவந்து ‘ஜனோஹரி சித்தி’ என்ற புண்ணியத்தை வரமாக அளிக்கின்றான். இந்த ‘ஜனோஹரி சித்தி‘ என்பது உயிர் காக்கும் கவசம் போல் நம் குடும்பத்திற்கு உறுதுணையாக நின்று நம்மைப் பேராபத்துக்களினின்றும் காப்பாற்றுகிறது.
வாழ்க்கையில் மனம் தளராது பிறர் நலத்திற்காக நாம் வாழ வேண்டும், அதற்கே இறைவன் நம்மைப் படைத்துள்ளான் என்ற திடமான மன வலிமையை அளிக்கும் இந்த ஜனோஹரி சித்தி வளர வளர சாந்தமான சௌபாக்கியம் நிறைந்த வாழ்க்கை அமையும்.

பணம்படுத்தும் பாடு

(சென்ற இதழ் தொடர்ச்சி ...) புன்முறுவல் கொண்ட சிவகுரு மங்கள கந்தர்வா, “பொறு, பொறு, அவசரப்படாதே. உண்மையிலேயே இந்தப் பணம் ஒரு குடிகாரங்கிட்டே இருந்து வந்திருச்சு. அதைத் தான் உன் கையிலே கொடுத்தேன். உடனே அவனைப் போலவே உனக்கும் பீடி பிடிக்கணும், சாராயம் குடிக்கணும்னு எண்ணம் வந்திருச்சு. உன்னோட மனம் புனிதமாயும், பளிங்கு மாதிரியும் இருக்கிறதாலே அதிலே எல்லா எண்ணமும் பதிஞ்சிடுத்து. உண்மையிலேயே இது உன்னோட எண்ணம் இல்லை, அந்த நோட்டுல அந்த எண்ணம் பதிஞ்சிருந்தது. அது உங்கிட்ட வந்திடுச்சு. அவ்வுளவு தான்.

உழைத்துச் சம்பாதிக்காத பணம் எச்சிலைக்குச் சமம்.

ஒரு காலத்தில் இதைப் பத்தி எல்லாருக்கும் எடுத்துச் சொல்லு, ஒவ்வொரு பண நோட்டுலேயும் பல்லாயிரக்கணக்கான எண்ணங்கள் பதிஞ்சிருக்கும். அதைக் காயத்ரி சொல்லியோ, இறை நாமம் சொல்லியோ கொடுத்து, வாங்கற பழக்கம் வந்ததுன்னா அதை நல்ல முறையில் வாங்கி நல்ல முறையில் செலவழிக்கின்ற ஓர் அறப் பண்பாடு எல்லாரிடமும் வளரும். இதை உலகத்திலே இருக்கிற எல்லாருக்கும் எடுத்துச் சொல்லு”, என்று சிவகுரு மங்கள கந்தர்வா அருளினார்.
எனவே நாம் பெறுகின்ற நாணயங்களிலும், பண நோட்டுக்களிலும் பல்லாயிரக்கணக்கான நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் பதிந்து உள்ளன. காயத்ரி மந்திரம் சொல்லியோ, ராமா, ஓம் நமசிவாய, முருகா என்று இறை நாமாக்களைத் துதித்தோ நாம் பண நோட்டுக்களைப் பெறுகின்ற அற்புதமான வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் முறையான வழியில் பணத்தைச் செலவழிக்கின்ற கலையை அறிந்தவர்களாகிறோம். நமக்கு எவ்வுளவு பணம் வர வேண்டுமோ அவ்வுளவுதான் செலவழிப்போம். இப்படிப் போதுமென்ற மனம் நம்மிடம் இருந்து விட்டால் அங்கு பேராசைக்கு இடமேது! பின் போட்டி, பொறாமை, குரோதத்திற்குத்தான் இடமுண்டா என்ன ?  

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam