கடும்பாடு நீக்கும் பெரும்பாடு !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

அஞ்சைக்களம்
திருத்தல மகிமை

கேரள மாநிலத்தில் உள்ள ஒரே பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெற்றதே சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமான திருஅஞ்சைக்களமாகும். தற்போது உலகையே மிரட்டும் கொரோனா வைரஸ் கண்டு உலக மக்கள் அனைவரும் அஞ்சினாலும் மரணத்தைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாது இறைவனை விட்டுப் பிரிவதையே தாங்க முடியாத வேதனையாக எண்ணி அஞ்சியவரே சுந்தர மூர்த்தி நாயனார் ஆவார். இவ்வாறு திருஅஞ்சைக்களம் திருத்தலத்தின் தரிசனப் பலன்கள் கோடி கோடியாக இருந்தாலும் மரண பயம், நோய் பீதி, எதிரிகளால் தோன்றும் அச்சம் போன்றவற்றை களையும் தன்மை உடையதே திருஅஞ்சைக்களமாகும். பொதுவாக நோய் என்பது விரும்பத் தகாத ஒரு அம்சமாக இருந்தாலும் நோய் நொடி, அச்சம் போன்று மனிதனை நல்வழிப்படுத்தக் கூடியது வேறு எதுவுமே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வுலகில் இயல்பாகவே நல்லவர்களாக இருப்பவர்களை விட நோய், அவமானம், மரணம் போன்ற எதிர்மறையான எண்ணங்களால் நல்லவர்களாக வாழ்பவர்களே பெரும்பான்மையாளராக இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது கலியுகத்தின் ஒரு தவிர்க்க முடியாத தன்மை என்றும் கூறலாம். எனவே திருஅஞ்சைக்கள நாதரை பக்தியால் வணங்குபவர்களை விட நோயின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வணங்குபவர்களே மிகுதியாக இருப்பார்கள் என்ற கலியுக நியதிக்கேற்ப திருஅஞ்சைக்களத்தின் சிறப்புகளை இங்கு விவரிக்கிறோம். கேரள மாநிலத்தில் கொடுங்களூர் ஸ்ரீபகவதி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ளதே திருவாஞ்சிகுளம் என்றும் அழைக்கப்படும் திருஅஞ்சைக்களமாகும். முதலில் இறைவனிடம் பய பக்தியே தோன்றும் என்பதே கலியுக கட்டாய நியதியாகும். இதுவே நாளடைவில் முதிர்ந்த பக்தியாகக் கனியும் என்பதால் பய பக்தியில் இறைவனிடம் கொள்ளும் ஈர்ப்பு ஏற்புடையதே என்பதும் சித்தர்களின் வழிகாட்டுதலாகும்.

சிவகங்கை என்பது சிவபெருமானின் தலை முடியிலிருந்தே பொழிவதால் சிவகங்கை என்று பெயர் கொண்ட தீர்த்தங்கள் திருஅண்ணாமலை, திருத்தவத்துறை என்னும் லால்குடி போன்ற குறித்த சில தலங்களில் மட்டுமே பொலிகின்றன. இத்தகைய சிறப்பை உடைய சிவகங்கை பொலியும் தலமே திருஅஞ்சைக்களமாகும். சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானையின் மீது பவனி வந்தே திருக்கைலாயத்தை அடைந்தார் என்பது பெரும்பாலான பக்தர்கள் உணர்ந்த, அறிந்த உண்மை என்றாலும் உண்மையில் சுந்தர மூர்த்தி நாயனார் திருக்கயிலையை அடைய உதவி புரிந்ததே இங்கு நீங்கள் காணும் சிவகங்கை தீர்த்தம் என்றால் இந்த தீர்த்த தரிசனத்தைப் பெறவே நீங்கள் எந்த அளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ? நீங்கள் கொடுத்து வைத்தவரா அல்லது உங்கள் மூதாதையர்களின் திரண்ட புண்ணிய சக்தியால் நீங்கள் இந்தத் தீர்த்தத்தை தரிசனம் செய்ய முடிந்ததா என்பதை நீங்களே ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து 12 வருடங்கள் உங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்து வந்திருந்தால்தான் இந்த கேள்விக்கான விடையை எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஒரு வேளை உங்களால் இந்த கேள்விக்கான விடையை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்காக நீங்கள் கவலையுற வேண்டாம். தர்ப்பணம் என்றால் சிரார்த்தம் என்றும் அழைக்கப்படும். அதாவது சிரத்தையுடன், நம்பிக்கையுடன், அன்புடன் அளிக்கப்படுவதே நீத்தார் கடன். உங்கள் நம்பிக்கை தேவையான அளவு பெருகாத போதே உங்களால் இந்த கேள்விக்கு விடை அளிக்க முடியாமல் போகும் என்பதால் உங்கள் மூதாதையர்களுக்கு நீங்கள் கொண்டுள்ள அன்பைத் தெரிவிக்கும் உரைகல்லாக அஞ்சைக்களம் உங்களுக்கு உதவியதற்காக திருஅஞ்சைக்கள நாதருக்கு நன்றி செலுத்தி உங்கள் தர்ப்பண பூஜைகளை மேலும் சிரத்தையுடன் பெருக்கிக் கொள்ளுங்கள், தவறில்லையே.

திருஅஞ்சைக்களம்

இங்கு நீங்கள் காணும் திருஅஞ்சைக்களம் சிவகங்கை வீடியோ படத்தில் இரு புறாக்கள் பறந்து செல்லும் அரிய காட்சியை நீங்கள் தரிசனம் செய்யலாம். இவை வெறும் புறாக்கள் அல்ல. அஸ்வினி லோகத்தைச் சேர்ந்த உத்தம இறைத் தூதுவர்களே இவர்கள். இத்திருக்கோயிலில் மட்டும் மூன்று தீர்த்தங்கள் இருந்தாலும் இந்த சிவகங்கையிலிருந்தே இறை மூர்த்திகளை அபிஷேகிப்பதற்காக தீர்த்தம் எடுக்கப்படுவதே இந்த உண்மையை உறுதி செய்யும். சிதம்பரம், காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்களில் தேவர்களே மீன்கள் வடிவில் திருக்குளங்களில் நீந்தி, நீராடி தங்கள் அருட்சக்தியை நிரவிச் செல்கிறார்கள். அது போல காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் ஆலயத்திலும் இந்த திருஅஞ்சைக்களம் திருத்தலத்திலும் தேவர்கள் பலர் புறாக்கள் வடிவில் நீராடி தங்கள் லோகத்திற்கும் மற்ற லோகங்களுக்கும் தேவையான தீர்த்த சக்திகளை சுமந்து செல்கிறார்கள். இந்த தீர்த்த சக்தியால் குணமாகாத வியாதியே எவ்வுலகத்திலும் கிடையாது என்றால் அஞ்சைக்களத்தின் நோய் நிவாரண சக்திகளை எப்படி சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியும் ? எந்த மகானாக இருந்தாலும் அவர்கள் பூலோகத்தில் மனிதப் பிறவியையோ அல்லது வேறு எந்தப் பிறவியை எடுத்தாலும் தங்கள் பிறவி சுழற்சி முடிந்து தங்கள் சொந்த லோகத்திற்குச் செல்லும்போது தாங்கள் பூமியில் பெற்ற இறை மூர்த்திகளின் தரிசனப் பலன்களையும் மற்ற புண்ணிய சக்திகளையும் ஒரு பகுதியை பூலோகத்தில் அர்ப்பணித்து செல்ல வேண்டும் என்பது இறை நியதி. இம்முறையில் திருஅண்ணாமலையில் நமது ஆஸ்ரமத்தில் உள்ள பரகாய பிரவேச கோபுரத்தில்தான் மற்ற லோகங்களிலிருந்து வரும் ரிஷிகளும், முனிவர்களும், பகவான் கிருஷ்ணர் போன்ற அவதார மூர்த்திகளும் திருஅண்ணாமலையை மனித வடிவிலோ அல்லது தங்களுக்கு விருப்பமான ஏதோ ஒரு வடிவிலோ வலம் வந்து அவ்வாறு தாங்கள் பெற்ற புண்ணிய சக்தியில் ஒரு பகுதியை இந்த பரகாய பிரவேச கோபுரத்தில் பதித்துச் செல்கின்றனர் என்பது ஒரு சில அடியார்களே அறிந்த சித்த மகாத்மியமாகும். எனவே தேய்பிறை செவ்வாய்க் கிழமைகளிலும், செவ்வாய் பகவானுக்கு உரித்தான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திர தினங்களிலும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் அரிதாக அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடுவதாலோ அல்லது அது முடியாதவர்கள் தலையில் இத்திருக்குள தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலோ எத்தகைய நோய்களும் நிவாரணம் பெறும் சக்திகளைப் பெறலாம்.

தலவிருட்சம் திருஅஞ்சைக்களம்

இதுபோல பூலோகத்தில் அவதாரம் கொண்ட சுந்தர மூர்த்தி நாயனாரும் தன்னுடைய அவதாரம் நிறைவடைந்து கைலாயத்திற்கு திரும்பிச் செல்லும்போது பல அரிய தெய்வீக புண்ணிய சக்திகளை இத்திருத்தலத்தில் நிரவிச் சென்றார் என்பதே சித்தர்கள் உரைக்கும் தெய்வீக இரகசியமாகும். எத்தனையோ தெய்வீக மிருகங்கள் இருக்க ஏன் சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானையை கைலாயம் செல்ல தேர்ந்தெடுத்தார் என்பதைக் குறித்து ஆத்ம விசாரம் செய்தலே இத்தலத்தில் மிளிரும் நோய் நிவாரண சக்திகளை எளிதில் புரிந்து கொள்ள உதவும் தெய்வீக மார்கமாகும். தெய்வ மூர்த்திகளின் ஆராதனைக்காக அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தமும் நோய் நிவாரண சக்திகளை வர்ஷிக்கும் அக்னி மூலையில் அமைந்திருப்பதும் நோய் நிவாரண சக்திகளை அபரிமிதமாக வர்ஷிக்கும் தன்மையை புலப்படுத்துகிறது. குழி ஆடி, குவி ஆடி, குவி லென்ஸ், குழி லென்ஸ் என்பவை பற்றி எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒளிக் கதிர்களை வெவ்வேறு விதமாக குவித்தும் விரித்தும் செயல்படுபவையே இந்த ஆடிகள் எல்லாம். இந்த ஆடிகளைப் பற்றி புரிந்து கொண்டாலே வைரஸ் என்னும் நோய்க் கிருமிகளைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ளலாம். சூரிய ஒளி சாதாரணமாக எந்தப் பொருளையும் எரிப்பது கிடையாது. ஆனால் ஒரு குவி லென்ஸ் மூலம் சூரியக் கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்கும்போது அந்தப் பொருள் தீப்பற்றி எரிய ஆரம்பிக்கிறது. இதுதான் பூலோகத்தில் நாம் காணும் நோய் என்னும் வினையாக உருவெடுத்து வருவது. நாம் செய்த தவறான காரியங்கள் கால நேரம் என்ற கண்ணாடியால் நம் உடலில் குவிக்கப்படும்போது நோய் உண்டாகிறது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை. அப்போது நோய் நீக்கும் தோத்திரங்களை ஓதுவதாலோ, நோய் நிவாரண தலங்களை தரிசிப்பதாலோ நம் நோய் தீர்ந்து விடுவது கிடையாது. மாறாக அந்த நோயை எதிர்கொள்ளும் சரியான மனோ நிலையை அளிக்க வல்லவையே இத்தகைய திருத்தலங்களில் நாம் மேற்கொள்ளும் வழிபாடுகளாகும். திருஅண்ணாமலை கீழ்பெண்ணாத்தூரில் ஜீவ சமாதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீகடும்பாடு சித்தர் இந்த பூலோகத்தில் மட்டுமல்லாது எத்தனையோ லோகங்களில் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களை நீக்கி அருள் கூட்டும் ஞான சித்தராவார். ஒரு சிலரே உணர்ந்த உத்தம யோகி. பல லோகங்களிலும் நிலை கொள்ளும் இத்தகைய வைரஸ் கிருமிகளை தன்னுடைய மூச்சுக் காற்றால் உறிஞ்சியே அக்கிருமிகளை மாய்த்து ஜீவன்களைக் காக்கும் உத்தமர். அவ்வாறு மாய்ந்த கிருமிகள் இந்த அற்புத மகானின் உடலில் வாசம் செய்வதால் அவை மேலும் பல உத்தம நிலைகளை அடைகின்றன என்பதே நம்மை வியக்க வைக்கும் உண்மையாகும். இத்தகைய தெய்வீக சக்திகளை தம் உடலில் பெருக்கிக் கொள்ள ஸ்ரீகடும்பாடு சித்தர் நீராடும் தீர்த்தங்களில் ஒன்றே திருஅஞ்சைக்களம் சிவகங்கை தீர்த்தமாகும். இவ்வாறு உத்தம மகான்கள் நீராடும்போது அஞ்சைக்களம் திருஅஞ்சைக்குளமாக மாறுகின்றது என்பதே இத்தலத்தின் சிறப்பாகும். பலரும் அஞ்சைக்களம், அஞ்சைக்குளம் என்பது ஒரே திருத்தலத்தைக் குறிப்பதாக பொருள் கொண்டாலும் இவ்விரு நாமங்களுக்குப் பின்னணியாக அமைந்த உண்மைகள் எத்துணை இனிமையை ஊட்டுகின்றன என்பதை இப்போது நீங்கள் ஓரளவு சுவைத்திருக்கலாம்.

சேரமன்னன் திருஅஞ்சைக்களம்

கஞ்சலங்கை என்ற நாமம் கொண்ட ஒரு தவளை பா, பு என்ற பீஜாட்சரங்களை ஒரு வருட காலம் ஓதிய பின்னர் அது இஷ்டபரிமாணம் என்ற நாகத்தின் முன்னிலையில் நிற்கும். அவ்வாறு நிற்கும் புண்ணிய ஆத்மாவை தன் உணவாக ஏற்றுக் கொண்டு தன்னுடைய தவத்தை அந்த நாகமானது தொடரும் என்று ஏற்கனவே திருக்கழிப்பாலை புராணத்தில் விவரித்துள்ளோம். நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை உடையது தவளை என்பதை மட்டும் நாம் உணர்ந்திருந்தாலும் இந்த பிரபஞ்சத்தில் திகழும் சீதோஷ்ண நிலையை சமன்படுத்தும் அதனுடைய தெய்வீக சக்திகளைப் பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே ஆவர். வைரஸ் போன்ற கிருமிகளால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களின் உடல் நிலையில் ஏற்படும் சீதோஷ்ண நிலை மாற்றங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை அளிப்பதே ஸ்ரீகடும்பாடு சித்த முனிவரின் அனுகிரகங்களில் ஒன்றாகும். ஒரு முறை விடியற்காலையில் திருஅண்ணாமலையிலிருந்து தன்னுடைய காரில் பயணம் செய்த நம் சற்குரு அவர்கள் அந்தப் பௌர்ணமி முழுவதும் தான் பெற்ற நோய் நிவாரண சக்திகளை ஸ்ரீகடும்பாடு சித்தருக்கு அர்ப்பணித்தார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய கொரோனா மகாத்மியமாகும். கீழ்பெண்ணாத்தூர் தாண்டி நம் சற்குருவின் கார் சென்று கொண்டிருந்தபோது கார் ஸ்டீயரிங்கில் ஒரு தவளை அமர்ந்திருந்ததை நம் சற்குருவின் துணைவியார் கவனித்து அந்த விவரத்தை நம் சற்குருவிடம் சொல்ல அனைத்தும் அறிந்த நம் சற்குருவோ, “அப்படியா அம்மா ?” என்று ஒன்றுமறியாத அப்பாவியைப் போல் கேட்டு, காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு தன்னுடைய தோளில் இருந்த டர்க்கி டவலால் அந்த தவளையைப் பிடித்து துண்டுடன் வெளியே எறிந்து விட்டார். பார்ப்பதற்கு ஒரு தவளையை வெளியே எறிந்தது போல் தோன்றிய இந்த செய்கைக்குப் பின்னால் அமைந்த சித்த மகாத்மியமே அவர் கொரோனா வைரஸ் போன்ற நோய்களை உருவாக்கும் கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் சக்திகளை ஸ்ரீகடும்பாடு சித்தருக்கு அர்ப்பணித்தார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய அண்ணாமலையாரின் கூத்தாகும். இந்தக் கூத்தை பல வருடங்களுக்குப் பின்னரே நம் சற்குரு தெரிவித்தார். ஆனால், அப்போது கொரோனா என்பது காற்றில் மறைந்திருந்த கவின் நிலா. தற்போது பல அடியார்கள் இந்த கொரோனா வைரஸ் உருவாக்கும் கொடிய நோயை எதிர்த்து தம்மால் எதுவும் செய்ய இயலுமா என்று கேட்டுள்ளார்கள்.

திருஅஞ்சைக்களம்

அடியார்களுக்கு சமுதாயத்தின் மேலுள்ள ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள இத்தகைய செயல்கள் பாராட்டப்பட வேண்டியவையே. இவ்வாறு சமுதாய நலனுக்காகப் பாடுபட விருப்பம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமை, செவ்வாய் பகவானுக்கு உரித்தான நட்சத்திர நாட்களில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அந்த புண்ணிய சக்திகளை திருஅண்ணாமலையாருக்கு அர்ப்பணிப்பதும் ஒரு நாளைக்கு குறைந்தது 108 முறை திருநீற்றுப்பதிகத்தை ஓதி அதன் பலன்களை நம் சற்குருவிற்கோ அல்லது தம் இஷ்ட தெய்வ மூர்த்திகளுக்கோ அர்ப்பணிப்பதும் சிறப்பே. இத்தகைய சமுதாய சேவையை ஆற்றி வந்தவர்தான் சுந்தர மூர்த்தி நாயனாருடன் துணை சென்ற சேரமன்னன். சுந்தர மூர்த்தி நாயனாருக்கு காவல் படையாக வாளேந்தி நாயனாரைத் தொடர்ந்த சேரமன்னன் எப்படி நாயனாருக்கு முன் திருக்கயிலையை அடைந்தார் ? இதுவே காலம் தேசம் கடந்து நிற்கும் இறைப் பரம்பொருளின் அனுகிரக சக்திகளாகும். இதை உணர்த்துவதே வாளுடன் தொடரும் சேரமானின் கோலமாகும். கொரோனா என்று உலகம் முழுவதும் இன்று வியாபித்துள்ள ஆங்கில வார்த்தைக்கு உரிய சரியான தமிழ் பதமே சக்கரம் என்பதாகும். உண்மையில் ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் பதத்தைக் கூறுவதை விட தமிழுக்கு இணையான ஆங்கில பதத்தைக் கற்றுக் கொள்வதையே சித்தர்கள் சிபாரிசு செய்கின்றனர். காரணம் எல்லா மொழிகளுக்கும் மூத்ததாக இறைவனின் திருக்கண்களாக இருப்பவையே தமிழும் வேதமொழியும் ஆகும். சக்கரம் என்பது பொதுவாக எல்லா ஒளித் தோற்றங்களுக்கும் பொருந்தும் என்றாலும் இறைவனைச் சுற்றியுள்ள, சித்தர்களின் மகான்களின் தலையைச் சுற்றி அமைந்துள்ள ஒளிக் கிரணங்களுக்கு தர்ம சக்கரம் என்று பெயர். இந்த தர்ம சக்கரத்தை தான் பெற்றிருப்பதை மிகவும் அடக்கத்துடனும் பணிவுடனும் அறிவித்தவரே நம் சற்குரு. அந்த வருடமும் 1993 என்னும் ராகுவிற்கு உரிய வருடமே என்பதும் ஒரு தர்ம சுவையே. இவ்வாறு இயற்கையாகவே தெய்வீக சிறப்புடன் திகழும் பசும் பாலை வெண் வலம்புரிச் சங்கில் ஊற்றி இறை மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்வதால் கிட்டும் பலன்களில் ஒன்றே எத்தனையோ நோய்களுக்கு எதிர்ப்பு சக்திகளை, நிவாரண சக்திகளை அளிக்கும் காப்பு சக்தி என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா ? இந்த தர்ம சக்கரத்தை குறிக்கும் முகமாகவே நம் பரமகுரு ஸ்ரீஇடியாப்ப சித்தர் நம் சற்குரு வெங்கடராமனை இட்லி என்று அழைப்பதுண்டு. இந்த தர்ம சக்கர சக்திகளை திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதற்காக ஒரு பௌர்ணமியின்போது ஆயிரக் கணக்கான இட்லிகள் மின்சார அடுப்பிலும் சாதாரண விறகு அடுப்பிலும் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு திருஅண்ணாமலையார் பிரசாதமாக விநியோகம் செய்யப்பட்டன.

ஸ்ரீஇடியாப்ப சித்தரின் தலை நடுவில் முடி இல்லாது சொட்டையாக இருக்கும். இதைச் சொட்டை என்று அறியாமையால் அழைத்தாலும் உண்மையில் அது தர்ம சக்கரத்தையே குறிக்கும் என்று அந்த ராகவேந்திர ஆண்டில் தெளிவுபடுத்தியவரே நம் சற்குரு ஆவார். அதனால் ஆரம்ப காலத்தில் இந்த இட்லி வடிவத்திலேயே நம் அன்னதான சமையலறை அடுப்பின் ஒரு பகுதி அமைந்திருந்தது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய “இட்லி” சுவையாகும். இந்த ராகவேந்திர ஆண்டில் எந்த அளவிற்கு இட்லிகளை தயார் செய்து அத்துடன் விதவிதமான சட்னிகளை சேர்த்து தானம் செய்கின்றோமோ அந்த அளவிற்கு குரு பக்தி பல்கிப் பெருகுவதுடன் எத்தனையோ நோய்களுக்கும் அது நிவாரண காப்பு சக்திகளை அளிக்கும் என்பதை நினைவு கூறுங்கள். அஞ்சைக்களம் திருத்தலத்தின் வாயு மூலையில் கங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இதுவும் இத்தலத்தின் சிவகங்கை தீர்த்தமும் குருவாயூரில் உள்ள ருத்ர தீர்த்தத்துடனும் மம்மியூர் சிவத்தல தீர்த்தங்களுடனும் பூமியடி தொடர்பு கொண்டவையே என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் தெய்வீக இரகசியமாகும். எனவே முழுமையாக நோய் நிவாரண சக்திகளைப் பெற விழைவோர் மம்மியூர் குருவாயூர் அஞ்சைக்களம் என்ற மூன்று திருத்தலங்களையும் தொடர்ந்து தரிசனம் செய்தல் நலம். குருவாயூரப்பன் எழுந்தருள குரு பகவானும் வாயு பகவானும் இணைந்து மம்மியூர் சிவபெருமானை வேண்டித் தொழுதனர் என்று மம்மியூர் தலவரலாறும் தெரிவிக்கிறது அல்லவா ?

அரிதாக மம்மியூரில் விஷ்ணு மூர்த்திக்கும் சிவபெருமானுக்கும் ஒரே நேரத்தில் பூஜை நிறைவேற்றப்படுவது இக்கூற்றை இன்றும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. மேலும் மாதொரு பாகனாக அதாவது இடப்புறம் விளங்கும் உமை தேவியுடன் சிவபெருமான் மம்மியூரில் எழுந்தருளி உள்ளதால் தம்பதிகள் இடையே தோன்றும் எத்தகைய கருத்து வேற்றுமைகளையும் களைந்து குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும் திருத்தலமாகவும் மம்மியூர் விளங்குகிறது. பரசுராமர் தன் தாயை கொன்ற பாவத்திற்கு பிராயசித்தம் தேடுவதற்காக பல திருத்தலங்களிலும் வழிபட்டுக் கொண்டு வந்தபோது அவர் தரிசனம் செய்ததே அதரபள்ளி நீர்வீழ்ச்சி ஆகும். அதரபள்ளி என்றால் அதரங்களில், உதடுகளில் பள்ளி கொள்ளும், நிலை கொள்ளும் புன்னகை என்ற பொருளும் உண்டு. சக்கரவர்த்தி திருமகனான ராம பிரான் ஒருவரே இவ்வாறு என்றும் அதரங்களில் பள்ளி கொள்ளும் புன்னகையுடன் திகழ்ந்தவர். தசரத மகாராஜா அனைத்து தேசங்களுக்கும் ராம பிரானை சக்கரவர்த்தியாக அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கும் முடி சூட்டும் வைபவத்தை அறிவித்தபோதும், அந்த முடி சூட்டும் வைபவமானது பாதியில் திடீரென்று கைகேயியால் நிறுத்தப்பட்டு ராமபிரான் 14 வருடம் காட்டிற்கு மரவுரி தரித்து செல்ல வேண்டும் என்ற உத்தரவை ஏற்ற போதும் என்றும் மாறாத புன்னகை தன் அதரங்களில் தவழ காட்சி அளித்தவரே புன்னகை மன்னன் ராம பிரான் ஆவார். இந்த காட்சியை நினைவு கூர்ந்தவுடன் பரசுராமர் முகத்தில், அதரங்களில் முதன் முதலாக தன் தாயைக் கொன்றதும் இறை லீலையே என்பதை உணர்ந்ததால் புன்னகை அரும்பியதாம்.

மம்மியூர்

அன்று பரசுராமர் தரிசனம் செய்த கூந்தல் பனை மரம் இன்றும் நம் கண்களுக்கு காட்சி அளித்து இந்த இறை லீலைகளுக்கு எல்லாம் சாட்சியாய் இன்று வரை வானளாவ நிற்பதும் பெருமாள் லீலையே. மாதா பிதா குரு தெய்வம் என்பதாக இறைவனே மாதாவாக சீராட்டியும், பிதாவாக பாராட்டியும், குருவாக குற்றங்களைக் கோதாட்டியும் உயர்ந்து நின்று பக்தர்களுக்கு திருகாட்சி நல்குவதை அதரபள்ளி நீர்வீழ்ச்சி தரிசனத்தில் நாம் காணலாம். குருவைக் குறிக்கும் மூன்று பிரிவுகளுடன் அதரபள்ளி இங்கு திகழ்வதுடன் இந்த திருக்காட்சிக்கு சாட்சியாக கூந்தல் பனை திகழ்வதும், எங்கிருந்து வந்ததோ அங்கேயே எல்லாம் அடக்கம் என்ற அத்வைத தத்துவத்திற்கு சாட்சி அளிக்கும் வண்ணம் மேலிருந்து வரும் நீர்வீழ்ச்சி மீண்டும் மேலெழும் அற்புத காட்சியையும் இங்குதான் நீங்கள் காணலாம். அதரபள்ளி நீர்வீழ்ச்சியைத் தொடர்ந்து குருவாயூர், மம்மியூர், அஞ்சைக்களம் போன்ற திருத்தலங்களில் வழிபாடுகளை இயற்றி தாயைக் கொன்ற தன் தவற்றிற்கு பிராயசித்தம் தேடிக் கொண்டார் பரசுராமர். கொலை மட்டும் அல்லாது பெண் குலத்திற்கு இழைத்த அனைத்து அநீதிகளுக்கும் பிராயசித்த முறைகளைக் காட்டவல்லதே பரசுராமர் காட்டிய வழியில் செல்லும் பக்தர்களின் வழிபாடும் ஆகும். ஒரு முறை கனிந்த கனி பரமாச்சாரியாரை ஒரு மாயாஜால காட்சிக்கு அழைத்திருந்தார்கள். அந்த காட்சியில் முக்கிய விருந்தினராக வருகை தரும் பிரமுகர் தன் கையில் தான் விரும்பிய எந்த பொருளையும் வைத்துக் கொண்டு அமர்ந்து விடலாம். காட்சியின் நிறைவாக அந்தப் பிரமுகர் தன் கையில் வைத்திருந்த பொருள் என்ன என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுவார் அந்த மந்திரவாதி. இது பல நாட்களாக அவ்வாறே நடந்தும் வந்தது. அன்று வழக்கம்போல் கனிந்த கனி தன்னுடைய கையில் வைத்திருந்தது என்ன என்பதை கூட்டத்தில் தெரிவிக்கும் நேரம் வந்தபோது அந்த மந்திரவாதி கனிந்த கனியையும் சபையில் இருந்தவர்களையும் மாறி மாறிப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தான். யாருக்கும் எதுவும் தெரியவில்லை, புரியவில்லை. ஆயிற்று ... சற்று நேரம் கழித்தவுடன் மந்திரவாதியின் இயலாமையை அறிந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் கொல்லென்று சிரித்து விடவே அந்த மந்திரவாதியும் தன்னுடைய இயலாமையை உணர்ந்து அன்றிரவே தன் கூடாரத்தைக் காலி செய்து விட்டான். ஆனால், நடந்தது என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து பின்னர் கனிந்த கனியிடம் விசாரித்தபோது சுவாமி புன்னகையுடன், “அந்த மந்திரவாதி நீங்கள் நினைப்பதுபோல் சாதாரண ஆள் கிடையாது. நல்ல கெட்டிக்காரன். அவனுக்கு நிச்சயமாக நான் கையில் என்ன வைத்திருக்கிறேன் என்று சொல்லி விடுவான் என்பது எனக்குத் தெரியும்.

குருவாயூர் கேசவன்

ஆனால், நான் குருவாயூர் கொம்பனை கையில் வைத்து மூடிக் கொண்டிருப்பதாக சங்கல்பம் செய்து கொண்டேன். (குருவாயூர் திருத்தலத்தில் அப்போது இருந்த யானையின் பெயர் கேசவன் என்பதாகும். நீண்ட தந்தங்களுடன் கேசவன் திகழ்ந்ததால் கனிந்த கனி இவ்வாறு குறிப்பிட்டார் என்பது நாம் உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு காரணமாகும்) அந்த மந்திரவாதிக்கோ நான் யானையை கையில் வைத்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், நான் யானையை கையில் வைத்திருக்கிறேன் என்று சொன்னால் கூட்டத்தில் உள்ள அனைவரும் சிரிக்க மாட்டார்களா ? இதுதான் அந்த மந்திரவாதியின் சங்கடமான சூழ்நிலைக்குக் காரணம் ...”, என்று விவரித்தார்கள். ஆமாம், ஆயிரமாயிரம் தெய்வீகப் பொருட்கள் உலகில் இருக்க கனிந்த கனி ஏன் குருவாயூர் கொம்பனை கையில் வைத்துக் கொண்டார்கள் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? பொதுவாக, இத்தகைய மாஜிக் ஷோக்களை black magic என்று அழைப்பார்கள். அதாவது கூடா எண்ணங்கள் வியாபிக்கும் நிகழ்ச்சி என்று இவை கூறப்படுவதால் இத்தகைய கூடா எண்ணங்களைக் களைவதற்காக சுழுமுனை சுவாசத்தில் எப்போதும் சஞ்சரிக்கும் ஒரு யானையை தன் கையில் வைத்து அதன் மூலம் தான் அந்த மாஜிக் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் நேரம் முழுவதும் அங்குள்ள மக்களுக்கு சுழுமுனை சுவாசத்தை மேம்படுத்தி அதன் மூலம் நோய் நிவாரண சக்திகளை நிரவியவரே நம் கனிந்த கனி என்ற காஞ்சி முனி ஆவார். மேலும் குருவாயூர் கேசவன் ஒரு ஏகாதசி அன்று ஒரு துளி நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து மறுநாள் துவாதசி குருவாரமாகிய வியாழக் கிழமை அன்று நாராயண மூர்த்தி எதிரே மண்டியிட்டு அமர்ந்து துதிக்கையை உயர்த்தி ஓங்காரத்தை ஓதிய வண்ணம் தன் ஆத்மாவை நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பித்தது என்றால் இந்த ஐந்து அறிவு உள்ள யானை மிருகத்திடமிருந்து ஆறறிவு பெற்ற நாம் எத்தகைய பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆத்மவிசாரம் செய்வதே நம்மை உயர்த்தும் நாராயண வழிபாடாகும். இப்போது சொல்லுங்கள் கேசவன் என்ற கொம்பனை விட கனிந்த கனி தன் உள்ளங்கையில் வைத்து பாராட்டக் கூடிய சிறந்த ஒன்று எங்காவது உண்டா ? ஏகாதசி அன்று தோன்றும் ஏக கங்கையை ருத்ர தீர்த்தத்தில் சேர்த்து அதை ருத்ர கங்கை ஆக்கிய பெருமை கேசவனையே சாரும். சாதாரண பக்தர்களாகிய நாம் ருத்ர கங்கையை உருவாக்கும் சக்தி பெறாவிட்டாலும் குருவாயூர் ருத்ர தீர்த்தத்தை சேர்த்த பிரசாதத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் புண்ணிய காரியத்திலாவது நிச்சயம் ஈடுபடலாம் அல்லவா ?

மம்மியூர்

நிலவறை என்று எல்லாத் திருத்தலங்களிலும் இருக்கும். இந்த நிலவறைகளில் தங்கம், வெள்ளி, வைரம், மாணிக்கம், வைடூரியங்கள் போன்ற அபூர்வமான பொக்கிஷங்கள் வைக்கப்பட்டு அந்த நிலவறைகளுக்கு தெய்வீக காவல்களும் அமைக்கப்பட்டிருக்கும். தங்கம் என்பது குருவிற்கு உரித்தாக இருப்பதால் எங்கு தங்கம், தங்க ஆபரணங்கள் மிகுதியாகத் தோன்றுகின்றனவோ அந்த இடம் குரு நம்பிக்கையை, கடவுள் நம்பிக்கையை வளர்ப்பதாக அமையும். மேலும் இத்தகைய நிலவறைகள் நோய் நிவாரண சக்தியை பெருக்குபவையாகவும் இருக்கும். தேவைப்படும்போது இந்த நிலைவறைகளில் உள்ள பொக்கிஷங்களை வெளியே எடுத்து இறை மூர்த்திகளுக்கு கோயில்கள் அமைத்து, கும்பாபிஷேகம் போன்ற திருப்பணிகளையும் நிறைவேற்றுவர். இம்முறையில் திருவையாறு திருத்தல நிலவறையில் அமைந்த தங்கப் பொக்கிஷங்களை வெளியே கொண்டு வந்து அத்திருக்கோயிலை கரிகால் சோழன் அமைத்த வரலாற்றை நீங்கள் அறிவீர்கள். திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி திருத்தலத்தில் உள்ள நிலவறைகளில் குவிந்துள்ள பொக்கிஷங்கள் பற்றி உலகமே அறியும். இதே போல் ஆப்பிரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்து வாசிகள் அங்குள்ள தங்கத்தின் மேல் சிறிதளவும் ஆசை கொள்ளாததால்தான் அவர்கள் முதன் முதலில் இறைவனை தரிசக்கும் சக்தியைப் பெற்றார்கள் என்பதையும் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அது மட்டுமல்லாது உலகில் பல தலைமுறைகளுக்கும் வாழும் ஆரோக்கியமான சக்தியை உடையவர்கள் ஆப்பிரிக்க கறுப்பர்கள் என்பதற்கு இந்த கடவுள் நம்பிக்கையே காரணமாகும். உண்மையைச் சொல்வதானால் எல்லாத் திருத்தலங்களிலும் நிலவறைகள் உண்டு. ஆனால் சில திருத்தலங்களில் உள்ள நிலவறைகளைப் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கக் கூடும். அவ்வளவே. இது போல் குருவாயூரிலும் ஒரு நிலவறை உண்டு. பல ஆண்டுகளுக்கு முன் அந்தத் திருத்தலத்தில் வேலை பார்த்த சிப்பந்தி ஒருவருக்கு அந்த நிலவறையைப் பற்றி தெரிய வந்தது. அதில் இருக்கும் தங்க ஆபரணங்களில் ஒரு பகுதியை எடுத்து தன்னுடைய வறுமையான சூழ்நிலையை தீர்த்துக் கொண்டால் என்ன என்ற தவறான எண்ணமும் அவர் மனதில் உதித்தது. அதை நிறைவேற்றுவதற்காக அந்த நிலவறையை மூடி இருந்த கல்லை நகர்த்தி உள்ளே பார்த்தான். அவ்வளவுதான் ... அங்கே அவன் கண்ட காட்சி அவன் இரத்தத்தை உறையச் செய்வதாக இருந்தது. ஆம், அங்கே ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதன் தலையோ, வாலோ அவனுக்குத் தென்படா விட்டாலும், பாம்பின் வால் முடிந்து மிச்சமாக இருக்கும் வாலின் மெல்லிய பகுதி மட்டுமே தெரிந்தது. அந்த மெல்லிய வால் பகுதி மட்டுமே ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் நகர்ந்து கொண்டிருந்ததாம். அப்படியானால் ... அதனுடைய வால் எவ்வளவு நீளமிருக்கும் ... அந்த பாம்பு எவ்வளவு நீளமாக, பெரியதாக இருக்கும். இதை எண்ணியதுதான் தாமதம். அவன் கைகளும் உடலும் நடுங்க சப்தம் போடாமல் அந்த கல்லை நகர்த்தி அந்த நிலவறையை மூடி விட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்க சென்று விட்டானாம். இவ்வாறு அற்புதமான தெய்வீக காவல்களுடன் நிலவும் குருவாயூரப்பனின் திருச்சன்னிதானத்தில் நிலவும் நோய் நிவாரண சக்திகள் என்ன சிறப்புடையதாக இருக்கும் என்று சற்றே எண்ணிப்பாருங்கள். இந்த நோய் நிவாரண சக்திகளைப் பெறுவதற்காக நம் சற்குரு வெங்கடராமன் அவர்கள் தன்னுடைய சிறுவயதில் குருவாயூர் திருத்தலத்தில் முன் அமைந்துள்ள திண்ணையில் அமர்ந்து தினந்தோறும் நோய் நிவாரண காயத்ரீ மந்திரங்களை ஜபித்துக் கொண்டிருப்பாராம்.

மதியம் ஒரு வேளை மட்டும் அரவணை பாயசம் அவருக்கு பிரசாதமாகக் கிட்டுமாம். அது ஒன்றையே உணவாக ஏற்று நோய் நிவாரண சக்திகளைப் பெற்றாராம். எவ்வளவு காலத்திற்கு இத்தகைய தவம் தொடர்ந்தது தெரியுமா ? ஆமாம். இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு தொடர்ந்து இவ்வாறு நோய் நிவாரண மந்திரங்களை ஓதி அந்த நோய் நிவாரண சக்திகளை எல்லாம் இலவச மருத்துவ முகாம்களில் அர்ப்பணித்த பெருந்தகையே நம் சற்குரு வெங்கடராமன் ஆவார்கள். நம் சற்குரு குருவாயூரில் ஜபித்த மந்திரங்களில் ஒன்றே,
ஓம் தத் புருஷாய வித்மஹே நாராயண பாத சேவகாய தீமஹி
தந்நோ கருட பிரசோதயாத்
என்பதாகும். இன்றும் இந்த கருட காயத்ரீ மந்திரத்தை ஜபித்து குருவாயூர், மம்மியூர் திருத்தலங்களில் கிட்டும் அரவணை பாயசத்தை தானமாக அளித்தலால் கிட்டும் நோய் நிவாரண சக்திகள் ஏராளம் ஏராளம். திருவிளையாடல் புராணத்தில் மீனவனாக வந்த சிவபெருமான் குகன் என்னும் பக்தனை வலையாக வீசி பெருமாள் என்ற மீனைப் பிடித்த சுவையான புராண நிகழ்ச்சியை பலரும் அறிந்திருக்கலாம்.

சிவபெருமான் பிடித்த அந்த மீன் என்னவாயிற்று என்பதை அறிய ஆவலைத் தெரிவித்துள்ளார் ஒரு அடியார். இது குறித்த சந்தேகங்களுக்கு ஏற்கனவே விடையளித்துள்ளார் நம் சற்குரு. ராம அவதாரம் கொண்ட இறை மூர்த்தியும், கிருஷ்ணாவதாரத்தில் தோன்றிய இறை சக்திகளும் முறையே நீர், காற்று என்ற பஞ்ச பூதங்களில் கலந்து தங்கள் யதாஸ்தானத்தை அதாவது தங்கள் மூலத்தை அடைந்தன என்பதே சாதாரண மக்களாகிய பக்தர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சுவையாகும். ஆனால், பரம்பொருளின் தோற்றம் அத்தோடு முடிந்து விடுவது என்பது நிச்சயம் கிடையாது. நல்லவர்களைக் காப்பதற்காகவும் தீயவர்களை அழிப்பதற்காகவும் யுகங்கள் தோறும் தோன்றி மிளிர்வதுதானே இறை அவதாரங்கள். இம்முறையில் சிதம்பரம், காஞ்சிபுரம், குருவாயூர், அஞ்சைக்களம் போன்ற பல திருத்தலங்களில் மச்ச அவதாரத்தில் தோன்றி மக்களின், பக்தர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அவர்களைக் காக்கின்றனர் என்பது உண்மை, உண்மையே. உதாரணமாக, தன்னுடைய சகோதரி பிரச்னையான வாழ்க்கை ஒன்றை சந்தித்ததால் வருந்திய ஒரு அடியார் குடும்பத்தை இரண்டு மணி நேரம் சிதம்பரம் திருக்குளத்தில் அமர்ந்து இறைவனை வேண்டும்படி சற்குரு ஆணையிட அதை நிறைவேற்றிய அந்த அடியார் இன்று முறையான திருமண வாழ்வைப் பெற்று குழந்தைச் செல்வத்துடன் குதூகலமாக இருக்கின்றார் என்றால் அதற்கு இந்த மச்ச அவதார சக்திகளே காரணமாகும். இதை உணர்த்துவதாகவே இங்கு நீங்கள் காணும் குருவாயூர், அஞ்சைக்களம் மச்ச மூர்த்திகள், மீன் அவதாரத் தோற்றங்கள் திகழ்கின்றன.

இறைவன் ஒருவன்தான் என்று எண்ணும் போது, இறை சக்தி ஒன்றாகத்தான் பரிணமிக்கும் என்று எண்ணும்போது ஏன் இத்தனை இறை மூர்த்திகள், திருத்தலங்கள் திகழ்கின்றன, இத்தனை வழிபாட்டு முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்று பலருக்கும் கேட்கத் தோன்றும். பசி என்பது ஒரே உணர்வாகத் தோன்றினாலும் அதை தீர்த்துக் கொள்ள பலவிதமான உணவுப் பொருட்கள் நடைமுறைக்கு வந்துள்ளதைப் போல மனிதனின் தேவைகள் பெருகிக் கொண்டே போவதால் இறைவனும் தன்னைப் பல்வேறு கோலங்களில் புனைந்து கொண்டு மக்களுக்கு யுக யுகமாக வழிகாட்டிக் கொண்டு வருகிறான். இம்முறையில் மனித மனம் அமைதி கொள்ள உறுதுணையாக அமைவதே ரீம் என்ற பீஜாட்சர சக்திகளாகும். இந்த ரீம் என்ற பீஜாட்சரம் மம்மியூர் திருத்தலம் முழுவதும் நிறைந்திருந்தாலும், இதை உணரக் கூடிய மகான்களும், சித்தர்களும் விரல் விட்டே எண்ணக் கூடிய அளவில் திகழ்கின்றனர் என்பதே நம் சற்குருவின் வழிகாட்டுதலாகும். இதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளவே மம்மியூர் திருத்தலத்தில் இறைவன் மாதொரு பாகனாக அன்னையை இடது பக்கத்தில் வைத்த கோலத்தில் திகழ்கின்றான். இவ்வாறு ரீம் என்ற பீஜாட்சர சக்திகள் குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் என்ற அடிப்படைக் கருத்தை காரணமாகக் கொண்டே போற்றித் துதிகளும் அமைந்துள்ளன என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். எவ்வாறு இரவில் தவளைகள் வெளிப்படுத்தும் பீஜாட்சர சக்திகள் மண்டூக நாதமாய் மனிதனுக்கு அமைதியை அளித்து ஆழ்ந்து உறக்கத்தைக் கொடுக்கின்றனவோ அவ்வாறு பகலில் வண்டுகள், தேனீக்கள் எழுப்பும் ரீம் பீஜாட்சர ஓசை ஈங்கோய் நாதமாய் அமைந்து மனித வாழ்வில், குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்பது உண்மையே.

குருவாயூர், மம்மியூர் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் திருத்தலங்களை தரிசிக்கச் செல்லும்போது வழியில் உள்ள இயற்கைக் காட்சிகளையும் தக்க மந்திரங்கள், தோத்திரங்கள் ஓதி தரிசிப்பதால் அந்த இயற்கைக் காட்சிகளில் எல்லாம் நல்ல சக்திகள் நிரவி உலகம் எங்கும் சாந்தம் தவழும், அமைதி நிலை கொள்ளும். அத்தகைய ரீம் பீஜாட்சர சக்திகள் நிறைந்த ஒரு காட்சியை இந்த வீடியோ படத்தில் நீங்கள் காணலாம். இத்தகைய ரீம் பீஜாட்சர சக்திகள் நிறைந்த இயற்கை சூழ்நிலையில் அடியார்கள் சஞ்சரிக்கும் போதெல்லாம் மேற்கூறிய போற்றித் துதிகளை ஓதுவதை வழக்கமாகக் கொள்வதால் தங்கள் குடும்பத்தில், அலுவலகத்தில் மட்டுமல்லாமல் நம்முடைய சமுதாயத்தில் நோய்கள் குறைந்து, ஒற்றுமை ஓங்கும் என்பதே நம்மை வியக்க வைக்கும் உண்மையாகும். ஆகாயவிமானம், கப்பல் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது தூய்மையான பரவெளியை பயணிகள் அடையும் சந்தர்ப்பம் கிட்டுவதால் அப்போதெல்லாம் இந்த ரீம் பீஜாட்சரங்கள் நிறைந்த போற்றித் துதிகளை ஓதுவதால் பரவெளியில் நெடுங்காலத்திற்கு நற்சக்திகளை நிலைநாட்டிய அரிய புண்ணிய சக்திகளை அடியார்கள் பெறலாம்.

அஞ்சைக்களம்

தற்போது செல்போன்களின் ஆதிக்கம் வெகுவாகப் பரவியுள்ளதால் இதிலிருந்து மீள்வதற்கு எந்தவிதமான தெய்வீக உபாயமும் இல்லை என்றாலும் அத்தியாவசியமான காரியங்களுக்கு செல்போனை உபயோகித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுதால் அத்தகைய சூழ்நிலைகளில் செல்போனை உபயோகிப்பதால் பரவெளியில் ஏற்பட்ட தீய விளைவுகளைக் களைவதற்கு அஞ்சைக்களம் போன்ற திருத்தலங்களில் வெடிக்கப்படும் அதிர்வேட்டுகள் ஒரு தீவினை அகற்றியாக செயல்படும் என்பதால் திருஅஞ்சைக்களம் போன்ற திருத்தலங்களில் பக்தர்கள் எந்த அளவிற்கு இத்தகைய வெடிகளை ஏற்றி பரவெளியை தூய்மை செய்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் வாழ்க்கையும் பிரகாசமடையும். மாதிரிக்காக இங்கு ஏற்றப்பட்ட குடும்ப ஒற்றுமை ஜோதியை பக்தர்கள் “தரிசித்து” மகிழலாம். களம் என்றால் தானியக் கிடங்கு என்ற ஒரு பொருள் உண்டு அல்லவா ? அஞ்செழுத்து என்னும் நமசிவாய மந்திர சக்திகள் பெருகியுள்ள தலமே திருஅஞ்சைக்களமாகும். “அஞ்சை ஓது அது நெஞ்சில் நிறையும்,” என்று இத்தல சிறப்பைப் பற்றி ஸ்ரீஅகத்திய கிரந்தங்கள் வர்ணிக்கின்றன. அஞ்செழுத்துப் பெட்டகமான திருஅஞ்சைக்களத்தில் திருஅஞ்செழுத்தை ஓதியவாறே சரக்கொன்றை தலவிருட்சத்தை 12, 24, 36 ... முறைகள் வலம் வருவதால் கிட்டும் பலன்கள் அமோகம். துஞ்சலும் ..., காதலாகி ..., சொற்றுணை ... என்ற ஐந்தெழுத்தைக் குறிக்கும் தேவாரப் பதிகங்களை ஓதி இங்குள்ள கொன்றை மரத்தை வலம் வந்து வணங்குவதும் சிறப்பே. எத்தகைய கொடிய நோய்களிலிருந்தும் நிவாரண சக்தி அளிப்பதே இத்தகைய வழிபாடுகளாகும். வடக்கு திசை என்பது குருவிற்கு உரித்தானது அல்லவா ? இந்த வடக்கு திசையான தங்க திசையில் எழுந்தருளிய பிரம்மாண்டமான கொன்றை மரத்தை தலவிருட்சமாக உடைய ஒரே திருத்தலம் என்பதும் அஞ்சைக்களத்தின் பெருமையாகும். பொன் ஒளிக் கிரணப் பாதை என்ற தூய ஒளிப் பிரகாசப் பாதை திருஅஞ்சைக்களத்திலிருந்து திருக்கயிலாய மலை வரை செல்கிறது. இமயமலையில் உள்ள கேதார்நாத் வழியாக இந்த பொன்னொளிப் பாதை வழியாக பயணம் சென்று திருக்கயிலாய மலையை அடைந்தவர்களே சுந்தர மூர்த்தி நாயனார், ஆதிசங்கரர், ஔவையார் போன்ற மகான்கள் ஆவர். இந்த பொன் கிரணப் பாதையை தான் தரிசித்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடன் யாத்திரை வந்த பல அடியார்களும் காணும் சக்தியை நல்கியவரே நம் சற்குரு வெங்கடராமன் ஆவார்கள். நீங்கள் இங்கு காணும் சாளரத்தில் அமைந்த நவநாயகர்களும் செல்போன் கிரணங்களை தம்பிக்கச் செய்யும் சக்தி உள்ளவர்கள் என்பது இத்தலத்தின் சிறப்பம்சம். ஆனால், இவர்கள் அனுகிரக சக்திகளை அதிர்வேட்டுகள் மூலமே பெறமுடியும் என்பதால் இத்தலத்தில் வெடி வழிபாடு சிறப்பு பெறுகிறது.

சிவராத்திரி திருவிழா

விகாரி வருடத்திற்கான சிவராத்திரி தலமாக சிறப்புப் பெறுவதே பொற்கிரண ஒளிப் பாதை அமைந்த திருஅஞ்சைக்களம் திருத்தலமாகும். திருஅதிகை, திருப்பத்தூர், திருக்கடவூர் மயானம் போன்ற திருத்தலங்கள் சரக் கொன்றையுடன் திகழ்ந்தாலும் இளவனார் சூரக்கோட்டை, ஆக்கூர், திருவையாறு அருகில் பெரும்புலியூர் என்ற மூன்று திருத்தலங்களையே விகாரி வருட வழிபாட்டிற்கான சிவராத்திரி திருத்தலங்களாக சித்தர்கள் அளிக்கிறார்கள். பிரதானமாக இதில் இளவனார் சூரக்கோட்டையில் திருஅஞ்சைக்களம் திருத்தலத்தைப் போல வடதிசையில் கொன்றை மரம் எழுந்தருள அபூர்வமாக உத்தியோக நந்தியும் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். உளுந்தூர்பபேட்டையிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ளதே இளவனார் சூரக்கோட்டை ஆகும். ஒரு காலத்தில் ஆங்கிலப்படை ஒரு லட்சம் பேரை தனி ஒரு இளவனாக வாள் ஏந்தி போரிட்டுத் தடுத்த வீரம் செறிந்த மண் இதுவாகும். பெருமானுக்கு முன் உத்தியோக நந்தி சஞ்சரித்ததைப் போல பக்திப் பெருக்கால் சுந்தரரைத் தொடர்ந்து சுந்தரருக்கு முன் சென்றவரே சேரமான். மகான்களும் சித்தர்களும் பன்னெடுங்காலம் தவமியற்றி இந்த தலங்களில் அமையும் சிவராத்திரி வழிபாடுகளும் கயிலைக்கு வழிகாட்டும் ஒளிப் பாதையடன் இணையும் வரத்தை அனுகிரகமாக பெற்றுத் தந்துள்ளனர்.

உத்தியோக நந்தி
இளவனார் சூரக்கோட்டை

இந்த பொற்கிரண அனுகிரக சக்திகளை அனுகிரகமாகப் பெற மூன்று முக்கிய முன் நிபந்தனைகள் சித்தர்களால் அருளப்பெற்றுள்ளன. நிபந்தனைகள் கடினமாக தோன்றினாலும் அனுகிரகம் என்னவோ அபரிமிதமானவையே. திருவோண நட்சத்திரம் இணையும் சுக்ர வாரமாக இந்த சிவராத்திரி அமைவதால் கறந்த சூடு ஆறும் முன் பசும்பாலை சுவாமிக்கு நான்கு காலமும் அபிஷேகமாக நிறைவேற்ற வேண்டும். பொற்சிறகு வண்டுகள் என்ற ஒரு வகை தேனிக்கள் உண்டு. இந்த தேனீக்களால் சேகரிக்கப்பட்ட தேனைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நான்கு காலமும் நிறைவேற்றப்பட வேண்டும். பொற்சிறகு தேனீக்களை சாதாரண மக்களால் இனங்கண்டு கொள்ள முடியாது என்பதால் 12 பேருக்குக் குறையாமல் சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய மற்று பற்றெனக்கின்றி ... என்று ஆரம்பிக்கும் பாடலை 10 முறைக்குக் குறையாமல் ஓதி அந்த தேனை அபிஷேகத்திற்குப் பயன்படுத்துவதால் அது பொற்சிறகு தேனீக்களால் சேகரிக்கப்பட்டதாக இறைவனால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அடுத்து மூன்று சுமங்கலிகளுக்குக் குறையாமல் மஞ்சளை மர உரலில் இடித்து தூய வெள்ளை துணியில் சலித்து நான்கு வேளையும் சுவாமியை அபிஷேகிக்க வேண்டும். இடித்த மஞ்சள் தூளை சுற்றி எத்தனை அடியார்கள் வேண்டுமானாலும் அமர்ந்து 108 முறைக்குக் குறையாமல் சர்வ மங்கல மாங்கல்யே துதியை ஓதி அபிஷேகத்திற்குப் பயன்படுத்தவும். சிவராத்திரி அபிஷேகத்திற்காக மஞ்சள் இடிப்பவர்கள் கணவனைத் தவிர மற்ற எந்த ஆணையும் மனதினாலும் தீண்டாத பத்தினித் தன்மை உடையவராக இருத்தல் வேண்டும் என்பது நியதி. தற்காலத்தில் சற்றும் ஒத்து வராத இந்த நிபந்தனைக்கு மாற்றாக சித்தர்கள் அளிப்பதே பசலைக் கீரையுடன் பாசிப்பருப்பு கலந்த கூட்டை அன்னதானமாக அளிப்பதாகும். கணவனைத் தீவிரமாக மனதினால் எண்ணும்போது பெண்களின் உடலில் தோன்றும் நிறமே பசலை எனப்படுவதாகும். கலியில் எதை வேண்டுமானாலும் கலப்படம் செய்து ஏமாற்றலாம் என்றாலும் நிறத்தைக் கலப்படம் செய்ய முடியாது என்பதால்தான் சித்தர்கள் இந்த தானத்தை தெரிவித்துள்ளனர். இதைப்போலவே வார வண்ண ஆடைகளும் சிறப்புப் பெறுகின்றன. இந்த மூன்று நிபந்தனைகளையும் முறையாக நிறைவேற்றுவதால் திருக்கயிலைக்குச் செல்லும் பொற்கிரண ஒளிப் பாதையை பக்தர்கள் தங்கள் தூலக் கண்களாலேயே தரிசிக்க இயலும். அவ்வாறு கயிலை பொற் கிரண ஒளிப் பாதையை தரிசிக்க இயலாவிட்டாலும் இந்த ஒளிப் பாதை தரிசனப் பலன்கள் நிச்சயம் பக்தர்களை வந்தடையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சிவராத்திரியில் பங்கு கொள்ளும் பக்தர்கள் மட்டும் இந்த கைலாய ஒளிப் பாதை தரிசனப் பலன்களை பெற்றால் போதுமா ? அவரவர் குடும்பத்தில், வம்சத்தில் உற்றார் சுற்றார் நண்பர்கள் என்ற பலரும் இருண்ட பாதையில் சிக்கித் தவிக்கும் எத்தனையோ பேர் உண்டே. அவர்களுக்கும் நல்வழி காட்டக் கூடியதே இந்த விகாரி வருட சிவராத்திரி தரிசனப் பலனாக கிட்டும் பொற்கிரண ஒளிப் பாதை என்பதால் ஒவ்வொரு இறை அடியாரும் தங்களால் எத்தனை ஆயிரம் ஒளி விளக்குகளை இந்த சிவராத்திரி திருத்தலத்தில் ஏற்றுகிறார்களோ அந்த அளவுக்கு பயன் பல்கிப் பெருகும். இத்தனை அகல் விளக்கு தீபங்களையும் பூஜை நிறைவில் திரும்ப எடுத்து ஆலயத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதும் முக்கியமே. ஆயிரக் கணக்கில் தீபங்களை ஏற்றுவது என்பது அனைவருக்கும் சாத்தியமா என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. ஆனால், சிவராத்திரி என்பது காலை முதல் மறுநாள் காலை வரை நிரவி இருக்கும் திருவிழாதானே ? மிக மிக அரிதாக வாழ்வில் ஒரு முறையே கிட்டும், கயிலை ஒளிப் பாதை தரிசனத்தைப் பெற்றுத் தரும் தீபங்களை இந்த 24 நேரத்தில் ஏற்ற முடியாதா என்று சித்தர்கள் கேட்கும் கேள்வி உங்கள் காதுகளில் விழுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. திருஅண்ணாமலையாருடன் நம் சற்குரு தன்னுடைய கைகளை அசைத்த வண்ணம் மணிக் கணக்கில் கும்மிருட்டில் தன்னந்தனியாக அளவளாவிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆஸ்ரம அடியார்கள் எண்ணற்றோர். அதே போல ஆஸ்ரம ஹாலில் அமைந்த ராமச்சந்திர மூர்த்தி, சீதை லட்சுமண மூர்த்திகளுக்கும் ஊஞ்சல் சேவை சாதித்தவாறே அவர்களுடன் மௌன மொழியில் உரையாடுவதைக் கண்ணுற்றோர் ஏராளம். அது மட்டுமல்லாது ஆஸ்ரம ஹாலில் அமைந்த மீன் தொட்டியில் உள்ள மீன்களுடனும் நம் சற்குரு ஆனந்தமாக உரையாடுவதைக் கண்டோர் அநேக அடியார்கள் தானே.

இளவனார் சூரக்கோட்டை

இவ்வாறு பரம்பொருள் பேசும் தெய்வீக வார்த்தைகள் மட்டும் அல்லாது ஈ எறும்பு என அனைத்து உயிர்களுடனும் பேசி உறவாடும் அற்புத மனோலயக் கலையை அனுகிரகமாக அளிப்பதே இந்த வருட சிவராத்திரி வழிபாட்டுப் பலன்களில் ஒன்றாகும். இன்று நான்கு நண்பர்கள் ஒன்றாக நடந்து செல்லும்போது கூட ஒவ்வொருவரும் தனித்தனியாக செல்போனில் பேசிக் கொண்டு செல்லும் இந்த நாகரீக உலகில் மனோலயக் கலையின் மதிப்பு தெரியாமல் போவது இயற்கையே என்றாலும் தெய்வீகத்தில் முன்னேற நினைப்பவர்களுக்கு இது நிச்சயம் அவசியமே, கட்டாயத் தேவையே. ஒரு முறை ரிஷகேஷ் சிவானந்தா ஆஸ்ரமத்திற்கு எதிரே உள்ள கங்கையில் பொழுதுபோக்கிற்காக மீன் பிடிக்க ஆங்கிலேய துரை ஒருவர் வந்தார். அதைக் கண்ட சுவாமி சிவானந்தா தன் சீடர் ஒருவரை அனுப்பி அது மிகுந்த தெய்வீக சக்திகள் மிகுந்த, அமைதி தவழும் ஆரண்யப் பகுதி என்பதால் அங்கு வரும் மீன்களைப் பிடிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார். ஆனால், அந்தத் துரையோ மகானின் வார்த்தைகளை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய தூண்டிலை கங்கையில் வீசிக் கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம், இரண்டு மூன்று நேரம் கழிந்தும் ஒரு மீனைக் கூட அவரால் பிடிக்க முடியாமல் போகவே மனம் வெதும்பி சுவாமி சிவானந்தாவின் இறை பக்தியை மெச்சி அங்கிருந்து கிளம்பி விட்டார். சுவாமி சிவானந்தா தன்னுடைய மனோலயக் கலை சக்தியால்தான் கங்கைக் கரையின் அந்தப் பகுதிக்கு வந்த மீன் பக்தர்களுக்கு செய்தி அனுப்பினார் என்பது இப்போது தெரிய வருகின்றது அல்லவா ? அது போல மனோலயக் கலையில் தேர்ச்சி பெற விரும்புவோர்கள் இவ்வாறு முதலில் மனிதனின் அடிப்படை உயிரான மீன்களை அஞ்சைக்களம், குருவாயூர், சிதம்பரம், காஞ்சிபுரம் போன்ற திருத்தல வளாகங்களில் அமைந்துள்ள திருக்குளங்களில் தரிசித்து அளவளாவி பயன்பெறலாம். இந்த கலைக்கு நல்ல ஆரம்பமாக அமைவதும் இந்த வருட சிவராத்திரி வழிபாடே. “ஒன்றைச் சிவனுக்குச் சூட்டு, அது கொன்றையாக இருக்கட்டும்,” என்பது ஸ்ரீஅகத்தியர் வாக்கு. இருக்கும்போது இறைவனுக்கு கொன்றை மலர்களை அளிக்கலாம். கயிலை செல்லும்போது எப்படி வெறுங்கையுடன் செல்வது ? இதுவே ஆலால சுந்தரரின் வருத்தம். எப்போது அஞ்சைக்களத்தில் பிரம்மாண்டமான சரக்கொன்றையை தரிசனம் செய்தாரோ அப்போதே அவருடைய கவலைகள் மாயமாயின. ஆம், அஞ்சைக்கள சரக் கொன்றை சக்திகளையே அரும் பெரும் பொக்கிஷமாய் கொண்டு சென்று கயிலை ஈசனின் திருவடிகளில் அர்ப்பணித்தார் என்பதே இதுவரை நீங்கள் கேள்விப்படாத சித்த இரகசியங்கள். சிவா, விஷ்ணு, பிரம்மா என்ற தெய்வ மூர்த்திகள் ஒரே இறை சக்தியின் மூன்றுவித வெளிப்பாடாக அமைந்துள்ளது போல விஷ்ணு மூர்த்தியும் மனிதனை நன்னிலைப்படுத்துவதற்காக தசாவதாரங்கள் என்பதாக மீன் முதல் கல்கி அவதாரம் வரை பற்பல அவதாரங்களை எடுத்து இந்தப் பூலோகத்தில் தோன்றியுள்ளார். அதனால்தான் திருத்தலங்களில் தோன்றியுள்ள தசாவதார மூர்த்திகளை மக்கள் வணங்கி தரிசித்தலால் தங்கள் பிறப்பைப் பற்றிய இரகசியங்களை அறிந்து கொள்ள அது ஏதுவாகும் என்பதை சுட்டிக் காட்டுவதே நம் முன்னோர்களின் அறிவுத் திறன். மீனுக்கு முன்னும் கல்கிப் பின்னும் அமைந்துள்ள அவதாரங்களும் கோடி கோடியே என்றாலும் மனிதன் மச்ச அவதாரத்தையோ வராக அவதாரத்தையோ புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளான் என்னும்போது தன் சக்திக்கு அதீதமான அவதாரங்களை அவன் புரிந்து கொள்ள நினைப்பதால் யாது பலன் ?

ஸ்ரீமுருகப் பெருமான்
இளவனார் சூரக்கோட்டை

சமீபத்தில் ஒரு நண்பர் வரும் 2023ம் வருடம் உலகை ஒரு பெரிய விபத்து சூழப்போவதாக அவருக்குத் தெரிந்தவர் பயமுறுத்துவதாகவும் இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். இத்தகைய குழப்பமான சூழ்நிலைகளை பலரும் தங்கள் வாழ்க்கையில் சந்திப்பதால் இதற்கு சித்தர்கள் அளிக்கும் தீர்வு என்ன என்பதை அறிய உங்கள் மனம் துடிக்கின்றது அல்லவா ? இவ்வாறு குழப்பம் அளிப்பவர் ஐந்து நொடிகளுக்குப்பின், ஐந்து நிமிடங்களுக்குப்பின் நிகழ இருக்கும், அவருக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு காரியத்தைப் பற்றித் தெளிவாக விவரிக்க வேண்டும். அது சாத்தியம் என்றால், எதுவும் சாத்தியமே. ஆனால், இத்தகைய தகுதி உடைய மகான் தற்போது மாதா அமிர்தானந்தா மயி ஒருவரே என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். சுந்தர மூர்த்தி நாயனார் கயிலைக்குச் செல்லும்போது அஞ்சைக்களத்திலிருந்து வெள்ளை யானையின் மீதேறிச் சென்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் பின்னால் அமைந்த தெய்வீக இரகசியங்களை முழுமையாக அறிந்தவர்கள் சித்தர்களே. எப்படி ஒளியானது சிவப்பு முதல் ஊதா நிறம் வரை ஏழு வண்ணங்களில் பிரிகிறதோ அதுபோல் இந்த ஏழு வண்ணமும் மீண்டும் ஒன்றாக இணைந்து ஒரே ஒளிக் கதிராக செல்லும் என்பது நீங்கள் உணர்ந்ததே. அது போல் இறைவனின் ஜோதிப் பரலாக, ஒளிக் கதிராக, பிரகாச வெளிச்சமாக தோன்றிய மனிதர்களும் இறைவனுடன் ஒன்றுவதையே, இரண்டறக் கலப்பதையே சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீதேறி கயிலை சென்றார் என்று சாதாரண மனிதர்களும் அறிந்து புரிந்து கொள்ளும் வண்ணம் உரைக்கின்றனர். இதே முறையில் இளவனார் சூரக்கோட்டையில் இறைவனின் பெருமையை உலகிற்கு உணர்த்த வந்த அன்னையும் ஸ்ரீபெரிய காண்டி அம்மன் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள். பெரிய காண்டி என்பது என்றும் பிரகாசிக்கும், அகண்ட ஜோதியாகும். இந்த ஜோதிப் பிரகாசமானது என்றும் பிரகாசிப்பதே என்றாலும் இந்த ஜோதியின் அனுகிரக சக்திகளை சாதாரண பக்தர்களும் பெற வழிவகுப்பதே இந்த விகாரி வருட சிவராத்திரி வழிபாடு என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் தெய்வீக இரகசியம் ஆகும். சுந்தரர் கயிலையை அடைய வெள்ளை யானையின் மீதேறிச் சென்றபோது தனியாக, சங்கிலி நாச்சியார், பரவை நாச்சியார் என்ற இரு துணைவியரையும் விடுத்துச் சென்றார் என்று நாம் பொருள் கொள்வது உத்தம சிவனடியாரை நாம் புரிந்து கொள்ளாத நிலையே ஆகும். எப்படி விளக்கிலிருந்து ஜோதியை, பிரகாசத்தைப் பிரிக்க முடியாதோ அவ்வாறு சுந்தரர் என்ற ஜோதியிலிருந்து சங்கிலி நாச்சியார், பரவை நாச்சியார் என்ற பிரகாச ஜோதிகளை நாம் பிரிக்க முடியாது. இந்த தத்துவத்தை நாம் உணர்வதற்காகவே இறைவன் இளவனார் சூரக்கோட்டையில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் என்ற அபூர்வ நாமத்துடன் எழுந்தருளி உள்ளார். அது மட்டுமன்றி இறைவியும் திருமணக் கோலத்தில் இறைவனுக்கு எதிரே ஸ்ரீபெரிய காண்டி அம்மன் என்ற காரணப் பெயருடன் எழுந்தருளி உள்ளாள். திருஆமாத்தூர், திருத்தவத்துறை, திருவாசி போன்ற தலங்களில் அம்பிகை இறைவனுக்கு எதிரே எழுந்தருளி இருந்தாலும் அபூர்வமாக சரக் கொன்றை சக்திகளை குரு திசையில் ஏற்று இறைவன் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளிய தலம் இது ஒன்றே என்பதும் இளவனார் சூரக்கோட்டையின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும்.

திருச்சி உய்யக்கொண்டான்மலை ஸ்ரீஉஜ்ஜீவநாத சுவாமி திருத்தலமே இந்தப் பிரபஞ்சத்திலேயே அதியற்புத குருத்தலமாகும் என்பதே சித்தர்கள் அளிக்கும் பிரம்மாண்டமான விளக்கமாகும். குரு வருடமாகிய இந்த விகாரி வருடத்தில் நிறைவாக தரிசனம் பெற வேண்டிய தலம் இதுவென்றாலும் நம் வாழ்நாள் முழுவதுமே வழிபட வேண்டிய குருத்தலம் இது என்றால் அது மிகையாகாது. ஓங்கார சக்திகள் மிகுந்த கொன்றை மரத்தை குரு திசையில் ஏற்ற திருத்தலம் என்பதோடு மட்டுமல்லாமல் மூன்று குரு சக்திகளால் உருவான அற்புத தலம் இதுவாகும். உஜ்ஜீவம், சஜ்ஜீவம், சுஜ்ஜீவம் என்று மூன்று ஜீவ சக்திகளால், குரு சக்திகளால் உருவான லிங்க மூர்த்தியே உய்யக்கொண்டான் மலை மூலவரான ஸ்ரீஉஜ்ஜீவநாத மூர்த்தி ஆவார். அதனால்தான் என்னவோ நம் சற்குரு மூன்று முறை இத்தலத்தில் எழுந்தருளி ஜீவ சக்திகளை புனருத்தாரணம் செய்தார். முதல் முறை ஐந்து இலக்க எண் உடைய, ஸ்ரீரங்கநாதரின் நாமம் பெற்ற ஒரு அடியார் இல்லத்தில் எழுந்தருளியும், இரண்டாம் முறையாக இத்தலத்தில் உழவாரப் பணிகளுக்காக எழுந்தருளியும், மூன்றாம் முறையாக நம் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஒரு அடியாருக்கு சதாபிஷேகம் நிறைவேற்றுவதற்காகவும் என அபூர்வமாக மூன்று முறை எழுந்தருளி சிறப்பித்த தலம் இதுவேயாகும்.

ஸ்ரீஉஜ்ஜீவநாதர் திருத்தலம் உய்யக்கொண்டான்மலை

ஒரு மனிதனுக்கும் ஏன் ஒரு நாட்டிற்கும் பாதுகாப்பு அணிகலனாக கருதப்படும் ஆயுத எழுத்து வடிவில் உய்யக்கொண்டான்மலையும், மலைக்கோட்டையும், ஸ்ரீரங்கம் திருத்தலமும் திகழ இந்த மூன்று திருத்தலங்கள் நடுவே காவிரி, கொள்ளிடம், உய்யக்கொண்டான் என்ற மூன்று தெய்வீக நதிகள் பாய்வதும் கலியுக மக்களின் அருந்தவப் பேறே. இந்த சிறப்புக்களுக்கெல்லாம் அணி சேர்ப்பது போல இத்தலத்தில் ஓங்காரப் பிரகாரம் துலங்க அந்த ஓங்கார பிரகாரத்தில் தெற்கே குரு ஸ்ரீகுழந்தையானந்தாவின் ஜீவ சமாதியும் வடக்கே கொன்றை தல விருட்சமும் எழுந்தருளியுள்ள மகத்துவத்தை வர்ணிக்க வார்த்தைகள்தான் உண்டா ? உய்யக்கொண்டான் மலையில் வடக்கில் சரக்கொன்றை பொலிவது மட்டுமல்லாமல் ஸ்ரீரங்கநாதர் குபேர திசையிலும் ஸ்ரீதாயுமான ஈசன் ஈசான்ய திசையிலும் உய்யக்கொண்டான் மலையிலிருந்தே தரிசனம் செய்யும் வகையில் எழுந்தருளி உள்ளனர். இந்த சிறப்புக்கு ஈடு இணையாக எதைக் கூற முடியும் ? இந்த சிறப்புக்கு மேலும் அணி சேர்ப்பதே ஸ்ரீஆத்ம விசார நந்தி மூர்த்தி ஆவார்.

ஓங்காரப் பிரகாரம்
உய்யக்கொண்டான்மலை

பொதுவாக, திருத்தலங்களில் மூலவரை நோக்கிதானே நந்தி மூர்த்திகள் எழுந்தருளி இருப்பர். திருச்சி மலைக்கோட்டை, திருத்தியமலை போன்ற தலங்களில் நந்தி மூர்த்திகளுக்கு இடையே பெரிய சுவர், மலையே இருந்தாலும் அவர்கள் பார்வை மூலவருக்கு எதிராகத்தானே இருக்கும் ? உய்யக்கொண்டான் மலையிலோ நந்தி மூர்த்தி சுவாமிக்கு இடப் புறத்தில் எழுந்தருளி உள்ளார். இது பற்றி நம் சற்குருவை வினவியபோது சற்குரு தனக்கே உரிய மந்தகாசப் புன்னகையுடன், “சுவாமி சுவாமியை நோக்கித்தானே எழுந்தருளி உள்ளார் ?” என்று கேட்டார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது ? சேஷாத்ரி சுவாமிகளைப் போல ஆயிரம் முறையோ, லட்சம் முறையோ உய்யக்கொண்டான் ஓங்காரப் பிரகாரத்தை வலம் வந்து தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தால்தான் ஈசனுக்கு எதிரில்தான் நந்தி மூர்த்தி எழுந்தருளி உள்ளார் என்ற அரிய உண்மையை உணர முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு நந்தி மூர்த்தியைப் பற்றி எவராவது கேள்விப்பட்டதுதான் உண்டா என்ன ?! எனவே இவ்வருடம் சிவராத்திரி நிறைவில் உய்யக்கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதரை ஒரு மண்டல காலத்திற்குள் தரிசனம் செய்து பக்தர்கள் தங்கள் சிவராத்திரி பலனை அர்ப்பணிப்பதால் தங்கள் பரம்பரையைச் சேர்ந்த அனைத்து உறவுகளுக்கும் சிவராத்திரி பலன்கள் சென்றடைய இறைவன் வழிவகுப்பார் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய கொன்றை தரும் குரு வரங்களாகும். முடிந்தபோதெல்லாம் பக்தர்கள் உய்யக்கொண்டான் மலை ஓங்காரப் பிரகாரதத்தை 12, 24, 36 என்ற குரு எண்ணிக்கையில் வலம் வந்து வணங்குவது என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய மிக மிக அரிய பேறாகும். ஓங்காரத்திற்கு 1008 பீஜாட்சர சக்திகள் உண்டு. இந்த 1008 பீஜாட்சர சக்திகளையும் முழுமையாக உணர்ந்தால்தான் ஓங்காரம் எப்படி மகாமிருத்யு மந்திரமாக அருள்புரியும் என்ற உண்மை புரிய வரும். இது லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் ஓங்காரத்தை ஓதி உணர வேண்டிய அரிய தவம் என்றாலும் இதை எளிமைப்படுத்தி ஓங்கார பிரகார வலமாக நமக்கு அருளியுள்ளதே சித்தர்களுக்கு மனிதர்கள்மேல் உள்ள பெருங் கருணையைப் பறைசாற்றுகிறது. உய்யக்கொண்டான் மலையில் ஓங்காரப் பிரகாரம் முழுவதுமே மேடு பள்ளமாகத் திகழும். சற்றே கவனக் குறைவுடன் வலம் வந்தாலும் கால் நகங்கள், பாதங்கள் பெயர்ந்து விடும். ஆனால், இந்தத் தவத்தின் பின்னணியில் அமைந்த தெய்வீக அனுகிரகத்தை அனுபவித்துப் பார்த்தால்தான் புரியவரும்.

“ஆக்கூரில் தான்தோன்றி ...”

எப்படி நம் திருஅண்ணாமலை ஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு அறையுமே ஒவ்வொரு தளத்தில் அமைந்து ஒவ்வொரு லோகத்தைக் குறிப்பதாகவும், ஒவ்வொரு லோகத்தின் அனுகிரக சக்திகளை அளிப்பதாகவும் அமைந்துள்ளதோ அதே முறையில் இந்த ஓங்காரப் பிரகாரமும் 1008 கோணங்களில், தளங்களில் அமைந்து ஓங்கார பீஜாட்சர சக்திகளை முழுமையாக, நிறைவாக அளிக்கிறது என்பதே நாம் உணர்ந்து தெளிய வேண்டிய பெருமை. இவ்வருடம் சிவராத்திரி வழிபாட்டை மேற்கூறியவாறு நிறைவேற்றி அதை உய்யக்கொண்டான்மலையில் பூர்ணம் அடையச் செய்தபின் கொன்றை அல்லது சரக்கொன்றை மிளிரும் எந்த சிவத்தலத்திலும் பெருமாள் தலத்திலும் இறை வழிபாட்டைத் தொடரலாம் என்பதே சித்தர்கள் அளிக்கும் தெளிவுரையாகும். எப்படி கைகளில் இடும் மருதாணி நற்காரியங்கள் இயற்ற இயற்ற மூளைச் செல்களை விருத்தி அடையச் செய்கிறதோ அதுபோல் கொன்றை சக்தியுடன் தொடரும் வழிபாடு மேலும் மேலும் பக்தர்களை கயிலை செல்லும் ஒளிக் கிரண பாதையில் ஈர்க்கும் என்பதே உண்மை. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தோத்திர பூர்ணாம்பிகையுடன் கைகோர்த்து வேள்வித் தீயில் மறைந்து கயிலை சென்றாலும் தன்னுடன் வரத் தயாராக இருந்த அனைத்து பக்தர்களையும் கைலையங்கிரிக்கு அழைத்துச் சென்றதைப் போல் இந்த சிவராத்திரி வழிபாட்டை மேற்கூறிய முறையில் நிறைவேற்றுபவர்கள் நிச்சயமாக மற்றவர்களையும் கயிலை செல்லும் ஒளிக் கிரண பாதையில் சேர்த்து விடலாம் என்பதே நம் சற்குரு அளிக்கும் உத்திரவாதமாகும். அத்தகைய சக்தி பெற்ற அனைவரும் திருஞானசம்பந்தப் பெருமான்தாமே. இதுவே சித்தர்களின் கருணை மழை, நம் சற்குருவின் பேரருள் கடாட்சம் ! ஸ்ரீஅகத்திய பெருமான் ஸ்ரீராம பிரானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் மந்திரத்தை உபதேசிக்க ஸ்ரீராமரும் இராவணனை வதம் செய்து வெற்றி பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக, மனிதர்கள் நன்றியை மறந்து விடுவது இயற்கை என்பதால் ஜகத்ரட்சகராகத் தோன்றிய ராமச்சந்திர மூர்த்தி மனிதர்களின் இத்தகைய நன்றி கெட்ட செய்கைகளுக்கு மன்னிப்புப் பெறும் மார்கமாக ஸ்ரீஅகத்திய முனியை இலங்கை விஜயத்திற்குப் பின் சந்தித்து தான் இராவணனை வெற்றி கொள்ள உறுதுணையாய் இருந்ததற்காக ஸ்ரீஅகத்திய முனிவருக்கு நன்றி தெரிவித்தார். ஸ்ரீஅகத்திய பெருமானோ வெற்றி அனைத்திற்கும் காரணமானவன் இறைவனே என்பதை ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு தெரிவித்து இருவரும் ஸ்ரீதான்தோன்றி ஈசனாக ஆக்கூரில் எழுந்தருளி இருக்கும் இறை மூர்த்திக்கு நன்றி செலுத்தினர். அப்போது ஸ்ரீஅகத்திய பிரான் இறைவன் திருவடிகளில் அர்ப்பணித்த சரக்கொன்றை மலர்களே இன்று அத்திருத்தலத்தை அலங்கரித்து நன்றி கொன்ற பாவத்தை இன்றும் இயற்றி வரும், தொடரும் மானிட குலத்திற்கு எல்லாம் நல்ல பிராயசித்தத்தை நல்கி வருகின்றன என்பதே ஆக்கூர் சரக்கொன்றை தெரிவிக்கும் இரகசியமாகும். எவரெல்லாம் இவ்வாறு தங்கள் செய்நன்றி கொன்ற பாவத்திற்கு பரிகாரம் பெற நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஆக்கூர் தலவிருட்சமான கொன்றையை வலம் வந்து வணங்கி, பிரகாரத்தில் கொன்றை நிழலில் அருள்புரியும் ஸ்ரீஅகத்திய சிவலிங்கத்திற்கும் மூல சிவலிங்கத்திற்கும் தேங்காய் எண்ணெயால் காப்பிட்டு நிலக்கடலை கலந்த தேங்காய் சாதத்தை தானம் அளித்தலால் செய்நன்றி மறந்த தவறுக்கு இது பிராயசித்தமாக அமையும், அல்லது பிராயசித்த வழிகளை உணர்த்தும்.

ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆக்கூர்

ஸ்ரீஅகத்திய சிவலிங்கம் ஆவுடை பக்தர்களைப் பார்த்த வண்ணம் எழுந்தருளி உள்ளது இத்தகைய பிராயசித்தம் நல்கும் தன்மைகளை உணர்த்துகிறது என்பதே சித்தர்கள் அறிவிக்கும் நல்லுரை. எத்தகைய கொடுஞ்செயல்கள் புரிந்து மிருகமாகத் திகழ்பவர்களையும் நல்வழிப்படுத்தி மனிதனாக, தேவனாக, இறைவனாக ஆக்கும் ஊரே ஆக்கூர் ஆகும். ஸ்ரீஅகத்திய முனிவர் இறைவனின் திருமணக் காட்சி பெற்ற தலங்களுள் ஒன்று ஆக்கூர் ஆகும். அபூர்வமாக கொன்றை மட்டும் அல்லாது பாக்கு, வில்வம் என்ற மரங்களையும் தல விருட்சங்களாகப் பெற்றதே ஆக்கூர் ஆகும். மாமனார், மாமியார், நாத்தனார், பகைவர்கள் என எந்த உறவு முறையின் சதி செயல்களாலும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை இல்லாது வருந்துபவர்கள் முந்திரி, பிஸ்தா, பாதம் என்ற மூன்று பருப்புகளை கலந்து அரைத்து பசுவின் பாலுடன் டைமண்ட் கல்கண்டு சேர்த்து தானம் அளித்தலால் நற்பலன் பெறுவார்கள். மனிதர்கள் திருந்தும் மார்க்கங்களை ஸ்ரீமார்கண்டேயர் கண்ட ஊரும் ஆக்கூரே. ஸ்ரீமார்கண்டேயரால் பன்னெடுங்காலம் வழிபடப் பெற்ற மூர்த்திகளுள் ஆக்கூர் ஸ்ரீதான்தோன்றி ஈசனும் ஒருவராவார். திருந்திய பல குற்றவாளிகளும், தங்கள் குற்றம் வெளியே தெரியாமல் காப்பாற்றப்பட்டவர்களும் திருந்தி வாழ நல்லருள் புரிபவரே ஆக்கூர் ஈஸ்வர மூர்த்தியாவார். இத்திருத்தலத்தை அடிப் பிரதட்சிணமாக மௌனமாக, குறிப்பாக திங்கட் கிழமைகளில் வலம் வந்து வணங்குவதால் தாங்கள் திருந்தி அடுத்து எந்த நற்காரியத்தில் மனம் இலயித்து செயலாற்ற வேண்டும் என்ற காரியத் தெளிவை ஆக்குவதும் ஆக்கூர் ஆகும். போதுமான உடல் ஆரோக்யம் அற்றவர்களும், மன ஆரோக்யம் குறைந்தவர்களும் தாங்கள் ஒரு நல்ல சந்ததியை “ஆக்க” முடியுமா என்று மன உறுதி இல்லாதவர்களும் இங்குள்ள தல விருட்சங்களுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வலம் வந்து வணங்குவதால் தாங்கள் விரும்பும் வீடு, நில புலன், சந்ததி, வியாபாரம் போன்ற எதையும் நல்லபடியாக “ஆக்க” அருள் வழங்கும் தலமே ஆக்கூர் ஆகும். சொல்லப்போனால், ஆக்கூர் ஈசனுக்கு ஆகாதது எதுவும் இல்லை என்பது சித்தர்கள் வாக்கு. பல தகுதிகள் இருந்தும் சரியான வேலை கிடைக்காமல் அவதியுறுவோரும், உரிய வயதைக் கடந்து வரன் கிடைக்காமல் அலைவோரும், கையில் பணத்தை வைத்துக் கொண்டு வாடகைக்கோ, சொந்தமாகவோ நிலமோ வீடோ கிடைக்காமல் கலங்குவோரும் இவ்வாறு அனைவரும் நல்லருள் பெறும் தலமே ஆக்கூர் சிவத்தலமாகும்.

ஸ்ரீசரஸ்வதி தேவி ஆக்கூர்

சென்ற குரு ஆண்டில் பிரதட்சிணம், மந்திரம் ஓதுதல், அன்னதானம் தயார் செய்தல், அன்னதானம் அளித்தல், ஏதாவது ஒரு முத்திரை அமைப்பில் கைகளை வைத்துக் கொள்தல், நாக்கை மடித்து வைத்துக் கொள்தல் என்றவாறு குறைந்தது மூன்று காரியங்களை தொடர்ந்து நிறைவேற்ற முயற்சி செய்யும்படி அடியார்களுக்கு சித்தர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அது போல் இந்த ராகவேந்திர ஆண்டில் இந்த மூன்று காரியங்களோடு கண் இமைக்காது இருக்க பயிற்சி செய்யும்படி இந்தப் பயிற்சியை நான்காவது பூஜையாக மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார்கள். “நீ எதற்காக கண்ணை மூடுகிறாய், நீ கண்ணை மூடும்போது ஏதாவது ஒரு புதிய காட்சி கண்ணுக்குள் தெரிவதாக இருந்தால் நீ கண்ணை மூடுவதில் அர்த்தம் இருக்கிறது. கண்ணை மூடும்போது அங்கும் வெறும் இருட்டுதானே தெரிகிறது. வெறும் இருட்டைப் பார்ப்பதற்காகவா கண்ணை மூடுகிறாய் ? இருட்டைச் சந்திக்கவா இறைவன் உனக்கு கண்ணை அளித்தான் ?” என்று கேட்பார் நம் சற்குரு. பாரு பாரு நல்லா பாரு என்பதே நம் பரமகுரு ஸ்ரீஇடியாப்ப சித்தரின் உபதேசம். பெரும்பாலும் அனைவரும் நம்மை அறியாமல் தான்தோன்றி செயலாக கண்ணை மூடிக் கொள்கிறோம் என்றுதான் நினைக்கிறோம். சற்குருவோ, “உன் கண்ணை மூடுவது பற்றித்தானே பேசுகிறேன். அடுத்தவன் கண்ணைப் பற்றியா பேசுகிறேன்,” என்று இதற்கு பதில் கேள்வி கேட்பார். முடியாதது என்று எதுவும் இல்லை. அதற்காக கண்ணை மூடவே கூடாது என்று அர்த்தம் கிடையாது என்பதையும் நன்றாக கவனத்தில் கொள்ளவும். கண்ணை மூடுவதோ திறப்பதோ நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதே மகான்களின் எதிர்ப்பார்ப்பு. இந்த விகாரி வருடத்திற்குள் ஆக்கூர் திருத்தலத்தை தரிசனம் செய்து இங்கு அபூர்வமாக சரிகம என்னும் வீணையுடன் திகழும் ஸ்ரீசரஸ்வதி தேவியை தரிசனம் செய்து இத்தகைய வைராக்கியத்தை மேற்கொள்வதால் கண் இமைகள் துடிப்பை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இந்த பூஜையைத் தொடர்ந்து நிறைவேற்றுவதால் உலகியல் நடவடிக்கைகளில் நாம் பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றாலும் ஆன்மீகத்தில் முன்னேற நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்த தவம் தேவைப்படுவதே. சரிகம என்ற இசை ஸ்வரங்கள் தோன்றிய திருத்தலமே ஆக்கூர் ஆகும். நீண்ட நேரம் கீர்த்தனைகளைப் பாடி சாதனை புரிய விரும்புவோர்கள் வழிபட வேண்டிய அன்னையே ஆக்கூர் சரஸ்வதி தேவி ஆவாள். வெறுமனே கண்களை மூடாது செய்யும் பயிற்சியே உடல் வலி, நெஞ்சு வலி, தலை சுற்றல் போன்ற உபாதைகளை சிலருக்கு அளிப்பதுண்டு. கண்களை எப்போதும் திறந்திருத்தல் என்ற ஒரு சாதாரண பயிற்சியில் கிட்டும் புண்ணிய சக்தியை நம் மனமும் உடலும் ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் விளைவுகளையே இது குறிப்பதால் இந்த வேதனைகள் குறித்து சற்றும் கவலைகொள்ளாது தொடர்ந்து முன்னேறி ஆன்மீகப் பாதையில் வெற்றி நடை போடும்படிக் கேட்டுக் கொள்கிறோம். நாள் முழுவதும் நாம் தேவையில்லாமல் கண்களை மூடி நம்மையும் அறியாமல் இருட்டையே சந்திப்பதால் பெருகும் கர்ம வினைகளே பெரியோர்கள் கூறும் நல்ல விஷங்களை நாம் ஏற்றுக் கொள்ளாது தான்தோன்றித்தனமாய் நடக்கும் வேதனையை அளிக்கின்றன.

இந்த வேதனைக்கெல்லாம் விடிவு அளிப்பவரே ஆக்கூர் ஸ்ரீதான்தோன்றி ஈஸ்வர மூர்த்தி ஆவார். ஆக்கூரில் அருள்புரியும் சரஸ்வதிதேவி ஸ்ரீசரிகம சாவித்திரி என்ற சிறப்பு நாமத்துடன் அருள்புரிகிறாள். கட்டம் அங்கி என்பதே கண்டாங்கி, கட்டாங்கி சேலை என்று உருவானது. நான்கு பக்கங்கள் கொண்ட கட்டம் என்பது அனைவருக்கும் பாதுகாப்பை அளிப்பது என்றால் கட்டாங்கி சேலை பெண்களுக்கு நிச்சயம் பாதுகாப்பை அளிக்கும் என்பதுதானே உண்மை. ஆக்கூர், சரிகம, பார்கவி என்ற நான்கு எழுத்து சக்திகளை குறிக்கும் சேலையே கட்டாங்கி சேலை என்பதால் கட்டாங்கி நூல் சேலையை நான்கிற்கு குசாவான எட்டு மடிப்புகளுடன் சரஸ்வதி தேவிக்கு அணிவித்தல் சிறப்பாகும். சதுரமான (நான்கு பக்கங்கள் கொண்ட) பாலால் செய்த இனிப்புகளை கொன்றை, பாக்கு, வில்வம் என்ற இத்தல மூன்று தலவிருட்சங்களின் சக்தியைக் குறிக்கும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து தானமாக அளித்தல் என்பது பெறற்கரிய பாக்கியமே.

தனித்திரு விழித்திரு

பொதுவாக, அர்த்தநாரீஸ்வரக் கோலமே கணவன் மனைவி இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்பது நாமறிந்த ஆன்மீக உண்மையாக இருந்தாலும் இத்தல ஸ்ரீசரிகம சாவித்திரியே கணவன் மனைவியை ஸ்வரம், இசை போன்று இணைத்து குடும்பத்தில் சாந்தம் என்னும் இனிமை தவழ அருள்புரிகிறாள். இங்குள்ள புகைப்படத்தில் நீங்கள் காணும் சரஸ்வதி தேவியின் புடவை மடிப்புகள் எட்டும் நான்கிற்கு குசாவாக அமைந்து தான்தோன்றித் தனமாய் நடக்கும் கணவன், மனைவியின் மனோ நிலையை மாற்றும் பார்கவ சக்திகளை அளிக்கின்றன. இந்த அமைப்பின் பின்னால் இன்னும் பல ஆன்மீக இரகசியங்கள் பொதிந்துள்ளன. அவற்றை அடியார்கள் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ளுதலே சிறப்பு. ஒரு நாள் கடற்கரையில் ஒரு காதலனும் காதலியும் அளவளாவிக் கொண்டிருந்தனர். அப்போது காதலன், “அன்பே, உனக்காக நான் எதையும் செய்யக் காத்திருக்கிறேன். ஏழு கடலைத் தாண்டட்டுமா, வானத்தை வில்லாக வளைக்கட்டுமா இல்லை மணலைக் கயிறாகத் திரிக்கட்டுமா ... ?” என்று கேட்டான். அவனை விட புத்திசாலியான அந்தக் காதலி, “அத்தான், அதெல்லாம் வேண்டாம் ...”, என்று வேறு விஷயங்கள் குறித்து பேச ஆரம்பித்து விட்டாள். விடை பெறும் நேரம் வந்ததும், “நாளை இதே இடத்தில் நாம் சந்திப்போமா ?” என்று காதலி கேட்க காதலனோ, ”ஓ, தாரளமாக ... மழை இல்லாவிட்டால் இதே இடத்திற்கு வந்து விடுகிறேன்...”, என்றானாம்.

ஸ்ரீமுருகப் பெருமான் ஆக்கூர்

இவ்வாறு ஆன்மீக வாழ்க்கை வாழ்வதாக எண்ணும் பலரும் தங்கள் வார்த்தைகளில் ஒரு உண்மை, பிடிப்பு இல்லாமல் போவதற்கு தெய்வீகத்தில் உள்ள அவநம்பிக்கையே காரணம். ஐந்து புலன்களில் ஒன்றான பார்வைக்குத்தான் நம்முடைய பெரும்பாலான சக்தி செலவிடப்படுவதால் கண் சிமிட்டாது நாம் காண முயற்சி செய்தால் நமக்கு ஏராளமான சக்தி கிட்டும். மேலும் நாம் தனியே இருக்கும்போது ஆகர்ஷிக்கும் பல்வேறு பொருட்களைக் காணாததால் புண்ணிய சக்திகள் பெருகும். நாம் உணவேற்காது, அல்லது குறைந்த உணவை ஏற்று வயிற்றை காலியாக வைத்திருப்பதால் எண்ணம் ஆன்மாவில் ஒன்றுவதால் அதீதமாக விளைந்த புண்ணிய சக்திகள் ஆன்மாவில் ஒன்றும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் விளையும் நற்பலன்களை எல்லாம் தெய்வீக காரியங்களுக்காகப் பயன்படுத்தும் வாய்ப்பை நமக்குச் சுட்டிக் காட்டுபவரே நம் சற்குரு. சற்குரு இல்லையேல் இவ்வாறு பெருகும் நற்பலன்கள் என்ற புண்ணிய சக்தி நம் அகம்பாவத்தையும் அகந்தையையுமே பெருக்கும். இத்தகைய தீய விளைவுகளிலிருந்து நம்மைக் கரை சேர்ப்பதே மேற்கூறிய கண் மூடா கவின் காட்சிகளாகும். பராசரரும் மச்சகந்தியும் மீன்கள் கண் மூடா காட்சி பெற வேண்டும் என்று தவமியற்றினார்கள் அல்லவா ? இதன் பின்னணியாக அமைந்ததே இத்தகைய தெய்வீக அனுகிரக சக்திகளாகும். இந்த உத்தமர்கள் (பராசரர்+மச்சகந்தி=11=2) இணைந்து அளித்த உத்தம மச்ச சக்திகளைப் பெற விழைவோர் அஞ்சைக்களம், குருவாயூர், காஞ்சிபுரம், சிதம்பரம் போன்ற திருத்தலங்களில் மீன்களுக்கு ப்ரெட் உணவாக இட்டு அவைகளை வணங்குவதால் நற்பலன் பெறுவார்கள். பராசரர் மச்சகந்தி இவர்கள் இணைப்பில் தோன்றிய குசா சக்தி என்ற செல்வமே நான்கு எழுத்துக்களுடன், ராகுவிற்கு உரிய கரிய நிறத்துடன் வியாசர் என்று தோன்றியது. தற்காலத்தில் பலரும் தாங்கள் கர்ப்பம் தரித்து விட்டதாக உணர்ந்த அடுத்த நொடியே மருத்துவ மனைக்குச் சென்று ஸ்கேன், இர்த்தப் பரிசோதனை, சிறுநீர் சோதனை என்று பல சோதனைகளில் பங்கு பெற்று நல்ல குழந்தையைப் பெற தாங்கள் ஆர்வம் உள்ளவர்கள் போல் திகழ்கிறார்கள். உண்மையில் நல்ல குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தங்கள் சிறுவயது முதலே இதற்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டுமே தவிர, உரிய இறைவழிபாடுகளை தங்கள் பெற்றோர் மூலம் கடைபிடித்து வர வேண்டுமே தவிர மருத்துவ மனைக்குப் படையெடுப்பதால் யாதொரு நற்பலனும் விளையப் போவதில்லை என்பதே சித்தர்க்ளின் தெளிவுரை. இது சம்பந்தமாக நம் சற்குரு அளித்த பதிலையும் அடியார்கள் தெரிந்து கொள்வது நலமே.

மனமே குரு, எப்போது ?

ஒருமுறை நம் சற்குருவிடம் ஒரு அடியார், “சற்குருவே, பலரும் நாங்கள் மனசாட்சி சொல்படி நடக்கிறோம். அதனால் நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்று சொல்கிறார்களே, இது சரியா ?” என்ற கேட்டார். சற்குரு பளிச்சென்று, “மனசாட்சி எப்போதும் பொய்தான் சொல்லும். அதனால் உத்தம குரு சொற்படி நடந்து கொள்ளுங்கள். எல்லா பிக்பாக்கெட் அடிப்பவனும் என்ன நினைக்கிறான் ? “என் குடும்பம் பசியால் வாடுகிறது. இங்கு பஸ்சில் என் அருகில் இருக்கும் இவன் ஆயிரக் கணக்கில் பாக்கெட்டில் பணம் வைத்துக் கொண்டு திரிகிறான். இதை எடுத்து என் குடும்பத்தில் உள்ளவர்களின் பசியைத் தீர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது ?” என்று திருடும் தன்னுடைய தவற்றை நியாயப்படுத்துவான்.” பகவான் ராமகிருஷ்ணரோ மனம் எப்படி குருவாக செயல்படும், எப்போது இது சாத்யம் என்று நெருங்கிய தன் சீடர்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளார் என்பதையும் சிலர் அறிவீர்கள். எனவே இது சம்பந்தமான விளக்கத்தை இங்கு அளிக்கிறோம். விருப்பம் என்னும் காமம் முதலில் மனதில் உருவெடுக்கும். அந்த விருப்பம் மற்ற புலன்கள் வழியாகச் செயல்பட்டு நிறைவேற்றப்படும்போது மனம் அடங்கும்.

ஸ்ரீமார்க்கண்டேயர் ஆக்கூர்

உதாரணமாக, ஒருவருக்கு மசால் தோசை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் விருப்பமாக மனதில் தோன்றும்போது அவர் மசால் தோசையை உண்ணும்போது வாய், கண்கள், மூக்கு, நாக்கு என்ற அனைத்து உறுப்புகளும் அதில் இணைந்து பங்கு பெற்று அதனால் மனம் தற்காலிகமாக மசால் தோசை என்ற விருப்பத்திலிருந்து விடை பெறுகிறது. உண்மையில் இந்த விருப்பமானாது தன் வீட்டிலோ, அருகிலோ பக்கத்து வீட்டிலோ இருக்கும் ஒருவருடைய விருப்பமாகவும் இருக்கலாம். அதனால்தான் மனிதனின் எந்த விருப்பமும் ஒரே ஒரு மசால் தோசையிலோ அல்லது பஜ்ஜியிலோ அடங்குவது கிடையாது. புலன்கள் நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்போதுதான் எண்ணம் எங்கிருந்து வருகின்றது என்பதை உணர முடியும். இது ஒரு நாளிலோ ஒரு பிறவியிலோ சாத்தியம் இல்லை என்றாலும் இதற்கான முயற்சிகளைத் தொடர இந்த ராகவேந்திர வருடம் சிறப்புடையதே. நம் விழிகளில் சலனம் குறையும்போது எண்ணங்கள் அடங்கும், எண்ணங்கள் அடங்கும்போது புலன்கள் அமைதி கொள்ளும். அந்நிலையில் மனம் என்பது முற்றிலும் மறைந்து விடும் அல்லது அழிந்து விடும். அப்போதுதான் உள்ளம் இறைவனை நாடும், இதயத்தில் மிளிரும் இறைவன் நம் கண்களுக்குத் தெரிவான். இறைவன் என்ற ஜோதி கண்களில், முகத்தில், உடலில் தோன்றி பிரகாசிப்பதையே தெய்வீக தேஜஸ் என்று கூறுகிறோம். இந்த தெய்வீக தேஜஸ் உடையவர்களையே நாம் மகான்கள் சற்குருமார்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் வார்த்தை, வாக்கு இறைவாக்காக இருப்பதால் அவர்கள் சொல்வதை நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும், இதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது, ஆனால், அது எப்போது என்பது நம் கர்ம வினையின் அழுத்தத்தைப் பொறுத்தது. மனம் முற்றிலும் அழிந்த பின் அங்கு மனிதனை இயக்குவது எது ? அதுவே இறைவன் என்னும் சக்தி. இத்தகைய மகான்கள் மனசாட்சியோடு நடக்கிறார்கள் என்றால் அது உண்மையே. காரணம் அவர்களுக்கு மனசாட்சி, உள்ளம் சாட்சி அனைத்தும் இறை சாட்சியே, இறைவனின் எண்ணமே. சற்குரு எப்போதோ அளித்த கருட காயத்ரீ மந்திரம் தற்போது தோன்றியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து எப்படி காப்பாற்றும் என்ற ஐயப்பாட்டை எழுப்பியுள்ளார் ஒரு அடியார். கொரோனா நாம் இன்று கேள்விப்படும் ஒரு நோய் உருவாக்கும் கிருமி என்றாலும் இன்னும் குறைந்தது 2000 நோய் உருவாக்கும் கிருமிகள், வியாதிகள் தோன்ற உள்ளன என்றும் அதை எதிர் கொள்ளும் வழிபாட்டு முறைகளையும் சித்தர்கள் அளித்துள்ளார்கள் என்பதே நம்மை வியக்க வைக்கும் ஆச்சரியமாகும்.

ஸ்ரீகாலபைரவர் பைரவர்
சூரிய பகவான் ஆக்கூர்

அடுத்த வாரம் ஒரு ஊருக்குப் போக இன்றே நாம் ரயிலில் டிக்கட் ரிசர்வ் செய்வதைப் போல அடுத்த 50 ஆண்டுகளில் நடக்கப் போவதை தங்கள் ஞான திருஷ்டியால் உணர்ந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்தவர்களே சித்தர்கள். உதாரணமாக, கொரோனா வைரஸ் என்பது coronavirus என்றோ அல்லது குழுக்குறியாக CoV என்றுதானே குறிக்கப்படும். இந்த குறியீடுகளுக்கு எண் கணித சூத்திரம் கேதுவிற்கு உரிய ஏழாக வரும். ஏழு எண்ணின் குசா எண் ஐந்து. குசா சக்தி எப்போதும் நன்மையைத்தான் செய்யும். கருடன் சுமார் பத்து மைல் சுற்றளவில் உள்ள ஒரு சுண்டெலி சாப்பிட்ட வயிற்றுடன் இருக்கிறதா, ஒரு பறவை நீர் அருந்திய நிலையில் இருக்கிறதா என்றெல்லாம் அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையது என்றால் கருடன்களுக்கு எல்லாம் சக்கரவர்த்தி கருடாழ்வார் எத்தகைய வல்லமை உடையவராக இருப்பார். அவர் நாராயண மூர்த்தியின் பாதக் கமலங்களில் சேவை சாதிக்கிறார் என்றால் அது லட்சுமியின் பாதக் கமலங்களில் ஆற்றும் சேவையையும்தானே குறிக்கும். நான்கு பாதங்களில் பதியும் கருடாழ்வாரின் தலை ஐந்தாவதாக அமையும்போது அங்கு குசா என்ற ஐந்து எழுத்து சக்தி தோன்றுமா, தோன்றாதா ? தொற்று நோய்களை மாய்க்கும் கடும்பாடு சித்தரின் திருநாமமும் ஐந்தெழுத்தில்தானே அமைந்துள்ளது. இதை உணருங்கள் சித்தர்களின் ஆற்றலை நினைத்து உங்கள் கண்களில் நீர் நிறையும். ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்த்த ஒரு அடியார் நம் சற்குருவிடம், “சற்குருவே, மனிதர்கள் அந்தப் படத்தில் வருவதைப் போல் உண்மையிலேயே சுவர் போன்றவற்றைத் தாண்டி, ஊடுருவிச் செல்ல முடியுமா ?” என்று கேட்டார். “அது என்ன பிரமாதமான வித்தை ? ஒரு நொடியில் இந்த நாயே (தன்னைச் சுட்டிக் காட்டி) அதை செய்து விடுமே. ஆனால் என்ன பிரயோசனம், ராஜா. நீ அந்த வித்தையை அறிந்த மறுவிநாடி ஏதாவது ஒரு நடிகையின் பாத்ரூமில்தானே நிற்பாய் ?” என்று கேட்டார் நம் சற்குரு. கேள்வி கேட்ட அந்த அடியார் தலையைக் குனிந்து கொண்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ? ஆனால், கண் சிமிட்டாது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகள் சிறிது சிறிதாக நம் மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். உள்ளத்தில் ஒளிரும் இறைவனின் ஒளியைக் கண்ட பின் நடிகைகளின் நிர்வாணக் காட்சிகள் எல்லாம் தூசி, தூசி, தூசியேதான்.

ஸ்ரீதான்தோன்றி ஈசன் ஆக்கூர்

ஒரு முறை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் குரங்குப் படைகள் இனந் தெரியாத காய்ச்சலால் மடிந்த போது ஆஞ்சநேய மூர்த்தி வானமார்கமாக பறந்து வந்து திருஅண்ணாமலை கீழ்பெண்ணாத்தூரில் அருள்புரியும் ஸ்ரீகடும்பாடு சித்தரை தரிசனம் செய்து அந்த குரங்குப் படைகளுக்கு எல்லாம் நிவாரணம் பெற்றுத் தந்தார். பல லட்சம் வருடங்களுக்கு முன் ஆஞ்சநேய மூர்த்தி அனுகிரகம் பெற்ற அதே சுப வேளையில் நீங்கள் இங்கு காணும் ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசுந்தரேச பெருமானை தரிசனம் செய்வதே உங்கள் மூதாதையர்கள் பெற்ற பெரும் பெறாகும். இவ்வாறு சனிக் கிழமை, திருவோண நட்சத்திரம், குரு ஹோரையில் இத்தல மூர்த்திகளை வணங்கி அருள் பெறுதலால் எத்தகைய கொடிய தோற்று நோய்களுக்கும் நிவாரணம் பெறலாம். இது இயலாவிட்டாலும் சனிக் கிழமையுடன் குரு ஹோரை இணைந்து வரும் நாட்களில் இத்தகைய தரிசனத்தை மேற்கொள்தலும் சிறப்பே. தவள சித்து, தவளை சித்து என்ற ஒரு சித்து உண்டு.

ஸ்ரீசூரியனும் சூரியபகவானும்
கீழ்பெண்ணாத்தூர்

ஸ்ரீநந்திமூர்த்தி கீழ்பெண்ணாத்தூர்

சென்னை மயிலையில் வாழ்ந்த ஸ்ரீசுந்தரராம் குருஜி என்பார் ஒருவரே இத்தகைய தவளை சித்திகளுடன் திகழ்ந்தவர். அப்பெருமான் தவளை சித்துகளை பெற்ற திருத்தலமே கீழ்பெண்ணாத்தூர் ஆகும். அதனால்தான் என்னவோ தவளை வடிவம் எடுத்து ஸ்ரீகடும்பாடு சித்தர் நம் சற்குருவின் காரில் அமர அவருக்கு தன்னுடைய பௌர்ணமி அன்னதான புண்ணிய பலன்களை தாரை வார்த்து அளித்து அதன் மூலம் தன் அடியார்களுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் எல்லையில்லா நோய் நிவாரண சக்திகளை பெற்றுத் தந்தார் நம் சற்குரு. இந்த பெருமைகளுக்கு எல்லாம் அணி வைத்தாற் போல இத்தல ஸ்ரீசுந்தரேச பெருமானும் ஸ்ரீமீனாட்சி அன்னையும் கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றனர். செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் இந்த அற்புத ஆலயத்தை தம்பதி சமேதராய் அடிப் பிரதட்சிணம் செய்து வலம் வந்து வணங்குதல் சிறப்பே. இந்த ஆலயத்தில் உள்ள தலவிருட்சமான வேப்ப மரத்திற்கு தாமே அரைத்த மஞ்சள் பூசி சுத்தமான குங்குமப் பொட்டிட்டு தவளை பாயசம் என்னும் ஜவ்வரிசி கலந்த பாயச தானம் அளித்தல் நலம். உடல் மன நலத்திற்கும் குடும்ப நலத்திற்கும் வழி வகுக்கும் அற்புத வழிபாடு இது. பிராணாயாம கலையில் உள்ளிழுத்தல், நிறுத்துதல், வெளிவிடுதல் என்ற மூன்று நிலைகள் உண்டு. இவற்றில் மூச்சை உள்ளே அல்லது வெளியே நிறுத்துதல் என்னும் யோக நிலையில் கரைகண்டவரே ஸ்ரீகடும்பாடு சித்தர் ஆவார். பொதுவாக, இத்தகைய கும்பகத்தில் தேர்ச்சி பெற்றவர்களை எந்த நோய் நொடிகளும் அண்டுவதில்லை என்பது பலரும் அறிந்த கோட்பாடாக இருந்தாலும் தக்க சற்குருவின் வழிகாட்டுதலின்றி இவ்வாறு கும்பக யோகத்தைப் பயில்வதால் தோன்றும் வியாதிகளுக்கு நிவாரணம் கிடையாது என்பதை கவனத்தில் கொள்ளவும். இத்தகைய பிராணாயாம கலையில் தேர்ச்சி பெற விரும்பும் அடியார்கள் ஸ்ரீகடும்பாடு சித்தர் தியானத்துடன் கீழ்பெண்ணாத்தூர் சிவத்தலத்தில் பிராணாயாமம் ஆரம்பித்து நிறைவேற்றி வருதல் சிறப்பே. கும்பகம் என்னும் மூச்சைப் பயிற்சிக்கு ஆசி அளிப்பவர் இவர் என்றாலும் கும்பகம் என்னும் மூச்சை நிறுத்துவதைப் பயிலாமல் வெறுமனே மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் பயிற்சியை தொடர்ந்து நிறைவேற்றி வந்தாலே போதுமான ஆரோக்யத்தை நாம் பெற்று விட முடியும் என்பதே சித்தர்கள் அளிக்கும் உத்திரவாதம். காய்ச்சல் போன்ற தொற்று நோய்களிலிருந்து வருமுன் காப்பாக நிவாரணம் பெற விரும்புவோர்கள் புகை போட்டு பழுக்க வைக்காத அல்லது பச்சை (மோரிஸ்) வாழைப்பழங்களை சுவாமிக்கு நைவேத்தியமாக வைத்து இத்தலத்திலோ, திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலோ அல்லது எந்த தலத்திலும் பசு மாடுகளுக்கும், பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் தானமாக அளித்தல் சிறப்பே. இவ்வாறு மற்றவர்கள் நலமுடன் வாழ தானம் அளிப்பதே நோய் நிவாரண சக்திகளைப் பெருக்கும் வழிபாடாகும். சொத்துக்கள், நல்ல குண நலன்கள் போன்றவை மட்டும்தான் பாரம்பரியமாக மனித வாழ்வைத் தொடரும் என்று கிடையாது, வியாதிகளும் வேதனைகளும் சந்ததிகளைத் தொடரும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் வேண்டாம். ஆனால், எது நம் சந்ததிக்கு வரும் என்பதை மட்டும் எவராலும் பகுத்துக் கூற முடியாது. இந்த விஷயத்தில் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ள விரும்புவோர் இங்குள்ள வேப்பமரத்தில் அடியில் அமர்ந்து தியானித்தலால் வியாதி, சொத்து பிரிவினை, அறிவியல், சட்டம் போன்ற எத்துறையிலும் சிறந்து விளங்கலாம் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் கீழ்பெண்ணாத்தூர் திருஅண்ணாமலை

வேப்பிலையில் குடிகொண்டுள்ள பாரம்பரிய கைவல்ய தேவதைகள் இந்த அறிவை இத்தலத்தில் மட்டும் நல்கும் சக்தியைப் பெற்றுள்ளன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம் ஆகும். உதாரணமாக, நம் தமிழ்நாட்டிலுள்ள ஒரு பிரபலமான வசதிமிக்க குடும்பமே சந்ததியில்லாமல் வாடுகிறது. இவ்வாறு சந்ததி இல்லாத காரணத்தையும் அதை நிவர்த்திக்கும் வழிபாட்டு முறைகளையும் உணர்விப்பதே இத்தல வழிபாடுகளாகும். இத்தல நவசாளரம் அருகே எழுந்தருளி இருக்கும் நந்தி மூர்த்தியின் அருகே அமர்ந்து தியானித்தலால் எண் கணிதம், குசா, பரிணாமம் போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கலாம் என்பதில் ஐயமில்லை. வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை எந்த மாதத்திலும் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும். தியானத்திற்குப் பின் இத்தலத்தை ஒன்பது முறை பிரதட்சிணம் வந்து வணங்குதலால் தியானத்தில் விளைந்த சக்திகள் உடலில் பரிணாமம் கொள்ளும் என்பதே இத்தல சிறப்பாகும்.

ஸ்ரீவாமதேவ பத்மபாதம்
கீழ்பெண்ணாத்தூர்

மனிதன் மரணத்தை அடையும் முன் மனத்தை மற்றும் செம்மையாக மாற்றி விட்டால் போதாது, உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் நல்வழியில் ஆக்கம் பெற வேண்டும் என்பது முக்கியம். இத்தகைய ஞான வேள்விக்கு வழிகாட்டுவதே கீழ்பெண்ணாத்தூர் திருத்தலமாகும். நம் சற்குருவைப் போல் ஞானக் கண் கொண்டவர்கள் இத்தலத்தின் கோபுரக் கலசங்கள் கடும்பாடு என்னும் யோக நிவாரண சக்திகளை சதா வெளிவிடும் ஒளி பிழம்பு தீபங்களாகப் பிரகாசிக்கின்றன என்பதைக் கண்டு மகிழலாம். மற்றவர்கள் என் செய்வது ? லட்டு, ரசகுல்லா போன்ற உருண்டை வடிவ இனிப்பு பதார்த்தங்களை அமாவாசை, பௌர்ணமி போன்ற பூர்ண திதி நாட்களில், ரோகிணி நட்சத்திர நாட்களில் அன்னதானமாக அளித்து வருதலால் இது எத்தனையோ இனந்தெரியாத காரணம் காண முடியாத வியாதிகளுக்கு மருந்தாக அமையும் என்பதோடு மட்டுமல்லாமல் குரு நம்பிக்கையையும் இறை நம்பிக்கையையும் பலப்படுத்தும் சாதனமாகவும் அமையும். தாங்க முடியாத வேதனையை வியாதிகளாலோ மற்ற காரணங்களாலோ அனுபவிப்பவர்கள் மேற்கூறிய தான தர்மங்களால் நலமடைவர் என்பது உறுதி. இருள் நீக்கும் மந்திரமாவது நீறு என்று தொடங்கும் தேவாரப் பதிகம், மருள் நீக்கும் கருட காயத்ரீ போன்ற பல்வேறு குரு துதிகளுடன் பல நோய் நிவாரண துதிகளையும் ஓதும் எண்ணம் உடையவர்கள் கீழ்க்கண்ட மந்திரங்களையும் ஓதிப் பயன்பெறலாம். எதிர்காலத்தில் தோன்றப் போகும் பல கொடுமையான நோய்களை நீக்கும் இந்த நிவாரணத் துதிகளை அளித்து அவற்றிற்கு உகந்த ஹோமங்களையும் அன்னதானங்களையும் இயற்றி இந்தத் துதிகளை எல்லாம் நம் சற்குருவே செறிவுறச் செய்துள்ளதால் அத்தகைய ஹோமங்களையும் அன்னதானங்களையும் நிறைவேற்ற முடியாத நிலையில் முடங்கிக் கிடப்பவர்கள் கூட இந்தத் துதிகளை ஓதி பயன்பெறலாம் என்பதே சற்குருவிற்கு தம் அடியார்கள் மீதுள்ள கருணையைப் பறைசாற்றும் சான்று ஆகும்.
ஓம் தத் புருஷாய வித்மஹே
அம்ருத ஔஷத தேவாய தீமஹி
தந்நோ நெல்லுவாய் தன்வந்த்ரி ப்ரசோதயாத்

ஸ்ரீவலஞ்சுழி அமிர்தத்வம்
கீழ்பெண்ணாத்தூர்

சிவகாம சுந்தரி நீயே
அபிராமவல்லி தாயே
நான் வணங்கும் தெய்வம் நீயே
அங்காளி தேவி தாயே
யாதுமாகி நின்ற தாயே
தீது நன்மை ஒன்றும் அறியேன்
அன்று நினைவின்றி திரிந்த நாயேன்
இன்று வினையின்றி பாட வந்தேனே
மகத்தான அன்னதானம்
அகத்தீசர் சொன்ன வேதம்
ஏற்கும் பணியை செய்ய வைத்தாயே
ராமன் அணைப்பில் அன்பை வைத்தாயே
திருக்கயிலாய நாதா
பொதிய முனி வேதா
நின் பாதம் பெற வந்தேனே
ராமன் காட்டும் வழிபிடித்தேனே
வியட்டி பிரணவம் சமட்டி பிரணவம் போல் நோய் நிவாரண சக்திகளும் இடஞ்சுழியாகவும் வலஞ்சுழியாகவும் செயல்படும் திருத்தலமே கீழ்பெண்ணாத்தூர் சிவத்தலமாகும். இந்த அதியற்புத நிவாரண சக்திகளை அடியார்கள் பெற்று எத்தகைய கொடிய வியாதிகளிலிருந்தும் நிவாரணம் பெறவே நம் சற்குருவால் மேற்கண்ட மந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநெல்லுவாய் தன்வந்திரி மூர்த்தி தியானத்துடன் ஒன்பது பிரதட்சிணங்களையும், ஸ்ரீவாமதேவ சிவ மூர்த்தி தியானத்துடன் ஒன்பது பிரதட்சிணங்களையும் இத்தலத்தில் நிறைவேற்றுவது சிறப்பாகும். ஒன்பதின் மடங்காக 36, 108 என்று முறையிலும் அவரவர் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்வதும் சிறப்பே. பொதுவாக, இறைமூர்த்திகளின் நாமமே கலியுலகில் அவர்களுக்கு சூட்டப்படும் என்பது இயல்பாக இருந்தாலும் கீழ்பெண்ணாத்தூர் சிவத்தலத்தில் நோய் நிவாரண சக்திகளின் நாமங்களாலேயே இவ்விரு மூர்த்திகளும் சித்தர்களால் அழைக்கப்படுகின்றனர் என்பதே இம்மூர்த்திகளின் சிறப்பாகும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி கீழ்பெண்ணாத்தூர்

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு திருஅண்ணாமலையிலுள்ள நமது ஆஸ்ரம அன்னதான சேவைக்காக சென்றவர்கள் பெரும்பாலும் திருச்சி, சென்னையில் வசிப்பவர்களாக இருந்தார்கள். இவர்களில் சென்னையிலிருந்து வருபவர்களுக்கு கீழ்பெண்ணாத்தூர் ஊரே வழியாக இருந்தாலும் திருச்சியிலிருந்து திருஅண்ணாமலைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் வரும் அடியார்களையும் நமது சற்குரு திண்டிவனம் வழியாகவே வருமாறு பணித்தார். இதன் பின்னணியில் அமைந்த காரணங்களை அடியார்கள் அப்போது உணர முடியவில்லை என்றாலும் தற்போது உள்ள சூழ்நிலையில் அடியார்கள் நிச்சயம் சற்குருவின் இந்த செயலுக்கான அற்புத காரணத்தை உணர்ந்திருப்பார்கள் அல்லவா ? தற்போது உலகெங்கும் பரவி மக்களை அச்சுறுத்தும் கொரொனா வைரஸ் என்ற எதிர்வினை சக்தியே நம் சற்குருவின் செயலுக்கான காரணங்களில் ஒன்றாகும். உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்து வரும் ஒருவர் கொரோனா காய்ச்சலுக்கு கர்த்தாவாக மாறுகிறார் என்றால் திருஅண்ணாமலைக்கு மாதம் ஒரு முறையாவது சேவைக்காக வரும் அடியார்கள் ஏன் இத்தகைய காய்ச்சல்களுக்கு நிவாரண சக்திகளை அளிக்க முடியாது என்பதே நாம் சிந்தித்து உணர வேண்டிய ஆத்ம விசார விடையாகும். இவ்வாறு தம் பக்தர்களை மட்டும் அல்லாது இந்த உலகையே காத்து இரட்சிக்க திருவுள்ளம் கொண்ட நம் சற்குரு இயற்றிய பன்னெடுங்காலத் திருப்பணியே இவ்வாறு சுமார் 50, 60 மைல்கள் சுற்றி வந்து திருஅண்ணாமலை அன்னதானத்தில் தம் அடியார்களை பணியாற்ற வைத்த திருப்பணியாகும். அப்போது நம் சற்குருவிடம் பணியாற்றிய ஒரு அடியாருக்கு நோய் நிவாரண சக்திகள் பரிணமிக்கும் ஒன்பது எழுத்து கொண்ட முருக நாமத்தை அவருடைய வியாபார வணிக வளாகத்திற்கு அளித்து நோய் நிவாரண சக்திகளை மாவட்ட மையமாக விளங்கிய ஒரு நகர மருத்துவ மனை அருகில் நிரவச் செய்ததே மாபெரும் சித்த கருணை மகாத்மியமாகும். அந்த வணிக வளாகம் நோய்கள் தேய்ந்து மறைய வேண்டிய மேற்கு திசையை நோக்கி விளங்கியதும் சற்குருவின் கருணையை விளக்கும் கலங்கரை விளக்கமாகும். நம்பினோர்க்கு நடராஜன் இறைவன் மட்டுமல்ல, சற்குருவும்தான் !
ஒரு முறை அயல்நாட்டவரின் படையெடுப்பைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறியபோது நம் சற்குரு, “நாளையே நம் நாட்டை வேறு ஒரு அன்னிய நாட்டவர் அடிமையாக்கி சிவன் அல்லாத வேறு ஒரு தெய்வத்தை அவர்கள் வணங்கும்படி வற்புறுத்தினால் அடியேன் அதற்காக சற்றும் கலங்க மாட்டேன். அவர்கள் சொல்லும் திருத்தலத்திற்குச் சென்று அங்கு அமைதியாக அமர்ந்து நமசிவாய நமசிவாய என்று சிவனின் நாமத்தைத்தான் மனதிற்குள் ஓதிக் கொண்டிருப்பேன், அடியேன் மனதிற்குள் ஓதும் நாமத்தை எந்த சக்தியாலும் கண்டு கொள்ள முடியாது”, என்று கூறினார்கள். இன்றைய சூழ்நிலையும் கிட்டத்தட்ட அவ்வாறுதான் உள்ளது. அனைத்து திருக்கோயில்களிலும் இறைவழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில் அரசாங்கமும் இறைவனின் ஒரு அங்கமே என்று நம் முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதால் வரும் ராம நவமி, சித்திரை சதயம் போன்ற நாட்களில் அவரவர் இல்லங்களில் அல்லது தங்கி இருக்கும் இடங்களிலேயே சந்தனம் அரைத்து அதை உடம்பில் 36 இடங்களில் (வீடியோ காண்க) பூசி மந்திரமாவது நீறு அல்லது அவரவருக்குத் தெரிந்த இறை நாமங்களை நாள் முழுவதும் ஓதி வருவதால் நம் சற்குரு கூறிய வண்ணம் சந்தனக் காப்பு இட்ட பலன்களை அவர்களும் இந்தச் சமுதாயமும் பெறும் என்பது உறுதி. பூஜைகள் முடிந்த பின்னர் திருமணமான பெண்கள் தங்கள் கணவன்மார்களுக்கு பாத பூஜைகளை நிறைவேற்றுவதால் இத்தகைய ஏகதத்வ சந்தனக் காப்பில் விளையும் பலன்களை திருமணமான பெண்களும், பெற்றோர்களுடன் சேர்ந்து மந்திரங்களை வாய் விட்டு ஓதும் குழந்தைகளும் பெறுவர். திருமணமாகியும் தனித்து வாடும், வாழும் பெண்கள் இறை நாமங்களை அல்லது கணவன்மார்களின் நாமங்களை ஓதியவாறே துளசி அல்லது வில்வம், வேப்பமரம் போன்ற விருட்சங்களை வலம் வந்து வணங்குவதால் மேற்கண்ட பலன்கள் அனுகிரகமாக பொழியும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி கலயநல்லூர்

ஸ்ரீபடே சாகிப் சுவாமிகள், ஸ்ரீகடும்பாடு சித்தர், ஸ்ரீகசவனம்பட்டி சித்தர் போல் மக்களின் நோய் நிவாரணத்திற்காக அரும்பாடுபட்ட உத்தமர்களில் ஒருவரே ஸ்ரீசுந்தரானந்த மகரிஷி ஆவார். தியானத்தில் முன்னேறி இருப்பவர்களே ஸ்ரீசுந்தரானந்த மகரிஷியின் போதனைகளால் உடனடிப் பலன்களை உணர முடியும் என்றாலும் தற்போது திருத்தலங்களில் வழிபாடுகளை இயற்ற முடியாமல் தவிப்பவர்கள் இம்மகானின் தோத்திரங்களைப் பாடி தியானித்தலால் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், இந்தச் சமுதாயத்திற்கும் தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை அளிக்க முடியும் என்பதால் ஸ்ரீசுந்தரானந்த மகரிஷி அருளிய நோய் நிவாரண காப்பு துதியை இங்கு அளிக்கிறோம்.
ஓம் தத் புருஷாய வித்மஹே தட்சிணாமூர்த்தி மகாதேவாய தீமஹி
தந்நோ சண்ட பிரசண்ட சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வர ப்ரசோதயாத்
மூடித் திறக்கின் அகம் காட்டும்
மூடித் திறக்கின் முகம் காட்டும்
மூடித் திறக்கின் அகமுகம் காட்டும்
மூடித் திறக்கின் முகஅகம் காட்டும்
மூடித் திறக்கின் முற்றிலும் காட்டுமே
என்ற மந்திரத்தை வாய் விட்டு ஓதுதல் சிறப்பு. இந்த துதியில் உள்ள காயத்ரீ மந்திரத்தை ஓதும்போது திருஅண்ணாமலை தசமுக அஸ்வமேத தரிசனத்தையும் மற்ற ஐந்து வரிகளை உச்சரிக்கும்போது முறையாக சிவப்பு, நீலம், வெண்மை, கருநீலம், மஞ்சள் என்றவாறு செவ்வாய், சுக்ரன், சந்திரன், சனீஸ்வரன், பிரஹஸ்பதி இந்த நவகிரக மூர்த்திகளுக்கு உரித்தான நிறங்களை மனதிற்குள் வியாபித்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் சற்று சிரமமாகத் தோன்றினாலும் நாளடைவில் பழக பழக 81 அட்சரங்களுடன் அமைந்த இந்த வண்ண தியான முறை நம் வசத்தில் வந்து விடும். கிருமியால் ஏற்படும் எத்தகைய தொற்று நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பதற்காக ஸ்ரீசுந்தரானந்தா மகரிஷி அவர்களால் அளிக்கப்பட்டதே இந்த துதியாகும். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் அமர்ந்து இந்த துதியை ஓதி தியானித்தலே சிறப்பு என்றாலும் சிறிது சிறிதாக இந்த தியான நிலையை ஒரு மணி நேரத்திற்கு கூட்டிக் கொள்ள முயற்சி செய்தாலே போதுமானது என்பதே சித்தர்கள் அளிக்கும் வரப்பிரசாதமாகும். இந்த துதியில் உள்ள அட்சரங்கள் நமது ஒன்பது சரீரங்களை தூய்மைப்படுத்துவதுடன் நமது சூக்கும சரீரத்தை பரவெளியுடன் இணைக்கும் அற்புத பணியையும் நிறைவேற்றுவதால் இது பல தியான சித்திகளைப் பெற ஏதுவாகும். ஆனால், தொடர்ந்த பயிற்சி அவசியமே. தியானம் தொடர்வதால் கலயநல்லூரில் பொலியும் அமிர்தகலசத்தின் அமிர்த சக்திகளை இறைவன் அனுகிரக சக்தியாக அருள்வார் என்பதே மேற்கண்ட துதியில் விளையும் 108 பலன்களில் ஒன்றாகும்.

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் நன்னிமங்கலம் லால்குடி

மேற்கூறிய தியான முறையை தொடர்ந்து செயல்படுத்தி வருவோர்க்கு அனுகிரகமாக ஸ்ரீசுந்தரானந்தா மகரிஷியால் அருளப்பெற்றதே இங்கு நீங்கள் காணும் சுந்தரேச பரிதிசாகை தரிசனக் காட்சி ஆகும். லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் (சென்னிமங்கலம்) திருத்தலத்தில் சூரிய பகவானின் தரிசனக் காட்சியே இங்கு நீங்கள் பெறும் சுந்தரானந்த சுந்தர அனுகிரகமாகும். இந்த சுந்தர அனுகிரகத்தில் ஐந்து சக்திகள் தோன்றி பரிணமிப்பதே இதன் பின்னணியில் அமைந்த இரகசியமாகும். சூரிய பகவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரேச மூர்த்தியை தரிசனம் செய்யும்போது சூரிய ஒளிக் கதிர்கள் சுவாமியின் மரகதம் என்னும் ஐந்து அட்சர ஒளி மேனியில் பட்டுப் பிரகாசிக்கின்றன. இந்த ஒளிக் கதிர்களோ நந்தி மூர்த்தியின் கொம்புகளின் வழியே சுவாமியின் திருமேனியை அடைகின்றன. இவ்வாறு சுவாமியின் திருமேனியை அடைந்த சூரிய ஒளிக் கதிர்கள் சுவாமியின் மரகத் திருமேனியால் மார்த்தாண்ட பிரசாதமாக அருளப்படும்போது அதில் இறைவியின் நந்தியாக அமர்ந்துள்ள நந்தி மூர்த்தியின் தரிசன அனுகிரகமும் இறைவி ஸ்ரீமீனாட்சி தேவியின் அனுகிரக கதிர்களும் இந்த மார்த்தாண்ட கதிர்களில் இணைகின்றன. இவ்வாறு பிரதிபலிக்கப்பட்ட சூரிய ஒளிக்கதிர்களே ஐந்து இறை சக்திகளின் சங்கமமாக சுந்தரேச பரிதிசாகை என்ற அபூர்வ சக்திகளாக இறை தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகின்றன என்றால் பங்குனி மாதத்தில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வர மூர்த்திக்கு நிகழும் பாஸ்கர பூஜையின் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா ?

பிராணபிரதிஷ்டையில் மகாவில்வம்

தற்போது திருத்தலங்களை தரிசனம் செய்வது இயலாது என்ற சூழ்நிலை இருந்தாலும் தாங்கள் ஏற்கனவே பெற்ற பங்குனி மாத பாஸ்கர பூஜையை நினைவு கூர்ந்தோ அல்லது இங்கு அளிக்கப்பட்ட இத்தகைய அரிய அரிய பாஸ்கர பூஜை அனுகிரகத்தை பக்தர்களின் நலனுக்காக அளித்த ஸ்ரீசுந்தரானந்த மகரிஷி தியானத்துடன் தரிசனம் செய்து ஆலயங்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும்போது இறைவனுக்கு நன்றி கூறி சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக, தானமாக அளித்தலால் மேற்கூறிய சுந்தரேச பரிதிசாகை தரிசனப் பலன்களைப் பூரணமாகப் பெறலாம் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும். இத்தகைய மார்த்தாண்ட பூஜையால் ஸ்ரீசுந்தரேச சுவாமியின் லிங்கத் திருமேனியில் ஐந்து வித அனுகிரக சக்திகள் தோன்றுகின்றன. லலாடம், மாருதம், குமுதம், கௌசிகம், சுரந்தை என்பதே நான்கு எழுத்துக்களுடன் பரிணமிக்கும் ஐந்து வித சக்திகளாகும். இந்த சக்திகளை அனுகிரகமாகப் பெறும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் உருவாகும். மரகதம் என்னும் சொல் மேலெழுந்தவாரியாக நோக்கும்போது ஐந்து எழுத்துக்களுடன் திகழ்வது போல் தோன்றினாலும் உண்மையில் இது லலாடம் முதலாகிய சக்திகளை கிரகிப்பதையே குறிக்கிறது என்பதே ஸ்ரீசுந்தரானந்த மகரிஷி தெரிவிக்கும் இறை இரகசியமாகும். தங்கள் நியாயமான தேவைக்காக அதாவது குழந்தைகள் திருமணம், வாகனம், வீடு போன்ற வசதிகளுக்காக அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி கடன் சுமையால் தவிப்பவர்கள் இத்தகைய தரிசனத்தால் பயனடைவர். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகமாகும். கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற கண் கோளாறுகளால் அவதியுறுவோரும், கான்சர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், கண் மங்கல், பார்வை குறைவு போன்ற அனைத்து விதமான கண் நோய்களுமே இந்த பாஸ்கர பூஜை தரிசனத்தால் குணமாகும் என்பதே குரு மாதமான பங்குனியில் சூரிய பகவான் ஸ்ரீசுந்தரேச மூர்த்திக்கு இயற்றும் பூஜையின் மகத்துவமாகும். ஆயுர்வேதம் என்ற வைத்திய முறை பற்றி பலரும் அறிந்திருந்தாலும் இதன் மகத்துவத்தை அறிந்தோர் ஒரு சிலரே. இறைவன் உண்மை. இறைவனைப் புகழும் வேதமும் உண்மையே என்பது ஆன்றோர் வாக்கு. அது போன்றதுதான் ஆயுர்வேதமும் என்பதே நாம் உணர்ந்து தெளிய வேண்டிய உண்மை. அவ்வாறு இருக்கும்போது ஏன் எவ்வளவோ வியாதிகளை ஆயுர்வேதம் என்ற மருத்துவ முறையால் குணமாக்க முடியவில்லை என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா. ஆயுர்வேத வைத்திய முறையின் அடிப்படை கருத்துக்களை அறிந்து கொள்ளாமல் வைத்தியத்தில் குதிப்பதே ஆயுர்வேதம் பலனளிக்காமல் போவதற்கு மூல காரணமாகும். ஆயுர்வேத வைத்தியத்தின் மூலமாக நோய் கண்டறியும் முறையில் நாடியைப் படிக்கும் தகுதி உள்ளவர்களை இப்போது விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வாறு ஒருவேளை வியாதியின் தன்மையை கண்டறிந்தாலும் வியாதிக்கு உரிய மருந்தைத் தயாரிக்க தேவையான மூலிகைகளை பிராண பிரதிஷ்டை செய்து அந்த மூலிகைகளின் சக்தி சிறிதும் குறையாமல் மூலிகைகளைப் பெறும் முறையை அறிந்தவர்கள் அதை விட விரல் விட்டு எண்ணும் வகையிலேயே அமைந்துள்ளனர் என்பதே உண்மை. பொதுவாக, பூச்சி அரிக்கப்பட்டோ, காய்ந்தோ, சுருங்கியோ அல்லது எந்தவிதமான இயற்கை சூழலால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வில்வம் ஒரு வருடத்திற்கும், துளசி ஆறுமாத காலத்திற்கும் தன்னுடைய இயற்கை தெய்வீகத் தன்மையுடனே இருக்கும் என்பது உண்மை ஆயினும் இந்த விதிமுறை முறையாக பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட தளங்களுக்கே அதாவது தெய்வீக மூலிகை தாவர இலைகளுக்கு மட்டுமே உண்டு.

ஸ்ரீராமானுஜர்

தற்காலத்தில் பிராண பிரதிஷ்டை, கட்டு மந்திரம், விடுப்பு மந்திரம் போன்ற பல தெய்வீக இரகசியங்களை பலரும் அறிந்து கொள்ளாது இருப்பதால் கலியுக நியதியாக இறைவனுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்பட்ட உணவுகளை நாம் இறை பிரசாதமாக ஏற்பதால் இந்த பிராண பிரதிஷ்டை விதியிலிருந்து நாம் விலக்கு பெறுகிறோம். அதனால்தான் நம் சற்குரு போன்றோர் எப்போதும் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்ட உணவு வகைளை மட்டுமே உண்ண வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார்கள். வாய்விட்டு வெளிப்படையாக நைவேத்திய மந்திரங்களை உணவு விடுதிகள், திருமண விருந்து போன்ற இடங்களில் ஓத முடியாவிட்டாலும் மனதிற்குள் நைவேத்திய மந்திரங்களை ஓதி அதன் பின்னர் உணவை ஏற்று வந்தால் எந்த விதமான தொற்று வியாதிகளும் நம்மை அண்டாது என்பது உறுதி. அமெரிக்காவில் தேநீர் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட விவேகானந்தருக்கு அளித்த தேநீரில் விஷம் கலந்திருப்பதை தன் ஆருயிர் சீடனுக்கு அந்த தேநீரிலிருந்தே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் காட்சி அளித்து எச்சரித்துக் காப்பாற்றிய நிகழ்ச்சி நீங்கள் அறிந்த ஒன்றுதானே. இங்கு நீங்கள் காணும் மகாவில்வம் முறையாக பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீசுந்தரேஸ்வர பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிவப் பிரசாதமாகும். இந்த மகாவில்வ தரிசனமே எத்தனையோ தீர்க்க முடியாத வியாதிகளுக்கு அருமருந்தாக அமையும் என்பதால் பக்தர்கள் இந்த மகாவில்வத்தை தரிசித்தவாறே மந்திரமாவது நீறு தேவாரப் பதிகத்தை அல்லது மேற்கூறிய ஸ்ரீசுந்தரானந்த மகரிஷி அருளிய காப்புத் துதியை ஓதி வருவதால் அற்புத பலன்களை கண் கூடாகக் காணலாம். நன்னிமங்கல்ம் ஸ்ரீசுந்தரேஸ்வர பெருமானுக்கு நாக காவல் தேவதைகள் அதிகமே. சாதாரணமாக கீழ்க் காணும் ஒன்பது நாகதேவதைகள் இந்த சிவாலயத்தை காவல் புரிந்த வண்ணம் உள்ளனர்.
1. கவிஞ்சலம்
2. நீலமேகம்
3. இலகுசம்ரட்சகம்
4. வாகுளம்
5. சுப்ரதீபம்
6. விமுகம்
7. சலாலகம்
8. வல்லபேயம்
9. ஊர்த்வரேதசம்
உண்மையில் இவர்களை நாக தேவதைகள் என்பதை விட நாக சக்திகள் என்பதே பொருத்தமானது. காரணம் சாதாரணமாக கவிஞ்சலம் என்ற ஒரே ஒரு பாம்பின் வடிவத்தில் மேற்கூறிய ஒன்பது நாக தேவதைகளும் இணையும், இணைவர். இந்த ஒரு நாகமே இறைவனின் லிங்க வடிவத்தின் மேல் இரவு நேரம் முழுவதும் துயில் கொண்டு இறைவனுக்குப் பாதுகாவலாய் விளங்கும். பிரதோஷம், சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களிலும் திருவிழா காலங்களிலும் இந்த நாகதேவதைகளே மேற்கூறிய ஒன்பது நாக சக்திகளாக, வடிவுகளாக, உருவங்களாகத் திகழ்ந்து இந்த திருக்கோயிலை எந்த உருவத்திலும், புழு பூச்சி வடிவத்தில் கூட வலம் வந்து காப்பதுண்டு.

“பஞ்சமுகம் தசகரம்” லால்குடி

மக்கள் நெரிசல் அதிகமாகும்போது இந்த நாக தேவதைகள் 90, 900 என்ற கணக்கில் பெருகுவதும் உண்டு. இந்த நாக சக்திகளின் அட்சர எண்ணிக்கையும் நோய் நிவாரண சக்திளுக்கு இணையாகத் திகழ்வதே இத்தலத்தின் நோய் நிவாரண காப்பு சக்திகளுக்கு எடுத்துக்காட்டாய் பொலிகிறது. மூர்த்தி, தீர்த்தம், தலம் முறையாக தரிசிக்க சற்குரு வாய்க்கும் பராபரமே என்பது ஆன்றோர் வாக்கு. இவ்வாறு சற்குருவை அடையும்போது நம் உடல் முறையான ஆரோக்யத்துடன் திகழ வழிகாட்டுவதும் இத்தகைய திருத்தலங்கள் என்பதை உணர்த்துவதே ஸ்ரீரங்கம் திருத்தலமாகும். இத்தல மூர்த்தியான ஸ்ரீரங்கநாதர் ஐந்து தலை ஆதிசேஷன் மேல் அறிதுயில் கொள்ள, ஸ்ரீஅமிர்த தன்வந்திரி அமிர்த கலசத்துடன் இத்தலத்தில் திகழ, ஆதிசேஷனின் அவதாரமான ஐந்தெழுத்தைக் குறிக்கும் ஸ்ரீராமானுஜர் இத்தலத்தில் தூல உடலுடனே ஜீவ சமாதி கொள்ள, பஞ்ச பூதங்களும் மானுட வடிவில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற, கொள்ளிடம் என்ற பொன்னிநதி ஸ்ரீரங்கநாதரின் பாதங்களை வருடிச் செல்ல இவ்வாறு ஐந்து நோய் நிவர்த்தி சக்திகளுடன் திகழும் தலம் இது ஒன்றே என்பது இத்தலத்தின் மகிமையாகும். அதனால்தான் என்னவோ நம் சற்குரு இத்தலத்தில் உழவாரப் பணிகளுக்காகவும் ஸ்ரீரெங்கநாதரின் தரிசனத்திற்காகவும் என அபூர்வமாக இரண்டு முறை இத்தலத்தில் எழுந்தருளி நோய் நிவாரண சக்திகளைப் பிரதிஷ்டை செய்தார். இந்த நோய் நிவாரண சக்திகளை இன்றும் பெருமாள் அனுகிரகமாக, சற்குருவின் கனிந்த செல்வமாகப் பெற விழைவோர் இத்தல வில்வ மரத்திற்கு தாமே அரைத்த மஞ்சளை சார்த்தி குறைந்தது 21 முறை வலம் வந்து வணங்குதல் என்பது சிறப்பு மட்டும் அல்ல இந்த மானிட உடலை எடுத்த மனிதர்களுக்கு கிட்டும் அரும் பெரும் வாய்ப்பு. மந்திரம் என்ற ஐந்தெழுத்தில் ஆரம்பமாகும் திருநீற்றுப் பதிகத்தை இத்தல ஸ்ரீகருடாழ்வார் முன்னிலையில் மண்டியிட்டு ஓதுவதால் கிடைக்கும் பலன்கள் அமோகம். மண்டியிட்டு பிரார்த்தித்தலால் கிட்டும் பலன்களை விவரிக்க நூறு ஆண்டுகளும் போதாது என்றாலும் இத்தல இறைவனை வழிபட்ட பஞ்சபூதங்களும் இவ்வாறு ஸ்ரீகருடாழ்வார் முன் மண்டியிட்டே ஸ்ரீரங்கநாதரை வணங்கினர் என்பதே இந்த வழிபாட்டைப் பற்றி நாம் ஓரளவேனும் அறிந்து கொள்ள உதவும் மகாத்மியமாகும். சுருக்கமாகக் கூறுவதானால் “மந்”, “ரம்” என்ற ஒலிகளுக்கு இடையே வரும் “தி” என்ற ஒலியானது காவிரி, கொள்ளிடம் என்ற அமிர்த தாரை சக்திகளுக்கு இடையே துலங்கும் ஜீவாமிர்த சக்தியாய்ப் பொலிகிறது. இதைப் பற்றி மேலும் விவரம் அறிந்து கொள்ள விழைவோர் கருடாழ்வார் சன்னதியிலோ ராமானுஜர் சன்னிதியிலோ திருநீற்றுப் பதிகத்தை இடைவிடாது ஓதி அறிந்து கொள்ளலாம் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும்.

சென்னியில் வைக்கும் ஒரே ஆபரணம்

ஒரு முறை நம் சற்குரு லால்குடியிலுள்ள தம் அடியார் ஒருவரின் இல்லத்தில் திருஅண்ணாமலை கார்த்திகை தீப அன்னதானத்திற்காக நெல் மூட்டைகள் பலவற்றை பாதுகாப்பாக வைத்திருந்து கார்த்திகை தீபம் சமயத்தில் அந்த நெல்லை அரிசியாக அரைத்துத் தரும்படிக் கேட்டுக் கொண்டார். இடைப்பட்ட காலத்தில் அந்த அரிசி மூட்டைகளை எலி தொந்தரவிலிருந்து பாதுகாப்பதற்காக அந்த அடியார் நெல் மூட்டைகள் வைத்திருந்த இரு அறைகளிலும் கம்பி வலையை அமைத்து அவ்வப்போது சாம்பிராணி தூபம் இட்டு வந்தார். இவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தும் அந்த அறைகளில் நிறைய தேள்கள் பெருகி அந்த கம்பி வலைகளின் மேல் ஊர்ந்து செல்வது என்பது ஒரு சாதாரண காட்சியாக மாறி விட்டது. ஆனால், இதில் ஆச்சரியமான செய்தி என்னவென்றால் உரிய சமயத்தில் அந்த நெல் மூட்டைகளை எல்லாம் எடுத்து அரிசியாக அரைப்பதற்காக லாரியில் ஏற்றி அனுப்பியபோது இந்த பணிக்காக வந்த ஏழெட்டு அடியார்களில் ஒரு அடியார் கூட ஒரு தேளைக் கூட அந்த அறைகளில் காண முடியவில்லை என்பதே ஆகும். இன்றுவரை அந்த அடியார்கள் இந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. இது பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு அனுபவம். இன்று கொரோனா பாதிப்பால் பலரும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒரு உயர்மட்ட மருத்துவ அதிகாரி தந்த தகவல், “நம்மிடம் வரும் பல நோயாளிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ளதாகவே பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இவர்கள் எவரும் அபாயகட்டத்தை நெருங்காத நிலையில் இருப்பதே ஒரு புதிராக இருக்கிறது,” என்பதே. இப்போது மேலே உள்ள இரு நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள், நம் சற்குரு திருவாய் மலர்ந்து அருளிய சித்த பொக்கிஷத்தின் அருமை பளிச்சிடும். “சார், சிங்கம், புலி, கருநாகம் என்ற எல்லா கொடிய மிருகங்களும், விஷ ஜந்துக்களும் நம் அருகில்தான் உள்ளன. ஆனால், அவற்றை நீங்கள் பார்க்கவில்லை என்றால் அவற்றை இறைவன் உங்கள் கண்களுக்குக் காட்டவில்லை என்பதே உண்மை”. ஆத்ம விசாரம் செய்து இந்த பேருண்மைகளை நீங்கள் உணர்ந்து கொண்டால், இன்பமே எந்நாளும் இனி துன்பம் என்பது இல்லையே. ஸ்ரீரங்கம் கருடாழ்வார் முன் மண்டியிட்டு பிரார்த்திப்பதன் பின்னணியில் அமைந்த தெய்வீக இரகசியங்களை விவரிக்க முடியுமா என்று ஒரு அடியார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இறைவனின் கோவணத்திற்கு ஈடாக
எதைத்தான் தர இயலும் ?

நம் சற்குரு அளிக்கும் அனைத்து வழிபாடுகளின் பின்னணியிலும் ஆயிரக் கணக்கான தெய்வீக விளக்கங்கள் பொதிந்துள்ளன. அவற்றை அடியார்கள் ஆத்மவிசாரம் செய்து அறிந்து கொள்தலே சிறப்பு என்றாலும் ஒரு சில ஆன்மீக இரகசியங்களை தெரிந்து கொள்வது தவறு கிடையாது அல்லவா ? இவ்வாறு மண்டியிட்டு பிரார்த்திப்பதின் பின்னணியாக அமைந்துள்ளதே கோவண இரகசியமாகும். கோவண மகிமையைப் பற்றி ஸ்ரீஅகத்தியரின் சீடரான ஸ்ரீபோகர் மகரிஷி மூன்று ஆயிரம் லட்சம் பாடல்களை பாடியுள்ளார் என்றால் கோவண மகிமையை எப்படி சுருக்கமாகக் கூற முடியும். ஆனால், ஸ்ரீரங்கம் தலத்துடன் தொடர்புடைய கோவண இரகசியங்களே திருநல்லூர் திருத்தலத்தில் பொலிகின்றன. திருநல்லூரில் அப்பர் பெருமான் இரவு தங்கியிருந்தபோது அருகில் ஒரு வயதான அடியார் தன் பாதங்களை அப்பர் தலை மேல் வைத்தார். பெருமான் இது கண்டு தன் உறக்க இடத்தை வேறோர் இடத்திற்கு மாற்றிச் சென்றபோதும் அங்கும் அதே முதியவர் வந்து தன் பாதங்களை அப்பர் பெருமான் தலை மீது வைக்கவே அதனால் வெகுண்ட பெருமான் இவ்வாறு தன் தலையை அந்தப் பெரியவர் “உதைத்த” காரணத்தைக் கேட்டபோது அந்த பெரியவர் சிரித்துக் கொண்டே மறைந்து விட்டாராம். அப்போதுதான் தன் தலையைத் தன் திருப்பாதங்களால் தீண்டியவர் சாட்சாத் சிவபெருமான் என்று அறிந்து கொண்டாராம் அப்பர் பெருமான். ஆமாம், இதற்கும் கோவண மகிமைக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? சிவபெருமான் கோவணம் கட்டிய எளிய முதியவர் வடிவில் வந்தார் என்பதே சித்தர்கள் கூறும் சுவை. அது மட்டுமல்ல இத்தலத்தில் இறை அருளுக்குப் பாத்திரமான அமர்நீதி நாயனாரை இறைவன் சோதித்ததும் கோவண ஆடையைக் கொண்டுதானே ? திருநல்லூர் திருத்தலத்தில் ஆறு நாழிகைக்கு ஒரு முறை என சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு ஒரு முறை இறைவன் தன் சுய திருமேனியின் வண்ணத்தை மாற்றிக் கொள்கிறான் என்பது அனைவரும் அறிந்த இரகசியமே. இவ்வாறு ஐந்து வண்ணங்களுடன் திகழும் இறைவனைத் தரிசிப்பதே பஞ்ச பூதங்களின் சக்தியை எளிமையாக மக்கள் பெறும் வழிபாட்டு முறை என்று உணர்ந்து கொள்வதே பஞ்சபூதங்களின் வழிபாட்டுத் தலமான ஸ்ரீரங்கத்திற்கும் பஞ்சபூதங்களின் அனுகிரகத் தலமான திருநல்லூருக்கும் இடையே உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளக் கூடிய ஆன்மீகத் தொடர்பு ஆகும். இவ்வாறு தன் திருமேனியில் பொலியும் அமிர்த சக்திகளை தரிசன அனுகிரகமாக அளிப்பவர் திருநல்லூர் ஸ்ரீஅமிர்தலிங்கப் பெருமான் மட்டும் அல்ல நன்னிமங்கலம் ஸ்ரீசுந்தரேசப் பெருமானும் ஆவர் என்பதே இந்த இரு மூர்த்திகளும் பகிர்ந்து கொள்ளும் பங்குனி தெய்வீகச் சுவை ஆகும். இவ்வாறு ஒன்றுக்கொன்று மேலாக பரிணமித்தாலும் தெவிட்டாத சுவை அளிப்பதே சற்குருவின் வழிகாட்டுதல் என்ற தெய்வீகச் சுவை ஆகும்.

தமிழ் வருடப் பிறப்பு

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல ராகு பகவானின் ஆதிக்கத்தால் இவ்வுலகமே மன இருள் என்பதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் இவ்வேளையில் தமிழ் வருடமான சார்வரியும் ராகு பகவானுக்கு உரித்தான நான்கு எழுத்துக்களுடன் தோன்றுவதே இறை அருள் சுட்டிக் காட்டும் தன்மையாகும். இதற்கு மேலும் அணி சேர்ப்பதாக ராகு கேது என்ற பாம்புகளின் பிடியில், கால சர்ப்ப யோகத்தில் குரு உள்பட அனைத்து கிரகங்களும் சிக்கித் தவிக்கின்றன என்பதே இந்த வருடப் பிறப்பின் மகத்துவமாகும். நம்மைக் காக்கும் ஒரே சக்தி குரு சக்தி என்ற இறை நம்பிக்கை என்றாலும் குருவும் நீசமடைந்து இவ்வாறு கால சர்ப்ப யோகத்தில் திகழ்ந்தாலும் குரு நட்சத்திரமான விசாகத்திற்கு உரிய லக்னத்தில் சார்வரி வருடப் பிறப்பு அமைவதும் அது இந்த கால சர்ப்ப யோகத்திலிருந்து மீண்ட ஒரு கிரகமான சந்திரனுக்கு உரிய சந்திர ஹோரையில் திகழ்வதும் நமக்கு வழிகாட்டும் ஒரே குரு அனுகிரகமாக மலர்கிறது.

ஸ்ரீசுந்தரானந்தர் திருநல்லூர்

நீசமடைந்து குரு கிரகம் திகழும் மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெறுவதால் இது குருவின் நீசபங்கம் நிவர்த்தியாகி ராஜயோகம் பெற வழி வகுக்கிறது. இந்த ராஜ யோக சக்திகளை அடியார்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால் குரு ஒருவரே நம்மைக் கரை சேர்க்க வல்லவர் என்பதை ஆணித்தரமாக மனதில் இருத்தி உறுதியாக வழிபடுவதே ஒன்றே இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் கரை சேர்க்கும் மந்திரமாகும். இதை ஒரே வரியில் தெரிவித்தவரே மாதா அமிர்தானந்தா ஆவார்கள். மன தைரியம் அளிக்கவல்ல ஒரே கிரகம் கால சர்ப்ப யோகத்தில் சிக்கிக் கொள்ளாத, மன தைரியத்திற்கு உகந்த சந்திர பகவான் என்பதை எவ்வளவு தெளிவாக தம் உரையில் தெரிவித்து உள்ளார் மாதா. சார்வரி வருடப் பிறப்பு அமையும் 13.4.2020 திங்கட் கிழமை மாலை எட்டு மணி அளவில் ஒரு மீட்டர் அளவுள்ள வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற டூபைடூ அல்லது பருத்தி ஜாக்கெட் துணிகளை வைத்து அதன் மேல் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், கண்ணாடி வளையல் போன்ற மங்கலப் பொருட்களை வைத்து இறைவனை வணங்கி, இறை வழிபாட்டிற்குப் பின்னர் இத்தகைய மங்கள் பொருட்களை சுமங்கலிகளுக்கு தானமாய் அளித்தல் சிறப்பே. இந்த சுமங்கலி தானத்தை வருடப் பிறப்பு அன்று நிறைவேற்ற முடியாதவர்கள் அடுத்தடுத்த நாட்களில் விரைவில் குறிப்பாக திருத்தலங்களில் நிறைவேற்றுவது சிறப்பாகும். வசதி படைத்தோர் மேற்கண்ட மங்கலப் பொருட்களுடன் மூன்று கிராம் தங்க நாணயம் சேர்த்து தானமாக அளித்தல் சிறப்பாகும். இங்கு அடியார்கள் தரிசனம் செய்யும் ஸ்ரீசுந்தாரனந்தர் திருமேனியிலும் ராகு பகவான் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி சுவாமியின் திருஉருவத்தை முழுமையாக தரிசனம் செய்து பயன்பெறாத அளவிற்கு செயல்படுகிறார் என்றால் ராகு பகவானின் ஆதிக்க சக்திகளை நாம் ஆத்ம விசாரம் செய்து கொள்ள வழிகாட்டுவதே திருநல்லூர் பெருமானின் அனுகிரக சக்திகளில் ஒன்றாகும். இதைப் பற்றி ஓரளவேனும் அடியார்கள் உணர்ந்து கொள்ள உறுதுணையாக இருப்பதே பங்குனி மாதத்தில் நன்னிமங்கலம் ஈசன் மேல் தன் கிரணங்களைப் பரப்பி பூஜை நிறைவேற்றும் சூரிய பகவானின் அனுகிரக சக்திகளாகும். அனைத்து திருத்தலங்களும் மக்கள் தரிசனத்திற்கு கிட்டாத வகையில் முடக்கப்பட்டு இருந்தாலும் தங்கள் இல்லத்திலிருந்தே நன்னிமங்கலத்தில் சூரிய பகவான் ஆற்றும் பாஸ்கார பூஜையை மக்கள் கண்டு களிக்க குருவருள் வகை செய்துள்ளது என்றால் குருவருளால் சாதிக்க முடியாதது என்று ஒன்று உண்டா என்ன ? இதுவே நீச பங்க ராஜ யோகம் பெறும் குரு பகவானின் தன்மையும் ஆகும். நன்முறையில் இந்த அனுகிரக சக்தியை நம்பிக்கையுடன் பெற்றுக் கொண்டால், பகிர்ந்து கொண்டால் நம்மால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இப்புவியில் இல்லை. பலருக்கும் இவ்வருட பஞ்சாங்கமே கிடைத்திருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அடியார்கள் இங்கு அளித்துள்ள சார்வரி வருடப் பிறப்பு கிரக சஞ்சார நிலை கட்டத்தை மஞ்சள், பச்சரிசி மாவு, குங்குமம் என்ற மங்கலப் பொருட்களால் ஒரு நுனி வாழை இலைமேல் வரைந்து பயன்படுத்துவதும் சிறப்பே. புத்தாண்டு பூஜையின் நிறைவாக இறைவனுக்கு வெல்லம் கலந்த சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் சிறப்பு.

மூன்று வண்ண ரவிக்கை துணி வாங்க முடியாதவர்களுக்கு இந்த மூவண்ண சக்கரம் ஒரு பிராயசித்தமாக அமையும். சார்வரி தமிழ் வருடம் உதயமாகும் துலா லக்னத்திலிருந்து நான்காம் இடத்தில், இதய தானத்தில் குரு பகவான் ராஜ யோகம் கொண்டு அமர்ந்துள்ளார். குருவிலிருந்து நான்காம் தானமாக மேஷ ராசியில் எழுந்தருளி உள்ள சூரிய பகவானை லக்ன பகவான் தன் நேரடி பார்வையால் நோக்க லக்னாதிபதி சுக்ர பகவானோ ரிஷப ராசியில் ஆட்சி பெற்று எழுந்தருளி உள்ளார். மேலும் குரு பகவான் சுக்ர பகவானை தன் விசேஷமான ஐந்தாமிட பார்வையால் நோக்குகிறார். வருடப் பிறப்பு நாயகனான சூரியனுக்கு இருபுறமும் நல்லுறவு நாயகர்களாய் புதனும், சுக்ரனும் எழுந்தருளி உள்ளனர். இந்த ஜோதிட அம்சங்கள் விளக்கும் தாத்பர்யம் என்ன ? சற்குருவை தங்கள் இதயத்தில் வைத்து நம்பிக்கையுடன் வணங்குபவர்களுக்கு இந்த தமிழ் வருடம் நன்மையைத்தான் அருளும். இந்த கிரக சஞ்சார சாட்சியாக ஸ்ரீராமர் சீதை ஜாதகங்களையும் வைத்து வழிபட்டு தினமுமே இவ்விரு ஜாதகங்களையும் வணங்கி வந்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதாக பல இன்னல்களிலிருந்து மீளலாம். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி என்ற ஏதோ ஒரு உறவு முறை நம்மை கடைசி வரை காக்கும், பாதுகாக்கும் என்று பலரும் நினைத்திருப்பது உண்டு. ஆனால், அந்த ஒரே ஒரு உறவும் நம்மை விட்டு நீங்கும்போது நாம் நிராதரவாகப் போய் விட்டதாக நினைத்து மனம் சோர்ந்து முடங்கிப் போவது இயற்கை. “நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ ?” என்ற தத்துவ வரிகள் உங்களுக்கு ஒரு புது மனத் தைரியத்தை அளிக்கலாம். இவ்வாறு அந்த ஒருவனும் இறைவனே என்ற உண்மையை நாம் மனதார உணரக் கூடிய ஆண்டே இந்த சார்வரி வருடமாகும். எதுவும் மறைவதில்லை அனைத்தும் நிலையாக, சாஸ்வதமாக நிற்கக் கூடியதே என்ற இறை நம்பிக்கையை வளர்ப்பதே இவ்வருட மகாத்மியாகும். வெள்ளை, சிவப்பு, மஞ்சள் என்ற மூவண்ண பிளவுஸ் துணிகளை வைத்து சுமங்கலிகளுக்கு தானம் அளிக்கலாமா என்ற ஒரு அடியார் சந்தேகக் கணை ஒன்றைத் தொடுத்துள்ளார். வெள்ளை என்பது தூய்மையைக் குறிப்பதே தவிர அது அமங்கலத் தன்மையைக் குறிக்காது என்பதே வெள்ளை புடவையில் பவனி வரும் மாதா அமிர்தானந்தா நமக்கு தெளிவுபடுத்தும் தெய்வீகச் சுவையாகும். “நான் கோடிக் கணக்கான பக்தர்களைத் தரிசனம் செய்யும் பாக்யம் பெற்றுள்ளேன். ஆனால், இத்தனை கோடி மக்களிலும் இறை நம்பிக்கை உடைய, விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரையே சந்தித்திருக்கிறேன்,” என்பது அமிர்தானந்தா அன்னையின் வாக்கு. இவ்வாறு விரல் விட்டு எண்ணக் கூடிய பக்தர்களால் மட்டுமே இந்த சார்வரி வருடப் பிறப்பன்று மிளிரும் நீச்ச பங்கமாகி ராஜ யோகத்துடன் திகழும் குருவின் தரிசனத்தைப் பற்றி புரிந்து கொள்ள இயலும் என்பதே நம் சற்குரு நமக்கு அளிக்கத் தயாராக இருக்கும் பொங்கல் பிரசாதமாகும். அதை வாங்கும் தகுதி பெற்ற ஒருவராக ஏன் நீங்கள் இருக்கக் கூடாது ?

நன்னிமங்கலம் சிவாலயம்

ஒவ்வொரு வருடம் சித்திரை உத்திர நட்சத்திர தினம் மீனாட்சி கல்யாண வைபவமாக கொண்டாடப்படுகிறது என்பது நீங்கள் அறிந்ததே. தற்காலத்தில் கூடா நாட்கள், தேய் பிறை நாட்கள், சூன்ய திதிகள், மரண யோகங்கள், மேஷ லக்னங்கள் என்றவாறாக மனித கற்பனைக்கு எட்டாத வகையில் ஜோதிட விதிகளுக்கு சற்றும் பொருந்தாமல் வாழையடி வாழையான திருமண முகூர்த்தங்கள் குறிக்கப்படுகின்றன என்பது வேதனை அளிக்கும் சம்பவமாக இருந்தாலும் எத்தகைய மனித தவறுகளுக்கும் பிராயசித்தம் அளிக்க சித்தர்கள், மகான்கள் முன் வருவதே அவர்கள் பெருந்தன்மையைக் குறிக்கிறது. இவ்வகையில் சித்தர் குல நாயகனான, சித்தர்களுக்கெல்லாம் சித்தனான சிவபெருமான் இவ்வாறு மீனாட்சி கல்யாணம் நிறைவேறியவுடன் பல திருத்தலங்களுக்கும் ஸ்ரீமீனாட்சியம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரராக எழுந்தருளி தம்பதிகளின் மாங்கல்ய தோஷங்களை நிவர்த்தி செய்து வந்தார் என்பதே இத்தகைய தெய்வீக திருமணங்கள் பின்னணியாக விளங்கிய சுவைகளுள் ஒன்றாகும். இவ்வாறு முதன் முதலில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் தம்பதி சமேதராய் எழுந்தருளிய தலமே லால்குடி அருகில் உள்ள நன்னிமங்கலம் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் ஸ்ரீமீனாட்சி தேவி தெற்கு நோக்கி குரு சக்தியாய் அருள்பாலிக்கிறாள் என்பதே சக்தி சுவை என்னும் மங்கல சக்திக்கு அருள் கூட்டும் திருஅவதாரச் சுவை ஆகும். எத்தகைய தோஷமுள்ள நாட்களில் தங்கள் திருமண முகூர்த்தம் அமைந்திருந்தாலும் வரும் சித்திரை உத்திர நட்சத்திர நாளான மே மாதம் 4ந் தேதி (4.5.2020) திங்கட்கிழமை அன்று இந்த உத்தம தம்பதிகளை தம்பதி சமேதராய் தரிசனம் செய்து அவரவரால் இயன்ற மாங்கல்ய பொருட்களை தானமாக அடியார்களுக்கு அளித்தல் சிறப்பாகும். இங்கு அளிக்கப்பட்ட நன்னிமங்கலம் ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரரின் தரிசனப் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. குரு மாதமான பங்குனி மாதத்தில் பிரகாசிக்கும் சூரிய கிரணங்கள் தழுவும் ஸ்ரீசுந்தரேச பெருமானும் மூன்றாம் பிறைச் சந்திர பகவானின் இளங் கதிர்கள் தழுவும் ஸ்ரீமீனாட்சி அம்மனும் இணைந்து தம்பதிகளுக்கு தரிசனம் அளிக்கிறார்கள் என்றால் இந்த தரிசனத்தைப் பெற நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ?

கொரோனாவுக்கு எதிரான ஒரே கிருமி நாசினி தைரியமே .. மாதா அமிர்தானந்தா

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam