உலகின் மிகப் பெரிய பிள்ளையார் மூர்த்தி இவர்தான் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருச்சி
மலைக்கோட்டை மகிமை

ஆலயம் தொழுவது சாலவும் நன்று!’ ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று இவ்வாறாக கோயில்களில் இறைவழிபாட்டைத் தொன்றுதொட்டு நமது முன்னோர்களும் , பெரியோர்களும் வலியுறுத்தி வருகின்றனர்...

மலையின் மேலுள்ள மிகப்பெரிய சிவலிங்கம் திருச்சி மலைக்கோட்டையில் அமைந்து அருள்புரியும் தாயுமான லிங்கேசுவரர்.

மலைக்கோட்டை உதயம்

திரிசிரன் என்ற அரக்கர் குல அசுரன் அறம் தவறாமல் நல்லாட்சி புரிந்து வந்தான். திரிசிரபுரமே திருச்சிராப்பள்ளியாக மருவியுள்ளது. மலையின் மேலுள்ள ஸ்ரீதாயுமான சுவாமி கருணைப் பெருங்கடலாய் அருளாட்சி செலுத்துகின்றார். மிகப் பிரம்மாண்டமான லிங்க மூர்த்தி. இத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணா மூர்த்தி நான்கு சனகாதி முனிவர்களுடன் மட்டுமல்லாது ஐந்தாவது சனகாதி முனிவருடன் காட்சி தருகின்றார்.!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி மலைக்கோட்டை

ஜாக்ரத் (விழிப்பு நிலை), ஸ்வப்னம் (கனவு நிலை), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்க நிலை) இம்மூன்றையும் கடந்த துரிய நிலை ஒன்றுண்டு. சொற்பதம் கடந்த நிலையது, இதையே ஔவையும், “சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான....” என்று விளக்குகிறார். ஒவ்வொரு மனிதனும் விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை மூன்றையும் அனுபவித்தேயாக வேண்டும். முதல் மூன்று சனகாதி முனிவர்களும் ஒவ்வொரு நிலையிலும் மனிதன் தன் கர்ம வினைகளை எவ்வாறு கழிக்க வேண்டும் என்ற ஞானத்தைப் புகட்டுகின்றனர். மூன்றையும் கடந்த துரிய நிலையை,  நான்காவது  சனக முனி புகட்டுகின்றார்.

ஆனால் துரிய நிலையையும் அனைத்தையும் கடந்த நிலை ஒன்றுண்டு. அதுவே நிலைகளற்ற துவா நிலை, இந்நிலையைக் காட்டுபவரே ஸ்ரீதாயுமான சுவாமி திருக்கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆவார்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஈஸ்வரனால் அரவணைக்கப்பட்ட ஐந்தாவது சனக முனி இங்கு தவமியற்றிய போது திரிசிர மன்னன் அவரை சரணடைந்தான். மாமுனிவர் தம் வலத் திருக்கரத்தால் ஒரு பாறையை குறுக்காக வெட்டுமாறு சைகை காண்பிக்க, திரிசிரன் தன் பலங்கொண்ட மட்டும் கையால் அப்பாறையைப் பிளந்தான்.,

உள்ளே......

சுயஞ்சோதியாய் ஒளிப்பிரவாகத்தினூடே பிரம்மாண்டமான லிங்கத்தை தரிசித்து மகிழ்ந்தான். மலையின் ஆழ்ந்த உட்பகுதியில் அமைந்த லிங்கத்திற்கு எப்படிக் கோயில் கட்டுவது? ஐந்தாவது சனக முனி தன் தபோபலத்தால் சுயம்பு லிங்கத்தை மேலே ஈர்த்திட அவரே சுயம்பு மூர்த்தியாய், தாயுமான சுவாமியாக ஆங்கே எழுந்தருளினார். திரிசிரனுக்கோ அந்த லிங்க மூர்த்தியை மலையுச்சியில் பிரதிஷ்டை செய்ய ஆசை, சனக முனியோ

“ஈசனின் மூத்த குமரன் இனிதாய் அங்கிடம் பெறுவான்,
உச்சந்தலை கஜமுகனுக்குரியதாம்!”

என்று சூசகமாக அறிவித்தார். பின்னர் எழிலார்ந்த ஈசகுமாரனாய் கணபதியும் உச்சியில் அமர்ந்தார்.!

ஸ்ரீபாதாள ஐயனார்

மலைக்கோட்டை சிவன் கோயிலில் ஸ்ரீ மட்டுவார் குழலம்மை சன்னதி எதிரில் ஒரு பாதாள அறையில் ஸ்ரீபாதாள ஐயனார் அருள்பாலிக்கின்றார். பொதுவாக ஸ்ரீஐயனார், கோயிலினுள் தனிச்சன்னதி கொண்டு எழுந்தருள்வது மிக மிக அபூர்வம். இங்கு ஸ்ரீபாதாள ஐயனாரை தரிசித்த பின்னரே ஸ்ரீ அம்பிகையை தரிசிக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் ஸ்ரீ அம்பிகையின் பரிபூரண அருள் கிட்டும். ஸ்ரீ ஐயனார் இங்கு தனிச்சன்னதி கொண்டு அருள்புரிவதின் இரகசியம் யாதோ?

.... திரிசிரன், தமிழகத்தின் பல பகுதிகளையும் வென்று அவற்றைத் தானே ஆக்கிரமித்துக் கொள்ளாமல் அந்தந்தக் குறுநில மன்னர்களிடத்திலேயே ஆட்சியை ஒப்படைத்திருந்தான். ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஆவணி மூல நட்சத்திரத்தன்றும் திரிசிரனுக்குக் கப்பம் செலுத்தியே ஆகவேண்டும். இவ்வாறு நூற்றுக்கணக்கான சிற்றரசர்கள் செலுத்திய கப்பத்தொகை, திரவியங்கள், தான்யங்களைக் கொண்டு அவன் பல அறப்பணிகளைப் புரிந்து வந்தான்.

திரிசிரன் அரக்க உருவம் பூண்டிருந்தமையால் பல அரக்க குணங்களை இயல்பாகவே பெற்றிருந்தான். கப்பம் செலுத்த மறுப்பவர்களை அப்படியே விழுங்கி விடுவான். திரிசிரன் கடுமையான பூஜாவிதிகளைக் கடைப்பிடித்தான். அவன் பூஜை சமயத்தில் அனைவரும் எழுந்து நின்று இறைநாமம் துதித்தே நிற்க வேண்டும். பூஜை சமயங்களில் சிறு பிழை நேர்ந்தால்கூட உக்கிரஹம் கொண்டு பிழைசெய்தோரையும், சுற்றியிருப்போரையும் அப்படியே விழுங்கி விடுவான்.

ஸ்ரீபாதாள ஐயனார் மலைக்கோட்டை

ஒருமுறை ... அது கடுமையான பஞ்ச காலம், உணவுப் பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் அவதியுற்றனர். ஆட்சித் திறமை வாய்ந்த திரிசிரன் தனக்குக் கப்பமாக வந்திருந்த தானியங்களைத் தமிழகமெங்கும் முறையாக விநியோகித்து இயன்ற மட்டும் நன்னெறி செலுத்தி வந்தான். ஆனால் கப்பம் பெறுவதில் மட்டும் மிகவும் கண்டிப்பாக இருந்தான். பஞ்ச மான்ய சலுகை எவருக்கும் கிடையாது!

உத்தமர் கோவில் குறுநிலப் பகுதியில்... ஆறு மரக்காலாக, ஆறு படியாக, ஆறு சிறுபடியாக, படிப்படியாக குறைந்து தற்போது பஞ்சத்தில் ஆறு உழக்காக வந்து நின்றது.

அப்போது சுகந்நாத பட்டாச்சாரியார் என்னும் உத்தம வைஷ்ணவர், மும்மூர்த்தித் தலத்தில் இறைப்பணியைச் செவ்வனே செய்து வந்தார். ஆசார அனுஷ்டானங்களை முறையோடு கடைப்பிடிப்பவர். ஜாதி, மத பேதமின்றி அன்புடன் அனைவருடனும் பழகுபவர். தனக்கென கிஞ்சித்தும் சிறு பொருள்கூட வைத்திராது அனைத்தையும் இறைவனுக்கென, ஏழை மக்களுக்கென அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார்.

‘பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்’  என்பது போல் சுகந்நாதரிடம் பணி செய்து வந்த குணசம்மித்திரர் என்பவரும் அவரைப் போலவே இறைப்பணியில் திளைத்து வாழ்ந்து வந்தார்.

கடும் பஞ்சத்திலும் உத்தமர்கோவிலில் ஆறு வேளையும் இறைவனுக்கு நைவேத்தியம் படைக்கப்படுகின்றது என்ற செய்தி திரிசிரனை எட்டியது. ஆனால் கப்பம் மட்டும் வந்து சேரவில்லை.

உத்தமர் கோவிலை ஆண்டுவந்த மன்னன், ஸ்ரீ சுகந்நாத பட்டாச்சாரியாரை அழைத்து, “சுவாமி! திரிசிர மகாராஜாவிடமிருந்து கப்பம் கேட்டு அரசாணை வந்துள்ளது. தங்களுடைய ஈடு இணையற்ற இறை பக்தியினால் எவ்வாறோ இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பது மட்டுமல்லாமல் நம் பகுதி மக்களும் எவ்வகையிலோ இறையருளால் பஞ்சத்தினைச் சமாளித்து வருகின்றனர். ஆனால் மகாராஜாவின் குணத்தைப் பற்றித் தாங்கள் அறிவீர்கள், தாங்களே இந்த இக்கட்டான நிலையிலிருந்து அடியேனைக் காப்பாற்ற வேண்டும். என் பிரதிநிதியாகத் தாங்களே மகாராஜாவிடம் சென்று நம் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும். தங்களைப் பலிகடாவாக ஆக்குவதாக எண்ணக்கூடாது” என்று மனமுருகி வேண்டினான்.

சுகந்நாதரும், ‘இதுவும் இறைவனின் விருப்பமே’ என்று மனந்தெளிந்து  மன்னனின் வேண்டுகோளை ஏற்றார். “இறைவா! நீயே நல்வழி காட்ட வேண்டும்” என்று வேண்டி கருவறைக்குள் சென்று தியானத்தில் அமர்ந்தார். நடந்ததை அறிந்த குணசம்மித்திரரும் சுகந்நாதருடன் தியானத்தில் இணைந்தார்.

ஸ்ரீ ஐயனாரின் திருவிளையாடல்

எத்தனை மணி நேரங்கள் இருவரும் தியானத்தில் அமர்ந்தனரோ, தெரியாது! கோவில் மணி தானாகவே ஒலித்தவுடன் இருவரும் பதைபதைத்து எழுந்து நின்றனர். மற்ற தெய்வீகக் கைங்கரியங்களைச் செவ்வனே முடித்துவிட்டு இருவரும் கலந்தாலோசித்தனர்.

உத்தமர்கோவில்

‘தானாக மணி அடிப்பானேன்! மணியடித்தால் நைவேத்தியம் ஆகிவிட்டது என்றல்லவா அர்த்தம்!’

குணசம்மித்திரர் தினமும் தன் குலதெய்வமான ஸ்ரீஐயனாருக்கு நைவேத்யம் படைத்து வணங்கிய பின்னர்தான் உத்தமர் கோவிலுக்கு வருவார். ஆனால் அன்றைக்கு ஸ்ரீ ஐயனாருக்குப் படைப்பதற்கான  அரிசி வீட்டிலில்லை. அக்கம்பக்கத்தில் அநேகக் குழந்தைகள் இருந்தமையாலும், அவர்களே சாதம் வடிக்காமல் கஞ்சியே குடித்து வந்தமையாலும் எவரிடமும் கையேந்த இயலவில்லை. அந்நிலையில் மனமும் இல்லை.

சுகந்நாதர் திருச்சி சென்று மகாராஜாவை சந்தித்தால் அங்கு என்ன நடக்குமோ தெரியாது! அரசன் எவ்வளவு நேரம் கூப்பிட்டுப் பேசுவானோ அதுவும் தெரியாது! எவ்வளவு நாள் அங்கிருக்க வேண்டும்? ஆனால் இங்கு கோயில் காரியங்களும் தடை பெறக் கூடாது. என்ன செய்வது?

எனவே குணசம்மித்திரர் தானே முதலில் மகாராஜாவை சந்திப்பதாகவும், சுகந்நாதர் கோயில் காரியங்களை முடித்துவிட்டுப் பின்னால் வருவதாகச் சொல்வது என ஆலோசனை கூறிட, சுகந்நாதர் அதை ஏற்றார். குணசம்மித்திரர் ஊர் எல்லையிலிருந்த தம் குலதெய்வமான ஸ்ரீ ஐயனாரிடம் அளவற்ற பக்தி பூண்டிருந்தார்.

ஸ்ரீ பெருமாளின் அம்சங்களைப் பூண்டவரே ஸ்ரீஐயனாராவார். அன்றைய தினம் ஸ்ரீஐயனாருக்கு நைவேத்யம் ஆக வேண்டும். அதே சமயத்தில் திரிசிர மகாராஜாவையும் பார்க்க வேண்டும். நேரமோ கடந்து கொண்டிருக்கிறது. என்ன செய்வது?

சுகந்நாதர், “குணசம்மித்திரா! நான் முதலில் இங்கு சுவாமிக்கு நைவேத்தியம் செய்து விடுகிறேன். அதனையே ஸ்ரீ ஐயனாருக்கு நைவேத்யம் செய்து விடுவாயாக. ஸ்ரீபெருமாளும் ஸ்ரீஐயனாரும் ஒன்றே!” என்று கூறி சுவாமிக்கு நிவேதனம் செய்து விட்டு வெளியில் வந்தார். அதற்குள் குணசம்மித்திரரும் ஸ்ரீ ஐயனார் பூஜைக்குத் தயாராகி விடவே இருவரும் மீண்டும் உட்சென்று நைவேத்திய அன்னத்தை எடுத்துவரச் சென்றபோது...

 நைவேத்தியத்திற்கான தங்கத் தட்டைக் காணவில்லை! அதுதான் ஏற்கனவே தானாக மணியடித்து நைவேத்தியமாகி விட்டதே!

இருவரும்  திகைத்து நின்றனர். அக்காலத்தில், திருடு, கொள்ளை என்பது கிடையாது. அதுவும் உத்தமர்கோவில் திருத்தலத்தில் நன்னெறி மிக்க உத்தமர்களே வாழ்ந்து வந்தனர். பின் தங்கத்தட்டு எவ்வாறு மறைந்தது?

“இறைவா! என்ன சோதனை இது! நாங்கள் என்ன தவறு செய்தோம்! பூஜை கிரமங்களில் ஏதேனும் பிழையா! பஞ்சம் என்பதற்காகத்தானே நைவேத்தியத்தின் அளவைக் குறைத்தோம், அதுவா குற்றம்!” சுகந்நாதர் புலம்பித் தீர்த்தார்.

ஆனால் குணசம்மித்திரர் சற்றும் மனம் தளரவில்லை. “ஐயனார் என்னைக் கைவிடமாட்டார் ” என்று கூறியவாறே ஸ்ரீஐயனார் சந்நதிக்கு விரைந்தார்.

ஊர்க்கோடியில் உத்தம தெய்வ மூர்த்தி ஸ்ரீ ஐயனார் குணசம்மித்திரரைக் கூவியழைக்கின்றார். ஆனால் அதெல்லாம் குணசம்மித்திரரின் காதுகளில் விழவில்லை. நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீ ஐயனாரைப் பனித்த கண்களுடன் நெஞ்சுருகி வேண்டி நிற்க...எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தாரோ அவருக்கே தெரியாது!

... அயற்சி நீங்கியவராய் குணசம்மித்திரர் கண்களைத் திறந்திட...

ஸ்ரீ ஐயனாரின் மடியில் தங்கத் தாம்பாளம், ஸ்ரீ ஐயனாரின் திருமேனி, கைகள், வாய்தனில், சாதப் பருக்கைகள்! ஆமாம், ஸ்ரீ ஐயனார் நைவேத்யத்தை ஏற்றுவிட்டார். அதற்குள் நடந்ததை அறிந்து ஊர்மக்கள் கூடி இவ்வற்புதத்தைக் கண்கொள்ளாக் காட்சியாகக் கண்டு உளம் பூரித்து நிற்க...

திரிசிரனுக்குக் கிடைத்த பேறு

இறைவனின் திருவுளமோ வேறு! ஸ்ரீ ஐயனாரே குணசம்மித்திரரின் வடிவில் திருச்சிக்குத் திரிசிரனைச் சந்திக்கச் சென்றார்.

“என்ன இது! உத்தமர் கோயிலிருந்து கப்பத் திரவியங்கள் ஒன்றும் வரவில்லையா?”  திரிசிரனின் தலைமை அமைச்சர் வினவினார்.

குணசம்மித்திரரின் வடிவிலிருந்த இறைவன் மறுமொழி ஏதும் கூறாது நின்றார். “உத்தமர் கோயிலில் இறைவனுக்கு மூன்று வேளையும் அரிசிச் சோறு நைவேத்யமாகிறதாமே, அதுமட்டும் எப்படி சாத்தியமாகிறது?”

மீண்டும் மௌனம்.

“திரிசிர மஹாராஜாவிடம் சொல்ல வேண்டியது என் கடமை. அவர் சினம் வந்தால் மனிதர்களையே விழுங்கி விடுவார் என்பது உனக்குத் தெரியும்! கடைசியாக எச்சரிக்கிறேன், கப்பமே கொண்டு வரவில்லையா?”

மௌனம்!

தலைமை அமைச்சர் குழப்பமுற்றவராய்த் திரிசிர மஹாராஜாவிடம் விஷயத்தை விளக்கினார். நாலே பாய்ச்சலில், கோபத்தின் உச்சத்தில் வெளிவந்தார் திரிசிரன், கொஞ்ச காலமாகவே “உத்தமர் கோயில்” என்ற பெயரே அவனுக்கு வேப்பங்காயாகக் கசந்தது.

“என்ன தைரியமிருந்தால் மூவுலகையும் ஆட்சி செய்யும் வல்லமை பெற்ற என்னை ஒரு சிறு குறுநில மன்னன் எதிர்ப்பான்! ஒரு வருடத்திற்கும் மேலாயிற்று, ஓர் உழக்கு அரிசிகூட வரவில்லை, எவரும் எட்டிப் பார்க்கவும் இல்லை!”

“யாரங்கே...!” பெருத்த குரலுடன் தன் ராட்சஸ உருவத்துடன் பாய்ந்தான் திரிசிரன்!

எதிரே....

திரிசிரனின் உருவத்துடன் ஒப்பு நோக்குகையில் ஒரு சிறு சுண்டைக்காயளவில் குணசம்மித்திரர் (இறையுருவம்!)

திரிசிரன் திகைத்து நின்றுவிட்டான்!

“ஒரு பொடியனா வெறுமனே நிற்கின்றான்!”

“எங்கே உனது கப்பத் திரவியங்கள்?” என்றவாறு சினத்தால் சிவந்து விண்ணுக்கும், மண்ணுக்குமாய் இராட்சஸ உருவில் விரிந்து நின்ற திரிசிரனால் இந்தக் கேள்வியைத்தான் கேட்க முடிந்தது!  

குணசம்மித்திரர் (இறைவன்) வாயிலை நோக்கிக் கையைக் காட்டினார்.

அங்கே ...

ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் நெல் மூட்டைகள்! கண்களுக்கு எட்டிய தூரம் வரை மாட்டு வண்டிகள்!

திரிசிரன் தன் தலைமை அமைச்சரை நோக்க, அவர் தலை குனிந்தார்!

திரிசிரனாலேயே நம்ப முடியவில்லை! தன் வாழ்நாளில் இவ்வளவு தானிய மூட்டைகளை ஒரே பார்வையில் அவன் பார்த்ததில்லை!

“திரிசிர மஹாராஜா! தங்கள் கிடங்குகளில் இவற்றை வைக்க முடியுமா?”

திரிசிரன் அதிர்ச்சியடைந்தான். அசுர குணமாயிற்றே, விட்டு விடுமா?

“பல லோகங்களிலும் விரவிக் கிடக்கும் என் நிலப்பரப்பிற்கு இவை போதுமா?”

“அதற்குச் சொல்லவில்லை மஹாராஜா! தங்கள் ஆட்சியில் பஞ்சம் இருப்பதாகக் கேள்விப்பட்டோம்! இவை அனைத்தும் கப்பம் கட்டுவதற்காக வரவில்லை! எவ்வளவு கப்பம் தேவையோ அதை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள்! பிறகு உங்கள் நாட்டுப் பஞ்சம் குறையத் தேவையானவற்றை எடுத்து நிரப்பிக் கொள்ளுங்கள். எஞ்சியதை நான் எடுத்துச் சென்று விடுகிறேன்.”

அனைவரும் திகைத்து நின்றனர். திரிசிரனிடம் மறுமொழி பேசும் அளவிற்குச் சக்திவாய்ந்த இந்த மானுடன் யார்?

திரிசிர மஹாராஜா அயர்ந்து நின்றான். இருந்தாலும் யுகயுகமாயிருக்கும் தன்னை ஒரு சாதாரண மானுடனா எதிர்த்துப் பேசுவது?

வந்ததே கோபம் திரிசிரனுக்கு! தன்னை ராட்சஸ ரூபத்தினுள் வியாபித்துக் கொண்டு கபகபவென்று தானிய மூட்டைகளை விழுங்கலானான். ஆயிரமாயிரம் மூட்டைகளை விழுங்கிய பின் “ஆவ்.... .. .” என்று ஏப்பமிட்டவாறே களைத்து அமர்ந்தான்!

“திரிசிர மஹாராஜா! என்மேல் உள்ள கோபத்தில் ஆயிரக்கணக்கான மூட்டைகளை விழுங்கி விட்டீர்களே! கோடிக்கணக்கான மனிதர்களுக்கு, கால்நடைகளுக்குப் பல ஆண்டுகள் வரக்கூடிய உணவினை சுயநலமாகத் தாங்கள் ஒருவரே உண்டு விட்டீர்களே, இது நியாயமா? உங்களைப் போன்ற ராட்சஸ மஹாராஜாவிற்கு ஒரு பொருளை அழிக்கத் தெரியுமே தவிர, அதனை ஆக்கத் தெரியாது! ஒரு சிறுநெல் மணியைக் கூட ஆக்க முடியாததால்தான் பஞ்சமே தலைவிரித்தாடுகிறது. ஆனால் ஆண்டவன் அளித்த அரிய தானிய மணிகளை, கேவலம் ஒரு சிறு கோபத்திற்கு ஆட்பட்டு அழித்து விட்டீர்களே...”

திரிசிரன் வெட்கித் தலைகுனிந்தான்.

“தாங்கள் உண்டதைவிட நான் அதிகம் உண்டால் தங்கள் கஜானாவில், கிடங்குகளில் உள்ள தான்யங்களை எனக்குக் கொடுத்து விடுவீர்களா?”

திரிசிரனுக்கு மீண்டும் சினம் பூத்திடத் தலையாட்டினான். அவ்வளவுதான்! மூட்டை மூட்டைகளாய் தான்ய மணிகள் மானுடனின் வாயில் புகுந்தன.

திரிசிரன் அதிர்ந்து நிலைகுலைந்து நின்றான். அவனுக்கு ஒன்று புரிந்துவிட்டது. “தான் மோதி நிற்பது சாதாரண மானுடல்லன்” அவ்வளவுதான் அவன் நெடுஞ்சாண்கிடையாய் மானுடனின் காலடியில் வீழ்ந்தான்.

“மஹாபிரபோ, ஸ்வாமி! தாங்கள் அடியேனை மன்னித்தருள வேண்டும். செருக்கு, அகங்காரம் காரணமாக அசம்பாவிதமாக நான் நடந்து கொண்டேன். இதற்காக என்னைத் தண்டித்து விடுங்கள். ஆனால் என் குடிமக்களைப் பஞ்சத்தினின்றும் காப்பாற்றி அருள்புரிய வேண்டும்!”

திரிசிரன் நெக்குருகிப் பிரார்த்தித்தான். ஸ்ரீ ஐயனார் பதிசமேதராய் தரிசனம் தந்தார் அனைவரும் கை கூப்பித் தொழுது தங்களை மறந்தவராய் நின்றனர்.

“திரிசிரா! நீ நியாயமுடன் தெய்வ ஸங்கல்பத்துடன் ஆட்சி செய்து வருகின்றாய்! அதை மெச்சி உன்னை உலகிற்கு எடுத்துக் காட்டவே இத்திருவிளையாடல்! உன்னால் அரும்பெரும் தெய்வீகக் காரியங்கள் இத்திரிசிராப்பள்ளியிலும், இதன் மையமாக நிற்கும் மலைக்கோட்டைத் திருக்குன்றிலும் நிகழவிருக்கின்றன. இறைப்பணிகள் குறைந்து வருவதை மக்கள் உணரும் பொருட்டே இந்தப் பஞ்சமும் பட்டினியும்! அதை நிவர்த்தி செய்வதற்காகத் தக்க சித்த புருஷர்களும் மஹான்களும் உன்னை வந்தடைவர், கவலையுறாதே!”

“யாம் இதே கோலத்தில் இம்மலைக்கோட்டையில் சென்று அமர்கிறோம். அங்கு எங்கு உத்தமர் கோயிலுக்குரிய தங்கத் தாம்பாளம், நைவேத்தியப் பொருளுடன் தென்படுகிறதோ அங்கேயே எம்மைப் பிரதிஷ்டை செய்திடுவாயாக!”

ஸ்ரீ ஐயனார் இவ்வாறாக அருள்புரிந்து மறைந்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் திரிசிரன் பாறையைப் பிளந்து தாயுமான ஈசருக்கு ஆலயம் அமைத்த வரலாற்றை ஏற்கனவே  விளக்கியுள்ளோம்.

இவ்வாறாகத் திருச்சி மலைக்கோட்டையில் ஆதியிலேயே வந்தவர் ஸ்ரீ ஐயனார். எனவே அம்பிகையும் “இம்மலையில் அம்மையப்பனுக்கு முன் வந்த ஸ்ரீ ஐயனாருக்கு முன் யாம் மட்டுவார் குழலியாய் நிற்போம். ஸ்ரீ ஐயனை வணங்கிய பின்னர் எம்மைத் தொழுபவர்க்குப் பரிபூரண அருள்கிட்டும்” என்று அருளியபடி இன்று “பாதாள ஐயனாராக” விளங்கும் ஸ்ரீஐயனாரைத் தொழுத பின்னரே ஸ்ரீஅம்பிகையை வணங்க வேண்டும். இவ்வாறாக ஸ்ரீதாயுமான ஸ்வாமி ஸ்ரீமட்டுவார்குழலி தரிசனம் பரிபூரணத்வம் அடையும்.

ஸ்ரீஐயனார் வழிபாடு

ஸ்ரீபாதாள ஐயனார் சந்நதியில்

1. விளைச்சலின் புதிய பொருட்களை அர்ப்பணித்தல் (விளைச்சலில் முதல் தேங்காய், மா, பலா, வாழை, காய், கனிகள், நெல், கரும்பு தான்யங்கள் etc..) மூலம் நல்ல விளைச்சல் ஏற்படும். விளைச்சலில் இயன்ற அளவு இங்கு ஏழைகட்கு உணவாகவோ வேறு விதத்திலோ தானம் செய்திடப் பஞ்சம் ஏற்படாது காத்திடலாம்.

2. ஸ்ரீ ஐயனாருக்கு இளநீர், சந்தனம், பானகம், கரும்புச் சாறு, தேன் இவற்றால் அபிஷேகம் செய்து குறைந்தது 1008 பேருக்காவது அன்னதானம் செய்திட மழைப்பொழிவு உண்டாகும்.

3. வெள்ளம் வடிவதற்கு ஸ்ரீ ஐயனாருக்குச் சந்தன காப்பு, கொள்ளுக்காப்பு இட்டு கிழங்கு வகைக் காய்கறிகள் கூடிய உணவினை அன்னதானம் செய்தல் வேண்டும்.

4. வற்றிய கிணறு, குளம், புதிய கிணறு ஆகியவற்றில் நீரோட்டம் நன்கு பெருகிட ஸ்ரீ பாதாள ஐயனாருக்குப் பிரார்த்தனை செய்து இளநீர், பானகம், பழரசங்கள், நீர், மோர், பாயாஸம் போன்றவற்றை வறியவர்களுக்கு அளிக்க வேண்டும். ஸ்ரீ ஐயனாருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றை அவரவர் பூமியில் சேர்த்திட நீர்ப்பொழிவும், நல்விளைச்சலும் ஏற்படும்.

5. உப்புஸம், வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக பாதிப்புகள் உள்ளோர் ஸ்ரீ பாதாள ஐயனாருக்குப் பிரார்த்தித்து கிழங்குவகைக் காய், கனிகளுடன் அன்னதானம் செய்து ஏழை எளியோருக்கு இலவச மருந்துகள், டானிக்குகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி அளித்து வரவேண்டும்.

6. பித்ருசாபங்கள், குழந்தைப் பேறின்மையால் வருந்துவோர் கிராமப் பகுதிகளில் உள்ள ஏதேனும் ஓர் ஐயனார் கோயில் திருப்பணியை முழுமையாக ஏற்று நடத்தி அமாவாசை மற்றும் தங்களுடைய மூதாதையர்களின் (தாய் தந்தையர், பாட்டனார், பாட்டிகள், முப்பாட்டனார்கள் etc.. )  திதிகளில், நட்சத்திர தினங்களில் எள் கலந்த உணவு, இனிப்புகளை ஏழைகளுக்கு குறிப்பாக ஊனமுற்றோர்க்கும், கறுப்பு உடை அணிந்தோர்க்கும் அளித்துவரத் தக்க பரிஹாரம் கிட்டும்.

7. தங்கள் குலதெய்வம் இன்னதென்று அறியாதோர் தக்க சற்குருவை நாடி விளக்கங்கள் பெற வேண்டும். சற்குருவை அடையாதோர், மாதந்தோறும் தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று ஸ்ரீ பாதாள ஐயனாருக்கு (வெல்லப்) பொங்கல் படைத்து அன்னதானம் செய்துவர (குறைந்தது மூன்று பெரிய படி) கனவிலோ, யார் மூலமாகவோ, ஏனைய சற்குரு மூலமாகவோ தக்க விளக்கங்களைப் பெறுவர்.

8. தியானம், யோகம், ஆசனங்களைப் பயிற்சி செய்வோர் தக்க வழிகாட்டியின்றித் தவிக்கின்றனர். இவர்கள் தம் பயிற்சிகளில் உன்னதம் பெற உத்தமர் கோயிலில் மும்மூர்த்திகளை தரிசித்து பஞ்சக்கூட்டு தீபம் ஏற்றி (தேங்காயெண்ணெய் + நல்லெண்ணெய் + இலுப்பெண்ணெய் + பசுநெய் + விளக்கெண்ணெய் குறைந்தது 21 தீபங்கள்) உத்தமர் கோயிலிலிருந்து ஸ்ரீஆஞ்சநேய காயத்ரீ, துதிகளை தியானித்தவாறே பாதயாத்திரையாக மலைக்கோட்டை வருதல் வேண்டும்.

இடையில் சாரைப் பருப்பு, முந்திரி, திராட்சை நிறைந்த பாயசம், சர்க்கரைப் பொங்கலை தானம் செய்துவர வேண்டும். முந்திரி, திராட்சை, சாரைப் பருப்பு இவை மூன்றிற்கும் யோக மந்திரங்களை எளிதில் கிரஹிக்கும் ஆன்மீக சக்தி உண்டு.

ஸ்ரீபாதாள ஐயனார் சந்நதியில் தியானத்தில் அமர்ந்து அபிஷேக ஆராதனைகளுடன் பூஜித்துத் துறவிகளுக்கு லங்கோடு, காவி உடைகளையும், ஏழை குழந்தைகளுக்கு சந்தன நிற ஆடைகளையும் தானம் அளித்துவர யோக, ஆசன நிலைகளில் தெளிவு கிட்டும்.

ஆனால் இந்த நற்பலன்களை வியாபார நோக்கிலோ, சுயநலத்திற்காகவோ எக்காரணங் கொண்டும் பயன்படுத்தலாகாது. வேண்டுமாயின் பிறர்க்கு இலவசமாகக் கற்றுத் தரலாம். அதுவும் அத்துறையில் பூரணம் பெற்ற பின்னரே! இதிலிருந்து என்ன தெரிகின்றது? யோக, வேத, ஆசன சக்திகளை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்பதை நன்கு உய்த்துணர வேண்டும்.

எனவே ஸ்ரீபாதாள ஐயனாரின் மஹிமையினை நன்கு அறிந்து ஸ்ரீஐயனாரின் பரிபூர்ண அனுக்ரஹத்தைப் பெறும் நல்வழி முறைகளைக் கடைபிடித்து உத்தம இறைநிலையை அடைதல் வேண்டும்.

தெப்பக்குள மகிமை

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குள மஹிமை

மூர்த்தி, தீர்த்தம், தலம் முறையாக தரிசிப்போருக்கு முக்தி நிச்சயம், குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் உச்சிப் பிள்ளையார் கோயில் தெப்பக்குள தீர்த்த மஹிமையாக தம் சற்குரு நாதரிடமிருந்து பெற்றதை இனி காண்போம்.

எம்பெருமானாகிய சிவபெருமான், ஈஸ்வர பூஜையை முறையாகச் செய்து வழிபட வேண்டுமென்று தேவர்களிடமும், முனிவர்களிடமும் எடுத்துக் கூறிட, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு போன்ற தெய்வமூர்த்திகளும் ஸ்ரீஅகஸ்தியர் முதலான ரிஷிகளும், முனிவர்களும் சிவ ஆகம பூஜைகளை விரிவாக எடுத்துரைக்குமாறு சிவபெருமானையே வேண்டினர்.

அவர்கள் வேண்டுகோளை ஏற்று எம்பெருமான் பூலோக மக்களுக்கு உகந்த ஆகம பூஜை முறைகளை அனைத்து ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் தன் திருவாய் மலர்ந்து விளக்கிக் கொண்டிருந்தார். பார்வதி, முருகப் பெருமான் உள்ளிட்ட பலரும் சிவபூஜை மஹிமைகளைக் கேட்டு ஆழ்ந்த பரவசத்தில் லயித்திருந்தனர்.

மலைக்கோட்டை தெப்பக்குளம்

அச்சமயம் பார்வதி அம்மையார் தன் தலையைத் திருப்பி வேறுபுறம் சற்றே பார்த்திட, சற்றே கவனக் குறைவால் பார்வதி தேவியின் சாந்த நிலை பிறழ்ந்தமையைக் கண்டு கடிந்து கொண்ட சிவபெருமான் அன்னையைச் சபித்து விட்டார்.

தாயைச் சபித்ததைத் தாங்க முடியாமல் கந்தவேள் தன் தந்தையான சிவபெருமானிடம் அன்னையை சபித்தது தவறாகும் என்று வாதிட்டார். முருகன், பார்வதி தேவிக்குப் பரிந்து பேசியதைப் பொறுக்காமல் சிவபெருமான் முருகப் பெருமானையும் அவர் பேச்சுத் திறமையை இழக்குமாறு சாபமிட்டார்.

பார்வதிக்கும் முருகப் பெருமானுக்குமே இத்தகைய சோதனைகள் என்றால் மானிடர்கள் சிவ ஆகம பூஜைகளில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்! இதை உணர்த்தவே தெய்வ மூர்த்திகளும் நமக்காக சாபத்தை ஏற்று நல்வழி காட்டி நம்மை நெறிப்படுத்தப் பெருந்துன்பச் சுமைகளை ஏற்கின்றனர்.

தேவர்களும், ரிஷிகளும், பிரம்மா, திருமால் அனைவரும், பார்வதி தேவியும், முருகப் பெருமானும் பெற்ற சாபத்தால் மனம் வருந்தி அவர்கள் தவறுகளைப் பொறுத்தருள இறைவனிடமே வேண்டினர். அவர்கள் முறையீடுகளைக் கேட்டு எம்பெருமானும் மனமிரங்கி அவர்களுக்கு பிராயச்சித்தம் அளிக்க முன்வந்தார்., எத்தகைய பிராயச்சித்தமோ!

“சிவ பூஜையில் தியானம் கலையாது அற்புத நிலையில் திகழ்ந்த ஸ்ரீகணபதி மூலமே தாயும், இளையவனும் பிராயசித்தம் அடைவர்” என்பதே அது!

ஸ்ரீ வினாயகர் விஸ்வரூபம் கொண்டார். ஜோதி சொரூபமாய் எம்பெருமான் தியானத்தில் லயித்திருந்த இடத்தில் ஓம்காரப் பீடமிட்டு அமர்ந்தார். தம் துதிக்கையை ஆதி சிவனின் சிரசின் மேல் குடையாகக் கவிழ்த்துப் பிடித்திட, சிவனின் ஜடாமுடியில் பொங்கும் கங்கை பிரவாகம் துதிக்கையில் பட்டுக் குடை மழையாய்க் கீழ் வழிந்து சிவனையே அபிஷேகித்தது.

அனைத்து தெய்வ மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், சித்தர்களும், மஹரிஷிகளும் இவ்வரிய காட்சியைக் கண்டு உளம் பூரிந்தனர். அவ்வபிஷேக நீர் வழிந்தோடி திருச்சிராப்பள்ளியில் அமுதக் குளமாய் மலர்ந்தது. சிவபெருமானும் “என் முத்தான கணபதியின் அபிஷேகத்தால் மனம் குளிர்ந்தேன். என் ஜடாமுடி கங்கையும், அரங்கனின் காவேரியும் ஊறி இணைந்து அது முத்தாழக் குளமாகத் திரிசிராப்பள்ளியில் அமைந்திடும். அதில் நீங்கள் இருவரும் முதலில் நீராடி ஸ்ரீகணபதியை அபிஷேகித்து அங்கு தாயுமானவராய் உறையும் எமக்கும் அபிஷேகம் செய்வீராக!”

“எமக்கு மேல் தும்பிக்கையான் நின்று எம் உச்சியில் அபிஷேகித்தமையால் திரிசிர மலையின் மேல் உறையும் எம்முடைய தாயுமானவரூபம் விளங்கும் மலைமேல் உச்சிப் பிள்ளையாராய் அமருவான்” என்று அருள்பாலித்தார்.

ஈசனின் கட்டளையை ஏற்று அன்னை பார்வதிதேவியும், கந்தவேளும் முத்தாழக் குளத்தை அகழ்ந்து எடுத்தனர். ஆழ மூழ்கினால்தான் முத்தைப் பெறலாம். அவ்வாறே சிவ ஆகம பூஜைமுறைகளை நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் இயற்றி சிவலோக பதவியாகிய முத்தைப் பெறலாம் என்னும் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக முத்தாழக் குளத்தை நிறுவினர் உமையம்மையும் கந்தவேளும்.

தாயும் தமையனும் அற்புதப் பணியாற்றிக் கொண்டிருக்க அதைப் பார்த்து சும்மா இருப்பாரா உச்சிப் பெருமான், முத்தாழக் குளத்தில் சீரான சரப் படிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்தார் உச்சிப்பிள்ளையார்.

இந்தத் திருப்பணிகள் அனைத்தையும் தனது செந்தாமரைக் கண்களால் தரிசித்து பெரு மகிழ்வடைந்தார் திருஅரங்கநாதப் பெருமான். தான் அரவணையில் துயில் கொள்ள வழி செய்த உச்சிப் பிள்ளையாருக்கு உதவும் வகையில் புனித காவிரியின் நீரைத் தன் சங்கால் முத்தாழக் குளத்திற்கு வழிகூட்டினார்.

என்னே உச்சிப்பிள்ளையார் தெப்பக்குளத் தீர்த்தத்தின் மஹிமை!

அரங்கநாதன் சங்கால் கூட்டுவித்தால் இக்குளம் அரங்கன் சங்கு தீர்த்தம் என்றும், முருகன் பேச்சளந்தான் தீர்த்தம் என்றும், தொப்பையப்பன் படி தீர்த்தம் என்றும் அழகம்மை ஆகம தீர்த்தம் என்றும் சித்தர்களால் அழைக்கப்படுகிறது.

முத்தாழக் குள தீர்த்த வழிபாடு

ஞாயிற்றுக் கிழமை : இத்தீர்த்தத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று ருத்ர பசுபதி ராஜரிஷி என்ற மஹா உத்தமர் நீராடி சித்ருவ சக்தி என்ற அற்புத சக்தியை ஆவாஹனம் செய்தார்.

ஞாயிறு அன்று இத்திருக்குளத்தில் நீராடி உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து முறையாக வழிபடுவோருக்கு சித்ருவ சக்தியால் தேங்கிய வியாபாரத் தடங்கல்கள் நீங்கி வணிகம் பெருகும், தொழிலில் முன்னேற்றம் அடைவர்.

திங்கட்கிழமை : தேவர்களுடைய ரிஷியான மோகனோத்தம முனிவர் என்னும் உத்தம புருஷர் இத்தீர்த்தத்தில் திங்களில் நீராடி பாலுருவ சக்தி என்னும் அனுக்கிரக சக்தியை தீர்த்தத்தில் ஆவாஹனம் செய்தார்.

இத்திருக்குளத்தில் இந்நாளில் நீராடி உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து வணங்கிடில் பாலுருவ சக்தி அனுகிரகத்தால் இயந்திரங்களால் தயாரிக்கும் பொருட்களின் வியாபாரம் பெருகிப் பலனடைவர்.

செவ்வாய்க்கிழமை : செவ்வாய்க் கிழமையன்று சிந்தூர கனாத்யக்ஷ பசுபதி என்ற முனிவர் போக சக்தியை இத்திருக்குளத்தில் ஆவாஹனம் செய்து உச்சிப் பிள்ளையாரை வலம் வந்து தேவ பதவியை அடைந்தார்.

செவ்வாய் அன்று இத்தீர்த்தத்தில் நீராடி உச்சிப் பிள்ளையாரை முறையாக வலம் வந்து வணங்கினால் குடும்பத்தில் வந்த சண்டைகள் நிவர்த்தி அடைந்து நலம் பெறுவர்.

புதன்கிழமை : முத்தாழக்குளத்தில் பங்குனி சக்தி என்ற அற்புத சக்தியை புதன்கிழமை அன்று ஆவாஹனம் செய்தார் பல்குண பராந்தக குருபதி முனிவர். எனவே புதன்கிழமையன்று இங்கு தீர்த்தமாடி உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து வணங்கிட கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டும்.

வியாழக்கிழமை : இன்று ஸ்திர சஞ்சார குருபதி முனிவர் என்ற உத்தமர் இத்திருக் குளத்தில் தீர்த்தமாடி உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து உயர்ந்த நிலையை அடைந்தார்.

வியாழக்கிழமையன்று இத்தீர்த்தத்தில் நீராடி உச்சிபிள்ளையாரைக் கிரிவலம் வந்து முறையாக வணங்கினால் பிரிந்தவர் கூடுவர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.

வெள்ளிக்கிழமை : இன்று விந்தபோச முனிவர் என்ற உத்தம ரிஷி இத்திருக்குளத்தில் நீராடி விந்த போச சக்தியை ஆவாஹனம் செய்து, உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து உத்தம சிவநிலையை அடைந்தார்.

திருமணமாகிக் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வெள்ளிக்கிழமையன்று திருக்குளத்தில் நீராடி உச்சிப்பிள்ளையாரை கிரிவலம் வந்து முறையாக வழிபடுவதால் குழந்தைச் செல்வம் பெற வாய்ப்புண்டு.

சனிக்கிழமை : இன்று கம்புலிராய முனிவர் இத்தீர்த்தத்தில் நீராடி உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து வணங்கி கம்புலி சக்தி என்னும் அற்புத சக்தியை ஆவாஹனம் செய்து உயர்நிலையை அடைந்தார்.

எனவே இத்திருக்குளத்தில் சனிக்கிழமையன்று நீராடி தீபமேற்றி வழிபட்டால் புதுவீடு புகுதல், புதுமனை வாங்குதல், நல்ல வீட்டில் வாடகைக்கு அமர்தல் போன்ற அனுக்கிரக சக்திகளைப் பெறலாம்.

தெய்வத் திருக்குளம்

உமையம்மையின் அருளாசியும், கந்தவேளின் கருணை கடாக்ஷமும், உச்சிப்பிள்ளையாரின் பூரண அனுக்கிரகமும், அரங்கநாதனின் சங்கநாதமும் ஒருங்கே இணைந்து மிளிரும் ஒப்பற்ற தீர்த்தமே முத்தாழப் புனிதக்குளம்.

ஒப்புயர்வற்ற இந்த ஆன்மீக பொக்கிஷத்தைத் தன் இதயத்தில் கொண்ட திருச்சி மாநகரம் செய்த புண்ணியத்தை வார்த்தைகளால் வடிக்க இயலுமா? இத்திருக்குளத்தை தெய்வமாய் வாழ்த்தி வணங்கிப் பராமரிக்க கடமைப்பட்டுள்ளனர் திருச்சி வாழ் பக்தர்கள். இத்திருக்குளத்தை தெய்வமாய் வணங்கி, அசுத்தம் செய்யாது படிகளை நிர்மாணித்தவர்கள் சிவலோக நிலைகளை அடைவர். இத்தீர்த்தத்தை ஆழ்ந்து அகழந்து தோண்டித் தூய்மைப்படுத்தியவர்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ்வர்.

இப்புண்ணியத் இத்தீர்த்தத்தைத் தூய்மையாகப் பராமரிப்போர் உயர்ந்த பல அரசியல் பதவிகளை வகிப்பர்.

இக்குளத்தில் மீன்களை விட்டு, வளர்த்து நீர் தூய்மையாக இருக்க வழி செய்வோர் கௌரவமான, பெருமையுடைய பதவிகளை வகிப்பார்கள்.

புனிதமான இம்முத்தாழக்குளத்தை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்போர்க்குத் தேவையில்லாமல் தேடி வருகின்ற துன்பங்கள் தானே விலகும்.

சாதி மத பேதமின்றி அனைவரும் தங்களால் இயன்ற உதவியை அளித்து இத்திருக்குளத்தைப் புனிதமாக வைத்திருக்க உதவுவதன் மூலம் அளப்பரிய புண்ணிய சக்தியைக் கவசமாகப் பெற்று நல்வாழ்வை அடையலாம்.

கிரிவலம்

மலைக்கோட்டை கிரிவல முறை

பலவித அற்புதமான ஆன்மீக ரகசியங்கள் நிறைந்த மலைக்கோட்டை கிரிவலம் மூலம் எத்தனையோ வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு மிகச் சுலபமாகத் தீர்வு பெறலாம். சிறிது தூரம் மட்டுமே உள்ள மலை வலத்தை 20 நிமிடத்திலிருந்து 2 மணிக்குள் முடித்து விடலாம். எத்தகைய அரிய பாக்கியம்! கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போல் இத்தகைய எளிமையான, தெய்வத் திருப்பணியை நிகர்த்த மலைவல வழிபாட்டு முறையை வைத்துக் கொண்டு அனைத்துத் துன்பங்களையும் தீர்த்து விடலாமே!

1. மலைக்கோட்டை கிரிவலத்தைக் கோயில் முகப்பில் உள்ள துவார பாலகர்களை வணங்கித் தொடங்க வேண்டும். கோயில் தரிசனத்திற்கும், கிரிவலத்திற்கும் (மலை வலத்திற்கும்) இந்த துவார பாலகர்களின் அனுமதி மிகவும் முக்கியமானதாகும். இந்த துவார பாலகர்களை பக்தர்கள் அறவே மறந்து விட்டனர். கோயில் முகப்பிலிருந்தே கடைகளின் சஞ்சாரம் இருப்பதால் இச்சந்தடியில் கம்பீரமான துவாரபாலக மூர்த்திகள் மறைக்கப்பட்டு விடுகின்றனர்.

ஆனால் ஸ்ரீதாயுமான சுவாமி, ஸ்ரீமட்டுவார் குழலி அம்பிகை, ஸ்ரீஉச்சிப் பிள்ளையாரின் பரிபூர்ண கடாட்சத்துடன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதுவாரபாலக மூர்த்திகளின் ஆசிர்வாதம் பெற்று உட்சென்றால்தானே கோயில் தரிசனமோ, கிரிவலமோ பரிபூர்ணமடையும்! இது மட்டுமன்றி, பாதணிகளைக் கழற்றி ஸ்ரீதுவாரபாலக மூர்த்திகளை வணங்கி, காலணிகளைக் கையில் எடுத்துச் சென்று உள்ளே விட வேண்டும். ஆனால் நடைமுறையில் காலணிகளுடனேயே உட்செல்லும் தவறான முறை உள்ளது, திருக்கோயில் வளாகம், ஸ்ரீதுவாரபாலக மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் முகப்பு வளைவிலிருந்து தொடங்குகிறது என்பதை கருத்தில் கொள்ள் வேண்டும்.

2. ஸ்ரீதுவாரபாலக மூர்த்திகள் தரிசனம், ஸ்ரீமாணிக்க விநாயகர் தரிசனத்துடன் வெளிவந்தபின் கிரிவலம் தொடங்குகிறது.

3. ஸ்ரீமாணிக்க விநாயகர் திருச்சன்னதியில் ஊதுபத்தியினை ஏற்றி இந்த ஊதுபத்தி ஜோதியினைப் பிடித்தவாறே கிரிவலம் வரவேண்டும். இடையில் புது பத்திகளை ஏற்றிக் கொள்வதிலும் தவறில்லை.

4. திருக்கோயில் தெப்பக் குளத்தையும் பிரதட்சிணமாகச் சுற்றி வலம் வரவேண்டும்.

ஊதுபத்தியின் மகிமை

5. சாஸ்திரோக்தமாகத் தயாரிக்கப்படும் ஊதுபத்திகளில் மூலிகைகள், பூவிதழ்கள், ஜவ்வாது, கற்பூரம், அரக்கு அல்லது மெழுகு, பசுஞ்சாணம் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். இவை ஒவ்வொன்றிற்கும் விசேஷமான ஆன்மீக குணங்கள் உண்டு. இவற்றிற்குப் பரவெளியை அதாவது வான்வெளியையும், நாம் இருக்கும் இடத்தையும் புனிதப்படுத்தும் சக்தியுண்டு. ஊதுபத்தி ஜோதியும் ஒருவகை ஜோதியே, வீட்டில் நறுமணம் கூடிய ஊதுபத்திகளை ஏற்றி வைத்தால் தீய எண்ணங்கள், தோஷங்கள், காற்று, கருப்பு திருஷ்டி போன்றவை நிவர்த்தியாகி பூஜை அறையையும் இல்லத்தையும் புனிதப்படுத்துகின்றன. இரண்டு ஊதுபத்திகளை ஏற்றி வைத்தால் அதன் ஆன்மீக சக்தி மூன்று மணி நேரத்திற்கு இல்லத்தில் நிலவும்.

தாமரை நூல் ஜோதி ஏற்றி வழிபட்டால் அதன் ஆன்மீக சக்தி ஆறுமணி நேரங்களுக்கு நீடித்து நிற்கும். பசு நெய் தீபம் ஏற்றிடில், தீபம் குளிர்ந்தபின், பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு அதன் ஆன்மீக சக்தி நிரவி நிற்கும்.

6. ஊதுபத்தி ஜோதியுடன் ஸ்ரீவிநாயகரின் ஏதேனும் ஒரு நாமத்தைத் (சித்தி விநாயகர் போற்றி, மகாகணபதி போற்றி, ஹேரம்ப கணபதி போற்றி, சக்தி கணபதி போற்றி) துதித்தவாறே கிரிவலம் வரவேண்டும்.

7. கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, தேங்காய் சாதம், விளாம்பழம் போன்ற உணவு வகைகளை இல்லத்திலேயே தயாரித்து ஸ்ரீமாணிக்க விநாயகருக்குப் படைத்து, அவற்றை கிரிவலத்தில் உள்ள ஏழைகளுக்கு அன்னதானமாக வழங்கிட, அன்னதானத்தின் பலன்கள் பல்கிப் பெருகும்.

8. மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் இன்றைக்கும் பல மகான்கள், யோகியர், ஞானியர், சித்த புருஷர்கள், சாதுக்கள் ஏதேனும் ஒரு ரூபத்தில் வலம் வந்தவாறு இருக்கின்றனர்.

9. பஞ்சமி திதியில் ஸ்ரீநாகநாத சுவாமி ஆலயத்தில் உறையும் நாகதேவதைகள், நாக ரூபத்தில் கிரிவலம் வருகின்றன. எனவே பஞ்சமி திதியன்று கிரிவலம் வருகையில் ஸ்ரீநாகநாத சுவாமியை தரிசனம் செய்து, நாக தரிசனம் பெற்றிடில் நாக தோஷங்கள் நிவர்த்தியாகி புத்திரபாக்கியம் கிட்டும்.

10. ஊதுபத்தி ஜோதியைத் தாங்கியவாறே ஸ்ரீவிநாயகரின் ஏதேனும் ஒரு நாமத்தைத் துதிக்கையில் ஜோதியின் மூலமாக இறைநாமம் மலைக்கோட்டைப் பகுதியில் பரவி, புனிதமான மலைக்குன்றில் பிரதிபலித்து அதன் ஆன்மீக சக்தி பல்கிப் பெருகுகின்றது.

11. வில்லிலிருந்து செலுத்தப்படும் அம்பு நெடுந்தூரம் செல்லும். இதேபோல் ஊதுபத்தி ஜோதிக்கு இறை நாமத்தை நெடுந்தொலைவிற்கு எடுத்துச் செல்லும் சக்தியுண்டு. இந்த ஆன்மீக சக்தியினால், தரிசனம் செய்ய வருபவர்கள், பக்தர்கள், மலைக்கோட்டைப் பகுதியில் வாழ்பவர்கள், வியாபாரிகள் போன்றோருடைய நல்லெண்ணங்கள் நிறைவேறுகின்றன. இறைவன் தன் திருவருளை இவ்வாறாகவே வர்ஷித்துத் தன் பக்தர்கள் ஆற்றும் நற்காரியங்களின் புண்ணிய சக்தியைக் கொண்டே ஏனைய பக்தர்களின் அபிலாஷைகளைத் தீர்த்து விடுகின்றான். அப்படியானால் ஒரு முறை மலைக்கோட்டையை ஊதுபத்தி ஜோதியைத் தாங்கி, இறைநாமம் துதித்தவாறே கிரிவலம் வந்திடில் அதன் பலன்கள் ஆயிரக்கணக்கானோரைச் சென்றடைவதை உணர்ந்து வீட்டீர்களல்லவா! எத்தகைய மகத்தான கிரிவல மகேச சேவை ஜாதி மத பேதமின்றி மக்கள் சேவையாக மலர்கின்றது!

12. கிரிவலத்தில் நீர் மோர் தானம், அன்னதானம், ஆடை தானம், காலணிகள் தானம், படுக்கை தானம் போன்ற இதர தானதர்மங்கள் செய்திடில் மக்கள் சேவை பல்கிப் பெருகுவதுடன், அளப்பரிய புண்ணிய சக்தியையும் பெற்றுத் தருகின்றது.

13. ஏழைகளுக்குப் பாய், படுக்கை, தலையணை, போர்வை ஆகியவற்றை தானம் செய்வோர்க்குப் படுக்கையில் கிடந்து வாடி உயிர் போகும் நிலைமை ஏற்படாது. மருத்துவமனைகளில் அவதிப்பட்டு நெடு நாட்கள் படுக்கையில் கிடந்த படுக்கைத் தோல் நோய் (Bed Sores) உண்டாகி சீரழியும் நிலை நிச்சயமாக ஏற்படாது. பணம், தெம்பு, ஆரோக்கியம் இருக்கும்போதே சற்குரு அளிக்கும் கிரிவல முறைகளைப் பின்பற்றி தக்க தான தருமங்களைச் செய்து இப்பிறவியிலேயே நம் கர்மங்களைத் தீர்க்கும் நல்வழியைக் காண்போமாக!

14. கிரிவல முடிவில் மீண்டும் ஸ்ரீதுவாரபாலக மூர்த்திகளைத் தொழுது ஸ்ரீமாணிக்க விநாயகரை தரிசிப்பதுடன் கிரிவலம் பரிபூர்ணமடைகிறது.

கிரிவல நாட்கள்

1. தினந்தோறும் கிரிவலம் வருவது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆன்மீக சக்தியையும், அபரிமித புண்ணியத்தின் திரண்ட அருளையும் பெற்றுத் தருகின்றது.

2. ஸ்ரீவிநாயகருக்குரித்தான சதுர்த்தி, சதுர்த்தசி, சங்கடஹர சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி, பிரதமை திதி, மூல நட்சத்திரம் ஆகிய விசேஷமான நாட்களில் கிரிவலம் வருதல் உத்தமமானதாகும்.

3. தனித்து கிரிவலம் வருதலை விட குடும்பமாக, சத்சங்கமாக, கூட்டாக கிரிவலம் வருதல் பன்மடங்கு பலனைத் தரும்.

4. கிரிவலத்தில் செய்யப்படும் தான தர்மங்களினால், அத்தகைய பன்மடங்கு பலன், மேலும் பன்மடங்காய், புண்ணிய சக்தியாய்ப் பெருகுகின்றது.

5. பிறந்த நாள், திருமண நாள், இறந்தவர்களின் திதி போன்ற நாட்களில் மலைக்கோட்டையை கிரிவலம் வந்து, தானதர்மங்களுடன் கொண்டாடுதல் சிறப்பான மன நிறைவைத் தரும். இத்தகைய நாட்களில் குடும்பமாக கிரிவலம் வருதல் மன அமைதியையும் திருப்தியையும் அளிக்கும்.

ஆவணி மூல கிரிவல மகிமை

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத மூல நட்சத்திரத்தன்று மலைக்கோட்டையை கிரிவலம் வருவது மிகவும் விசேஷம் என சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.

ஆவணி மூலத்தன்று பல தெய்வ மூர்த்திகளும், தேவர்களும், தேவதைகளும் குறிப்பாக நாக தேவதைகளும் கன்னிகைகளும், தாயுமான சுவாமியை கிரிபிரதட்சிணமாக வந்து வணங்குகின்றனர். ஆவணி மூல கிரிவலம் இத்தகைய சிறப்புப் பெறக் காரணம் என்ன?

மூவர் ஏற்ற கிரிவலம்

பிள்ளையார் மாம்பழம் பெற்ற நிகழ்ச்சியை அறிவோம். அம்மாம்பழத்தை உண்டபின் வினாயகருக்கு வயிற்று வலி வந்துவிட்டது. அப்போது வைண சூர்ய ராஜ்ய ஸ்ரீ பிரம்மா என்பவர் பிரம்ம பதவியைப் பெற்றிருந்தார். பிள்ளையார் அவரிடம் தன் வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்க, “சுவாமி! தாங்கள் அறியாதது ஏதுமில்லை! ஆனால் தாங்கள் என்னைக் கேட்பதன் காரணம், அந்த மாம்பழ சிருஷ்டியின் காரண காரியங்களினால் வயிற்றுவலி ஏற்பட்டிருக்குமோ என்று அறிவதற்காகத்தானே கேட்கின்றீர்கள்? யாமறிந்த வகையில் அம்மாம்பழத்தில் சிருஷ்டி தோஷம் எதுவுமில்லை. எனினும் மகரிஷிகள் அறிவித்தபடி தாங்கள் அருகம்புல் காப்பு சாற்றிக் கொண்டால் வயிற்று வலி தீரும்!” என்றார் பிரம்மா.

பிள்ளையார் தன் திருப்பெருவயிற்றில் அருகம்புல் சாறு கொண்டு காப்பிட்டுக் கொண்டார். ஏதோ வலி குறைந்தது மாதிரி இருந்ததே தவிர வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. இதுவும் திருவிளையாடல்தானே!

ஸ்ரீபிரம்மா கவலையுற்றவராய் மலையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அருளை நாடினார். தான் நீண்ட காலமாகத் தேடிக் கொண்டிருக்கும் தன் ஐந்தாவது மானஸ புத்ரனாகிய சனகமுனி அங்கு இருப்பது கண்டு தான் வந்த காரியத்தையே மறந்து விட்டார்.

 ஸ்ரீதட்சிணாமூர்த்தி தம் திருக்கரங்களை அசைத்து “வைண சூர்யா! நீ படைத்த அந்த மாம்பழத்தில் ஸ்கந்தப் பெருமானாகிய முருகனும் சம்பந்தப்பட்டிருப்பதால் நீ பிள்ளையார், முருகனோடு மூவராய், திரிசிர ஈஸ்வரனாகிய ஸ்ரீதாயுமான சுவாமியை தரிசித்து இத்திரிசிர மலையை வலம் வருவீர்களாக! இதனால் முருகனும் பிள்ளையாரைப் போல் அம்மையப்பனை வலம் வந்ததாகும். அதே சமயம் விநாயகனும் திரிசிரமலையை அதாவது பிரபஞ்சத்தை வலம் வந்ததாகிவிடும். இதைத்தானே முருகன் எதிர்பார்த்தான்! இதற்காகத்தானே அந்த மாம்பழத்தையே நீ சிருஷ்டித்தாய்! மூவரும் கிரிவலம் வந்திடில் அம்மாம்பழம் சிருஷ்டிக்கப்பட்டதன் காரண காரியம் நிறைவேறும்!” என்று அருளினார்.

ஸ்ரீபிரம்மா இந்த அபூர்வமான விளக்கத்தைக் கேட்டு ஆனந்தமடைந்தார். இவ்வாறு ஸ்ரீபிரம்மா, ஸ்ரீமுருகன், ஸ்ரீகணபதி மூவரும் திரிசிர புருஷராகிய தாயுமான சுவாமியை கிரிவலம் வந்து வணங்கிய் நாளே ஆவணி மூலமாகும்.

தாயுமான சுவாமிகள், சஸபிந்து மகரிஷி, மௌனகுரு சுவாமிகள் போன்றோர் பல நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து வரும் மக்களுடன் சேர்ந்து கூட்டாக ஆவணி மூலத்தன்று கிரிவலம் வருவர். இப்பழக்கம் நாளடைவில் நின்றுவிட்டது என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

எனவே பக்த கோடிகள், திருஅண்ணாமலையில் கொண்டாடப்பெறும் கார்த்திகை தீபப் பெருவிழாவைப் போல் ஒவ்வொரு வருடமும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று திருச்சி மலைக்கோட்டையில் அன்னதானம், நீர்மோர் தானம், வஸ்திர தானம் போன்ற தான தர்மங்களுடன் சீரும் சிறப்புமாகப் பெரிய திருவிழாவைப் போல் மலைக்கோட்டை கிரிவலத்தை மேற்கொள்ள வேண்டும். கூட்டுப் பிரார்த்தனைதான் மிகுந்த பலன்களை அளிக்கும். எனவே கூட்டாக கிரிவலம் வருவதினால் யாவர்க்கும் திருவருளைப் பெற்றுத் தருகின்ற பாக்கியத்தைப் பெற்றிடலாம்.

ஆவணி மூல கிரிவல பலன்கள் :

1. கர்ப்பப்பைக் கோளாறுகள், கர்ப்பக் கோளாறுகள் நீங்கும். குறைப் பிரசவங்கள் தவிர்க்கப்படும்.

2. வியாபாரத்தில் நெருக்கடிகள், வியாபார அபிவிருத்தியில் எதிர்பாராத தடங்கல்கள், வியாபாரம் நடக்குமிடத்தில் உள்ள தோஷங்கள் விலகும்.

3. வயிற்றுக் கட்டிகள், குடல் கட்டிகள், வயிற்று ரணங்கள் குணமாகும்.

4. கர்ப்பப்பை, அடிவயிற்றுப் பகுதிகளில் உண்டாகும் புற்று நோய் குணமாகும்.

5. எண்ணெய், பருப்பு, காய்கறி போன்ற மளிகை பசுமைப் பொருட்களின் வியாபாரிகளின் நியாயமான வியாபாரப் பிரச்னை தீரும்.

கர்ம வினைகளுக்குப் பரிஹாரம்

1. பெற்றோர்களுக்கு அவர்களுடைய வயதான காலத்தில் தகுந்த முறையில் சேவை செய்யாதவர்கள், பெற்றோர்களை உதாசீனப்படுத்தியவர்கள்,

2. சகோதரர், சகோதரிகளை வஞ்சித்து சொத்தை அபகரித்தவர்கள்,

3. கணவனையோ, குழந்தையையோ பிரிந்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அறியாமலேயே வாழ்பவர்கள்,

ஆகியோர் ஸ்ரீதாயுமான சுவாமியையும், உச்சிப் பிள்ளையாரையும் மனமுருக வேண்டி மலையை கிரிவலம் வந்து வணங்கி

1. இறந்த பெற்றோர்களுக்கு உரித்தான தர்ப்பண பூஜைகளை இனியேனும் தொடர்ந்து செய்தல்,

2. பெற்றோர்கள் இருப்பின் இனியேனும் அவர்களுக்குத் தக்க சேவை புரிதல்.,

3. தன்னால் வஞ்சிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு நிவாரணம் அளித்தல்.,

ஆகியவற்றைச் செய்திட இவையே தக்க பரிஹாரங்களாக அமைந்து பல கொடிய வினைகளின் சுமையைக் குறைக்கும்.

மலைக்கோட்டை தரிசனங்கள்

மலைக்கோட்டை தாயுமான முக தரிசனங்கள்

அழற்பிழம்பாய் பிரகாசிக்கும் சிவபெருமான் தன்னை பூலோக மக்களும் தரிசனம் செய்து உன்னத நிலையை அடைய கிரிவடிவாய் கல் மலைத் தோற்றம் கொண்டு திருஅண்ணாமலையில் அமர்ந்திருக்கிறார். திருஅண்ணாமலையை வலம் வரும் பக்தர்கள் ஒவ்வொரு இடத்திலிருந்து மலை உச்சியை நோக்கும் போதும் ஒவ்வொரு விதமான தரிசனப் பலன்களை நல்கி கலியுக மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு ஓர் அருமருந்தாக, ஆன்மீக விருந்தாக அருள்பாலிக்கின்றார் அருணாசல ஈசன்.

இந்த ஒப்பற்ற முக தரிசன இரகசியங்களை பல சித்த புருஷர்கள், மஹரிஷிகள் அருளியவற்றை மீண்டும் கலியுக மக்களின் நல்வாழ்விற்காக எடுத்துரைத்து வருபவர் திருக்கயிலாயப் பொதிய முனிப்பரம்பரை வழித் தோன்றலான குரு மங்களகந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்.

தன் குருநாதர் சிவகுருமங்கள கந்தர்வராகிய ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்தரிடம் பெற்ற கடினமான குருகுல வாசத்தில் தாம் அறிந்த இந்த கிரிவல முக தரிசன மகிமைகளை விளக்கி வருகின்றார்கள். திருஅண்ணாமலையைப் போன்றே தாயுமான ஈசனும் உச்சிப் பிள்ளையாரும் திருச்சி மலைக்கோட்டையை கிரிவலம் வரும் பக்தகர்களுக்கு அற்புதமான முக தரிசனங்களை அளித்து திருவருளைப் பொழிகின்றார்கள். இத்திருமுக தரிசனங்களே தாயுமான முக தரிசனங்கள் என்றழைக்கப்படுகின்றன.

சஹஸ்ர லிங்கம்
மலைக்கோட்டை

சஹஸ்ர லிங்கம்
மலைக்கோட்டை

தாயுமான முக தரிசனங்கள் பலகோடி உள, ஆனால் மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலப் பாதை முழுவதிலுமே உயரமான கட்டிடங்களை எழுப்பியுள்ளதால் மிகமிகக் குறைவான தரிசனங்களையே தற்போது மக்கள் பெற முடிகிறது. எனவே தற்கால சூழ்நிலைக்கேற்ப முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்கும் தரிசனங்கள் சிலவற்றின் மகிமைகளைப் பற்றி குருவருளால் இங்கு காண்போம்.

சுழிக்கோண கஜமுக தரிசனம்

உச்சிப் பிள்ளையார் கோயிலடிவாரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீமாணிக்க விநாயகரை தரிசனம் செய்து அவரை வலம் வந்து, பிரதான கோபுர வாசல் வழியாக வெளியே வலப்புறமாகத் திரும்பி கிரிவலம் வருகையில் முதலில் வருவது கல்யாண விநாயகர் திருக்கோயில். (NSB சாலையும், நந்திக்கோயில் தெருவும் சந்திக்கும் இடம்).

ஸ்ரீகல்யாண விநாயகர் கோயிலிருந்து உச்சிப் பிள்ளையாரை தரிசிப்பது சுழிக்கோண கஜமுக தரிசனம் ஆகும். உயரமான கட்டிடங்கள் தற்போது மறைத்திருப்பதால் உச்சிப் பிள்ளையாரை இங்கிருந்து தரிசனம் செய்ய முடியாது. அதனால் உச்சிப்பிள்ளையாரை மானசீகமாக வணங்கி வழிபட்டுப் பிரார்த்திக்க வேண்டும். அற்புதமான பலவித அனுக்கிரகங்களை அளிக்கக் கூடியது சுழிக்கோண கஜமுக தரிசனம்.

சுழிக்கோண கஜமுக தரிசன மஹிமை

பல ஆண்டுகளுக்கு முன் பஞ்சருணன் என்ற ஒரு வியாபாரி மளிகை வியாபாரம் செய்து வந்தார். தினமும் மலைக்கோட்டை வழியாகச் செல்லும்போது சுழிக்கோண கஜமுக தரிசன இடத்தில் நின்று உச்சிப்பிள்ளையாரை வணங்கி “ஓம் கம் கணபதியே நம:” என்று ஒரே ஒரு முறை சொல்லிவிட்டு வியாபாரத்திற்குச் சென்று விடுவார். வியாபாரம் முடித்து மாலை திரும்பும்போது அதே இடத்தில் நின்று “ஓம் கம் கணபதயே நம:” என்று இரண்டாவது முறையாகத் துதித்து உச்சிப் பிள்ளையாரை வணங்கிவிட்டுத் தன் இருப்பிடம் சென்று விடுவார்.

இரவு உறங்குவதற்கு முன் சுழிக்கோண கஜமுக தரிசனத்தை கண்முன் கொணர்ந்து உச்சிப் பிள்ளையாரை மானசீகமாக வணங்கித் துதித்து “ஓம் கம் கணபதயே நம:” என்று மூன்றாவது முறையாக கணபதி நாமத்தைச் சொல்லி விட்டு உறங்கி விடுவார். ஆழ்ந்த நம்பிக்கையுடனும் உண்மையான உள்ளத்துடனும் செய்த இந்த அற்புத வழிபாட்டால் மகிழ்ந்த உச்சிப்பிள்ளையார் பஞ்சருணனுக்குப் பலவிதமான அனுக்கிரகங்களைத் தொடர்ந்து அளித்து வந்தார்.

பஞ்சருணனின் வழிபாட்டையும், அவருக்கு உச்சிப் பிள்ளையார் அளித்த அனுக்கிரகத்தையும் அறிந்த நாரத மகாபிரபு, “இந்த வியாபாரி போகும்போதும் வரும்போதும் மட்டுமே உச்சிப்பிள்ளையாரை வணங்கிச் செல்கிறான், இரண்டு மூன்று முறைதான் அவர் திருநாமத்தை உச்சரிக்கிறான். மற்ற நேரங்கள் எல்லாம் உலக விஷயங்களிலும், மனைவி மக்களுடனும் பொழுதைக் கழிக்கிறான். இப்படிப்பட்ட வியாபாரிக்கு உச்சிப் பிள்ளையார் அளவற்ற அனுக்கிரகத்தை வாரி வழங்குகிற கருணைக் கடலாக இருக்கிறார்!”

“நானோ சதாசர்வ காலமும் “நாராயணா, நாராயணா” என்றே ஓதிக் கொண்டிருக்கிறேன், நாராயணனைத் தவிர வேறு எதையும் நினைக்காமல் பிரம்மச்சாரியாய் வாழ்கிறேன், இப்படிப்பட்ட எனக்கு நாராயணன் அளிக்கும் அனுக்கிரகம் மிகவும் குறைவானதாகவே தோன்றுகிறது. உச்சிப் பிள்ளையாரை ஒப்பிட்டுப் பார்த்தால் நாராயணனின் அருட்கடாட்சம் குறைவாகவே தெரிகிறது. ஏன் இந்த பாரபட்சம்?” என்று நினைத்து இதைப் பற்றி மஹாவிஷ்ணுவிடமே முறையிடுகின்றார் நாரத முனிவர்.

சுழிக்கோண கஜமுக தரிசனம்
மலைக்கோட்டை

அனைத்தும் அறிந்த நாரத மஹரிஷிக்கா இத்தகைய எண்ணங்கள் என்ற வினா எழும். இறைவன் சித்த புருஷர்களையும், மஹரிஷிகளையும், ஞானியரையும் பூலோகத்திற்கு அனுப்பி மக்களோடு மக்களாக வாழச் செய்து அவர்களுடைய காரியங்களின் மூலம் மக்களுக்குப் பல பாடங்களைப் புகட்டுகின்றான்.

இத்தகைய அனுபவ ரீதியான நடைமுறை போதனைகளே மக்களின் மனதில் நன்கு பதியும். உத்தம அடியார்களும் கடவுள் தங்களுக்களிக்கின்ற இப்பாத்திரங்களைச் செவ்வனே நிறைவேற்றி மீண்டும் பரம்பொருளையே அடைகின்றனர். ஸ்ரீராமனே மனிதரூபத்தில் எத்தகைய வாழ்க்கைச் சூழ்நிலைகளை ஏற்றார் என்பதை நாமறிவோம்.

நாரதரின் குறையைக் கேட்ட மஹாவிஷ்ணு, 108 துளசி மணிகளை அவரிடம் கொடுத்து, “அம்மணிகளைக் கோர்த்துக் கொண்டே மலைக்கோட்டையை வலம் வருவாயாக! கிரிவலத்தை சுழிகோன கஜமுக தரிசனத்தில் ஆரம்பித்து அதே இடத்தில் முடிக்க வேண்டும். மணிகளில் எதுவும் தொலைந்து போகாமல் கவனமாகக் கோர்க்க வேண்டும்”, என்று கூறி அனுப்பினார்.
துளசி மணிகளுடன் சுழிக்கோண கஜமுக தரிசன இடத்தை அடைந்தார் நாரதர். உச்சிப் பிள்ளையாரை கையெடுத்து வணங்கிவிட்டு வலம் வரத் தொடங்கினார். தாமரை நூலால் ஆன திரியால் ஒவ்வொரு மணியாகக் கோர்த்து வந்தார். துளைகள் சிறிதும் பெரிதுமாக இருந்தன. சிறிய துளைகள் உள்ள மணிகளை மிகவும் கவனமாகக் கோர்க்க வேண்டியிருந்தது. பொறுமையுடன் கவனமாக ஒவ்வொரு மணியாக கோர்த்துக் கொண்டே வந்து மீண்டும் சுழிக்கோண கஜமுக தரிசனத்தை அடைந்தார்.

அப்போது மாலை முழுமையும் கோர்க்கப்பட்டு இருந்தது. 108 மணிகளும் சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தார் நாரதர்.

மூன்று மணிகள் குறைந்தன! வழியில் எங்கோ தொலைந்து போய் விட்டன! காணாமல் போன மணிகளைத் தேடி மீண்டும் ஒருமுறை கிரிவலம் வந்தார். அப்போது ஒரு மணி மட்டும் கிடைத்தது. அதை மாலையில் கோர்த்துவிட, எஞ்சிய இரு மணிகளைத் தேடி மூன்றாவது முறையாக உச்சிப் பிள்ளையாரை வலம் வந்தார். அப்போது இரண்டையும் கண்டெடுத்து மாலையில் கோர்த்து மணிமுடி போட்டு எண்ணிப் பார்த்தார் 108 மணிகள் சரியாக இருந்தன!

ஸ்ரீமஹாவிஷ்ணு முன்னர் தனக்கிட்ட சோதனை அவருக்கு நினைவிற்கு வந்தது. கையில் ஒரு சிறிய எண்ணெய்க் கிண்ணத்துடன் ஒரு துளிகூட எண்ணெய் சிதறாது பூலோகத்தை வலம் வரவேண்டும் என்ற சோதனையில் தன் கவனத்தை எண்ணெய்க் கிண்ணத்திலேயே செலுத்தியமையால் நாராயண தியானத்தை மறந்த நிகழ்ச்சியானது நாரதரின் மனதில் பசுமையாக இருந்தமையால், துளஸி மணிகளைக் கோர்த்தவாறே அவர் கிரிவலம் வருகையில் நாராயண நாம ஜபத்தையும் அவ்வப்போது விட்டு விடாமலிருப்பதற்காக சுயசோதனையுடன் நாராயண தியானத்தையும் தொடர்ந்தார்.

மலைக்கோட்டை தெப்பக்குளம்

அப்போது உச்சிப்பிள்ளையார் ஒரு சிறுவன் வடிவில் நாரதர் முன்தோன்றி, “என்ன சுவாமி! உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?” என்றுக் கேட்டிடத் திடுக்கிட்டு நிமிர்ந்து ஆச்சரியத்துடன் சிறுவனைப் பார்த்தார். சிறுவன் கேட்பதைப் பார்த்தால் நமக்குத் திருமணமாகவில்லை என்பது அவனுக்குத் தெரியும் போல் தோன்றுகிறதே! இது எப்படி சாத்தியமாகும் என்று வியந்தவாறு “இன்னும் திருமணமாகவில்லை!” என்று பதிலளித்தார்.

சிறுவனின் அடுத்த கூற்று நாரதரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “ஆஹா! இப்பொழுதுதான் தெரிகிறது. திருமணம் ஆகாததால்தான் உங்களால் மணிகளைக் கோர்க்க முடியவில்லை., திருமணமாகி இருந்தால் எளிதாக மணிகளைக் கோர்த்து இருப்பீர்கள்., திருமணமாகி இருந்தால் பொறுப்புகள் இருந்திருக்கும். பல பொறுப்புகளை நிறைவேற்றிய அனுபவத்தால் மணிகளைப் பொறுப்போடு கோர்த்திருப்பீர்கள்!”

சிறுவனின் வார்த்தைகளை மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார் நாரதர். சிறுவன் தொடர்ந்தான், “சுவாமி! பிள்ளையாரை வலம் வந்து கொண்டே எத்தனை முறை இறைநாமத்தை கூறினீர்கள்?”

நாரதர் யோசித்துப் பார்த்தார். நிலைகுலைந்தார்.!

“பல்லாயிரம் முறை கூறியிர்ப்பேனே, இதில் என்ன சந்தேகம்?”

சிறுவன் சிரித்தான்.

“நாரதா! துளஸி மணிகளை நன்றாகப் பார்!”

நாரதர் துளஸி மணிகளை ஒவ்வொன்றாகக் கையில் வைத்துப் பார்த்தார்!

“ஆஹா! மணிகளில் நாராயணா என்ற நாமம் எழுதப்பட்டிருக்கிறதே! ஆமாம் என்ன இது, மூன்று மணிகளில் மட்டும் “ஓம் கம் கணபதயே நம:” என்றல்லவா இருக்கிறது!”

சிறுவன் புன்முறுவலுடன் “பார்த்தாயா நாரதா! நீ பல லட்சம் முறை நாராயண நாமம் ஓதியும் அது 105 மணிகளில்தான் ஏறியிருக்கிறது, அந்த வணிகர் மூன்று முறை மட்டுமே சொன்ன நாமஜபம் மூன்று மணிகளிலும் ஏறியுள்ளது! எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணமே முக்கியம்!”

ஸ்ரீருத்ரசம்வர்த்த நந்தீஸ்வரர்
மலைக்கோட்டை

சிறுவன் மீண்டும் நகைத்தான்.

‘உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். நீ விரும்பினால் கல்யாணம் செய்து வைப்பேன். அப்போது தான் பொறுப்போடு காரியங்களைக் கவனிக்க முடியும்!” என்று கூறி தன் இறைதரிசனத்தை நாரதருக்குக் காட்டி அருளாசி வழங்கி மறைந்தார் உச்சிப்பிள்ளையார்!

எனவே சுழிக்கோண கஜமுக தரிசனம் திருமணங்களைக் கூட்டுவிக்கும் ஓர் அற்புத தரிசனமாகும்.

‘கல்யாணம் செய்து வைப்பேன்’ என்று அன்று நாரதருக்கு வரமளித்த உச்சிப்பிள்ளையார் தன் வாக்கிற்கிணங்க இன்று கல்யாண விநாயகர் என்ற திருநாமம் பூண்டு தன்னை தரிசனம் செய்து உச்சிப்பிள்ளையாரை வணங்கும் பக்தர்களுக்கெல்லாம் திருமணப் ப்ராப்தி நல்கி அருள்பாலிக்கிறார்.

தற்போது கட்டிடங்கள் எழும்பி உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய முடியாதவாறு சூழ்நிலை இருந்தாலும், கல்யாண விநாயகரை வணங்கி உச்சிப் பிள்ளையாரை மானசீகமாக இவ்விடத்தில் வழிபட்டு ஏழை தம்பதியர்க்குப் பொன் மாங்கல்ய தானம் அளித்து வரத் திருமண தடங்கல்கள் நீங்கி நன்முறையில் திருமணங்கள் நடந்தேறும். இதை உலகிற்கு உணர்த்துவதே மேற்கண்ட நாரத லீலையாகும்.

கல்யாணமாகாத வாலிபர்களுக்கும், இளம் பெண்களுக்கும் ஓர் அருமருந்தாக அமைந்துள்ளது சுழிக்கோண கஜமுக தரிசனம்!

சம்வர்த்தன தாயுமான பாண லிங்க தரிசனம்

எம்பெருமான் சிவபெருமானுக்குப் பலவித நந்தி வாகனங்கள் உண்டு. பணக்காரர்கள் பல காரியங்களுக்காகப் பல கார்களையும், பலவித வாகனங்களையும் வைத்திருப்பது போல் அகிலாண்ட ஈஸ்வரனிடமும் பல காரியங்களைநிறைவேற்றப் பற்பல வாகனங்கள் உண்டு. ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொருவிதமான பெயர் சூட்டி இருப்பதுபோல சிவபெருமான் பவனி வரும் நந்தி வாகனங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு.

பலகோடி ஆண்டுகள் கடுமையாக தவமியற்றிய சிவனடியார்கள் இறைவனின் தரிசனத்தைப் பெற்று அவருக்கு வாகனமாய் அமையும் வரத்தைக் கேட்கிறார்கள்., அந்த உத்தம அடியார்களே ஈசனின் வாகனமாய் மாறி பற்பல திருநாமங்களைப் பூண்டு நந்தீஸ்வரர்களாக அருள்பாலிக்கின்றனர்.

ருத்ரசம்வர்த்த தாயுமான
பாணலிங்க தரிசனம்

ருத்ர சம்வர்த்தனன் என்ற ஓர் உத்தமர் நீண்ட நாட்களாக வேதங்களைப் பயின்று தமிழ் மறைகளையும், வடமொழி வேதங்களையும், 5 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர்களுக்கு உபதேசித்து மறைகளை முறையாக ஓதும் முறையை அவர்களுக்கு இலவசமாகக் கற்பித்து வந்தார். இவ்வாறு சிறந்த பயிற்சி பெற்ற மாணாக்கர்களுடன் – சிறுவர்களுடன் தானும் வேத மந்திரங்களை ஓதிக்கொண்டு உச்சிப்பிள்ளையாரைத் தினமும் வலம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வேதங்கள் முழங்க இவ்வாறு வலம் வருகையில் யாருக்காவது பிரசவ வேதனை ஏற்பட்டால் அவர்களுக்குப் பிரசவ வேதனை தெரியாமல் சுகமாகக் குழந்தை பிறக்க ஒரு எளிய தமிழ் மறைப்பாடலை ஓதுவார்.

தாயுமான வெண்ணையாகி தயை கூர்ந்து உருகி
மாயமான்மழுவும் ஏந்தி மயிர்க்கூச் செறிந்து
ஏழையென் உடல்வலி தெரிந்திடாமல்
பிழை பொறுத்து மகவு ஈந்திட அருள்வாயே

என்ற இந்தப் பாடலைப் பாடித் தாயுமானவரை நினைத்து வெண்ணெய் அளிப்பார். கடவுளருளால் பூரண நம்பிக்கையோடு இந்தப் பாடலை பாடி வெண்ணெய் உண்டவர்களுக்கு சுகப் பிரசவம் நடந்து வந்தது.

இவ்வாறு சுயநலம் சிறிதுமின்றி வேத சம்ரட்சணமும், பெண்களின் சுகப் பிரசவத்திற்காகவும் ருத்ரசம்வர்த்தனன் ஆற்றிய அருந்தொண்டால் மகிழ்ந்தான் தாயுமான ஈசன், விண்ணுலாவும் தேவர்களுக்கும் கிடைக்காத இறைதரிசன திருக்காட்சியை ருத்ர சம்வர்த்தனனுக்கு அருளினார்.

இறைவன், “சம்வர்த்தனா! உன்னுடைய அற்புதமான சேவையால் யாம் மகிழ்ந்தோம். உனக்கு யாது வேண்டும்?” என்று வினவ ருத்ர சம்வர்த்தனன், “ஐயனே! தங்களை இங்கிருந்தே தரிசிக்கும் பாக்கியமும், தங்களைச் சுமக்கும் பாக்கியத்தையும் தந்தருள வேண்டும்!”, என்று பிரார்த்தித்தான், இறைவனாம் தாயுமானவனும் மனங்கனிந்து “இங்கேயே நந்தீஸ்வரராய் அமர்ந்திடுவாய்!” என்று வரம் அருளினார். ருத்ர சம்வர்த்தன நந்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அமர்ந்தார்.

ருத்ர சம்வர்த்தன நந்தீஸ்வரரிடமிருந்து உச்சிப் பிள்ளையாரைத் தரிசித்திட, அது சம்வர்த்தன தாயுமான பாணலிங்க தரிசனம் ஆகும். முறையான இந்த தரிசனத்தால்:

            1. கர்ப்ப சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

            2. சுகப் பிரசவம் ஏற்படும்.

            3. பிரசவ வேதனைகள் மிதமாகி சுலபமாகப் பிரசவம் ஏற்பட வழி செய்யும்.

            4. பிரசவ காலத்தில் தாயோ, நெங்கிய உறவினர்களோ இல்லாமல் அவதியுறுவோர்களுக்கு இறைவன் தக்க உதவிகளை அளிப்பான்.

கர்ப்பிணிப் பெண்கள் மலைக்கோட்டையை கிரிவலம் வந்து ருத்ர சம்வர்த்தன நந்தீஸ்வரரை தரிசிக்க அவர்களது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் கணவன்மார்களோ, தாய் தந்தையரோ, சகோதர சகோதரிகளோ, மற்ற நெருங்கிய உறவினர்களோ உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து ருத்ர சம்வர்த்தன நந்தீஸ்வரரைத் தரிசனம் செய்து மேற்கூறிய பாடலைப் பாடி நந்தீஸ்வரர் மீது பசு நெய் தடவி தாயுமானவரை வேண்டினால் சுகப் பிரசவம் ஏற்பட எம்பெருமான் தாயுமான ஈசன் அருள் புரிவார்.

சசபிந்து மகரிஷி

கிரிவலத்தில் அடுத்து வருவது நாகநாத சுவாமி கோயில். கோயிலின் உள்ளே சென்று ஆனந்தவல்லித் தாயையும், நாகநாத சுவாமியையும் தரிசனம் செய்ய வேண்டும். எல்லாவித நாக தோஷங்களுக்கும் பரிகாரம் நல்குகிறார் நாகநாத சுவாமி, நந்தீஸ்வரரின் வலது பக்க தூணில் சசபிந்து மகரிஷி ஜீவசமாதி பூண்டு சகல நாக தோஷங்களுக்கும் நிவாரணம் அளிக்கிறார். அவருக்கு எண்ணெய்க் காப்பிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு வலம் வந்து வணங்கி அளப்பரிய பலன்களைப் பெறலாம்.

ஸ்ரீசசபிந்து மகரிஷி

சற்குருவைத் தேடுவோர்க்கு இவர் நல்வழி காட்டுகின்றார். ஆன்மீக சக்தியைப் பெறுவதைவிட அதைக் கட்டிக் காப்பதே பெரும் பொறுப்பாகும். ஏனெனில் புண்ய சக்தி பெருகப் பெருக அதிகாரம், ஆணவம், மமதை, கர்வம் போன்ற தீய குணங்களே பெருகும்.

பெறுகின்ற ஆன்மீக சக்தியை அறவழிகளில் செலுத்திட ஸ்ரீ சசபிந்து மஹரிஷி அருள்புரிகின்றார்.

கிரிவலத்தில் அடுத்து வருவது கருப்பண்ண சுவாமி கோயில். (நந்தி கோயில் தெருவும், வடக்கு ஆண்டார் வீதியும் சந்திக்கும் இடம்) இங்கிருந்து உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய அது கருப்பண்ண கதிரறுத்தான் தாயுமான லிங்க தரிசனம் ஆகும்.

கருப்பண்ண கதிரறுத்தான் தாயுமான லிங்க தரிசன மஹிமை

 பத்தரையன் என்ற ஒரு விவசாயி இருந்தார். அவர் இல்லத்தில் காற்று, கறுப்பு சேஷ்டைகளால் மிகுந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். விவசாயத்தில் மிகுந்த நஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.

நெல் மூட்டைகளையெல்லாம் பூச்சிகள் அரித்தும், நெல் மணிகள் கருத்தும், சொத்தையாகியும் விரயமாகின. இவ்வளவு துன்பங்களுக்கிடையிலும் அவர் தன் மூதாதையர்கள் சொல்லியபடி தினமும் உச்சிப் பிள்ளையாரை காலை, மதியம், மாலை என மூன்று முறை கிரிவலம் வந்து வணங்கிப் பிரார்த்தித்தார்.

இவ்வாறு நீண்ட காலம் கிரிவலம் வந்து வேண்டும்போது ஒரு முறை இறைவன் கனவில் தோன்றி இந்த குறிப்பிட்ட இடத்தைக் காட்டி, “இங்கு கருப்பண்ண சுவாமி குடியிருக்கிறார். அவரை வேண்டினால் உன்னுடைய விளைச்சல் பெருகும், நெல் மணிகள் வீணாகாமல் பாதுகாக்கப்படும், ஆவி துன்புறுத்தல்களும் மறையும்!” என்று அருளினார்.

பத்தரையன் மகிழ்ந்து இறைவன் சுட்டிக் காட்டிய இடத்தை அடைந்தார். இவ்வளவு காலம் வலம் வந்தும் கருப்பண்ண சுவாமியை அந்த விவசாயி பார்க்கவில்லை! இப்போது கருப்பண்ண சுவாமியின் திருவுருவச் சிலை அவர் கண்களுக்குத் தெரிந்தது. அவரை வணங்கித் துதித்தார். கருப்பண்ண சுவாமிக்கு ஒரு சிறு கோயில் கட்டினார். அவருடைய முறையான வழிபாட்டினால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து அமோக நெல் விளைச்சலையும் பெற்று, ஆவி துன்பங்களும் நீங்கி மன அமைதியையும் பெற்றார்.

கருப்பண்ண சுவாமி கோயில் எதிரே வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அங்கிருந்து உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்யலாம்.

ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்
மலைக்கோட்டை

காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் மலைக்கோட்டையை கிரிவலம் வந்து கருப்பண்ண சுவாமியை வேண்டினால்

1. விவசாயத்தில் விளைச்சல் பெருகும்.

2. பூச்சிகள், இயற்கை உபாதைகளால் பயிர் தானியங்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படும்.

3. காற்று, கருப்பு தொந்தரவுகள், ஆவி சேஷ்டைகள் போன்ற பிணிகள் மறையும்.

4. மன அமைதி உண்டாகி இறைவனை அடையும் வழி கிடைக்கும்.

மலைக்கோட்டை கிரிவலத்தில் அடுத்து வருகின்ற செல்வ விநாயகரை தரிசனம் செய்து கிரிவலத்தைத் தொடர அடுத்து வருவது ஏழைப்பிள்ளையார் கோயில்.

ஏழைப்பிள்ளையார் என்று தற்போது அழைக்கப்படும் பிள்ளையாரின் ஆதிபெயர் சப்தபுரீஸ்வரர்.

சப்தபுரீஸ்வரர் என்ற பெயர் மறைந்து ஏழு பிள்ளையாரானார். ஏழு பிள்ளையார் சிறிது காலத்திற்குப் பின் எழு பிள்ளையாராகி தற்போது ஏழைப்பிள்ளையார் ஆகிவிட்டார். அவருடைய ஒவ்வொரு திருநாமத்திற்கும் பலவிதமான அனுக்கிரக சக்திகள் உண்டு.

சப்தபுரீஸ்வரர் திருக்கோயிலிருந்து உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய அது ஒலி விடங்க தாயுமான லிங்க தரிசனம் ஆகும்.

சப்தபுரீஸ்வரர் :

பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஒலிகளும், சொற்களும், அனைத்து ஸ்வரங்களும் எம்பெருமான் சிவபெருமானின் உடுக்கையிலிருந்து தோன்றியவையே.

பூலோக மக்கள் அறிந்ததெல்லாம் ஏழு ஸ்வரங்கள் மட்டுமே! இந்த சப்த ஸ்வரங்கள் அல்லாது கோடிக்கணக்கான ஸ்வரங்கள் உண்டு. ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒரு தேவதையும் உண்டு. ஒரு முறை சப்தஸ்வர தேவதைகளுக்குத் தங்களால்தான் இனிமையான ஒலியை எழுப்ப முடியும்.. தங்கள் இனிமையான ஸ்வரங்களினால்தான் வானுலகமே அற்புத இசையால் விரவியிருக்கிறது என்று கர்வம் கொண்டன.

ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலயம்
மலைக்கோட்டை

ஆணவத்தால் இறைவனைத் துதிப்பதையும் மறந்தன. அதனால் கலைவாணி சப்த ஸ்வர தேவதைகளை சபித்துவிட, அவை தங்கள் தவறை உணர்ந்து இறைவனிடம் பிராயச்சித்தம் பெற மன்றாடின. இறைவன் அவர்களை பூலோகம் சென்று உச்சிப் பிள்ளையாரை வலம் வந்து சப்தபுரீஸ்வரரிடத்தில் பாடல்கள் பாடுமாறு பணித்தான்.

இறை ஆணையை ஏற்று சப்தஸ்வர தேவதைகள் பூலோகமடைந்து உச்சிப் பிள்ளையாரை வலம் வந்து சப்தபுரீஸ்வரரை வணங்கி அற்புதமான கானத்தால் இறைவனைப் புகழ்ந்து பாடின. அவர்களுடைய அற்புதமான இசையில் மகிழ்ந்த சப்தபுரீஸ்வர விநாயகர் சாப விமோசனம் அளித்து அந்த தேவதைகளுக்கு நற்கதி அளித்தார்.

அன்று முதல் இன்றும் கூட சப்த ஸ்வர தேவதைகள் தாயுமானவரை நிதமும் வலம் வந்து இவ்விடத்தில் அமர்ந்து சப்த ஸ்வரங்களால் இறைவனைத் துதிக்கின்றன, சந்தி நேரங்களில்!

ஒலி விடங்க தாயுமான லிங்க தரிசன மஹிமை!

            1. வித்வான்கள், இசைக் கலைஞர்கள், இசை மாணாக்கர்கள், நாமகீர்த்தனம் பாடுவோர்கள், ஓதுவார் மூர்த்திகள் சப்தபுரீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து இறை துதிகளையும், வடமொழி வேதங்களையும், தமிழ் மறைகளையும் ஓதினால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.

            2. புத்தி மந்தமான குழந்தைகளும், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் இந்த தரிசனத்தைக் கண்டு சப்தபுரீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து இறை நாமங்களைப் பாடித் துதித்தால் சீரான மூளை வளர்ச்சியும், அறிவு விருத்தியும் ஏற்படும்.

            3. நன்றாகப் படிக்கும் குழந்தைகளும் தேர்வு சமயத்தில் கவனக் குறைவாலும், படித்ததை நினைவுகூர முடியாமல் போவதாலும் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்து போய்விடுகிறது. அத்தகைய மாணவ மாணவிகளும் இங்கு அமர்ந்து இறைத் துதிகளைப் பாடினால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி பெற சப்தபுரீஸ்வரர் அருள் செய்கிறார்.

            4. கல்வியில், உத்தியோகத்தில், அறிவில், பொருளில் ஏழ்மையாக இருப்பவர்கள் (தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள்) சப்தபுரீஸ்வரரைத் துதித்து இங்கு இறைவனை வணங்கிட கல்வியிலும், சமூக அந்தஸ்திலும் உயர் நிலையை அடைவார்கள். எனவேதான் சப்தபுரீஸ்வரர் ‘ஏழைப் பிள்ளையார்’ என்ற பெயரைப் பெற்றார்.

            5. தனி நபராக இவரை வழிபடுவதைவிட பலர் ஒன்றாக சேர்ந்து இறைக் கீர்த்தனைகளையும், நாமாவளிகளையும் பாடித் துதிப்பதால் அளவிறந்த  பயன்களைப் பெறலாம். கூட்டு வழிபாட்டில் இறையருள் பல்கிப் பெருகுகிறது.

ஸ்ரீசப்தபுரீஸ்வரர் மலைக்கோட்டை

ஒலிவிடங்க தாயுமான
லிங்க தரிசனம்

கிரிவலத்தில் அடுத்து வருவது மன்மத சுவாமி கோயில். இங்கிருந்து உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய அது பிராண நாதேஸ்வர தாயுமான லிங்க தரிசனம் ஆகும்.

மன்மத சுவாமியின் தியாகம்

அம்பிகையின் திருஅவதாரங்களில் ஒன்றில் தட்சனுக்கு மகளாகப் பிறந்திருந்தாள் பார்வதி.

தாட்சாயணியை மனைவியாக ஏற்றுக்கொண்ட சிவபெருமானை, தட்சன் தான் நடத்திய யாகத்திற்கு அழைக்கவில்லை.

மாப்பிள்ளையாகவும், அகிலாண்ட ஈசனாகவும் இருக்கும் சிவபெருமானை அழைக்காமல் யாகத்தை நடத்திய தட்சனுக்குப் புத்தி புகட்டுவதற்காக, ஈசுவரனின் சொல்லை மீறி தாட்சாயணி தட்சனின் யாகசாலைக்குச் சென்று யாகத்தை நிறுத்தும்படிக் கூறினாள்.

தட்சன் மறுத்து பார்வதியையும் சிவபெருமானையும் இழிவாகப் பேசினான். தாட்சாயணி பெருங்கோபமடைந்து தட்சனை சபித்து யாகத்தீயில் வீழ்ந்தனள்.

ஈசன் வீரபத்திரரை அனுப்பிட அவர் யாகத்தை அழித்து, தட்சன் தலையை வீழ்த்தி, யாகத்தில் கலந்து கொள்ள வந்து தன்னை எதிர்த்த தேவர்களையெல்லாம் அடித்து விரட்டினார்.

பின்னர் இறைவன் தாட்சாயணியின் உடலைத் தன் தோளில் சுமந்து கொண்டு பாரதமெங்கும் பவனி வந்தார். தாட்சாயணியின் உடல் அங்கங்கள் ஒவ்வொரு இடத்திலும் வீழ்ந்தன.

அவையே சக்திபீடங்களாகும்!

சிவபெருமான் கோபக்கனல் குளிர்ந்து யோகநிலையில் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டார்.

ஸ்ரீமன்மதசுவாமி திருக்கோயில்
மலைக்கோட்டை

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் யோகத்தில் அமர்ந்துவிட்டால் உலகம் என்ன ஆகும்? அனைத்தும் ஸ்தம்பித்து விட்டன, படைப்பே நின்று போய்விட்டது. இயக்கமே இல்லை. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

சிவபெருமான் கண் திறந்தால்தான் காரியங்கள் நடக்கும். அளவில்லாத கோபத்துடன் யோகத்தில் அமர்ந்திருக்கும் எம்பெருமானை யோக நிலையிலிருந்து எழுப்புபவர் யார்? யாருக்கும் அதற்குத் துணிவில்லை.

அனைவரும் கலந்து ஆலோசித்து மன்மதனை அணுகினார்கள். அவர்களின் நிலையறிந்த மன்மத சுவாமியும் தான் சிவபெருமானை யோகத்திலிருந்து எழுப்பினால் தம்முடல் அழிவது உறுதி என்று உணர்ந்தார்.

அதே சமயம் படைப்பைத் தொடர, சிருஷ்டிகள் உதயமாக வேறு வழியில்லை. தன் இன்னுயிரை கொடுக்கத் தயாரானார் மன்மதன். மன்மதனின் தியாக உணர்வைப் பாராட்டிய தேவர்கள் அவர் மீண்டும் உயிர் பெறும் உபாயத்தையும் கூறினார்கள்.

தாயினும் சாலப் பரிந்து உயிர்களைக் காக்கும் தாயுமான ஈசனைச் சரணடைந்து நல்வழிகாட்ட வேண்டுமாறு மன்மதனுக்கு அறிவுரை தந்தனர்.

 தேவர்களின் ஆலோசனையை ஏற்று மன்மதன் தாயுமான சுவாமியைத் துதித்தவாறே திருச்சி மலைக்கோட்டையைக் கிரிவலம் வந்தான். பல ஆண்டுகள் கிரிவலம் வந்து தாயுமானவரை வேண்டினான்.

ஈசன் மனமிரங்கி ப்ராண நாதேஸ்வர தாயுமான லிங்க தரிசன இடத்தில் மன்மதனுக்குக் காட்சி கொடுத்து, “எம்முடைய நெற்றிக்கண் தீப்பொறிகளால் நீ மறைந்தாலும், மீண்டும் உயிர் பெற்றெழுவாய்!” என்ற வரத்தை அருளி மறைந்தார்.

பிராண நாதேஸ்வர தாயுமான லிங்க தரிசன மகிமை

உச்சிப் பிள்ளையாரை காலை, மதியம், மாலை மூன்று வேளைகளையும் கிரிவலம் வந்து பிராண நாதேஸ்வர தாயுமான லிங்க தரிசனம் செய்து மன்மத சுவாமியை வணங்கி வழிபட்டால்..

            1. அந்திமக் காலத்தில் இயற்கையான, அமைதியான மரணம் ஏற்படும்.

            2. வியாதிகளாலோ, விபத்துக்களாலோ உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்கள் நோயிலிருந்து விடுபட்டு நல்ல உடல் ஆரோக்கியத்தை அடைவர்.

            3. வயதானவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏற்படும் மரணபயத்தால் துன்பம் அடைய மாட்டார்கள்.

            4. வாகன விபத்துகளால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

            5. வாகன ஓட்டிகள், Travel Agents, வாகன உரிமையாளர்கள் (Auto, Taxi, Bus, Tourist Cabs and Lorry owners ) தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவர்.

தற்போது கட்டிடங்கள் மறைத்திருப்பதால் உச்சிப் பிள்ளையாரையும், தாயுமான ஈசனையும் மன்மத சுவாமி கோயிலிருந்து தரிசனம் செய்ய இயலாது. இருப்பினும் தொடர்ந்து பல முறை கிரிவலம் வந்து, உச்சிப் பிள்ளையாரையும், தாயுமான ஈசனையும் மானசீகமாக வணங்கி, மன்மத சுவாமியை தரிசனம் செய்து தீபமேற்றி வணங்கினால் அனைத்து நலன்களையும் ஈசனருளால் பெறலாம்.

ஸ்ரீநிர்தானந்த விநாயகர் ஆலயம்
மலைக்கோட்டை

வியாகரண தாயுமான லிங்க முக தரிசனம்

கிரிவலத்தில் அடுத்து வருவது நிர்தானந்த விநாயகர் கோயில். இங்கிருந்து உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய அது வியாகரண தாயுமான லிங்க முக தரிசனம் ஆகும். இது மிகவும் விசேஷமான ஒரு தரிசனம். இத்தரிசனம் வாக்குவன்மையை அளிக்கிறது.

1. வக்கீல்கள்
2. மொழிபெயர்ப்பாளர்கள் (Translators)
3. தரகர்கள் (Brokers)
4. நீதிபதிகள்
5. முகவர்கள் (LIC Agents, etc., )
6. Development Officers (LIC etc.,)
7. Medical /Sales Representatives

போன்ற பேச்சுத்திறமையை அடிப்படைத் தேவையாக உள்ளவர்களும், உயர் அதிகாரிகளும் உச்சிப் பிள்ளையாரை தினமும் காலை, மதியம், மாலை கிரிவலம் வந்து வியாகரண தாயுமான லிங்க முக தரிசனத்தைப் பெறுவதால் பேச்சுத் திறமை வளர்ந்து தங்கள் தொழிலில் முன்னேற்றத்தையும் பெரும் புகழையும் அடைவார்கள்.

தற்போது கட்டிடங்கள் மறைத்திருப்பதால் இங்கிருந்தும் உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்ய இயலாவிடினும், நிர்தானந்த விநாயகரை வணங்கி இங்கு அமர்ந்து உச்சிப்பிள்ளையாரையும் தாயுமான ஈசரையும் மானசீகமாகத் தொழுது எல்லா நலன்களையும் இறையருளால் பெறலாம்.

கிரிவலத்தில் அடுத்து வருவது சித்தி விநாயகர் கோவில்!

இங்கிருந்து உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்ய அது விருத்தீஸ்வர தாயுமான லிங்க முக தரிசனம் ஆகும். (வடக்கு ஆண்டார் வீதியும், கீழ ஆண்டார் வீதியும் சந்திக்கும் இடம்)

விருத்தீஸ்வர தாயுமான லிங்க முக தரிசன மகிமை!

ஒருமுறை இந்திரன், ஒரு முனிவரின் சாபத்தால் தன் பதவியை இழந்து திரிந்தான். இழந்த பதவியை மீண்டும் பெற இறைவனை வேண்டி பூலோகம் அடைந்தான். தாயுமானவரை நெடுங்காலம் வலம் வந்தான்.

தன்னுடைய தவறுக்காக மனம் வருந்தி இறைவனை வேண்டிப் பிரார்த்தித்தான். ஈசன் மனமிரங்கி விருத்தீஸ்வர தாயுமான லிங்க முக தரிசன இடத்தில் அவனுக்கு தரிசனம் கொடுத்தார்.

ஸ்ரீமகாலட்சுமியும் இந்திரனின் தவறினைப் பொறுத்து மீண்டும் பதவியைத் கொடுத்து மற்ற முறையான செல்வங்கள் அனைத்தையும் இந்திரனுக்கு அருளினான், பதவியை இழந்தவர்கள் (dismissed & suspended employees)  தங்கள் தவறை உணர்ந்து தாயுமான ஈசரை வணங்கி தினமும் காலை, மதியம், மாலை கிரிவலம் வருவதால் தாங்கள் இழந்த பதவியை மீண்டும் பெற இறைவன் அருள் செய்வான்.

செல்வங்களை இழந்து வருந்துவோர்க்கெல்லாம் ஒரு சஞ்சீவி மருந்தாக அமைந்துள்ளது விருத்தீஸ்வர தாயுமான லிங்க முக தரிசனம். மகாலட்சுமியின் பேரருட் கடாட்சத்தை நல்கும் உன்னத தரிசனம்.

தற்போது கட்டிடங்கள் மறைத்திருப்பதால் உச்சிப் பிள்ளையாரை இங்கிருந்து தரிசனம் செய்ய இயலாது. இருப்பினும் சித்தி விநாயகரை தரிசனம் செய்து உச்சிப் பிள்ளையாரையும் தாயுமான ஈசரையும் மானசீகமாக வணங்கி வழிபட்டு அவர்கள் திருவருளைப் பெறலாம்.

ஈடுஇணையற்ற ருத்ர ஜோதி ஸ்ரீதாயுமான ஈசன்

கிரிவலத்தில் அடுத்து வருவது ஸ்ரீஅங்காளம்மன் கோயில், இங்கிருந்து உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்ய அது மடிப்பிச்சை ஏந்து முக தரிசனம் ஆகும். அற்புதப் பலன்களை நல்கும் விசேஷமான தரிசனம்.

மடிப்பிச்சை ஏந்து முக தரிசன மகிமை

சிவதர்மன் என்ற வணிகன் நீண்ட நாட்களாகத் தன் தொழிலில் திருப்பம் ஏற்படாமல், முன்னேற்றம் ஏதும் இன்றி வருந்தினான், இதற்குப் பரிகாரம் காணத் தன் குருநாதரை அணுகி வேண்டினான்.

குருநாதரோ வணிகனை, கொல்லிமலை சித்தரை நாடிப் பரிகாரம் காணுமாறு கூறினார். குருநாதர் உத்தவின்படி கொல்லிமலை சித்தரை தரிசித்து வணங்கித் தன் குறையைத் தெரிவிக்கலானான் சிவதர்மன்.

சிவதர்மனின் நிலையறிந்த சித்த புருஷர் திருச்சி உச்சிப் பிள்ளையாரை காலை, மதியம், மாலை மூன்று முறை வலம் வந்து மடிப்பிச்சை ஏந்து முக தரிசனத்தை வணங்கும்படி அருளினார். வணிகனும் அவ்வாறே வலம் வந்து உச்சிப்பிள்ளையாரையும் தாயுமான ஈசரையும் மன்றாடி அழுது பிரார்த்தனை செய்தான். தொடர்ந்து மடிப்பிச்சை ஏந்து முக தரிசனத்தையும் தினம் மும்முறை பெற்றான். அதனால் அவன் வியாபாரம் பல்கிப் பெருகி உயர்நிலையை அடைந்தான்.

கடன் தொல்லைகளாலும், தொழிலில் முன்னேற்றம் காணாது துன்பம் அடைந்தவர்களும் இத்தரிசனம் செய்துவர நல்ல நிலையை அடைவர்.

மடிப்பிச்சை ஏந்து முக தரிசன இடத்தில் இப்போது ஸ்ரீஅங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது.

எல்லா சிறு வியாபாரிகளுக்கும், பெரிய வியாபாரிகளுக்கும், சுயமாகத் தொழில் செய்வோருக்கும் (Self-Employed entrepreneurs) தொழிலில் ஒரு திருப்பத்தையும், முன்னேற்றத்தையும் பெற உச்சிப் பிள்ளையாரையும், தாயுமான ஈசனையும் இத்தரிசனத்துடன் மானசீகமாக தியானித்து வழிபட வேண்டும்.

கிரிவலத்தில் அடுத்து வருவது இச்சிமரத்தடி வீரபத்திரசுவாமி கோயில்.

இச்சிமர வீரபத்திர சுவாமி மகிமை

தட்சன் யாகத்தில் உக்ரஹத்தால் ஸ்ரீ வீரபத்திர சுவாமி தேவர்கள் பலரை அடித்துத் துன்புறுத்தினார். அங்கங்களை வெட்டி வீழ்த்தினார். சிவபெருமானுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அவரை அழைக்காமல் செய்த யாகத்தில் கலந்து கொண்டதால் தேவர்கள் கடும் தண்டனை அடைந்தார்கள். தக்ஷனின் யாகத்தை முறியடித்தார் வீரபத்திர சுவாமி.

யாகத்திற்கு முக்கிய கர்த்தாக்கள் எல்லோரும் பலவிதமான துன்பங்களை அடைந்து தங்கள் தவறுக்கு வருந்தி, சிவபெருமானிடம் பிராயச்சித்தம் வேண்டினர். கருணைக் கடலான எம்பெருமான் அவர்களுடைய தவறைப் பொறுத்தருளி உச்சிப் பிள்ளையாரை வலம் வருமாறு பணித்தார். ஸ்ரீ வீரபத்திர சுவாமியே அவர்களுடைய தவறுக்குப் பிராயச்சித்தம் அளிப்பார் என்று வரம் அருளினார்.

தவறிழைத்த தேவர்கள் அனைவரும் தாயுமான ஈசனைப் பல காலம் வலம் வந்து வணங்கினர். அவர்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் தர ஸ்ரீவீரபத்திரசுவாமியே இங்கு இச்சி மரமாய் நின்றார். யாகத்தில் வெட்டுப்பட்ட உதிர சக்தியானது உயர் வாளாய் மாறியது.

தேவர்கள் எல்லோரும் இலைகளும் கிளைகளுமாக மாறினார்கள். வீரபத்திர சுவாமியுடன் சேர்ந்து சதா சர்வகாலமும் தாயுமான ஈசரை தரிசித்தவாறே அமர்ந்திருக்கும் அற்புதப் பேரருளைப் பெற்றார்கள்.

உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்து வீரபத்திர சுவாமி கோயிலில் உதிர சக்தியாய் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வீர வாளையும், இச்சி மரத்தையும், உச்சிப் பிள்ளையாரையும் தரிசனம் செய்தால் வீரபத்திர சுவாமியின் திருவருளையும், அனைத்து தேவர்களின் அருளாசியையும், உச்சிப் பிள்ளையார், தாயுமான ஈசரின் பேரருட் கடாட்சத்தையும் ஒருங்கே பெறலாம். என்னே இறைவனின் அற்புதம்!

ஸ்ரீவீரபத்திரசுவாமி ஆலயம்
மலைக்கோட்டை

ஒப்பற்ற இந்த தரிசனத்தால்

1. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் (Court Cases) சுமுகமாகத் தீரும்.

2. ‘வெட்டுவேன், குத்துவேன்’ என்று எதிரிகளின் பயமுறுத்தல்களால் அவதிப்படுவோர் அத்தகைய துன்புறுத்தல்களிலிருந்து விடுதலையாவார்கள்.

3. வெட்டுக்காயங்களாலும், ஆயுதப் பிரயோகங்களினாலும் பாதிக்கப்பட்டுத் துன்பமடைந்தோருக்கு மன அமைதியும், துரித நிவாரணமும் கிட்டும். தவறிழைத்தவர்களுக்குத் தக்க தண்டனையையும் ஸ்ரீவீரபத்திர சுவாமி அளிப்பார். ஆனால் ‘பழிக்குப் பழி வாங்குவேன்’ என்ற எண்ணத்தை விட்டு ஸ்ரீவீரபத்திர சுவாமியிடம் சரணாகதி அடைய வேண்டும்.

4. அனைத்து ஹோமங்களிலும் சிவபெருமானுக்கு ஆஹுதி அளித்தே ஆக வேண்டும். சிவனுக்கு ஆஹுதி அளிக்காத யாகத்தினால் சாபம் வந்து சேரும். இத்தகைய தவறிழைத்தவர்கள் மீண்டும் அத்தவற்றைச் செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி பூண்டு இச்சிமரத்தடி வீரபத்திர சுவாமியை தரிசிப்பதால் பிராயச்சித்தம் காண்பர்.

5. அரியும் சிவனும் ஒன்றே!  அறியாமையால் சிவ துவேஷம், சிவநிந்தனை செய்தவர்களுக்கு மலைக்கோட்டை கிரிவலமும், இச்சி மர தரிசனமும் உன்னத பிராயச்சித்தமாக அமையும்.

கிரிவலத்தில் அடுத்து வருவது முத்தாளம்மன் திருக்கோயில். இங்கிருந்து உச்சிப் பிள்ளையாரின் எழில்மிகு தரிசனத்தைக் காண அது ‘சந்திர கதிர் வீச்சு’ தாயுமான லிங்க தரிசனம் ஆகும்.

சந்திர கதிர்வீச்சு தாயுமான லிங்கமுக தரிசன மகிமை

வாதுளபுரீசன் என்ற ஓர் இளைஞன் நல்ல உடல் பலமுள்ளவன், மிகுந்த செல்வம் உடையவன்; உயர் பதவி வகிப்பவன்,  உடல், பணம், பதவி என்ற நிலையற்ற இந்த ஆணவத்தால் மிகவும் செருக்குற்று அனைவருக்கும் மிகுந்த துன்பம் அளித்தான். தன் தாயையும், தமக்கைகளையும், சிற்றன்னையையும், மனைவியையும், பிற பெண்களையும் மிகவும் துன்புறுத்தினான். சிறிது காலம் சென்றதும் அவனுக்கு நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்பட்டுச் சொல்லொணா வேதனை அடைந்தான். இதற்கு நிவாரணம் வேண்டிப் பல இடங்களில் அலைந்து திரிந்தான்.

பூர்வீக புண்ணியத்தால் திருச்சி மலைக்கோட்டையில் முத்கல முனிவரை சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றான். அவரிடம் தான் இழைத்த தவறுகளையும் தற்போதைய நிலையையும் சொல்லி அழுதான்.

ஸ்ரீமுத்தாளம்மன் திருக்கோயில்
மலைக்கோட்டை

முனிவர் அவன்மேல் பரிதாபப்பட்டு மனமிரங்கி மலைக்கோட்டைத் தாயுமான ஈசனை காலை, மதியம், மாலை மூன்று வேளையும் வலம் வந்து தற்போது முத்தாளம்மன் கோயில் அமைந்திருக்கும் இடத்திலிருந்து தாயுமான ஈசனை தரிசிக்கும்படி அருளினார். முனிவரின் அருளுரையின்படி வாதுளபுரீசன் தாயுமானவரை வலம் வந்து வணங்கி சந்திர கதிர் வீச்சு தாயுமான லிங்க தரிசனம் பெற்றுத் தன்னுடைய நோய் நீங்கப் பெற்று சுகமடைந்தான். அன்றிலிருந்து திருந்தி வாழ்ந்தான்.

தினமும் காலை, மதியம், மாலை உச்சிப் பிள்ளையாரை வலம் வந்து வணங்கி இத்தரிசனத்தைப் பெற்று வந்திடில்...

1. நரம்புத் தளர்ச்சி நோய்கள் நீங்கும்.

2. தாய், சிற்றன்னை, சகோதர சகோதரிகளையும், பிற பெண்களையும் துன்புறுத்தியதால் ஏற்பட்ட சாபம் நீங்கும். தரிசனம் செய்வது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்து அவர்களுக்கு மனசாந்தி அளிக்க வேண்டும்.

3. மனைவியை இம்சித்தல், பிறன்மனை நோக்குதல் போன்ற தவறுகளுக்குப் பிராயச்சித்தம் கிட்டும். ஆனால் மீண்டும் அவர்கள் அந்த தவறினைச் செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். திருந்தி வாழ வேண்டும்.

கிரிவலத்தில் அடுத்து வருவது பதினெட்டாம்படி முத்துக் கருப்பண்ணசுவாமி கோயில். இங்கிருந்து உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய அது பேதலித தாயுமான லிங்க முக தரிசனம் ஆகும்.

பேதலித தாயுமான லிங்க முக தரிசன மகிமை

ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி
ஆலயம் மலைக்கோட்டை

தரம்பாடி காலதர்மன் என்ற சிற்றரசன் பலவிதப் போர்களில் கலந்து கொண்டு விழுப்புண்களைப் பெற்று வீரவாகை சூடி, தன் மக்களைக் காப்பதற்காக வீரசாகசங்கள் செய்து, நேர்மையாக அரசாட்சி செய்து வந்தான். ஆனால் அவனுடைய குழந்தைக்குப் புத்தி சுவாதீனம் இல்லாமலிருந்தது. எந்தவித வைத்தியங்களும், மந்திர தந்திரங்களும் பலனளிக்கவில்லை. பல இடங்களுக்குச் சென்று தன் குழந்தையை குணமாக்க முயன்றான்.

ஆண்டவனருளால் திருச்சி அருகே குளித்தலை என்ற இடத்தில் தியாகானந்த சுவாமிகளைச் சந்தித்து அவரிடம் தன் குறையைச் சொல்லி மன்றாடினான். நீதிநெறி தவறாத காலதர்மனின் மனக்குறையைத் தீர்க்க முன்வந்தார் சுவாமிகள். மலைக்கோட்டை தாயுமான ஈசனை காலை, மதியம், மாலை வலம் வந்து பேதலித தாயுமான லிங்க முக தரிசனம் பெறுமாறு பணித்தார். மன்னனும் சுவாமிகளின் ஆணையை ஏற்றுத் தாயுமான ஈசனை வலம் வந்து வணங்கி வர, குழந்தை தெளிந்த அறிவைப் பெறும் பேறு பெற்றான்.

எனவே தினமும் மூன்று முறை காலை, மதியம், மாலை தாயுமான ஈசனை கிரிவலம் வந்து பேதலிதலிங்க முக தரிசனம் பெற்று, பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோயிலில் குழந்தையை அமர்த்தி இறைவனிடம் மன்றாடி வேண்டினால்

1. புத்தி சுவாதீனம் இல்லாத குழந்தைகள் பூரண அறிவைப் பெறுவார்கள்.

2. படிப்பில் மந்தமான குழந்தைகள் அறிவு தெளியப் பெற்று நல்ல தேர்ச்சி அடைவார்கள்.

3. சொல்/ பேச்சு கேட்காமல், நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு அடிமையாகி அல்லல் படும் சிறுவர்கள் திருந்துவதற்கு இந்த தரிசனம் உறுதுணை செய்யும்,

4. நிலையில்லாத மனமுடையவர்கள் தொடர்ந்து மலைக்கோட்டையை கிரிவலம் வருவதால் திடமான மனவளர்ச்சியை பெற்று தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும்.

முற்காலத்தில் இறை விக்ரஹங்களை நிர்மாணிக்கும் ஸ்தபதிகள் கற்களைப் பற்றித் தெளிவாக அறிந்திருந்தனர். இவர்கள் முக்கியமாக ஒரு கல் ஆண் கல்லா, பெண் கல்லா அல்லது அலிக்கல்லா என்ற இரகசியத்தை தங்கள் சிறு வயது முதலே குலக்கல்வி முறையில் அறிந்திருந்தனர். இப்போதோ ஒரு கல்லிற்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை உணரக் கூடியவர்களையே விரல் விட்டு எண்ணி விடலாம். சிவன், முருகன், பெருமாள் என்ற ஆண் தெய்வ மூர்த்திகளை ஆண் கல்லிலும், அம்பாள், துர்கை, சரஸ்வதி போன்ற பெண் தெய்வ மூர்த்திகளை பெண் கல்லிலும் வடிப்பார்கள். ஒரு பெரிய கல்லோ, சிறிய கல்லோ அந்த கல்லில் எந்த அளவிற்கு உயிர் பரவி இருக்கிறது என்ற இரகசியமும் இவர்களுக்கு கை வந்த கலை. அவ்வகையில் ஜலன்பிரகிருணி என்ற அபூர்வ சக்தியால் உருவான, ஒரே கல்லில் திகழும் சிவத்தலமே திருச்சி உச்சிப் பிள்ளையார் அருளும் மலைக்கோட்டை திருத்தலமாகும். அதனால் உலகத்திலேயே மிகப் பெரிய பிள்ளையார் மூர்த்தியாக உச்சிப் பிள்ளையார் திகழ்கிறார்.

ஸ்ரீசெவ்வந்தி விநாயகர்

திரிசிர மகாராஜா தன் வாளால் மலைக்கோட்டையை வெட்டி ஸ்ரீதாயுமானவரின் திருஉருவத்தை உலகிற்கு வெளிக் கொண்டு வந்தபோது அந்த தெய்வீக காட்சியை கண்டு தரிசிக்கும் பேறு பெற்றவரே இத்தலத்தில் உறையும் ஸ்ரீசெவ்வந்தி விநாயகர் ஆவார் என்றால் இவர் தொன்மையை உரைக்க வார்த்தைகள் ஏது. அற்புத கணபதி சுயம்பு மூர்த்தி. தங்கள் குழந்தைகள் நல்ல ஒழுக்கத்துடன் கல்வி, நற்பண்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் வழிபட வேண்டிய மூர்த்தி இவரே. செவ்வந்தி மாலைகளை (துலுக்க செவ்வந்தியைத் தவிர்க்கவும்) ஸ்ரீசெவ்வந்தி விநாயகருக்கு அணிவித்து வழிபடுதலால் எத்தகைய கொடுமையான, கடுமையான வியாதிகளால் வாடும் குடும்ப அங்கத்தினர்களும் பயனடைவர். பரீட்சை, நேர்முகத் தேர்விற்கு செல்லும் மாணவர்கள், மாணிவிகள் ஸ்ரீசெவ்வந்தி விநாயரை வணங்கி, நன்றாகத் தோப்புக் கரணமிட்டு வழிபட்டு செல்வதால் நல்ல மார்க்குகள் பெறுவார்கள். சிலருக்கு கேள்விகளுக்கு உரிய வினாக்கள் தெரிந்தாலும் ஏதோ காரணத்தால் அவர்கள் பரீட்சையிலோ, நேர்முகத் தேர்விலோ சரியாக பதிலளிக்க முடியாமல் திணறுவார்கள். அத்தகைய மனக் குழப்பங்கள் நீங்கிட திட மனத்தை அளிப்பவரே ஸ்ரீசெவ்வந்தி விநாயகர் ஆவார்.

ஸ்ரீசெவ்வந்தி விநாயகர் மலைக்கோட்டை

ஸ்ரீசெவ்வந்தி விநாயகர் அருகே நந்தி வடிவில் அருளாட்சி செய்பவரே வாழைப்பழ சித்தர் என்ற அரிய சித்தர் ஆவார். கருவுற்றிருக்கும் பெண்கள் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க இந்தச் சித்தர் பிரானை வணங்கி, அல்லது மானசீகமாக பிரார்த்தனை செய்து குழந்தையை பெற்றெடுத்த பின்னர் மலையேறி வந்து வாழைப்பழ சித்தருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கனிந்த பூவன் வாழைப்பழங்களால் இவருக்கு காப்பிட்டு வழிபடுவதே வாழைப்பழ சித்தருக்கு நன்றி தெரிவிக்கும் வழிபாடாகும். பல சூழ்நிலைகளால் இத்தகைய காப்பு வழிபாடுகளை நிறைவேற்ற முடியாதபோது தேன் கலந்த பூவன் பழங்களை குறைந்தது 120 பழங்களை தானமாக அளிப்பதும் ஏற்புடையதே. ஸ்ரீருத்ர சம்வர்த்தன நந்தீஸ்வரர், ஸ்ரீவாழைப்பழ சித்தர், ஸ்ரீதாயுமானவர் என்ற வகையில் ஒரு நல்ல வாரிசை உருவாக்கவே எத்தனை தெய்வ மூர்த்திகள் காத்திருக்கின்றனர் என்றால் இறைவனின் பெருமை, தாயுமான ஈசனின் கருணை எத்தகையது ? வாழைப்பழ சித்தர் நந்திமூர்த்தியாய் எழுந்தருளி இருக்கும் ஜன்னல் வழியே பார்த்தால் ஈங்கோய் மலை, ஐயர் மலை போன்ற மலைத்தலங்களின் தரிசனத்தையும் பெறலாம். தாயுமான முக்கனி சாளரம் என்று சிறப்புப் பெறும் இச்சாளரத்தின் வழியே ஸ்ரீஈங்கோய்மலை நாதர், ஸ்ரீஐயர்லை ஈசன் இவர்களை மானசீகமாக தரிசனம் செய்து ஸ்ரீவாழைப்பழ சித்தர் தரிசனம் நிறைவேறிய பின்னரே ஸ்ரீதாயுமான ஈசனின் தரிசனத்தைப் பெற வேண்டும் என்பதே சித்தர்கள் கூட்டும் முக்கூட்டு ஈச வழிபாடு. இம்முறையில் தாயுமான ஈசனை இன்றும் பல பக்தர்கள் வழிபடுவதே நம்மை ஆச்சரியப்படுத்தும் உண்மையாகும். தாயுமான ஈசன் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீபிட்சாடன மூர்த்தி மிகவும் தொன்மைவாய்ந்தவர். இங்கு எழுந்தருளி உள்ள பிட்சாடன கோலத்தின் தூல வடிவமே திருப்பராய்த்துறையில் முனிவர்களின் வேள்வித் தீயை மாய்க்க எழுந்தருளிய கோலம் என்றால் இந்த தரிசனத்தின் தொன்மையை என்னவென்று சொல்வது ? தாயுமான ஈசன் சன்னதியில் வடக்கு நோக்கி ஸ்ரீபிட்சாடன மூர்த்தியும் தெற்கு நோக்கி ஐந்து சீடர்களுடன் அபூர்வமாகப் பொலியும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியும் எழுந்தருளி உள்ளார்கள் அல்லவா ? இவ்விரு மூர்த்திகளின் கருணையைப் பெறும் முகமாக சித்தர்கள் ஒரு அரிய வழிபாட்டை எடுத்தருள்கின்றனர். மலைக்கோட்டைக்கு வடக்கில் இருப்பவர்கள் புதன் கிழமை தோறும் 5, 50, 500 என்றவாறாக அடியார்களுக்கு அவரவர் சக்திக்கு ஏற்றவகையில் புளியோதரை சாதத்தை தானமாக அளித்தலும், மலைக்கோட்டைக்கு தெற்கில் வாழ்பவர்கள் 12, 30, 300 என்ற வகையில் அடியார்களுக்கு முந்திரி கலந்த எலுமிச்சை சாதத்தை அன்னதானமாக அளித்தலும் கிடைத்தற்கரிய வாய்ப்பாகும்.

ஸ்ரீபிட்சாடனர் மலைக்கோட்டை

இதனால் கிட்டும் பலாபலன்களை அவரவர் அனுபவித்துப் பார்த்தலே சிறப்பு என்பதே சித்தர்களின் நல்லுரை. இந்த தானத்தின் மகிமையைப் பற்றி புரிந்து கொள்ள சில செய்திகளை இங்கு விவரிக்கிறோம். நம் சற்குரு திருச்சிக்கு எழுந்தருளியபோது ஒரு அடியாரின் வீட்டிற்கு வருகை தந்தார். அந்த அடியார் வீட்டில் பல நாட்கள் அவர் தங்கியிருந்தாலும் அவர் அடியார்களை சந்திப்பது மட்டும் மாடியில் உள்ள அறையில்தான் நிகழும். இதன் இரகசியத்தை சற்குருவே ஒரு முறை வெளியிட்டார். அந்த அறையிலிருந்து பார்த்தால் மலைக்கோட்டை தரிசனம் தெளிவாகக் கிட்டும். இந்த செய்தியை நம் சற்குரு வெளியிட்டபோதுதான் அந்த வீட்டை சொந்தமாகக் கொண்ட அந்த அடியாருக்கே அந்த இனிய செய்தி தெரிய வந்தது. எனவே தன்னைக் காண வந்த அடியார்களுக்கெல்லாம் என்ன பதிலைக் கூறினாலும் அது தாயுமானவர் அருட்பிரசாதமாகவே அளிக்கப்பட்டது என்ற உண்மை இப்போது புலர்கின்றது அல்லவா ? ஸ்ரீஉச்சிபிள்ளையார் ஜலன்பிரக்ருனி என்ற சக்தியால் எழுந்தருளிய அபூர்வ விநாயக மூர்த்தியே என்பது நீங்கள் அறிந்ததே. இரவிலும் பகலிலும் சுடர் விடும் ஜோதியே இந்த விநாயக ஜோதி என்பதை நன்கு ஆத்ம விசாரம் செய்தால்தான் உணர முடியும். நன்கு ஆத்ம விசாரம் கனியும் வரை நம் அடியார்கள் காத்திருக்க முடியுமா ? அதற்காக இவ்வாறு பகலிலும் இரவிலும் பிரகாசிக்கும் இத்தகைய விநாயக சக்திகளை உலகிற்கு அளிப்பதற்காகவே நம் சற்குரு மலைக்கோட்டை ஸ்ரீமாணிக்க விநாயகர் சன்னிதியிலும் திருவானைக்கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி திருக்கோயிலிலும் இரவில் தம் அடியார்கள் மூலம் உழவாரப் பணிகள் நிறைவேற்றி இந்த அகோராத்ர விநாயக சக்திகளை உலகிற்கு தாரை வார்த்து அளித்தார் என்பதை ஒரு சில அடியார்களே அறிவர். நம் சற்குரு நிறைவேற்றும் அனைத்துக் காரியங்களிலும் சுவையோ சுவை என்று அபரிமிதமான சுவையே மிகுந்திருக்கும். இரவு நேரத் திருப்பணி மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன ? எந்தப் பொருள் காணாமல் போனாலும் அதைக் கண்டு பிடித்து தருபவர்தான் திருச்சி ஸ்ரீமாணிக்க விநாயகர் என்பது மட்டும் அல்ல, அதாவது வயதானவர்கள், குழந்தைகள், நகை, பணம், வளர்ப்பு மிருகங்கள் என எந்தப் பொருள் காணாமல் போனாலும் ஸ்ரீமாணிக்க விநாயகரை வலம் வந்து வேண்டினால் உரிய காலத்தில் நாம் அவற்றைத் திரும்பப் பெறலாம். மேலும் காணாமல் போன பொருட்களையோ, நகைகளையோ நாம் கீழே கண்டெடுத்தாலும் அதை ஸ்ரீமாணிக்க விநாயகரின் உண்டியலில் சேர்த்து விட்டால் போதும் பிள்ளையாரே அதை உரியவரிடம் சேர்த்து விடுவார்.

ஸ்ரீஜுரஹரேஸ்வரர் மலைக்கோட்டை

ஸ்ரீமாணிக்க விநாயகரிடம் சேர்ப்பதற்காக மற்ற ஊரில் உள்ளவர்கள் இவ்வாறு காணாமல் போய் கண்டெடுத்த பொருட்களை ஸ்ரீமாணிக்க விநாயகரிடம் சமர்ப்பிக்கும் வரை தங்கள் வீட்டில் வைத்துக் கொள்வது தவறு கிடையாது. மாணிக்கம் என்ற ஐந்தெழுத்து நவரத்தினம் இருளிலும் ஒளி வீசுவது. இந்த ஒளி அனுகிரக சக்திகளை உலகெங்கும் விநியோகிக்கவே இவ்வாறு இரவுத் திருப்பணியை நம் சற்குரு ஏற்பாடு செய்தார் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு இறை இரகசியம். இவ்வாறு நிகழும் திருப்பணிகளில் நம் சற்குரு தெய்வீக உள்ளங்களை இணைக்கும் சுவையே அலாதியானதாகும். இரவில் திருப்பணி நிறைவேற்றும்போது ஸ்ரீமாணிக்க விநாயகர் கோவிலை அலம்புவதற்கு போதுமான நீர் வசதி கிட்டவில்லை. அப்போது அருகிலிருந்த ஒரு அடியார் தன் வீட்டுக் கிணற்றில் கோவில் திருப்பணிக்குத் தேவையான நீரை இறைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனையும் அனுமதியும் அளித்தார். முன் பின் அறியாத அந்த அடியாரின் திருநாமம் என்ன தெரியுமா ? சுகந்தகுந்தளாம்பிகை என்னும் தாயுமான ஈசன் அம்பாளின் திருநாமமே அது ! ஐந்து எழுத்து நாயகனான சிவபெருமான் பஞ்சபிரகாரம் அமைந்த திருவானைக்கோயிலில் தாமே ஒரு மேலாளராக வந்து அந்த பிரகாரத்தில் பணி புரிந்த அனைவருக்கும் விபூதி பிரசாதத்தை அளித்ததை இங்கு நினைவு கூர்ந்தால்தான் நம் சற்குரு ஸ்ரீமாணிக்க விநாயகர் சன்னதியிலும் திருவானைக்கோயில் அம்பாள் சன்னதியிலும் இரவு உழவாரப் பணிகளை நிறைவேற்றியதன் பின்னணி ஓரளவு புரிய வரும். மாணிக்கம் என்பது இரவில் ஒளி வீசுவதால் அந்த மாணிக்க ஒளியிலேயே மிகவும் ஆன்மீகமாக முதிர்ந்த நாகங்கள் இரை தேடும் என்பது நாம் மேலோட்டமாக அறிந்து கொள்ள உதவும் ஒரு செய்தியே. உண்மையில் இந்த மாணிக்க நாகங்கள் தாங்கள் பன்னெடுங்காலம் சேமித்து வைத்த இறை அனுகிரக சக்திகளை மாணிக்க ஒளிக் கதிர்களாக இவ்வாறு இரவு நேரத்தில் வெளிவிடுகின்றன என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும். இந்த மாணிக்க கடுக்கனை திருச்சியில் ஒரு அடியாருக்கு அளித்து அவர் மூலமே இவ்வாறு இரவு உழவாரப் பணிகளை ஸ்ரீமாணிக்க விநாயகர் சன்னதியிலும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சன்னதியிலும் நம் சற்குரு நிறைவேற்றினார் என்றால் இவரல்லவோ “மாணிக்க” குருநாதர். இத்தகைய மாணிக்க குருநாதரைப் பெற்ற அடியார்கள் சற்றும் மனம் கலங்கலாமா ? அபூர்வமாக தாயுமானவர் சன்னதியில் ஸ்ரீஜுரஹரேஸ்வரர் மேற்குப் பார்த்து எழுந்தருளி உள்ளார். அஸ்வினி, ஆயில்யம், வியாழக் கிழமைகளில் இவரை தரிசித்து ராஜ்மா சுண்டல் தானம் அளித்து வந்தால் எத்தகைய பெண்ணியல் நோய்களும் தொற்றுநோய்களும் குணமாகும். பெண்ணியல் மருத்துவர்களும் சதுர்த்தி, சதுர்த்தசி நாட்களில் உச்சிப் பிள்ளையாரை வலம் வந்து ஸ்ரீஜுரஹரேஸ்வரர் மூர்த்தியை வணங்கி அருள் பெறுவதால் தாங்கள் எந்தத் துறையைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் நன்னிலை அடைவர். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பெருகவும், திருமணத் தடங்கல்கள் நீங்கி நன்முறையில் விரைவில் திருமணம் நிறைவேறவும் சித்தர்கள் ஒரு தாயுமான வழிபாட்டை அருள்கின்றார்கள். ஸ்ரீமாணிக்க விநாயகர் சன்னதியிலிருந்து ஆரம்பித்து படிக்கு ஒன்றாக மூன்று வெற்றிலை இரண்டு கொட்டைப் பாக்கு அல்லது பாக்குத்துண்டுகளை வைத்து அதன் மேல் ஒரு பிடிக் கொழுக்கட்டையை வைத்து வழிபடுவதே தாயுமான சகஸ்ர ஜோதி வழிபாடாகும்.

ஸ்ரீவாழைப்பழ சித்தர் மலைக்கோட்டை

அபூர்வமாக தாயமானவர் திருத்தலத்தில் இரண்டு சகஸ்ர லிங்கங்கள் அமைந்துள்ளதால் இந்த சகஸ்ர லிங்க ஜோதிகளை இந்த கொழுக்கட்டைகள் ஈர்த்து அதை குடும்ப ஒற்றுமையை பெருக்கும் குல ஜோதியாக மிளிர வைக்கின்றன என்பதே இந்த வழிபாட்டின் பின்னணியில் அமையும் சகஸ்ர ஜோதி மகிமையாகும். ராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களை கருத்தூன்றி படித்து வந்தாலே போதும், அதில் ஒரு மனிதனுக்குத் தேவையான எல்லா வழிகாட்டுதலும் கிடைக்கும் என்பார் நம் சற்குரு. கடலைத் தாண்டி இலங்கைக்கு செல்ல முயற்சி செய்தபோது தான் கடலைத் தாண்ட முடியுமா என்ற சந்தேகம் ஆஞ்சநேய சுவாமிக்கு தோன்றி விட்டது. இலங்கை கடல் என்ன, இது போன்ற ஏழு கடல்களையுமே ஒரே தாவலில் தாண்டக் கூடியவர்தான் ஆஞ்சநேய மகாபிரபு. ஆனால் தன்னுடைய திறமையைப் பற்றி தான் அறியாததால் வந்த வினையே இது. இது ஆஞ்சநேயர் மட்டும் அனுபவித்த வேதனை கிடையாது, கிட்டத்தட்ட மனித குலத்தில் பெரும்பாலோர் தங்கள் திறமையைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை என்பதே கலியுகத்தின் கோட்பாடாகும். இவ்வாறு தங்கள் திறமையைப் பற்றி, தங்களைப் பற்றி தாங்களே அறிந்து கொள்ள வழிகாட்டுவதே மலைக்கோட்டை கிரிவலமாகும். சற்குரு கூறிய வகையில் திருச்சி மலைக்கோட்டையை குறைந்து ஒன்பது முறை கிரிவலம் வந்து வணங்குவதால் ஆண், பெண் யாராக இருந்தாலும் தங்களுக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் தங்கள் திறமையைப் பற்றி ஆஞ்சநேயரைப் போல் அறிந்து அதை ஜாம்பவான்போல் மற்றவருக்கும் தெரிய வைக்க உதவுவதே மலைக்கோட்டை கிரிவலத்தின் மகாத்மியமாகும். ஒன்பது என்ற எண் ஆஞ்சநேயருக்கு மட்டும் உரியது அல்லவே, பிள்ளையாருக்கும் உகந்ததுதானே அது. தாங்கள் உலகிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரராகத் திகழ வேண்டும், தான்தான் உலக அழகியாகவே புகழப்பட வேண்டும், தன்னை மிஞ்சிய அறிவு ஜீவி யாருமே இருக்கக் கூடாது என்றெல்லாம் பலரும் நினைப்பதுண்டு. உண்மையில் சத்சித்தானந்த சொரூபியான இறைவனின் ஒரு அம்சமாகவே நாம் அனைவரும் இருப்பதால் பணம், அழகு, அறிவு என்பதெல்லாம் எல்லையற்று ஒவ்வொரு உயிரிலும் குடி கொண்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், நாம்தான் அதை அறிந்து கொள்ள முயற்சி செய்வதே கிடையாது. இந்த முயற்சிக்கு பெரிதும் உதவுவதே மலைக்கோட்டையை ஒன்பது முறை தினமும் கிரிவலம் வந்து வணங்குவதாகும்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam