அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

 “நம்பினோர் கொடுவதில்லை”- இது நான்கு மறைத் தீர்ப்பு! எதை நம்பினவர்கள், கெடுவதில்லை.... குருவை நம்பியவர்கள் கெடுவதில்லை... இது உண்மைதான்!.... ஆனால் குருவின் மீதும், தெய்வத்தின் மீதும் அவ்வுளவு சுலபமாக நம்பிக்கை வந்துவிடுமா? தன் அலுவலகத்துக்குச் செல்லும் ஒருவன் பேருந்தில் ஏறுகிறான்... எந்த நம்பிக்கையில்? பேருந்தை ஓட்டிச் செல்பவர் ஒழுங்காக ஓட்டிச்சென்று பத்திரமாகச் சேர்ப்பார் என்ற நம்பிக்கையில் தான். ஒட்டுனர் தகுதியைப் பெற்றவரா என்று கூடப் பார்க்காமல் ஏறுகிறோம்.

ஸ்ரீதன்வந்திரி மூர்த்தி மாத்தூர்

“இப்படிப் பல மாயைகளில் நம்பிக்கை வைக்கும் மனிதன் தெய்வத்திடமோ குருவிடமோ முழு நம்பிக்கை வைப்பதில்லையே ..அது ஏன்... என்று ஆத்ம விசாரம் செய்தவண்ணமாய்க் குருவிடம் சென்று நிற்கிறாராம் நம் குருமங்கள கந்தர்வா.... உத்தம குருவோ சீடரின் மனநிலையை அறிந்தவராக... “அப்பனே! ஒருவனுக்கு இப்பிறவியில் தெய்வத்திடமோ அல்லது குருவிடமோ நம்பிக்கை வர வேண்டும் என்றால்..... அவன் பல ஜன்மங்களில் இறைவனுக்குச் சேவை செய்திருக்க வேண்டும்.... தெய்வீகம் என்பது பல ஜன்மங்களில் உள்ளத்தினுள் ஊறி முடிவில் பெருக்கெடுத்து வெளிப்படுவது என்பதை நீ உணர வேண்டும்...” என்றார் ....

கண்டறியாதன கண்டேன் !

இதையே மாணிக்கவாசகரும் “ஊறி என்னுள் எழுபரஞ்சோதி” என்கிறார்!...ஆகவே குரு அனுபவப் படிப்பே நம்பிக்கையாக உருவெடுத்து முடிவில் பக்கியாக மாறுகிறது...  இப்பொழுது நாம் பெறப்போவது அடிமை கண்ட ஆனந்தத்தில் நம்முடைய குருவாகிய குருமங்கள கந்தர்வா அனுபவப் படிப்பாகத் தம் குருவிடமிருந்து பெற்ற பொக்கிஷத்தைத்தான் ....
பல வருடங்களுக்கு முன்.... திருவொற்றியூர் படம்பக்கநாதர் ஆலயம்....... உத்தம சீடரும் உத்தம குருவும் கோயிலைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது தங்கசாமி என்ற நாமம் பூண்ட ஒருவர் “கோச்” வண்டியில் வந்து இறங்குகிறார்..... அவர் ஒரு பணக்காரர் ., அவர் நேராகப் பெரியவரிடம் வந்து,
“இன்னா சாமி! நான் எப்ப இங்க வந்து பார்த்தாலும் பெருக்கிக்கிட்டு இருக்கே.... பேசாம நீ என்னோடே வந்துடு.... கடவுளை நம்பினவன் நீ...... அதனால் நீ கஷ்டப்படக்கூடாது என்ன சொல்ற?

பெரியவர் கஷ்டப்படுவதாக அவருக்கு நினைப்பு.
“ஏதோ நைனா... என் கஷ்டம் உனக்கு புரியுது...ஏதோ கூப்பிடறே! . என்னால் இப்ப வர முடியாது. ஆனால் என்னிக்காவது ஒருநாள் உன்கிட்ட வருவேன். அப்ப என்னக் கண்டுக்க அது போதும்“  தங்கசாமியும் சென்று விடுகிறார்..... இந்த நிகழ்ச்சி தங்கசாமி கோயிலுக்கு வரும்போதெல்லாம் நடந்தேறும் .. நாட்கள் உருண்டு ஓடுகின்றன..
ஒரு நாள்..... ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அமர்ந்திருந்த சீடனை உத்தம குரு. “....டேய் வாடா! நாம போயி அந்தத் தங்கசாமியைக் கண்டுக்கினு வரலாம் “ என்று கூறியபடி அழைத்துச் செல்கிறார்... வீட்டில் தங்கசாமியும் அமர்ந்திருக்கிறார்....
பெரியவர் : “தங்கசாமி! யோவ்..... தங்கசாமி ஒற்றியூர் கோயில்காரன் (தன்னைத் தெய்வம் என்கிறாரோ!) வந்திருக்கேன்“....
தங்கசாமி : (ஏற இறங்கப் பார்த்துவிட்டு) .... “அட நீயா!  ...ஏதோ இருக்கிறேன் சாமி..... சும்மா இப்படி உக்காரு.... நிம்மதியாப் பேசலாம்”
பெரியவர் : “அதெல்லாம் சரி... உன் பெண்சாதி, புள்ள குட்டியெல்லாம் சவுக்கியமா?....” “
தங்கசாமி : “அதை ஏன் கேக்குற! என்னோட புள்ளகுட்டியெல்லாம் அழியப் போற சொத்தை எடுத்துக்கிட்டு ஒழிஞ்சு போயிட்டாங்க... (தன் கதையை விளக்குகிறார்) ம்... இனிமே எனக்கும் என் பெண்சாதிக்கும் யார் இருக்காங்க... ?“

ஸ்ரீஅகத்திய பிரான் மாத்தூர்

பெரியவர் : “அட நீ வேற.. ஏன் நான் இல்ல .. என் பேரன் (சீடரைக் காட்டி) இவன் இல்ல? அது சரி..... ஏன் இப்படி முட்டாள்தனமா எல்லா சொத்தையும் தூக்கிக் கொடுத்தே.... உனக்குன்னு கொஞ்சம் கூட வெச்சுக்கலையா?“
தங்கசாமி : (சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு) “ நைனா நல்லாக்கேட்டே... உனக்கு மட்டும் ஒண்ணு சொல்றேன்... நான் 100 ஏக்கர் நிலமும் 300 பவுன் நகையும் யாருக்கும் தெரியாம வெச்சிருக்கேன்.... அதை எப்படியாச்சும் சாமிக்குச் சேத்துடறயா?
பெரியவர் : “அடேயப்பா! அத்தனை துட்டு எனக்கு வேண்டாமப்பா.... ஏதோ நான் அந்தத் துட்டுக்கு நல்ல வழி செஞ்சுடறேன் ..ஆனால்... நான் சொல்றமாதிரி நீ செஞ்சிடு. உன்னையும் உன் பொண்டாட்டியையும் ஒரு நல்ல கதிக்குப் போக வழி பண்ணிடறேன்... சரியா...?“
தங்கசாமி : .... “ நீ எது சொன்னாலும் சரி... அப்படியே செய்யறேன்... சாமிதான் எனக்கு வழிகாட்டணும்.“
பெரியவர் : “அதுதான் பெரியசாமி வந்துட்டேனே... இனி நீ கவலையேபடாதே ... எல்லாம் நான் பார்த்துக்கறேன்.!” இப்பொழுது... பெரியவர் கோயில்கள் List தயார் செய்து ... ஒவ்வொரு கோயிலுக்கும் இவ்வுளவு நிலம் என்று 100 ஏக்கரையும் பங்கீடுசெய்து அந்தந்தக் கோயில்களில் தங்கசாமி மூலமாக முறையாக நிலங்களை ஒப்படைத்து விடுகிறார்....
அடுத்து 300 பவுன் நகை.... இதற்குத் தங்கசாமியின் மனைவியினுடைய கருத்தைப் பெரியவர் கேட்டு அறிகிறார்.....அவர்களின் பூரண சம்மதம் பெற்றவுடன்... (கடவுளே இது கலியுகத்தில் சாத்தியமா....) மறுபடியும் கோயில்கள் List    தயாராகிறது ….  கடைசி ஒரு பவுன் நகை வரை எந்தெந்தக் கோயிலில் எத்தனை பவுன் நகையை உண்டியலில் போட வேண்டும் என்பதைப் பெரியவர் தெளிவாக எழுதிக் கொடுத்து விடுகிறார்.....
பெரியவர் : “கடைசி 5 புவன் நகையைச் சிதம்பரத்தில் போட்டுவிடு.... பயப்படாதே!... கடவுள் காப்பாற்றுவான். உன்னை நான் சிதம்பரத்துல பார்க்கிறேன்...”

தங்கசாமி தம் மனைவியுடன் புறப்படுகிறார்... பெரியவர் கொடுத்த  List படி ...ஒவ்வொரு தலமாகத் தரிசனம் செய்து உண்டியல்களில் நகைகளைச் சேர்த்துவிட்டு முடிவில் இருவரும் சிதம்பரம் வருகிறார்கள்....
அந்தக் கடைசி 5 பவுன் நகைகளையும் அங்கு உண்டியலில் போட்டுவிட்டால் அவர்கள் கையில் பணம் கிடையாது என்ற நிலை! இரு கைகளையும் தலைமேல் தூக்கியபடி.... “ஈசனே! இனி இந்த இரு கைகளும் வெறும் கைகள்தான். இனி எந்த சொந்தமும் எங்களைத் தேடாது... இனி திக்கற்ற எங்களுக்குத் தெய்வமாகிய நீயே துணை! எங்களைக் காப்பாற்று!“ என்று மனமுருக வேண்டிய வண்ணமாய் அந்த 5 பவுன் நகையையும் உண்டியலில் செலுத்தி விடுகின்றனர்....
அப்போது... “தங்கசாமி“.. என்று ஒரு குரல் கேட்க.... இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.. பெரியவரும் சீடரும் அங்கு நின்றுகொண்டிருக்கிறார்கள்....
தங்கசாமி : “சாமீ...... சொன்னபடியே வந்துட்டியே!....இனி நீதான் வழி காட்டணும்...”
பெரியவர் : “அட.... இம்மாந்தூரம் வந்தவன் உன்னை ஒருவழி பண்ணாமல் விடுவேனா..!! சரி என்னோட வாங்க....” இருவரையும் கோயிலுக்கு வெளியே அழைத்து வந்து அமுது செய்வித்துவிட்டு.... பின் ஒரு திண்ணையைக் காட்டுகிறார்...
பெரியவர் : “நீங்கள் இருவரும் இங்க நிம்மதியாகத் தூங்குவீர்களாக.... நானும் என் பேரனும் கொஞ்சம் வெளியே போய்ட்டு விடிஞ்சதும் வந்து உங்களைக் கவனிக்கிறோம்....”
பெரியவர் சீடருடன் நகருகிறார்.... அன்று இரவே... தங்கசாமியும் அவருடைய மனைவியும் உண்மையிலேயே சிவபதி அடைந்து விடுகிறார்கள்....பொழுதும் விடிகிறது....பெரியவர் சீடரை அழைத்துக் கொண்டு அங்கு வருகிறார்.
பெரியவர் : “சிவ சிவா!...... போயிட்டானே என் தங்கசாமி! அவனை எப்படியெல்லாம் வளர்த்தேன்... இதுக்குத்தானா?... பகவானைப் பார்க்க வந்த இடத்துல பொசுக்குனு போயிட்டானே! இனிமே நான் என்ன செய்வேன்? “ என்றெல்லாம் கூறி, (சீடரையும் அழச் செய்து) தங்கசாமி உடல் மீது விழுந்து கதறி அழுகிறார்... அதுசரி.......இப்படியெல்லாம் பெரியவர் ஏன் செய்யவேண்டும்? உடல்கள் தமக்குச் சொந்தமானது என்று மக்கள் எண்ணினால் தானே அவர்களுக்கு ஈமக்கிரியைகளைத் தாமே செய்யமுடியும்!...அதற்குத் தான் இந்த நாடகமெல்லாம்! பிறகு அங்கு கூடியிருந்த மக்கள் அவரையும் சீடரையும் தேற்றி அவர்களுக்கு உதவ முன்வர, அந்த இரு உடல்களையும் மயானத்திற்கு எடுத்துச் சென்று முறையாக ஈமக்கிரியைகளைச் செய்து முடிக்கிறார் பெரியவர்.. தங்கசாமியைக் கைலாயத்தில் தங்க வைத்துச் சாமி ஆக்கிவிட்டாரோ பெரியவர்! எல்லாம்... சித்தன்கூத்து சிவன் கூத்தல்லவா..!!
பெரியவர் : (சீடரைப் பார்த்து) “என்னடா மகனே! பார்த்தியா,,, முன்பின் தெரியாத ஒருத்தனைக் கோயில்ல பார்த்தோம் என்கிற ஒரே காரணத்தினால் கண்மூடித்தனமாக நம்பித் தன் சொத்துக்களையெல்லாம் ஈசனுக்கு அளித்தானே தங்கசாமி... .அவனுடைய நம்பிக்கை அவனுக்கு உத்தம நிலையையே அளித்து விட்டது தெரியுமா? ...” இதை வெச்சு... நம்பினோர் கெடுவதில்லை” என்பது உனக்குப் புரிந்ததா!” (மர்ம்மாகப் புன்னகை செய்கிறார்).

ஆனித் திருமஞ்சனம்

சிவனுக்கும், பெருமாளுக்கும் உரிய வசந்தத் திருநாள். சிவனுக்குரிய அபிஷேகமே பெருமாளுக்குத் திருமஞ்சனமாகிறது. இந்நாளில் சிவ, விஷ்ணு ஆலயங்களில் சுவாமிக்குத் திருமஞ்சனம் செய்து (இறை மூர்த்தியை நீராட்டுதல்) அவ்வபிஷேக நீரைப் பிரசாதத்தில் தெளித்து ஏழைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும்.
சிவன் பார்வதி இறைத் திருமணத்தில், கைலாயத்தில் சமநிலைக்காக ஸ்ரீஅகஸ்திய சித்த பிரம்ம ரிஷியைத் தென்தலம் செல்லுமாறு அருளாணையிட்டு அதன்பின் ஸ்ரீஅகஸ்திய மஹாப்பிரபுவுக்காகத் தென்தலத்தில் திருமணக் காட்சியை ஈஸ்வரன் அளித்தாரன்றோ!     திருவேங்கடத்துறை கும்பமுனி திருக்கயிலாயப் பொதியமுனி ஆகிய சிவ, விஷ்ணு பட்டங்களைத் தாங்கி அனைவருக்கும் சற்குருவாகக் குருவருட்சேவை புரியும் ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு ஸ்ரீராமருக்கு ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசிக்கும் பேறு கிட்டியதைப் போல ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஸ்ரீசிவனுக்கு அபிஷேகம் செய்யும் அற்புதப் பேற்றையும் பெற்றார். இத்திரு நாளே ஆனித் திருமஞ்சனம் ஆகும்.
ஆனி மாதத்து இத்திருநாளில் தான் ஸ்ரீஅகஸ்தியர் பொதியமலையில் இருந்து தம் வலத்திருக்கையில் மையிட்டு (அஞ்சனம்)  அதில் ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்ரீபரமேஸ்வரனுக்குத் திருமஞ்சனம் செய்யும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்.
பகீரதப் பிரயத்தனத்தினால் முதன் முதலாக ஸ்ரீகங்காதேவி பூலோகத்திற்கு வந்தபோது ஸ்ரீமந் நாராயணனே முதல் கங்கைப் பிரவாகத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து ஸ்ரீமகேஸ்வரனுக்குத் திருமஞ்சனம்  செய்து அனைவரையும் ஆனந்திக்கச் செய்தார். ஆழ்ந்த யோகத்தில் இருந்த ஸ்ரீஅகஸ்தியர் இதனைக் கண்டுகளிக்கும் பேற்றைப் பெற்றார். எனவே ஆனித் திருமஞ்சனத்தன்று தாமே இல்லத்தில் முறைப்படி தயாரித்த கண்மையைச் சுவாமி, அம்பாளுக்குத் திருமஞ்சனத்திற்குப் பின் சார்த்தி, சுமங்கலிகளுக்குக் குறிப்பாக 60, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளித்தலால், கணவனுக்கு நீண்ட ஆயுளும், குடும்பப் பெண்களுக்குத் தீர்க்க சுமங்கலித்வமும் கிட்டும்.

உமா பூஜன விரதம்

உமா பூஜன விரதம் மேற்கொள்வது எனில்....

  1. தான் அன்புடன், உண்மையான உள்ளத்துடன் நேசித்தவரை அடைதல்.
  2. தான் அடைந்தவரை உள்ளன்புடன் நேசித்துச் சேவை செய்து, என்றும் பிரியாது, சௌபாக்ய வாழ்வைப் பெறுதல்
  3. உத்தம வாழ்க்கை வாழ்ந்து இல்லறத்தைச் சீரிய நெறியில் அமைத்து ஈசனாம், எம் பெருமானாம் இறைவனை அடைதல்...

இம்மூன்று நெறிகளுக்காகவே உமாபூஜன விரதம் மேற்கொள்ளப்படுகின்றது. தற்காலத்தில் மாமியார் – மருமகள் சச்சரவுகள் , நாத்தனார் – மைத்துனி சண்டைகள், நிம்மதியின்மை, அலுவலகம் செல்லும் பெண்களுக்கு இல்லத்தில் ஏற்படும்  தினசரி இன்னல்கள், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அவஸ்தைகள், கணவனுடன் பரிபூரணமாக மனம் விட்டுப் பேச இயலா நிலை....... இத்தகைய சூழ் நிலைகள்- இன்னல்கள், ஆண்,பெண் இருபாலருக்கும் பொதுவானதாக அமைந்துள்ளன.
ஸ்ரீபார்வதி தேவி சிவபெருமானின் அருளாணைப்படி பல புரணாங்களிலும் கௌரியாக, கன்னியாகுமரியாக, கருமாரியாகப் பல மானுடப் பெண்களாகப் பிறவியெடுத்து வாழ்க்கைத் துன்பங்களை அனுபவித்து மங்கள கௌரீ, ஆரண்ய கௌரீ, லாவண்ய கௌரீ, சந்தான விருத்தி கௌரீ எனப் பெயர்கள் தாங்கித் திரிலோசனா பூஜா, உமாபூஜை விரதம் போன்ற பல விரதங்களை/பூஜைகளை மேற்கொண்டு அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி, குறிப்பாகக் கலியுகப் பெண்களுக்கு அவற்றை அறிவுறுத்தி வருகின்றனள். அவற்றுள் ஒன்றே உமா பூஜன விரதமாகும்.
உமா பூஜன விரதமுறை
கன்னிப் பெண்கள் மற்றும் அனைத்துப் பெண்களுக்கு குறிப்பாக உமா, உமா மகேஸ்வரி, உமையாள் போன்ற உமா என்னும் நாமத்தை தாங்கிய பெண்களுக்கு இது சிறப்பு வாய்ந்த பூஜை முறையாகும்.. வருடந்தோறும் வருகின்ற உமாபூஜன விரதமுறையைச் சித்தர்கள் அருளும் முறையில் சிறப்பாகக் கொண்டாடிட மேற்கண்ட வாழ்க்கைத் துன்பங்களுக்கு அற்புதமான முறையில் தீர்வு காணலாம்.
2-6-1995 வெள்ளி, (வைகாசி 19 அன்று) உமாபூஜன விரதநாள் வருகின்றது, திருதியைத் திதி முடிந்தவுடனேயே உபவாசத்தைத் தொடங்கி இரவு உறங்காது சிவஸ்துதிகள், தோத்திரங்கள், சிவதமிழ் மறை, சிவபுராணம், வில்வாஷ்டகம், நமசிவாய என்ற பஞ்சாட்சரம் போன்றவற்றைப் பல பெண்கள் ஒன்று கூடிக் கூட்டாக ஜபித்து/துதித்து மறு நாள் பகலில் சதுர்த்தி திதி நேரத்தில் ஏதேனும் சிவன் கோயிலில் குறிப்பாகப் பாடல் பெற்ற தலங்களில், அபிஷேக, ஆராதனைகளோடு நிறைவு செய்தல் வேண்டும். இயன்றளவில் தானத்தை எளிகையாய்ச் செய்தல் போதுமானது. திருமணமானோர் விரதத்தின் நிறைவாக ஒன்பது சுமங்கலிகளுக்கு, இயன்றளவு வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், பூ, வளையல், கண்ணாடி, மருதோன்றி, கண் மை போன்ற மங்களப் பொருட்களை அளிக்க வேண்டும்.
கன்னிப் பெண்களாயின் 11 பழுத்த சுமங்கலிகளுக்குப் பாத பூஜை செய்து நமஸ்கரித்து ஆசி பெறவேண்டும். அவர்தம் பெற்றோர்கள் தம் கன்னிப் பெண்களின் மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், திருமணம் நன்கு நடைபெறவும், நிறைய குழந்தைகளைப் பெற்ற சுமங்கலிகளுக்குத் தாம்பூலத்துடன் இயன்ற தானமளித்தல் வேண்டும்.
நிர்ஜலமாக நீரின்றி உபவாசம் இருத்தலால் சிவசிந்தனையுடன் பரிபூரணப் பலன்களைப் பெறலாம். இயலாதோர் பஞ்சாட்சரம் ஜபித்த தேனைச் சிறிது பாலில் சேர்த்து நைவேத்யம் செய்து அருந்திடலாம். தாட்சாயணி இவ்வித உமாபூஜன விரதத்தை மேற்கொண்டு தான் விரும்பிய ஈசனையடைந்து, என்றும் ஈசனைப் பிரியாமல் அர்த்த நாரீஸ்வரியாய், அகிலத்தைப் பரிபாலிக்கின்றாள்.

ரம்பா திரிதியை

ஊர்வசி, ரம்பை, மேனகா, திலோத்தமை போன்ற தேவலோக நடனசுந்தரி தேவதைகள் உள்ளனர். இவர்கள் தெய்வீக சக்தி வாய்ந்த தேவதைகள், பல யுகங்களில் பல லோகங்களில் பரத நாட்டியம், கதகளி போன்ற அற்புதமான நாட்டியங்களின் மூலம் இராமாயணம், மஹாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், சிவபுராணம் போன்ற புராண, இதிகாச நிகழ்ச்சிகளை விவரிக்கும் இறை நெறியைப் பரப்பும் அற்புத சேவைகளைப் புரிந்து அளப்பரிய தெய்வானுக்ரஹத்தைப் பெற்றவர்கள், நடராஜ அபிஷேக தினங்கள், ஆருத்ரா தரிசனம், வாஸவி ஜெயந்தி போன்ற விசேஷ தினங்களில் திருக்கயிலாயத்திலும் விண்ணுலகங்களிலும் ருத்ர, ஊர்த்வ, கௌரீ தாண்டவங்களை இறையருளுடன் எடுத்தீயும் ஆன்மீக சக்தி பெற்றவர்கள்.
இத்தகைய நடனசுந்தரி தேவதைகளில் ரம்பை பல மஹரிஷிகளின் அருளாசியைப் பெற்றவள். “தாம்பாள நடனம்” என்னும் அபூர்வ நாட்டிய முறையில் வல்லவள். தங்கத் தாம்பாளத்தினுள், நட்டுவாங்கத்திற்கேற்ப கால்கள் நாட்டியமிட இத்திருக்கோலத்தில் பல லோகங்களிலும் சிவ, ஹரி நாமம் ஓதியவாறே வலம் வரும் உத்தமதேவதை!
இன்றைக்கும் திருஆலங்காட்டில் இறைவனின் திரு நாட்டியத்தைக் கண்டுகளிக்கும் காரைக்கால் அம்மையாருக்கென இத்திருக்கோயிலில் ஆதிசிவன் நாட்டியமாடிட அதனைக் காரைக்கால் அம்மையாருடன் சேர்ந்து காணும் பாக்யம் பெற்றவள். அதே நாட்டியத்தை ஆடிக் காட்டுகையில் சிவபெருமானாலேயே பொற் சலங்கைகள் வழங்கப் பெற்று சிவன் அருள் கண்ட உத்தமி!
இவ்வாறாக ரம்பைதேவி ஆடல்வல்லான் நடராஜப் பெருமானிடம் “பொற்சலங்கைகள்” பெற்ற விசேஷ தினமே ரம்பை திருதியையாகும்
ரம்பா திரிதியை அன்று

  1. புதிய நடன வகுப்பில் சேர்தல்
  2. புதிய நாட்டியங்களை அரங்கேற்றுதல்
  3. முதல் அரங்கேற்றம்
  4. ஸ்ரீநடராஜர், ஸ்ரீ நடன கணபதி, ஸ்ரீதிரிவிக்ரமர் போன்ற நடனக் கோலத் தெய்வமூர்த்திகளுக்குப் பொன்/வெள்ளிச் சலங்கைகளை அணிவித்து வழிபடுதல்
  5. தான் அணிந்து நடனமாடும் சலங்கைகளுக்குச் சந்தனம், மஞ்சள், குங்குமம், புஷ்பமிட்டு சலங்கை பூஜை செய்து ஓம்கார நாதந்தனை (பலர் ஒன்றாகக் கூடி) எழுப்பி சலங்கை நாதத்திற்கு இறையுணர்வு கூட்டுதல்.
  6. ஏழை நட்டுவாங்க வித்வான்கள், நடனக் கலைஞர்கள், கழைக்கூத்தாடிகள் ஆகியோருக்கு ஆதரவு தந்து இயன்ற தான தர்மங்களை அளித்தல்.
  7. மிகவும் விசேஷமான இந்த ரம்பாதிருதியை தினத்தில் “இறையருளால் பெற்றுள்ள அடியேனுடைய நாட்டியத் திறமையைப் புகழ், விளம்பரம், வருமானம், போன்ற சொற்ப காரணங்களுக்காக அன்றி தெய்வீகத்தைப் பரப்புவதற்கும், தெய்வீக, தான, தர்ம கைங்கர்யங்களுக்காக மட்டுமே பயன்படுவதாக!” என்று எல்லாம் வல்ல ஸ்ரீநடராஜ ஈஸ்வரனை வேண்டி வரம் பெற்றிடுதல் சாலச் சிறந்ததாகும். இத்தகைய தீவிரமான வைராக்கியத்தோடு நாட்டியக் கலையை இறைவனுக்கு அர்ப்பணித்து மன உறுதியுடன் இறைநெறியில் உய்ந்திடில் அத்தகைய உத்தம நாட்டியக் கலைஞர்களின் வாழ்க்கை தெய்வத் திருவாழ்க்கையாக அமையும், எவருக்கும் கிட்டிடாப் பெரும் பேறு!
ஆரண்ய கௌரி விரதம்

ஒவ்வொரு விரதத்தின் பின்னணியிலும் பல புராண, இதிகாச வரலாறுகள், நிகழ்ச்சிகள், (பல்வேறு கல்ப காலங்களில், யுகங்களில் நிகழ்ந்தமையால்) பொதிந்திருக்கும். ஸ்ரீபார்வதி தேவியே உமாவாக, கௌரீயாக ஒரே விரதத்தைப் பல்வேறு பலன்களுக்காகப் பல யுகங்களில் பல பிறவிகளைத் தாங்கி அனுஷ்டித்து அனைத்து ஜீவன்களுக்கும் குறிப்பாக கலியுக மாந்தர்களுக்கு வழிகாட்டும் வண்ணம் எடுத்துக்காட்டாக விளங்குகிறாள்.
இந்த ஆரண்ய கௌரீ விரதமானது  நாம் விரும்புகின்ற தெய்வதரிசனத்தை நாம் வேண்டுகின்ற முறையான, நியாயமான திருமணம் நோய் நிவாரணம் போன்ற நற்காரியத்தை நிறைவேற்றித் தரவல்லது. சற்குரு திருவையாறு தியாகராஜஸ்வாமிகளின் ஆத்யந்த சிஷ்யரான வெங்கடரமண பாகவதருடைய குடும்பம் பல்வேறு தலைமுறைகளாக இந்த ஆரண்ய கௌரீ விரதத்தைக் கடைபிடித்து வந்தது.
அய்யம்பேட்டையச் சேர்ந்த வெங்கடரமண பாகவதர்  தினமும் திருவையாறு வந்து தியாக ப்ரம்மத்தின் வீட்டின் முன் அமர்ந்து அவருடைய நாதோபாசனையைக் கேட்டுத் துய்த்துக் கண்களை மூடியவாறு இன்னிசையின் சப்தஸ்ரங்களில் ஸ்ரீராமனைத் தரிசிப்பார். பக்தர் ஒருவர் இத்தகைய இறை அனுபவத்தைப் பெற்று வருகிறார் என்பதைத் தியாகப்ரம்மம் அறியார்.
ஒரு நாள்.... கடும் அடைமழை ... அதோகொட்டும் மழையிலும் பாகவதர்... “தியாகராஜரின் இல்லத்தின் முன் அவர்தம் ராமாமிர்தம் பூரிக்கும் கீர்த்தனங்களைக் கேட்டு லயித்து அதில் ஸ்ரீராம தரிசனத்தை பெற்றுத் தன்னை மறந்த நிலையில், அதுவும் அந்தக் கனத்த மழையினூடே, அமர்ந்திருக்க...
தியாகப்ரம்மம் தம் திவ்ய இன்னிசை கானத்தைச் சற்று நிறுத்தி் சிறிது ஒய்வெடுக்க வெளியில் வர..... அங்கே பாகவதரின் இன்னிசை தியான நிலை கண்டு ஆச்சரியமடைந்து அவரைக் கட்டியணைத்து கூட்டிவந்து... பின் அவரைச் சிஷ்யராக ஏற்றது யாவரும் அறிந்ததே!

பின்பொருமுறை தியாகராஜ சுவாமிகள் தம் பெண்ணிற்குத் திருமணம் நடைபெறாமல் ஏதேனும் தடங்கல்கள் ஒன்று மாற்றி ஒன்றாக வருவது கண்டு கவலையுற, வெங்கடரமண பாகவதர், சுவாமிகளுக்கு ஆரண்ய கௌரீ விரதத்தைப் பற்றி எடுத்துரைக்க, சுவாமிகள் அதனை வைகாசியில் சிரத்தையுடன் செய்திடப் புத்திரியின் விவாகம் விரைவில் கைகூடியது!
“வெங்கடரமணா! பதிமூன்றுகோடி முறை அடியேன் ராம நாமம் ஓதிய பின்னர்தான் அவனருளால் அடியேனுக்கு ஸ்ரீராமனின் தரிசனம் கிட்டுயது. ஆனால் ஆரண்ய கௌரீ விரத பூஜா பலனாய் நாதோபாசனையிலேயே ஸப்த ஸ்வரங்களின் மூலம் நீ ஸ்ரீராம தரிசனத்தைப் பெற்று விட்டாய்! என்னே உத்தம நிலை! என்னே ஸ்ரீராமனின் கருணை! உன்னுடைய பல தலைமுறைகளில் இந்த ஆரண்ய கௌரீ விரதம்  இறை தரிசனம், திருமண பிராப்தி, புத்ர பாக்யம், ஐஸ்வர்ய பாக்யம் போன்ற பல அனுக்ரஹங்களைத் தந்துள்ளதோடு, பிரத்யட்சமாக இதன் அற்புத சக்தியை என் புத்ரியின் திருமணத்திலும் கண்டு ஆனந்திருக்கிறேன்! இதனை யாங்கணும் பரப்பி இதன் மஹிமையை யாவரும் உணரும்படி செய்வாயாக !“ என்று உரைத்த தியாகப்ரமம் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்!
இது மட்டுமா! ஒரு பிரதோஷ நேரத்தில் ஸ்ரீஅம்பிகை ஈஸ்வரனின் திருக்கண்களைப் பொத்திட, இவ்விளையாட்டு இறைவனின் திருவிளையாடலாக மலர்ந்தது, பிரபஞ்சமே எவ்வித அசைவுமின்றி ஸ்தம்பித்தது. சிருஷ்டியும் இல்லை. பிரளயமும் இல்லை., சர்வ லோகங்களின் கர்ம பரிபாலனத்தில் தேக்கம் ஏற்பட்டது.
“பரம்பொருளின் திருஷ்டியையே மறைத்ததால் உனக்கும் என் தரிசனம் கிட்டாமல் போகட்டும்” என்று ஈசன் கூறிட ஸ்ரீபார்வதிதேவி திகைத்து நின்றனள்...!!
தன்னுடைய கணநேர, முன்யோசனையற்ற விளையாட்டு விபரீதமாகி விட்டதே... என்று வருந்தியவாறே சிவபெருமானிடம் விமோசனம் கேட்டு உமையவள் பணிந்து நின்றனள். “எம்மைச் சிவலிங்கமாக முதலில் தரிசனம் பெற, வேண்டியதைச் செய்வாயாக“ என்று ஈசன் அருளாணை இட, இறை தரிசனத்தைத் தரவல்ல ஆரண்ய கௌரீ விரதத்தை ஸ்ரீஅம்பிகை மேற்கொண்டனள். இதன் பலனாய் பிரப்ஞசத்திற்கே முதன் முதலாக ஆதிசிவனின் ஸ்தூல ரூபமான ஒரு சிவலிங்கத்தைப் பெற்றுப் பிரபஞ்சத்திற்கு அதனை அர்ப்பணித்தனள்.
ஆரண்ய கௌரீ விரதமுறை : மஞ்சள், குங்குமம் இட்ட தேங்காயைக் கலசத்தில் வைத்தோ அல்லது கலசத்தில் முகம் பொருத்தியோ கௌரியை ஆவாஹனம் செய்தல் வேண்டும். தாம்பாளம் அல்லது நுனி கிழக்கு நோக்கிய வாழை இலையில் அரிசி பரப்பி அதில் பிள்ளையார் சுழி , “ஓம்” வரைந்து அதன் மேல் கலசத்தை வைக்க வேண்டும். கலசத்தினுள் கங்கை, காவேரி போன்ற புண்ணிய தீர்த்தம் கூடிய நீரைப் பாதி அளவில் ஊற்றி, ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் சேர்த்திட வேண்டும். தேங்காய் கலசத்திற்குப் பூ சாற்றி மஞ்சள் மூக்கு வைத்து எட்டு முடிகள் கொண்ட மஞ்சள் நூலைச் சரடாக ஸ்ரீஅம்பாளுக்குச் சாற்றி அஷ்டோத்திரம், அபிராமி அந்தாதி போன்ற இறைத் துதிகளால் பூஜை செய்து, வெற்றிலை பாக்கு, மஞ்சள், மலை வாழைப்பழம் போன்றவற்றை 21 எண்ணிக்கையில் வைத்து, நைவேத்தியமாக 21 அதிரசம் படைக்க வேண்டும், இப்பூஜை முடித்தவுடன் அச்சரட்டைக் கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆண், பெண் இருவரும் இதனை அனுஷ்டிக்கலாம்.
ஆரண்ய கௌரீ விரத பலன்கள்

  1. விரும்பிய இறைமூர்த்தியின் தரிசனம் கிட்டும்.
  2. ஐஸ்வர்ய கடாட்சம் அதாவது நிலைத்த செல்வம் பெறலாம்.
  3. தகுந்த உத்தியோகம் கிட்டும்.
  4. பெண்களுக்குப் பூப்பு, மாதவிடாய் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்
  5. தக்க வயதில் கன்னிப் பெண்கள் பூப்படைவர்.

ஆரண்ய கௌரீ விரத நாள்
அரண்ய அல்லது ஆரண்ய கௌரி விரதம் என்று அழைக்கப்படும் இவ்விரதம் வரும் ஞாயிறன்று அமைகிறது. இந்நாளில் பலவித தடங்கள்களால் விரதம் மேற்கொள்ள இயலாவிடில் வைகாசி சுக்ல பட்ச விசாகத்தன்று இதனை மேற்கொள்ளலாம் எனச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர். (பௌர்ணமிக்கு முந்தைய விசாகம் 11-6-1995)

ஆனி கோகிலா விரதம்

பிருந்தாவனத்தைச் சேர்ந்த கோபிகையான கோகிலா, ஸ்ரீகிருஷ்ணனிடம் பரமபக்தி பூண்டவள். கன்னியாய் இளம் பருவத்திலேயே ஸ்ரீகிருஷ்ணனின் திருவடியை அடைந்து பெரும் பாக்கியம் அடைந்தவள். அவள் வாழ்ந்த துவாபரயுகத்தில் அதுவரை எவரும் கடைபிடித்திடாத முறையில் ஓர் அரிய அற்புத விரதம் மேற்கொண்டு ஸ்ரீகிருஷ்ணனுக்குச் சேவை செய்து பரமாத்மாவின் திருவடிகளில் பரிபூரணம் பெற்றாள். எனவே அந்த உத்தம கோபிகையின் பெயரிலேயே கோகிலா விரதம் அழைக்கப்படுகிறது.
கோகிலா தேவி ஒரு மண்டலம் (48 நாட்கள்) இவ்விரத்தைக் கைக்கொண்டு விரத முடிவில் ஸ்தூல வடிவிலேயே கண்ணனுடன் இரண்டறக் கலந்தனள். ஆனால் துவாபர யுகத்தின் அக்கடுமையான நிஷ்டைகளைக் கலியுகத்தில் கடைபிடிப்பது கடினம் என்பதால் சித்தபுருஷர்கள் இதனைச் சற்று எளிமைப் படுத்தியுள்ளனர்.
கோகிலா விரத முறை :
முதலில் கோகிலா கோபி ஸ்திரீ இவ்விரதத்தைக் கடைபிடித்து, “கிருஷ்ண திருவடிப் பிராப்தம் அடைந்த முறையை அறிந்து ஆனந்தமடைவோம். கோகுலம் என்றாலே பால் பசுக்கள் நிறைந்த இடமன்றோ! சினையுற்ற பசுமாடு கன்றை ஈன்றபின் முதலில் சில நாட்களுக்குப் பால் கடம்பு என்று சொல்லப்படும் சீம்பாலைத்தான் அளிக்கும். பெரும்பாலும் இதனைக் கறக்காது கன்றிற்கே விட்டு விடுவர். துவாபர யுக கோகுலத்தில் தற்போதைய கலியுகம் போலன்றி கன்றுகள் குடித்து மகிழ்ந்தது போக, பசுவின் மடியில் எஞ்சிய பாலைத் தான் கோபிகா ஸ்திரீகள் கறப்பர். எனவேதான் பால் வளம் அக்காலத்தில் பொங்கியிருந்தது.
தற்காலத்தில் பசுவின் பின் கால்களைக் கட்டி மூக்கணாங்கயிற்றைப் பிடித்தவாறு பால கறப்பதனாலும் கன்றிற்குக் கூடப் போதாமல் முழுதும் கறந்து விடுவதாலும் தாம்பு சூடு என்ற கொடிய தோஷம் பசுவின் சொந்தக்காரர்கள், பால் கறப்பவர்கள், பால் விற்போர், வாங்கிப் பயன்படுத்துவோர் ஆகியோருக்கும், அவர்தம் குழ்ந்தைகளுக்கும் பெரும் நோய்களாகவும், குறிப்பாகச் சுவாச நோயாகவும், மந்த புத்தியாகவும் அமைந்து வருத்தும்.
இதற்குப் பரிகாரமாகப் பசுமாடுகளை கோயிலுக்கோ, உண்மையான ஏழைக்கோ தானமாக அளித்து அதன் பராமரிப்பிற்குரிய செலவுகளை ஏற்க வேண்டும். கறவையற்ற பசுக்களைப் பராமரிக்கும் செலவை ஏற்றலும், இயன்ற உதவி செய்தலும், வைக்கோல், புல், புண்ணாக்கு, பழங்கள் போன்றவற்றை அளித்து கோசாலையைச் சுத்தம் செய்து, பசுக்களுக்கு நீராட்டி மஞ்சள் குங்குமமிட்டு வணங்குதலும் சிறந்த பரிகாரமாகும்.
கோகிலா தேவி பால் கடம்பு எனப்படும் சீம்பாலைத் தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெற்று (காலை 3.00 மணி முதல் 5 வரை) அதில் பால்கோவா செய்து தினமும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணித்தனள்.  அக்காலத்தில் கோகுலத்தில் தினமும் நூற்றுக் கணக்கான பசுக்கள் கன்றை ஈன்ற வண்ணம் இருக்கும். ஆனால் மாயக் கண்ணனல்லவோ! அந்த ஒரு மண்டல காலத்தில் வேண்டுமென்றே பலகன்று ஈன்ற மாடுகளை ஒளித்து வைத்த போதிலும் கோகிலா தேவி ஒரு சிறிதும் அயராது, ஸ்ரீகிருஷ்ண நாமம் ஜபித்தவாறே பல மைல்கள் நடந்து சென்று தினமும் சீம்பாலைக் கொணர்ந்து பால்கோவா செய்து ஸ்ரீகிருஷ்ணனுக்குப் படைத்தாள்.. ஸ்ரீகிருஷ்ண தரிசனம் கிட்டிய பின்தான் உணவேற்பாள். ஒரு சிறிது பால்கோவாவே உண்பாள். அதுவும் பிரசாதமாகவே!
ஸ்ரீகிருஷ்ணனோ அந்த ஒரு மண்டல விரத பூஜை நாட்களில் பல நாட்கள் வேண்டுமென்றே தன்னை மறைத்துக் கொண்டு விடுவான். அந்நாட்களில் கையில் கோவாவுடன் ஸ்ரீகிருஷ்ணன் அமர்ந்த இடங்களெங்கும் அதனை வைத்து நிவேதித்து அவன் திருவடிபட்ட இடங்களில் தன் சிரம் தாழ்த்தி வணங்கிப் பால் கோவாவிலிருந்து சொட்டும் சில நீர்த் துளிகளை (பால்) உண்டு ஸ்ரீகிருஷ்ண ஸ்மரணையில் ஆழ்ந்திடுவாள் கோகிலா. கோகிலா தேவியின் உத்தம் விரதமுறையை அறிந்து பல கோபிகைகளும் அவளை பின்பற்றலாயினர்.
ஆனிமாத பௌர்ணமிக்கு முன் ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதத்தைத் துவங்கி வியாச பௌர்ணமி அமையும்போது விரதத்தை முடித்த கோகிலா தேவிக்குக் கண்ணன் காட்சி தந்து கடம்புப் பால்/சீம்பால் இனிப்பினை உண்டான். ஸ்ரீகிருஷ்ணனின் திருவடியெண்ணி வாழ்ந்த கோபிகா கோகிலா, ஸ்தூல உடலுடன் ஸ்ரீகிருஷ்ணனின் திருவடியடைந்தனள்.
கலியுக கோகிலா விரதமுறை : பால் பசுக்கள் இன்றும் ஓரளவு நிறைந்துள்ள நம் நாட்டில் சற்று சிரமத்துடன் இதனை நிறைவேற்றினால் கண்ணனின் திருவடிப் பிராப்தியை எளிதில் பெறலாம். 11-7-1995 அன்று கோகிலாவிரதம் அமைவதால் அதற்கு 48 தினங்கள் முன்னரே கோகிலா விரதத்தைத் துவங்க வேண்டும். தினமும் பால்கடம்பு/சீம்பால் கொண்டு பால்கோவா செய்து ஸ்ரீகிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்து கோகிலா விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
தினமும் சீம்பால்/பால்கடம்பு பெறமுடியுமா? ஸ்ரீகண்ணனின் திருவடி அடைவதெனில் இது எளிதே! பக்தி சிரத்தையுடன் உண்மையாக இவ்விரதம் மேற்கொண்டால் தினமும் இப்பால் கிட்டிடுமே! உள்ளத்தனையது உயர்வு அல்லவா? நன்கு முயற்சித்தும், சூழ்நிலை இருப்பிடம் காரணமாக பபசுவின் சீம்பால் கிட்டிடாவிடில், தினமும் பசும்பால் கொண்டு பால்கோவா செய்து இந்த ஒரு மண்டலம் தினமும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து பிரசாதமாய் ஏற்று எழைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும். எனினும் கோகிலா கோபி ஸ்திரீகளைப் போல் ஸ்ரீகிருஷ்ணனின் திருவடி ப்ராப்தி பெற தினமும் சீம்பால் இனிப்பு கொண்டு ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணித்திட, பரிபூரணமான பலன்களைப் பெறலாம். உபவாச நியமங்கள் கலியுகத்திற்கேற்ப சற்று தளர்த்தப்பட்டாலும் தினமும் ஏழைக் குழந்தைகளுக்குப் பால்தானம் ஒரு மண்டலம் அளித்து வருவது உபவாச விரத பங்கங்களுக்குப் பிராயச்சித்தமாக அமையும். அவரவர் குடும்ப நியதிக்கேற்ப 45 அல்லது 48 நாட்களை ஒரு மண்டலமாக ஏற்க வேண்டும்..
சத்சங்க கோகிலா விரத வழிபாடு :

சத்சங்கக் கூட்டு விரத பூஜைகளுக்கு எப்போதும் பன்மடங்கு விரதபலன்களுண்டு. கோகிலா விரதத்தைச் சத்சங்க விரத பூஜையாக மேற்கொள்வோர் 48 சத்சங்க அடியார்களாக ஒன்று சேர்ந்து பல்வேறு இடங்களில் தினமும் சீம்பால் இனிப்புச் செய்து ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணித்து, ஒவ்வொருவரும் ஒரு நாளேனும் முழு உபவாசமிருந்து 48வது நாள் கோகிலா விரதநாளான பௌர்ணமியன்று கூட்டு நாமசங்கீர்த்தனம், அன்னதானம் குறிப்பாகப் பால்கோவா இனிப்பு தானத்துடன் குருவருளால் நிறைவு செய்திடில் குருவருளே திருவருளாக பரிணமித்து ஸ்ரீகிருஷ்ண திருவடி ப்ராப்திக்கான நல்வழியைப் பெற்றுத் தரும்..

திரிதின அமாவாசை

அமாவாசைத் திதியானது மூன்று தினங்களுக்குத் தொடர்ந்து விரவி வருவது மிகவும் அபூர்வமானதாகும். திரிதின அமாவாசை வரும் 26-6-1995 இரவு 3.58 முதல் 28.6.1995 காலை 6.20 வரை மூன்று தினங்களுக்கு அமாவாசைத் திதி உத்தம விசேட, அம்சங்கள் நிறைந்து அமைகின்றது. தமிழ்ப் பஞ்சாங்கக் கணிதப்படி சூரியோதய நேரத்தில் தான் ஒவ்வொரு நாளும் பிறக்கின்றது. ஸ்ரீசந்திர பகவானும், ஸ்ரீசூரிய பகவானும் ஒன்று கூடுவதே அமாவாசைத் திதியின் விசேட குணமாகும்.
இம்மூன்று தினங்களையும் முறையே கண, கோஹி, துலா அமாவாசை தினங்கள் என்று சித்தபுருஷர்கள் அழைக்கின்றனர் பொதுவாக அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் தான் பித்ருக்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர் எனபதை நம் முந்தைய ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் நன்கு விளக்கியுள்ளோம். அவர்கள் தொடர்ந்து மூன்று தினங்களுக்குத் தங்கி பூலோகத்தில் நமக்கு அருள்பாலிக்கும் வாய்ப்பு மிகவும் அரிதன்றோ! சொல்லவும் இயலுமோ, இத்திரிபாத அமாவாசைத் திதியின் மகிமையை!
மிகமிக அபூர்வமாக அமையும் இந்த மூன்று தின அமாவாசைத் திதி பரிணமிக்கும் மூன்று தினங்களிலும் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் இடுதல் அளப்பரிய பலன்களைப் பெற்றுத் தரும். இம்மூன்று நாள் தர்ப்பணப் பூஜைகளால் மகிழ்வுறும் பித்ருக்கள் தம் ஆசிகளை வாரி வழங்கிச் செல்கின்றனர். அது மட்டுமல்லாது தம் வாழ்நாளில் எத்தனையோ, மாதப்பிறப்பு, விஷ்ணுபதி புண்யகாலம் போன்ற புனித நாட்களில் தர்ப்பணங்களைச் சரிவரச் செய்யாதோர்/தவறவிட்டோர்க்கு ஒரு பிராயச்சித்த முறையாக இத்திரிபாத அமாவாசைத் தர்ப்பணப் பூஜைகள் சித்தபுருஷர்களால் அருளப்பெற்றுள்ளன.
வசு, ருத்ர, ஆதித்யப் பித்ருக்கள்
வசு, ருத்ர, ஆதித்யப் பித்ருக்கள் என்று முக்கியமான மூன்று வகையினர் உண்டு. பித்ரு லோகங்களிலும் பலவகை உண்டு. நல்வாழ்க்கை மூலம் மக்கள் சேவையை மகேசன் சேவையாகப் புரிந்தோர் உத்தமப் பித்ருக்களாய் ஆகின்றனர். ஒவ்வொரு பித்ருவும் தன்னுடைய ஆயிரமாயிரம் ஜன்மங்களின் தொடர்பான லட்சோபலட்சமான வம்சாவழியினரை நல்வழிப்படுத்த, ஊன், உறக்கம், பசியின்றி ஒரு விநாடி நேரம் கூட வீணாக்காது அவர்களைக் கரையேற்றும் நற்காரியங்களை ஆற்றிக் கொண்டேயுள்ளனர்.

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

பொதுவாக அமாவாசை, கிரஹணம் போன்ற விசேஷ நாட்களின் போது வசு, ருத்ர, ஆதித்ய மூன்று வகை பித்ரு தேவர்களில் அனைவருமே பூலோகத்திற்கு வருவதில்லை. மஹாமகம், மஹோதய புண்ய காலம், மஹாளய அமாவாசை கார்த்திகை தீபம் போன்ற புண்ய தினங்களில் தான் அனைத்துப் பித்ரு தேவர்களும் வருகின்றனர். த்ரிபாத அமாவாசை போன்ற மூன்று தின அமாவாசை நாட்களையும் மிகவும் புனிதமான நாட்களாகக் கருதுவதால் இந்நாளில் மிகுந்த ஆனந்தத்துடன் பித்ருதேவர்கள் பூலோகக் கோயில்கள், தீர்த்தங்கள், இராமேஸ்வரம், கன்யாகுமரி போன்ற கடல் ஸ்தலங்கள், கும்பகோணம் சக்கரப் படித்துறை, திருவிடைமருதூர், திருவள்ளூர் தீர்த்தம் போன்ற முக்கியமான ஸ்தலங்களில் பிரசன்னமாகி அவர்கள் பல தர்ப்பணப் பூஜைகளை முன்னின்று ஏற்கின்றனர்.
த்ரிபாத அமாவாசைத் தர்ப்பண பூஜை : மூன்று தினங்கள் வரும் த்ரிபாத அமாவாசையில் ஒரு நாள் இல்லத்தில் தர்ப்பணம், மற்றொரு நாள் நதிக்கரை, கோயில் தீர்த்தங்களில் தர்ப்பணம், மற்றோர்  நாளில் சமுத்திரத்தில் தர்ப்பணம். இம்மூன்று வகை தர்ப்பண பூஜைகள்தாம் த்ரிபாத அமாவாசையின் பரிபூர்ண பலனைத் தரும். அவரவர் சௌகரியப்படி இம்மூன்று நாள் தர்ப்பண இடங்களை அமைத்துக் கொள்ளலாம். குறிப்பிற்க்காக சில விசேஷமான ஸ்தலங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன,

நதிக்கரைத் தர்ப்பண பூஜை : பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயம் ( மூன்று நதிகளின் சங்கமம் – அபூர்வமான தலம்) கும்பகோணம் சக்கரப் படித்துறை (காவிரி) காசி, அலகாபாத், குற்றாலம்,,
கோயில் தீர்த்தங்கள் : பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர், திருவிடைமருதூர். திருவள்ளூர்
சமுத்திரம் : இராமேஸ்வரம் , நவபாஷாணம், கன்யாகுமரி
தர்ப்பண முறை : இம்மூன்று நாட்களிலும் செய்ய வேண்டிய விசேஷ தர்ப்பண முறை உண்டு, மூன்று  முழு மட்டைத் தேங்காய்களை (நார் உரிக்காதது) வைத்து அவற்றின் மேல் தர்ப்பைச் சட்டங்களை வைத்துத் தர்ப்பணமிடல் வேண்டும். மூன்று  நாட்களுக்கும் வெவ்வேறு முழு மட்டைத் தேங்காய்களை வைக்க வேண்டும். குறைந்தது ஒருபடி நெல் தானியத்தைத் தரையில் பரப்பி இதன் மேல் மூன்று முழு மட்டைத் தேங்காய்களை வைத்து, இவற்றின் மேல் தர்ப்பைச் சட்டம்/கூர்ச்சம் வைத்துத் தர்ப்பணமிடுதலே திரிதின அமாவாசைக்குரிய விசேஷ தர்ப்பண முறையாகும். நெல், தேங்காயுடன், வெற்றிலை பாக்கு, பழம், அன்னம் போன்றவற்றைத் தக்க ஏழைகளுக்குத் தானமாக அளித்தல் வேண்டும்.

தான தர்மங்கள்

அடியார் : குருவே, நம் ஸ்ரீஅகஸ்திய விஜயம், மாத இதழில் தானதருமங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதழ் முழுதும், வெவ்வேறு வகை தான தருமங்கள் வலியுறுத்தப்படுவதால் ஒரு சாதாரண மனிதனாலோ அல்லது நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராலோ  அனைத்து தான தருமங்களையும் நிறைவேற்ற இயலாது. என் செய்வது?
சற்குரு : ஒவ்வொரு மனிதனும் நித்யவழிபாடுகளையும், சூரிய வழிபாடு, தர்ப்பணம் போன்ற தினசரி கர்மாக்களை நிறைவேற்றியாக வேண்டும் என்று அடியேன் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளேன். பலவித கர்மவினைகளைச் சுமந்து வாழும் மனிதன் தினந்தோறும் தீய எண்ணங்கள், தீயவினைகளில் உழன்று பலவித கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்கிறான். பூஜைகள், நித்ய கர்மாக்களும், கோயில் தரிசனங்கள், புண்ணியத் தீர்த்தங்களில் நீராடல் போன்றவையும் குறைந்துவிட்டன. இந்நிலையில் எவ்வகையில் ஒரு மனிதன் தெய்வீகப் பாதையில் நிலைத்து நிற்க இயலும்? நிறைந்த புண்ணிய சக்தி இருந்தாலன்றோ அவனால் பல துன்பங்களை மனோதிடத்துடன் சமாளிக்க இயலும்! நம் பெரியோர்கள் தினசரி வழிபாட்டு முறைகளையும், நித்ய கர்மாக்களையும் நன்முறையில்  வகுத்துத் தந்துள்ளனர். இவற்றை முறையாக நிறைவேற்றினால் புண்ணிய சக்தி அபரிமிதமாகப் பெருகிக் கவசமாக நின்று நம்மைக் காக்கும். இவற்றை அடியோடு மறந்துவிட்ட நிலையில் கலியுகத்தில் தான தருமங்களே சிறந்த பரிகாரமாக உள்ளன.
மனிதனின் நித்ய தேவைகள்
ஒவ்வொரு மனிதனும் தன் தினசரி வாழ்வில்

  1. குறைந்தது 10,000 முறையாவது ஸ்ரீகாய்த்ரி மந்திரம் ஜபிக்க வேண்டும்.
  2. சூரிய வழிபாடு, நட்சத்திர தரிசனம், குலதெய்வ பூஜை, இஷ்ட தேவதா மூர்த்தி வழிபாடு
  3. பெற்றோர், குருவை நமஸ்கரித்தல்,
  4. காக்கை, பசு, எறும்பு போன்ற ஜீவன் களுக்கேனும் உணவளித்தல்.
  5. கோயில் தரிசனம், பெரியோர்களை வணங்குதல், அரிசி மாவினால் இல்லத்திலும், கோயிலிலும் கோலமிடல்,
  6. மூன்று வேளையிலும் தீபமேற்றி வணங்குதல் போன்ற நித்ய கடமைகளை தவறாமல் செய்தால் தான் சுபிட்சமான, சாந்தம் நிறைந்த வாழ்வு கிட்டும். ஆனால் அலுவலக இல்லற வியாபாரப் பிரச்சனைகளில் இயந்திர கதியில் தினசரி வாழ்க்கையை நடத்துகின்ற மனிதனுக்கு இவற்றைச் செய்ய இயலுமா? எனவே தான், நித்ய கடமைகளிலிருந்து தவறி ஏனோதானோ என்று ஒருவித குறிக்கோளுமின்றி வாழ்கின்ற மனிதனுக்காகவே தான தருமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தானுண்டு தன் வேலையுண்டு என்ற வாழ்க்கை சுயநல வாழ்க்கையே! வெளியுலகில் நல்லவர் போல் தோன்றினும், இவர்களும் வாழ்க்கையைத் தனக்கெனவே வாழ்ந்து பிறவியை விரயமாக்குபவர்களே. இந்தச் சரீரத்தால் இறைவனுக்கும், பிறருக்கும் சேவை செய்தால் தான் இப்பிறவியெடுத்த பயனைப் பெற இயலும், எனவே இறைவன் சேவையாம் மக்கள் சேவையே தான தருமங்களாக மலர்கின்றன.

தான தருமங்கள் ஒரு செலவினமா ?
பணம் என்பது புண்ணியத்தின் செலவாணி ஆகும். அதாவது, புண்ணியமானது பல தோஷ துன்பங்களின்று காக்கும் இரட்சையாகவும் தேவையானதை தரும் கற்பகத் தருவாகவும், ஆபத்பாந்தவராகவும், வீடு, பொருள், செல்வமாகவும் பலவிதங்களில் அனுகூலம் செய்கின்றது. புண்ணிய சக்திதான் ஆரோக்யம், கல்வி, செல்வம் மக்கட்பேறு, சாந்தம், மன அமைதி போன்ற அனைத்தையும் தருகின்றது. பூஜை, புனஸ்காரங்கள், வழிபாடுகள், கோயில் தரிசனம், தீர்த்த யாத்திரை போன்றவை குறைந்து வருகையில் புண்ணிய சக்தியை மனிதன் எவ்வாறு பெற இயலும்? இதற்காகவே தானதருமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நம்மிடம் இருக்கின்ற பணம் கூட புண்ணிய சக்தியின் ஒருவகை செலவாணியே “கடன் வாங்கியிருப்பின் கூட, புண்ணியத்தின் சக்தியில்தான் பணம் கிட்டுகிறது. “ஏன் உலகிலுள்ள அனைத்தையும் புண்ணியம் பாவம் என்ற இரண்டிற்குமே இணைக்க வேண்டும்? நான் புண்ணியம், பாவம் இரண்டையும் பார்க்காமல் ஏதோ என் கடமை என நற்காரியங்களைச் செய்ய விரும்புகிறேன்” .... என்று பலர் எண்ணுவதுண்டு. ஆனால் ஆசாபாசங்களும் ஆசைகள், விருப்பங்கள், பிரார்த்தனைகளும் இருக்கும்வரை ஒவ்வொரு மனிதனும் புண்ணிய, பாவ நியதிகளுக்கு ஆட்பட்டுத்தான் செயல்படுகின்றான். உதட்டளவில் “நான் புண்ணியம், பாவம் என்று பார்ப்பதில்லை” என்று பேசுவதில் பிரயோஜனமில்லை.
தனக்கு மிஞ்சி..... தான தர்மங்கள் மிகுந்த புண்ணிய சக்தியைத் தரும். ஆனால் தான தர்மங்களை நிகழ்த்தப் பணம் வேண்டுமே! குறைந்த வருவாய் உள்ளவர்கள் என் செய்வது? நிறைய தானம், தர்மங்களைச் செய்ய விரும்புகின்றேன். ஆனால் என் பொருளாதார நிலையைப் பார்க்கும் போது ....” என்று பலர் உதட்டளவில் தான் சொல்வதுண்டு! தான தர்மங்களை உளமாறச் செய்ய விரும்புகின்றவன்  தன்னிடம் இருக்கின்றதோ, இல்லையோ, உடனே துணிந்து அந்தத் தெய்வீகக் காரியத்தில் இறங்கி விடுவான்!
“நாளை நமக்கு என்ன செய்வது?” என்று எண்ணாது இன்றே இருப்பதைக் கொண்டு தானம் செய்வதே உண்மையான தானம். ஏனெனில் சுயநலமற்ற தானதர்மத்தில் ஏற்படும் புண்ணிய சக்திக்கு ஓர் அபூர்வமான, அற்புதமான, ஆற்றல் உண்டு! இதன் பலனால் அந்த மனிதனுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான நல்வழிகளை அந்த “அந்த சக்தியே” காட்டி விடும்! ஆனால் இதனை துணிந்து செய்து பார்த்தால் தான் அந்தத் தெய்வீக அனுபவத்தை உய்த்து உணர முடியும்!
மஹான்களின் நிலை
அதாவது தனக்கு மிஞ்சி(யதைத்) தான தர்மம் செய்தால் அதன் அற்புத தெய்வீக சக்தியால் அவனுடைய தேவைகள் தானாகவே பூர்த்தியாகும். ஆனால் இதற்கு துணிவு வேண்டும். அரைகுறை மனதுடன் செய்தல் கூடாது. பெரிய மஹான்களின் நிலை இதுவே! எதையும் அவர்கள் தனக்கென வைத்துக் கொள்ளாது வாழ்வதினால் அவர்களுக்கு எல்லாம் தானாகவே நடக்கின்றன. பெரிய உற்சவங்கள், கும்பாபிஷேகங்கள், அன்னதானங்கள், ஆஸ்ரமங்கள் போன்ற மாபெரும் நற்காரியங்களை அவர்கள் தொடங்கிட இறையருளால் அவை நடைபெறுகின்றன.
ஆனால் சாதாரண மனிதன் ஒரு சிறிய அளவிலாவது தியாகம் புரிந்து, பிறர்க்காகச் சிறிதும் சுய நலமின்றி ஒரு ஐம்பது ரூபாய் அல்லது நூறு ரூபாய்க்கான தான தர்மத்தினைச் செய்வானாகில் அதன் தெய்வீக இன்பத்தைத் தானே புரிந்து கொள்வான். செய்து பாருங்கள். உய்த்துணர்வீர் பேரின்பத்தை!

திருஅண்ணாமலை கிரிவலம்

திருஅண்ணாமலையில் சாட்சாத் பரமேஸ்வர மூர்த்தியே அண்ணாமலையாக வீற்றிருக்கின்றார். ஆதிசிவனின் லிங்கத் திருமேனியே இன்று திருஅண்ணாமலையாக திவ்ய தரிசனம் தருகிறது. இந்தத் தெய்வத் திருமலையையே வலம் வருவதெனில் ஸ்ரீவிநாயகப் பெருமானைப் போல், சிவபெருமானையே வலம் வந்த பாக்கியமன்றோ கிட்டுகின்றது.பெறற்கரிய இம்மானுடப் பிறவியில் அருணாசலமாம் திருஅண்ணாமலையை ஒரு முறையேனும் கிரிவலம் வந்தே ஆக வேண்டும். இல்லையெனில் இப்பிறவியெடுத்தது வீண் அன்றோ?
கிரிவலம் ஏன் ? எத்தனையோ தீவினைகளைச் சுமந்து வாழும் மனிதன் தன் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலத்தில் தன் தீய வினைகளுக்காக எண்ணி வருந்திப் பரிகாரம் தேடுகின்றான். அவன் சற்குருவைப் பெற்றால் அவரே அவனது கர்மப்பாங்கை அறிந்து நல்வழி காட்டுகின்றார். ஆனால், சற்குரு கிட்டுவது எளிதல்லவே! கிட்டிடினும் மனம், முழுதுமா அவரைத் தெய்வத்தின் பரிபூரணப் பிரதிநிதியாக ஏற்கிறது? கலியுகத்தில் இந்நிலை ஏற்படும் என்று கருதியே சாட்சாத் சதாசிவப் பரம்பொருளே, திருஅண்ணாமலையாகத் தானே கனிந்து, மானுடக் கண்களுக்கு, இறை நிரூபணமாகக் காட்சியளிக்கின்றார்.  இனியேனும் திருஅண்ணாமலை கிரிவல மஹிமையை உணர்ந்து, தம் கர்மங்களுக்கும், துன்பங்களுக்கும் நிவாரணம் தரும் பிறவிப் பெரும்பிணி நீக்கும் இறையருளை, குருவருளாகப் பெற்றுத் தரும் திருஅண்ணாமலை கிரிவலத்தை மேற்கொள்வோமாக!

ஓய்வு பெற்ற பின் பேரப்பிள்ளைகளைப் பார்த்த பிறகாவது மனம் சாந்தமடைகிறதா? இல்லையே! அவர்களை வளர்த்து சீராட்டி, ஆளாக்கி் கல்யாணக் காட்சி செய்து வைக்க மனம் ஆசைப்படுகின்றது. நாம் என்ன சிரஞ்சீவியா அனைத்தையும் பார்த்து வாழ! என்றுதான் இறைவனைத் தேடுவது! மேலும் நம் குடும்பம், நம் பிள்ளைகள் , நம் பேரப்பிள்ளைகள் என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளிவந்தால் தானே இறைவனைப் பற்றிய எண்ணமே வரும்! ஓய்வு பெற்ற பிறகாவது பூஜை, இயன்ற தான, தர்மம் போன்றவற்றில் நாள் முழுதும் ஈடுபட்டால், அதன் புண்ய சக்தியால் குடும்பம் தானாகவே தழைக்கும்! இளமையில் இறைவனை நாடாததற்குப் பிராயச்சித்தமாக நம் பிள்ளைகளையாவது இறைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். வயதான காலத்திலாவது சுயநலமின்றிப் பூஜையில் ஈடுபட வேண்டும்.  

சற்குருவை பெறும் வழி : “எனக்கு உரித்தான “குரு” யார்? சற்குருவை எங்கே காணலாம் அனைவருக்கும் சற்குரு உண்டா? இவையெல்லாம் சாதாரணமாக எல்லோருடைய மனதிலு எழும் வினாக்கள். உண்மையாகவே சற்குருவைப் பெறும் ஆர்வமுள்ளவன், “இறைவா! எனக்குரிய சற்குருவைக் காட்டுவாயாக!” என்ற பிராத்தனையுடன் கிரிவலம் வருவானாகில் நிச்சயமாகாக சற்குருவே வந்து அரவணைத்து நல்வழி காட்டுவார்.
திருஅண்ணாமலை கிரிவலம் : இதுவே அனைத்துத் துன்பங்களுக்கும் அருமருந்து. திருக்கோயில்களில் ஈஸ்வரனே விநாயகராகவும், முருகனாகவும், விஷ்ணுவாகவும், அம்பாள் மற்றும் ஏனைய இறைமூர்த்திகளாகவும் எழுந்தருளி விதவிதமான அனுக்ரஹங்களைத் தந்து நம்மை உய்விக்கின்றார். அனைத்து இறைமூர்த்திகளின் மூலப் பரம்பொருளே பரப்பிரம்மமாக, திருஅண்ணாமலையாக வீற்றிருக்கின்றார். எனவே பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஸ்வயம்பு மூர்த்திகளின் மூலாதாரமே திருஅண்ணாமலை. நோய் நொடிகள், திருமணத் தடங்கல்கள், வேலைவாய்ப்பு, பணக்கஷ்டங்கள், வியாபாரத்தில் நஷ்டம், விவசாயப் பிரச்சனைகள், குடும்பத் தகராறுகள், கணவன்-மனைவியர் இடையேயுள்ள பிணக்குகள், விவாகரத்து, குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்கள் போன்ற இன்னோரன்ன வாழ்க்கைத் துன்பங்களுக்கு அருமருந்தாக அமைவது திருஅண்ணாமலை கிரிவலமாகும் .
உங்களுடைய பிரச்சனைகள் தீரவேண்டி திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதைவிட, பலருக்கும் அண்ணாமலை கிரிவலம் மஹிமையை எடுத்துரைத்து, அவர்களுடன் சேர்ந்து கூட்டாக, சத்சங்கமாக, இறை நாமம் ஓதியவாறு, நாமசங்கீர்த்தனத்துடன் தம்மால் இயன்ற உணவு, உடை தானம் அளித்தவாறு கிரிவலம் வந்திடில் இதன் பலன்கள் பல்கிப் பெருகித் தனித்து கிரிவலம் வருவதால் ஏற்படும் இன்பத்தைவிடப் பன்மடங்கு இறையனுபவத்தை, இறைப் பேரின்பமாக அனுபவித்து மகிழலாம். செய்து பாருங்கள், உய்த்து உணர்ந்து மகிழுங்கள்.
கிரிவலமுறை : திருஅருணாசலேச்வரர் கோயிலருகிலுள்ள இரட்டைப் பிள்ளையார் சந்நிதியின் பின்புறத்தினின்று திருஅண்ணாமலையைத் தரிசிக்க வேண்டும். இதற்குச் “சாணக்ய தரிசனம்” என்று பெயர். அறிவில் சிறந்த சாணக்யர் தம் சபதத்தை இறையருளால் நிறைவேற்றித் தம் குடுமியை மீண்டும் முடிந்த இடம் இதுவே. இத்தரிசனத்தால் குழந்தைகளுக்குக் கல்வியறிவு விருத்தியாகும்.. படிப்பில் மந்தமாயுள்ள பிள்ளைகள் இத்தரிசன மஹிமையால் கல்வியில் நல்ல முன்னேற்றமடைவர். இவ்விடத்தில் சிலேட்டு, எழுதுகோல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றைத் தானமளித்தால் இதன் பலனாய் அவர்தம் குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர்.  ஸ்ரீ இரட்டைப் பிள்ளையார் தரிசனத்திற்குப் பின் திரு அருணாசல சிவன் கோயில் கிழக்குக் கோபுரம் வழியே உள் நுழைந்து, இடப்புற வாயில்படிப் பிள்ளையார், கோபுரத்தின் உட்புறம் வலது, இடப்புறமுள்ள ஸ்ரீகாளிதேவியர், கம்பத்து இளையனாராகிய ஸ்ரீமுருகன், ஸ்ரீநந்தீஸ்வரர், கிளிக்கோபுரம், இடப்புறம் திரும்பி ஸ்ரீபிரம்மலிங்கம் ஆகிய இறைமூர்த்திகளைத் தரிசித்துத் தெற்குக் கோபுரம் குளத்தருகே, மூன்று கோபுரங்களைக் காணும், முக்கூட்டுத் தரிசனத்தைக் கண்டு, தெற்குக் கோபுரவாயில் வழியே வெளிவந்து கிரிவலத்தைத் துவங்க வேண்டும். முக்கூட்டுத் தரிசனத்தின் பலனால் குடும்பத்தில் மனைவி, மக்களிடையேயுள்ள பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்ந்து மன அமைதி கிட்டும். அலுவலகம், குடும்பம், பொருளாதாரத் துன்பங்களில் அவதியுறுவோர்க்கு முக்கூட்டுத் தரிசனம் நல்வழிகாட்டி அமைதியைத் தரும். இதற்கெல்லாம் ஆழ்ந்த குரு நம்பிக்கை தேவை.
கிரிவலத் துவக்கம் : 1. ஸ்ரீ இரட்டைப் பிள்ளையாரில் துவங்கும் திருஅண்ணாமலை கிரிவலத்தில் மௌனம் அனுஷ்டிப்பது சிறந்தது.
2. ஓம் நமசிவாய, ஓம் முருகா, ஓம் நமோ நாராயணா, ஸ்ரீகாயத்ரி மந்திரம்,, ராம நாம தாரக மந்திரம் போன்ற இறை நாமாக்களை, இறைத் துதிகளை இடைவிடாது கூட்டாகப் பாராயணம் செய்தலும் மௌனத்திற்குரிய பூரண பலனளிக்கும்.
3. கிரிவலத்தில் செருப்பு அணிதல் கூடாது. ஆண்கள் வேஷ்டியை மேல்பகுதி இடப்புறமாகச் செருகி அணிதல் சிறந்தது. பஞ்சகச்சம் (OR) மேற்கு வங்கம்/ஆந்திர பாணியில் வேஷ்டியைக் கச்சம் வைத்துக் கட்டினால் சுவாச நிலை சீர்பட்டு மனம் அமைதி பெறும். பெண்கள் மடிசார் முறையில் புடவை அணிவது உத்தமமானது.

4. நெற்றிக்கு மஞ்சள்/விபூதி/குங்குமம்/சந்தனம்/சிந்தூரம்/ நாமம் ஏதேனும் இட்டுத்தான் கிரிவலம் வரவேண்டும்.
5. கிரிவலம் வருகையில் பழங்கள், பிரெட், பிஸ்கட், சாதம், நீர், மோர், உடைகள் போன்றவற்றை எடுத்துச் சென்று ஆங்காங்கே ஏழைகளுக்கும், பசுக்கள் போன்றவற்றிற்கும் தானமாக அளித்திட அவற்றின் பலன்கள் அபரிமிதமாகப் பெருகி நமக்கு ஆசியளிக்கின்றன.
பெரியோரின் ஆசி

பிரபஞ்சத்தில் சர்வேஸ்வர மூர்த்தியே ஸ்தூல ரூபமாக விளங்கும் ஒரே மலை திருஅண்ணாமலை, ஆதலின் மஹரிஷிகள், யோகிகள், ஞானிகள், முமூட்சுக்கள் போன்றோர் எப்போதும் வெவ்வேறு ரூபங்களில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து இறைவனை ஸ்தூல ரூபத்தில் தரிசித்து பேரானந்தம் அடைந்து அதனைக் கிரிவலம் வருவோர்க்கு ஆசியாக அளித்திட அவர்தம் புண்ணிய சக்தியே இறையருளால் நம் துன்பங்களைத்   துடைக்கின்றன.

  1. நம் வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு தேவர்களும், உத்தம கந்தர்வர்களும், மஹரிஷிகளும் வெவ்வேறு ரூபங்களில் நம் தான தருமங்களைப் பெற்று நம்மை ஆசீர்வதிக்கின்றனர். திருஅண்ணாமலையின் தெய்வீக விசேஷம் என்னவெனில் எப்போதும், எந்நேரமும் யாரேனும் ஒருவரேனும் கிரிவலம் செய்த வண்ணம் இருப்பர். கிரிவலப் பகுதியில் ஸ்ரீகாயத்ரீ தரிசனம், ஏகமுக தரிசனம், ஸ்ரீசோமாஸ்கந்த தரிசனம், பஞ்சமுக தரிசனம், தசமுக தரிசனம் என பலவகைப்பட்ட தரிசனங்கள் உண்டு. இதைத் தக்க குருமூலம் அறிவோமாக!
  2. நம் குருமங்கள கந்தர்வா நூற்றுக்கணக்கான கிரிவல தரிசனங்களை இறையடியார்களுடன் கிரிவலம் வந்தவாறே அவற்றின் மஹிமைகளோடு காட்டியுள்ளார். இத்தகைய ஆன்மீகப் பெரியோர்களை நாடினால் திருஅண்ணாமலையின் ஆன்மீக இரகசியங்களை நன்கு உய்த்துணரலாம்.
  3. செங்கம் ரோடில் இருந்து கிரிவலப்பாதை பிரியும் இடத்தில் இருந்து சிறிது தொலைவில் சிங்கமுகம் கூடிய சுதையுடன் “சிவராஜ சிங்க தீர்த்தம்“ உள்ளது. இவ்விடத்தில் எந்த ஒரு மனிதனும் தான் வாழ்க்கையில் செய்த எவ்விதக் கொடிய தீவினைக்கும், தீயபழக்கத்திற்கும், (மது, புகை, தகாத உறவுகள், களவு ) தக்க முறையில் இத்தீர்த்தத்தில் பரிகாரம் தேடலாம். ஆனால் தன்னால் பாதிக்கப்பட்டோர்க்குத் தக்க நிவாரணமளித்து அத்தவறை மீண்டும் செய்யலாகாது என்ற வைராக்கியம் மேற்கொள்ள வேண்டும். தவறிடில் கடும் சாபங்கள் உண்டு.
  4. அடி அண்ணாமலையில் ஸ்ரீஆதி அண்ணாமலையாரைத் தரிசித்து, தசமுக தரிசனத்தைப் பெற வேண்டும்.
  5. பல தரிசனங்களை அடுத்து வருவது சிவசக்தி ஐக்யஸ்வரூப தரிசனம் ஆகும். இங்கு சக்தி சொரூபமாக ஸ்ரீபார்வதிதேவி மலைமுகடாக உச்சியின் முன் காட்சியளிக்கின்றாள். உச்சியே சிவம், முன்னிற்கும் முகடே சக்தி. இவ்விடத்தில் தான் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரின் பரிபூரண இறையருளுடன் நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தமஹாபுருஷரின் குருவருளுடனும், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் அருட்கடாட்சத்தால் “ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்“ நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்திலிருந்து பெறுகின்ற சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனத்தால் குழந்தைப் பேறு கிட்டும். ஒரு நிலைப்பட்ட நிலை எளிதில் கூடும். இது பல யுகங்களில் ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபுவின் பாரம்பர்ய சித்த புருஷர்கள் தங்கி அருள்பாலித்த விசேஷப் பகுதியாகும்.
  6. ஸ்ரீகுபேரலிங்க தரிசனம், ஸ்ரீஇடுக்குப் பிள்ளையார் தரிசனம், பஞ்சமுக லிங்க தரிசனம் இவற்றுடன் இரட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு முன்னுள்ள ஸ்ரீபூத நாராயணப் பெருமாள் சன்னதியில் தான் கிரிவலம் நிறைவு பெறும்.
  7. ஓம்காரப் பிரணவத்தில் துவங்கி இப்பூதவுடலில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதற்கு அருள்பாலித்த ஸ்ரீபூத நாராயணப் பெருமானை வணங்கி் கிரிவலத்தைப் பூரணம் செய்திடல் வேண்டும்.
  8. இக்கிரி வலத்திற்குப் பிறகு கோவிலில் ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், ஸ்ரீஉண்ணாமுலையம்மையையும் வணங்கிடில் பிரார்த்தனா பலன் பரிபூரணமடையும்.
ஜடாயு மோட்சம்

நாம் அறிந்துள்ள மஹாபாரத, இராமாயண இதிகாச, புராணங்கள் உண்மையான மஹாபாரத, இராமாயண புராணங்களின் ஒரு பகுதியே ஆகும். எத்தனையோ புராண நிகழ்ச்சிகளும், இதிகாச சுலோகங்களும் காலப்போக்கில் மறைந்து வருகின்றன. ஒரு முறை ஓர் அன்பர் நம் குருமங்கள கந்தர்வாவிடம் “சுவாமி! அடியேன் கும்பகோணம் அருகே தாராசுரம் சிவன் கோயிலுக்குச் சென்று அங்கு ஈஸ்வரனைத் தரிசித்து வந்தேன். மிகவும் புராதனமான ஸ்தலம். ஆனால் சமயக் குரவர்கள் எவரும் இத்தலத்தைப் பற்றிப் பாடவில்லையே ஏன்?” என்று கேட்டதுடன் பல வைணவத் தலங்களையும் குறிப்பிட்டு அவையும் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
இதற்கு நம் குருமங்கள கந்தர்வா அளித்த விளக்கமாவது : ஸ்ரீஅகஸ்திய பெருமான் பூஜித்த ஸ்ரீஐராவதேஸ்வரர் உறையும் தாராசுரத் திருத்தலத்தையா நால்வர்களும், மாணிக்கவாசகரும் பாடாமலிருப்பர். இன்றைக்கும் தாராசுரத் திருக்கோயிலின் முகப்பில் ஸ்ரீஅகஸ்தியரின் அழகான சிற்பம் விளங்குவதைக் காணலாம். அதே போல் பல முக்கிய  வைணவத் தலங்களையும் ஆழ்வார்கள்  மங்களாசாஸனம் செய்யாமலில்லை, பாடாமலுமில்லை! உண்மையென்னவெனில் உத்தம இறைதரிசனம் பெற்ற அவர்களுடைய பல பாடல்கள் நமக்குக் கிட்டவில்லை. அவ்வளவே! காலப்போக்கில் அவை வெளிவரும்!
அந்த அன்பர் தன் அறியாமைக்காக வருந்தித் தக்க விளக்கம்  பெற்றமைக்காக மகிழ்ந்து விடைபெற்றார்.
“இருடிகள் இராமாயணம் “ “இருடிகள் மஹாபாரதம்“ என்ற சித்தர்களுடைய இதிகாசங்களில் பல இராமாயண, மஹாபாரத காட்சிகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. தம் குருகுலவாசத்தில் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகளிடமிருந்து நம் குருமங்கள கந்தர்வா பல புராண வரலாறுகளை கேட்கும் பாக்யம் பெற்றார்கள். அவற்றை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு இன்புறுவோமாக!
அதோ....! ஐடாயு சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் பூண்டிருக்கின்றார்! சம்பாதியின் அரவணைப்பில் சூரியனின் வெப்பக் கதிர்களைப் பொருட்படுத்தாமல் தகிக்கும் சூர்யமண்டலம் அருகே ஊன், உறக்கமின்றிக் கடுந்தவம் ஏன் எதற்கு? “பெறற்கரிய பூவுலகப் பிறவியைப் பெற்று விட்டோம்! இப்பூதவுடலை இறைவனின் சேவைக்காக ஒரு சிறிதேனும் பயன்படுத்த வேண்டி இறைவனிடமே பிரார்த்தனை! அவனருளால் தானே அவன்தாள் வணங்க வேண்டும்!
ஒரு கழுகு ஜீவனிடமிருந்து எத்தகைய உத்தமமான பிரார்த்தனை! அப்படியானால். மனிதர்களாகிய நாம் எந்த ஆன்மீக நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும்! இன்றும் “பிள்ளையாரப்பா, முருகா! அதைக்கொடு, இதைக்கொடு” என்றல்லவா கேட்டுக் கொண்டிருக்கின்றோம்! தன்னை இறைப்பணிக்காக அர்ப்பணிப்பதற்கான தவம் அன்றோ! ஈஸ்வரன் உடனே பிரசன்னமானார்.
“ஜடாயு! எந்த ஒரு தவமும் பரிபூர்ணமடைய ஸ்ரீஅம்பாளின் அனுக்ரஹம் தேவை! ஆனால் உன்னைத் தெய்வீகப் பணிக்கு ஏற்குமாறு செயற்கரிய தவம் புர்ந்துள்ளமையால் உன் விருப்பத்தைக் கேட்டு அதற்குரித்தான தேவி பூஜையை யாமே குறிப்பிடுவோம்!”
ஜடாயு பட்சி பேரானந்தமடைந்து! “ஸ்வாமி! சிவ, விஷ்ணு பேதகங்களைக் கடந்து இறைப்பணியைப் புரியத் தங்கள் கருணை கடாட்சம் வேண்டும். சிவவிஷ்ணு பேதத்தைக் கடப்பது எளிதன்று என்பதை அடியேன் அறிவேன்! சிவனாகத் தங்களுடைய ஆயுதத்தால் என்னைச் சம்ஹரிக்க வேண்டும்! விஷ்ணுவாகத் தாங்கள் எனக்கு நற்கதி அளிக்க வேண்டும்!”
ஈஸ்வரன் புன்னகை செய்தார். “என்ன எளிமையாகக் கேட்டு விட்டாய்? ஆனால் பெறற்கரிய பாக்யமன்றோ! உன்னுடைய வரம் நிறைவேற நீ எம்மைச் சங்கர நாராயணனாக வழிபட வேண்டும். அதற்காக வேர்க் கடலை காவடி எடுத்து வழிபடுவாயாக! ஸ்ரீகோமதி அம்மனின் வழிபாடே சங்கர நாராயண தத்துவத்தை நன்கு விளக்கி சிவ-விஷ்ணு பேதத்தைக் கடந்த நிலையைத் தரும்! ஜடாயு ஸ்ரீகோமதி அம்மனின் உபாசனையை மேற்கொண்டது. வெள்ளி தோறும் ஸ்ரீகோமதி அம்மன் எழுந்தருளியுள்ள தலங்களில் வேர்க்கடலைக் காவடி எடுத்து ஸ்ரீஅம்பாளைத் துதித்து வந்தது! இன்றைக்கும் ஸ்ரீகோமதி அம்மன் எழுந்தருளியுள்ள சில தலங்களில் உள்ள தூண்களில் கழுகின் சிற்பத்தைக் காணலாம். வெள்ளியன்று ஸ்ரீகோமதி அம்மனின் தலத்திலிருந்து கழுகின் தரிசனம் பெறுவது நல்ல சகுனமாகும். எடுத்த நற்காரியம் நிறைவேறுவதற்கும், கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறவும் வெள்ளியன்று  ஸ்ரீகோமதி அம்மன் சந்நிதியில் வேர்க்கடலை (நிலக்கடலைக்) காவடி எடுத்து வேர்க்கடலைப் பாயசம் தானம் செய்திடல் நலம்.
யுகாவதார ஜடாயு – பல யுகங்கள்  வாழ்ந்த பறவைகளே சம்பாதியும், ஜடாயுவும் ஆகும். பல்லாயிரம் ஆண்டுகள் ஸ்ரீகோமதி அம்மனை வழிபட்ட ஜடாயுவிற்கு ஸ்ரீகோமதி அம்மனின் தரிசனம் கிட்டியது. ஜடாயுவிற்குச் சிவ விஷ்ணு பேதங்கடந்த சங்கரநாராயணத் தத்துவத்தை உபதேசித்த ஸ்ரீகோமதி அன்னை காட்சி தந்து, “ஜடாயு! திரேதா யுகத்தில் இராமாவதாரத்தில் உன் அபிலாசைகள் நிறைவேற சர்வேஸ்வரன் அனுக்ரஹிப்பார். உனக்கு ஸ்ரீசங்கர நாராயணரே நேரில் தோன்றி இராமதாரக மந்திரத்தை உபதேசிப்பார். ஸ்ரீராமன் யாங்கணும் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து சிவபூஜையின் மஹிமையை உணர்த்துவார். காசி க்ஷேத்திரத்தில் இயற்கையாக மரிப்போரின் காதுகளில் சிவபெருமானே இராம தாரக மந்திரத்தை ஓதி அருள்பாலிக்கின்றார். அரியும் சிவனும் ஒன்றே! இதனை எங்கும் பரப்புவதான இறைப்பணியே உனக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது“ என்று கூறி, அன்னை ஜடாயுவை ஆசீர்வதித்தனள்.
சந்திரஹாஸ வாள் ................ இதோ, இராவணன் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து பல்லாயிரம் ஆண்டுகளாய் நிஷ்டையில் அமர்ந்திருக்கின்றான். கேட்பதைத் தருபவனன்றோ திருக்கயிலைநாதன்! இராவணன் முன் சிவபெருமான் எழுந்தருளிட,
“மஹாபிரபோ! மனிதரோ, தேவரோ, இறைஅவதாரமோ எவரையும் வென்றிடும் ஓர் ஆயுதத்தை எனக்களித்திட வேண்டும்” என்று வேண்டினான். சிவபெருமான் “சந்திர ஹாசம்” என்னும் ஓர் அற்புத வாளை இராவணனுக்கு அளித்து, “இராவணா சந்திரஹாசம் என்னும் இந்த வாள் உன் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யும். ஆனால், இத்தெய்வீக வாளை,

  1. அதர்மமாக, உன்னைவிட பலவீனமானவர்களிடம் பிரயோகிக்கக் கூடாது.
  2. இவ்வாளை ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும். 
  3. இவ்வாளை ஒரு முறை உருவிப் பயன்படுத்தியபின் இதன் சக்தி பயனற்றுப் போய்விடும்

என்ற நிபந்தனைகளுடன் அதனை இராவணனுக்களித்தார். “சுவாமி! நிபந்தனைகள் என்னைப் போன்ற பராக்கிரமசாலிக்கு எளிமையான வைதானே” என்ற மந்தகாசச் சிரிப்புடன் அவன் அதனைப் பெற்றுக் கொண்டான். இதனொடு இராவணன் தன் தவத்தை நிறுத்திவிடவில்லை. மீண்டும் கடுந்தவத்தை மேற்கொண்டு, தேவர்களாலோ, அசுரர்களாலோ, தெய்வ மூர்த்திகளாலோ, தன் உயிர் அழிக்கப்படக் கூடாது என்ற வரத்தையும் பெற்றான். அகங்காரத்தின் ஆக்கிரமிப்பினால் மனித இனத்தை மறந்தனன் போலும்! அல்லது மனித இனத்தையே ஒரு துரும்பாக , தூசியாக, கிள்ளுக்கீரையாக எண்ணினன் போலும்!  இதனால்தானே ஸ்ரீஇராம பிரான் சாதாரண மனிதராக அவதரித்தார். எல்லாம் பரபொருளை திருவிளையாடலன்றோ!
இராமாவதாரத்தில் ஜடாயு
........ இதோ! இராவணன் அதர்மமான முறையில் சீதையைக் கவர்ந்து சென்றிட, வயதான ஜடாயு பட்சி அவனுக்கு அறிவுரை கூறியும் கேளாமையால் சீதையை மீட்பதற்காகத் தன் தள்ளாடிய வயதிலும் அவனை எதிர்த்துப் போரிடத் துவங்கியது. அதர்மம், காமம், கோபம், மூர்க்கம், குரோதம் போன்ற துர்குணங்களுடன் திகழ்ந்த இராவணன் அவ்வயதான பட்சியுடன் மூர்க்கத்தனமாய்ப் போரிட்டான். ஆனால் ஜடாயு சற்றுந் தளராது இராவணனுடன் போரிட்டவாறே அவனுடைய விமானத்தைக் களைப்புடன் தொடர்ந்தது.  “எங்கே எவரேனும் ஜடாயுவிற்குத் துணையாக வந்துவிட்டால் தன் சுயநலக் காரியம் தடைபடுமோ” என்று எண்ணிய இராவணன் தன் கோபத்தின் உச்சத்தில், தான் என்ன செய்கிறோம் என்பதை உணராது தன் இடைவாளை உருவி ஜடாயுவை வெட்டினான். வெட்டியதும் மறுமுறை அவ்வாள் செயலற்றுப் போய்விட்டது.
ஆம்! அதுவே சிவபெருமானிடமிருந்து அவன் பெற்ற அற்புதமான சந்திரஹாஸ வாள் ஆகும்.
இந்திரனையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும், ஏன் சனீஸ்வரரையும், ஏனைய நவக்கிரகங்களையும் வென்று, அவர்களைத் தம் அரியணைப்படிகளாக அமர்த்திய மஹாவலிமை பெற்ற இராவணன் கேவலம் ஒரு பட்சிக்காக அதுவும் வயதான, மூப்புமிகுந்த ஒரு பறவையை அதுவும், மிகவும் அதர்மமான முறையில் வீழ்த்தப் பயன்படுத்தியமையால், சிவன் அருளிய வரத்தின்படி அவ்வாள் இரண்டாம் முறை செயலற்றுப் போயிற்று. ஆத்திரக் காரனுக்குப் புத்திமட்டு என்பது புலனாகி விட்டதே! நியாயமான முறையில் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான தீயவர்களை மாய்க்கும் வல்லமை வாய்ந்த சந்திரஹாஸ வாளை அநியாயமான முறையில் பயன்படுத்திய இராவணன் சினத்தினால் மதியிழிந்தான். இராவணனுக்கு வரங்களை ஆதிசிவன் அள்ளித் தந்து விட்டான் என்று குறை கூறியோர் இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியந்தனர்.
அவனன்றி ஓர் அணுவும் அசையாதன்றோ! இறைவனின் திருவிளையாடலுக்கு எல்லை ஏது?
ஸ்ரீராமன் – இராவணன் போரிடல்.. யுத்தகாண்டத்தில்.......... போர்க்களத்தில் ஸ்ரீராமர் இராவணனுடைய ஆயுதங்களில் ஒரு வாளைத் தவிர மற்றவற்றையெல்லாம் இழக்கச் செய்து அவனை நிராயுதபாணியாக்கினார். இராவணன் (சந்திரஹாஸ) வாளிருந்தும் வாளாவிருந்தான். காரணம் ? ஸ்ரீஇராமபிரான அறியாததொன்றா? சந்திரஹாஸ வாள் மட்டும் அதன் தெய்வீக சக்தியைப் பெற்றிருந்தால்...
இடைக்கச்சையில் சந்திரஹாஸ வாள் இருந்தும் என்ன பயன்? இராவணன் தன்னைத்தானே நொந்து கொண்டான். ஸ்ரீராமச் சந்திர மூர்ததி இராவணனுடைய சூன்ய நிலையைப் புரிந்து கொண்டு, தர்மத்தின் வழி நின்று, “இராவணா! இன்று போய் நாளை வா!” என்று கூறினார்.
ஜடாயு மோட்சம் : சீதையைத் தேடி வனமெங்கும் அலைந்த ஸ்ரீராம ஸ்ரீலெக்ஷ்மண சகோதரர்கள் சிவபெருமானளித்த சந்திரஹாஸ வாளால், தாக்கப்பட்டு வீழ்ந்து கிடந்த ஜடாயுவைக் கண்டு அதன் தியாகத்தினை அறிந்து போற்றினர். விஷ்ணு அவதாரமான ஸ்ரீராமர் ஜடாயுவிற்கான அந்திமக் கிரியைகளைச் செய்து முக்தியளித்தார். சிவாயுதத்தால் தேக விநியோகம் பெற்று விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தியின் தெய்வத் திருக்கரங்களால் நற்கதி பெற்ற ஜடாயுவின் இந்த இதிகாச நிகழ்ச்சி இருடிகளின் இராமாயணத்தில் காணப்படுகின்றது.
ஜடாயு மோட்சம் பெற்ற கதையைப் பாராயணம் செய்பவர்களுக்கும், பிறருக்கு எடுத்துச் சொல்பவர்களுக்கும், சிவ, விஷ்ணு பேதமற்ற நர நாராயண, சங்கர நாராயண பக்தியின் உத்தம நிலை கிட்டும்.
சிவ, விஷ்ணு பேதம் வேண்டாம்.
ஹரியும் சிவனும் ஒன்றே! ஆழ்வார்களும், நாயன்மார்களும் உத்தமபக்தியில் திளைத்தமையால் யாங்கணும் சென்றவிடமெங்கும் இறையருளால் இறைபக்தியைப்பரப்பி இதனையே மக்கள் சேவையாக மஹேஸன் சேவையாகப் புரிந்தனர். இதனால் மக்களுடைய பிணிகளைத் தீர்த்து அற்புதங்களைப் புரிந்து இறை நெறியை ஊட்டினர். ஆழ்வார்களுக்கும் சிவ, விஷ்ணு பேதம் கிடையாது. சர்வம் விஷ்ணுமயமாக அவர்கள் வாழ்ந்து காட்டினர். நாயன்மார்கள் சர்வம் சிவமயமாக எடுத்துக் காட்டி வாழ்ந்தனர். இதனால் அந்த ஒரே பரம்பொருளே விஷ்ணுவாகவும், சிவனாகவும் காட்சியளித்து அவர்களை ஆட்கொண்டார். ஆனால் ஆழ்வார்களுடைய, நாயன்மார்களுடைய கோபிகைகளின் ஆழ்ந்த பக்தியை நாம் பெறவில்லை. இந்நிலையில் “நான் இதுவரையில் பெருமாள் ஆலயத்தைத் தவிர வேறு எங்கும் காலெடுத்து வைத்ததில்லை” என்றோ “நான் சிவாலயங்களுக்கு மட்டுமே செல்வேன்” என்றோ பெருமையாகக் கூறிக் கொள்வதில் ஒரு பயனுமில்லை. ஏனெனில் உண்மையான சிவ பக்தனோ, விஷ்ணு பக்த்னோ எந்நிலையிலும் இத்தகைய எண்ணத்தைக் கூட தன் மனதில் வைத்திருக்க மாட்டான்!
கடமையை மறவாதீர் :- தீவிர வைணவத்தையோ, சைவத்தையோ பின்பற்றுவதாக எண்ணிக் கொண்டு, மூன்று வேளை் சந்தியா வழிபாடுகள், பிரம்மயக்ஞம், ஔபாசனம், அக்னி சந்தானம், வைச்வதேவம், ஏகாதசி, கிருத்திகை, சஷ்டி, திருவோண விரதங்கள், பிரதோஷ, விஷ்ணுபதி, ஷடசீதிப் புண்யகாலங்கள், தர்ப்பண பூஜைகள் போன்றவற்றை முறையாகக் கடைபிடிக்காமல் அல்லது வசதிக்கேற்றபடி சிலவற்றை மட்டும் மேற்கொண்டு

  1. பெரியோர்கள் நிர்ணயித்துள்ள நித்ய கோயில் தரிசனம், தீர்த்த, தல, யாத்திரைகள், ஹோம, யாக நியதிகளைச் சரிவரக் கடைபிடிக்காமல்.
  2. தேவமொழி, தமிழ் மறைகள், சைவாகமங்கள், திவ்யபிரபந்தம் போன்றவற்றையும் முறையாகப் பாராயணம் செய்யாமல்
  3. தீட்சை, கச்ச உடை, கடுக்கன், பூணூல், நெற்றிச் சின்னங்கள், கோபூஜை போன்றவற்றை முழுதும் கடைபிடிக்காது காலத்திற்கு ஏற்ற கோலமாக வாழ்வதும்.
  4. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம், ஷண்மதங்கள் இவை இறைவனை அடையும் பல வழி முறைகளெனப் பரிபூரணமாக உணராது தாம் அறிந்ததே உத்தமமானது என்று செருக்குடன் வாழ்வதும்

பல பிறவிகளுக்குத் தான் வழிகோலும்!
சிவனை நிந்தித்து, “சிவாலயங்களுக்குச் செல்ல மாட்டேன்” என்றும் விஷ்ணுவை நிந்தித்து “வைவணத் தலங்களுக்குச் செல்ல மாட்டேன்’ என்று பெருமை, வறட்டுக் கௌரவம், அகங்காரம், ஆணவம், மமதை, வித்யா கர்வம் காரணமாக எவரும் சொல்வாராயின்,

  1. சிவநிந்தனை செய்தோர் மீண்டும் பூவுலகில் பிறந்து பலப்பல ஜென்மங்களெடுத்து சிவ அபராதத்திற்குப் பிராயச்சித்தமாகச் சிவ பூஜைகள், சிவ ஆராதனை நிகழ்த்தி உய்வு பெற வேண்டும். “நான் சிவாலயங்களுக்குச் செல்வது கிடையாது” என்று கூறிக் கொள்வது கூட சிவநிந்தையின் பாற்படும்.
  2. “நான் சைவத்தைத் தழுவியவன்” என்று விஷ்ணு ஆலயங்களுக்குச் செல்லாமலிருப்பின் அவர்களும் பூவுலகிற்கு அனுப்பப்பட்டுப் பல்வேறு ஜென்மங்ளெடுத்து விஷ்ணு பூசை, விஷ்ணு ஆராதனைகளை மேற்கொண்டு விஷ்ணு நிந்தனைக்குப் பிராயச்சித்தம் காண வேண்டும். “நான் பெருமாள் கோயிலுக்குச் செல்வதில்லை!” என்று கூறுவதும் விஷ்ணு நிந்தனையைச் சாரும்.

பேதங் கடந்தாலே பெருவாழ்வு
எனவே சிவ-விஷ்ணு பேதங்கடந்தால் தான் பிறவி பிணி தீரும் என்பதை நன்கு உணர வேண்டும். ஆனால் ஆழ்வார்களைப் போல், நாயன்மார்களைப் போல் உத்தம பக்தியைப் பெற்றால் அந்நிலையில் அனைத்தும் தானே விளங்கும். ஆனால் அத்தகைய நிலையைப் பெற்று விட்டதாக நினைத்துக் கொண்டு சிவ-விஷ்ணு பேதம் கொண்டிடில் இதற்குக் கடுஞ்சாபங்களுண்டு!
இறைவனை அடையும் பல மார்க்கங்களில் சைவம், வைணவம், கௌமாரம் (முருக வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), சௌரம் (சூர்ய ஜோதி வழிபாடு) எனப் பல வழி முறைகள் உள்ளன. ஏதேனும் ஒன்றை உறுதியாகப் பற்றிடில் இறை தரிசனம் கிட்டும் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். அந்தத் தீவிர வழிபாடு தற்காலத்தில் சிலருக்குச் சிவ விஷ்ணு பேதத்தைத் தந்து விட்டது! இது கடைபிடித்தவர்களின் (அறியாமை) தவறே தவிர, பெரியோர்கள் என்றும் பெரியோர்களே!
இஷ்ட தெய்வ வழிபாடு
இஷ்ட தெய்வ பூஜை எல்லோருக்கும் உரித்தானது. இஷ்ட தெய்வ பூஜை மூலமாக எளிதில் உன்னத இறைநிலைகளை அடையலாம். இந்த இஷ்ட தெய்வ பூஜை தத்துவத்தைத்தான் நம் பெரியோர்கள் மேற்கண்ட சைவம், வைணவம் போன்ற ஷண்மதப் பூஜைகளாக வகுத்துத் தந்தனர். இதனால் இஷ்ட தெய்வத்தைத் தவிர ஏனைய தெய்வ மூர்த்திகளை வழிபடுவது தவறு என்று எண்ணலாகாது! நம் தினசரிப் பூஜையில் இஷ்ட மூர்த்தி தனி முககி்யத்துவம் பெறுகிறார். அவ்வளவே! இந்து மதத்தின் சிறப்பம்சமே இஷ்ட தெய்வ வழிபாடுதான்! இதனால் தான் இன்றும் பாரதமெங்கும் இலட்சக்கணக்கான ஆலயங்களில் சிவலிங்கமாக, மஹாவிஷ்ணுவாக, அம்பிகையாக, கணபதியாக, முருகனாக, ஐயப்பனாக, நவக்கிரஹ மூர்த்திகளாக, திருஅண்ணாமலையாக, ஸ்ரீகிருஷ்ணனாக இன்னமும் ஏனைய வடிவங்களில் அந்த ஒரே பரம்பொருளே விதவிதமாகக் காட்சியளிக்கின்றார்.
இஷ்ட தெய்வபூஜையில் பரிபூர்ணம் அடைகையில் அந்தப் பரம்பொருளே இஷ்டதெய்வ மூர்த்தியாகத் தரிசனம் தந்து அருள்பாலிக்கின்றான்! இந்த நிலையைப் பெறும் வரை அனைத்து மூர்த்திகளையும் ஒன்றாக பாவிக்க வேண்டும்! பரம் பொருளின் பல்வேறு வடிவங்களுக்குள் பேதத்தைக் காண்பது பக்தி இன்னமும் ஏற்படவில்லை என்பதையே குறிக்கின்றது.
ஹரிஹரனே  ஒருவனே : அனைத்து ஆலயங்களிலும் உள்ள தெய்வ மூர்த்திகளை எவனொருவன் ஆதிசிவனாகக் காண்கின்றானோ அவனே உண்மையான சிவபக்தன்... அனைத்துத் தலங்களிலுமுள்ள தெய்வமூர்த்திகளை எவனொருவன் ஸ்ரீமஹாவிஷ்ணுவாகக் காண்கின்றானோ அவனே உண்மையான வைஷ்ணவன்! இந்நிலை தானாகக் கனிவதன்று! இறைவனே மனமுவந்து அளிக்கும் பேறு! இந்நிலையைப் பெற்றவர்களே உத்தம ஆழ்வார்களும், நாயன்மார்களும், ஞானிகளும், யோகிகளும், மஹரிஷிகளும் ஆவர். இந்நிலையை நாமும் பெற்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு சிவ-விஷ்ணு பேதம் கொண்டிடில் கடுஞ் சாபங்கள் உண்டு. தெய்வீகம் என்பது விளையாட்டல்ல. உடலால், மனதால், உள்ளத்தால் பக்குவப்பட்டு அடைய வேண்டியது தெய்வீகம், வெறும் உதட்டளவில் அமைவதல்ல! இனியேனும் உண்மையை உணர்ந்து சிவ-விஷ்ணு பேதங் கொண்டு செய்த தவறுகளுக்கு இப்பிறவியிலேயே பரிகாரங்கண்டு சற்குரு அருளால் எல்லாம் வல்ல இறைவனைச் சிந்தையில் வைத்து வாழ இந்த நிமிடத்திலிருந்தாவது முயற்சிப்போமாக!

கத்ரியில் மழை

பொதுவாகப் பிரதிவருடம் சித்திரை 21தேதி முதல் வைகாசி 14 வரை அமைகின்ற கோடைக் காலத்திற்குக் கத்ரிகாலம் அல்லது ‘அக்னி நட்சத்திரம்’ என்று பெயர். சுமார் 25 நாட்கள் கூடிய இக்கத்ரி காலத்தை முன ்கத்ரி, மத்திய கத்ரி, பின ்கத்ரி எனப்பகுத்து இதன் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து எதிர்காலத்தைக் கணிக்கும் வானவியல் சாஸ்திரத்தை அறிந்தோர் ஒரு சிலரே!
இந்த யுவ வருட முன்கத்ரியில் பலத்த மழை பெய்து கத்ரிக்குரிய கடும் வெப்பநிலையையே மாறிவிட்டது. “கோடைக் காலத்திற்கு இதம் தந்த மழை” என்ற பொதுக்கருத்து இருப்பினும் இதன் ஆன்மீக விளக்கங்களைக் காண்போமோ? கத்ரியில் கடும் மழை பெய்து தட்ப வெப்ப நிலையே கத்ரிக்குரிய சீதோஷ்ண விகிதாச்சாரத்தினின்று  முற்றிலும் மாறுபட்டால், இது பல தீய விளைவுகளைக் குறிக்கின்றது .
அவைகளாவன :-

  1. அந்தந்தப் பகுதியிலுள்ள வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும்.
  2. வயதானவர்களுக்குத் தலை, கால், சம்பந்தப்பட்ட கடும் நோய்கள் உண்டாகும்.
  3. மின் விபத்துக்கள் உண்டாகும்.
  4. நாட்டில் தீவிர அரசியல், அரசாங்க மாற்றங்கள் உண்டாகும்.
  5. சட்டம் ஒழுங்கு கவனமாகக் காப்பாற்றப்பட வேண்டும்.
  6. சுண்ணாம்பு சம்பந்தமான பொருட்களின் விலை ஏறும்.
  7. பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான நோய்கள் உண்டாகும்.
  8. கடன் பெறுவோர்க்குக் கடன் தொல்லைகள் அதிகமாகும். இவர்கள் நாணயத்தை மேற்கொள்ள வேண்டும்.
  9. மருத்துவர்களிடையே பிணக்குள் உண்டாகும். மருத்துவத்துறை நன்கு பராமரிக்கப் பட வேண்டும்,
  10. பெற்றோர்கள் தம் பெண் குழ்ந்தைகளைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்,

மகர சங்கராந்தி தேவதா பலன்கள், புதுவருடத்தின் பிறப்பு லக்னபலன்கள் போன்று கத்ரியில் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தும் பொதுவான பலன்கள் அளிக்கப்படுகின்றன. இவையனைத்தும் நம் மஹரிஷிகளின் சித்தபுருஷர்களின், சத்யவாக்கு ஆகும். மேற்கண்ட துன்பங்களுக்குப் பரிகாரங்களைச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர். இவற்றைச் சற்குரு மூலம் அறிந்து தக்க முறையில் கடைபிடித்திடில் கத்ரி மூலம் ஏற்படும் இன்னல்களை இறையருளால் நன்கு சமாளித்து அமைதியான வாழ்க்கையைப் பெற்று நற்கதி அடையலாம். நம்பினோர் நலன் பெறுவர்.
பரிகார முறைகள் :- 1. முன் கத்ரியின் விளைவுகள் 4 ஆண்டு வரை நீடிக்குமாதலின் ஸ்ரீவிநாயருக்கு அவ்வவ்போது அல்லது சதுர்த்தி திதியிலேனும் அருகம்புல்லை அரைத்துப் பச்சைக் காப்பு இட்டு வணங்க வேண்டும். இதன் பலன் வழிபடுவோர் அனைவரையும் சென்றடையும்..
2.  வடமொழி ருத்ர பாராயணம், தமிழ்மறை, சிவபுராணம் போன்றவற்றை கூட்டாக ஒரு மண்டலமேனும் ஓதுதல் உத்தம பலனளிக்கும். நாட்டிற்கே ஆன்மீக சக்தியளிக்கும் ஆதலின் இது மிகச் சிறந்த மக்கள் தொண்டாகும். இல்லத்தில் இவற்றை தினந்தோறும் பாராயணம் செய்திட கன்னிப் பெண்கள், வயதானோரைக் காக்கும் இரட்சை போல் இது அமையும்.
3. குறைந்தது 51 நபர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக வேத, தமிழ் மறைகளை ஓதிடில் அதன் தெய்வீக சக்தி விண்ணில் விரவி குறைந்தது ஐந்து சதுர மைல் எல்லையிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ஜாதி, மத, இன பேதமின்றிச் சென்றடைந்து சாந்தமான வாழ்வையளிக்கும். என்னே எளிதான மஹத்தான மக்கள் (இறைப்) பணி!

சில இடங்களில் குறிப்பாகக் குன்றக்குடி, பிரான்மலை, பழனி போன்ற முருகன் தலங்களில் தன் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காகப் பிறரைக் கொண்டு பால் காவடி மற்றும் ஏனைய காவடிகளை எடுக்கும் வழக்கம் நிலவுகின்றது. காவடி எடுப்பதன் பரிபூர்ணமான முழுப் பலன் காவடியைத் தூக்கி வருகின்ற அன்பருக்குத்தான் கிட்டும். அதற்கு ஏற்பாடு செய்பவருக்கு  ஏற்பாட்டிற்குரிய பலன்களே கிட்டும். பிறரைக் கொண்டு காவடி எடுக்க ஏற்பாடு செய்வதால் தானே காவடி எடுப்பதாக ஆகி விடாது. உடல் உழைப்பு, பொருள்தானம் போன்றவற்றிற்கேற்ப அவரவருக்குரித்தான புண்ய சக்தி  அவரவர் செய்யும் இறைப் பணியைப் பொறுத்ததாகும்! உடல் நிலை, ஆரோக்யம், வயது காரணமாக காவடி எடுக்க இயலாவிடில் தன்னால் இயன்ற தூரம் வரை, ஒரு பர்லாங்கு அல்லது அரைபர்லாங்கு தூரமோ, எதுவரை இயலுமோ, காவடி எடுத்தால் தான் காவடி எடுப்பதின் முழுப் பலனை ஒருவர் பெற முடியும்! பிறரைக் கொண்டு காவடி எடுக்கச் செய்வதில் அவர் காவடி எடுப்பதற்கு உதவி புரிந்த பலனைப் பெறலாம்!

ஸ்ரீபலிசுமங்களா தேவி
4. கத்திரிக்குரிய பலி சுமங்களா தேவியின் அதிதேவதை ஸ்ரீபார்வதிதேவி ஆதலின் ஐந்தைந்து பெண்களாக ஒன்று சேர்ந்து ஸ்ரீபலி சுமங்களா தேவியை எண்ணித் தியானித்துப் பசுநெய் கொண்டு ஐந்துமுக தீபமேற்றி ஸஹஸ்ர நாமம்/ஸ்ரீஅபிராமி அந்தாதி ஓதி பூஜை செய்து ஏழைப் பெண்களுக்கு மஞ்சள் நிற ஆடைகளை அளிக்க வேண்டும். பஞ்சபூதங்களுக்கு நாயகனாக ஸ்ரீஅக்னி பகவான் விளங்குவதால் ஐந்து பெண்கள் பஞ்சபூத சக்திகளை வேண்டி வழிபடுகின்ற பாவனையாக இது அமைகின்றது.
அரசமரத்தில் ஸ்ரீஅக்னி பகவான் : ஸ்ரீஅக்னி பகவானின் பத்னியே ஸ்ரீஸ்வாஹா தேவி! ஹோமத்தில் அக்னியில் இடுகின்ற ஆஹுதிகளை (பலி பொருட்கள் – நெய், தேன், பழம், பொரி, சமித்து ) ஸ்ரீஸ்வாஹா தேவியே பெற்று அந்தந்த பித்ரு தேவர்கள், தெய்வ மூர்த்திகளிடம் அவற்றைச் சேர்ப்பிக்கின்றாள். மனிதன் முதல் மஹிரிஷி வரை அனைவரும் அனைத்துத் துன்பங்களுக்கும் நித்யக் கர்மாக்களுக்கும் ஹோமம் வளர்த்து அக்னியாகிய தன்னையே பயன் படுத்தவதாகவும் தனக்கு ஒய்வு வேண்டும் என்று கூறி ஸ்ரீஅக்னி பகவான் ஒரு யுகத்தில், அரச மரத்தில் ஐக்யமடைந்து விட்டார்!.
அக்னியின்றிப் பிரபஞ்சமே ஸ்தம்பித்து விட்டது! அனைவரும் ஸ்ரீஅக்னி பகவானின் பெருமையை உணர்ந்தனர். ஸ்ரீஅரண்ய மகரிஷி தம்பதியினர். அரசமரத்தைத் துதித்து வணங்கி அரணிக் (அரசு) கட்டையைக் கடைந்து அதிலிருந்து பிரபஞ்சத்திற்கு மீண்டும் அக்னியைப் பெற்றுத் தந்தனர். இவ்வாறு அக்னிபகவான் அரசமரத்தில் குடி கொண்ட காலமே கத்ரியாகும். எனவே கத்ரி காலத்தில் புராதன முறைப்படி அரணிக் (அரசுக்) கட்டையைக் கடைந்து அதில் கிட்டும் தீப்பொறியால் பஞ்சைக் கொண்டு விளக்கேற்றி ஔபாஸனம், மற்றும் ஹோமம் செய்தால் அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திர நாட்களிலும் தினந்தோறும் ஔபாஸனம், ஹோமம் செய்த பலன்களை எளிதில் பெறலாம்.
கத்ரிக்குரிய தெய்வமூர்த்தி யார் தெரியுமா?
திண்டுக்கல் – பழனி சாலையில் ரெட்டியார் சத்திரத்திலுள்ள ஸ்ரீகத்ரி நரசிங்கப் பெருமாள் ஆவார்.
கத்ரியில் இவருக்கு நல்லெண்ணெய் காப்பிட்டு இயன்றால் அரணிக் கட்டையில் அக்னி உண்டாக்கி அதில் ஹோமம் வளர்ந்து அரசு சமித்துக்கள், சர்க்கரைப் பொங்கல், துளஸி, எள், மிளகு வடை, முந்திரி, பசுநெய் போன்றவற்றை (ஸ்ரீ நரசிம்ம காய்த்ரீ துதியுடன்) ஆஹுதி அளிப்பது மிகவும் விசேஷமானதெனச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர். இங்கு பானக இனிப்பு நீரைத் தானமாக அளித்திடப் பெண்களின் கடுமையான மாதவிடாய் நோய்களுக்குப் பரிகாரங் கிட்டும். குதிரை ரேஸ், சீட்டு போன்ற தீய வழக்கங்களுள்ள தங்கள் தந்தையைப் பற்றி எத்தனையோ பிள்ளைகளும், பெண்களும் கவலையுற்றுக் கண்ணீர் சிந்துகின்றனர். பொறுப்பில்லாத் தந்தையைத் திருத்துதற்குக் கத்ரி நரசிங்கப் பெருமாள் கோயிலில் மனைவியும், ஆண், பெண் பிள்ளைகளும் சேர்ந்து ஆரண்ய கௌரீ விரத பூஜையை நடத்த வேண்டும். இதில் அம்பிகையை ஸ்ரீநாராயணியாக வரிக்க வேண்டும்.
ஆரண்ய கௌரீ விரதம் : - கத்ரியின் (மேற்குறித்துள்ள) துன்பங்களுக்கு மற்றொரு சிறந்த பரிஹாரமாக “ஆரண்ய கௌரீ” விரதமும் விதிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் இந்த எளிமையான பூஜையை மேற்கொண்டு தங்கள் குடும்பத்திலுள்ள வயதான பெரியவர்கள், கன்னிப் பெண்கள், மருத்துவத் துறையிலுள்ளோர் ஆகியோருடைய நல்வாழ்விற்காகப் பிரார்த்தித்து நல்லருள் பெற வேண்டும்.

திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர்

சுற்றினால் கிட்டும் சுந்தாரனந்தம்
சிவபெருமானின் அற்புத ஆட்டத்தைக் காண தேவர்கள், யோகியர் ............
சரி, ஆடினான்... அம்பலத்து ஆடினானின் ஆட்டத்தில் அப்படியென்ன விசேஷம் இந்தக் கேள்வி நம் குருமங்கள கந்தர்வா அவர்களுக்குத் தோன்றிய இடம் ஈசன் மாசிலாமணியாகத் தோன்றிய திருமுல்லை வாயில் திவ்யத் தலத்தில் தான்..!!
மகான்கள்... ஞானியர்.... யோகியர்... என்று இப்படிப் பலர் காத்திருக்க ... உத்தமர் சிலருக்குத்தான் அந்த பாக்கியம் கிட்டியது அல்லவா அது சரி....”
தெய்வீக ரகசியங்களைத் தெரிந்து கொள்வதென்றால் அவ்வுளவு சுலபமா..... என்ன? நம் குருமங்கள கந்தர்வாவும் கைகால் முட்டி தேய அந்தக் கோயிலைத் தேய்த்துக் கழுவி முடித்து அமர்ந்திருந்த நிலையிலே அவருடைய குரு அவர் அருகில் அமர்ந்து அத்திருத்தல மகிமையைக் கூறுகிறார்....
நடனஇரகசியம்.... ஈசன் உயிர்கள் வேண்டி ஆடுகின்ற நாட்டியத்தில் மிக முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு.... அது என்ன? ஆடுகின்ற வேளையிலே தன் கழுத்தை ஒரு வட்ட வடிவில் (360 டிகிரி) அவன் சுழற்றுவது தான்.. அந்தச் சிறப்பம்சம்.... நாட்டியம் புரிகின்ற ஒருவன்... முன் கழுத்தைப் பக்கவாட்டிலோ அல்லது முன்பின்னோ அசைப்பது சுலபம்... ஆனால் அதை முழுவதுமாகச் சுழற்றுவது இயலாது.
பொதுவாகவே நம்முடைய கழுத்துப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான நரம்புகளை ஈசன் பின்னிப் பிணைத்துள்ளான். அவற்றிலே மூன்று முக்கியமான நரம்புகள் மட்டுமே கழுத்தை முழுவதுமாகச் சுழற்ற உதவும் நரம்புகள்.
இந்திரனின் கர்வம் : அந்த நரம்புகளின் அதிதேவதையோ இந்திரன் ஆவான். ஒரு சமயம் ஈசனுடைய நாட்டியம் அற்புதமாக நடந்து கொண்டிருந்த வேளை... ஈசனும் அற்புதமாகத் தன் கழுத்தை முன்னும், பின்னும் முழுவதுமாகச் சுழற்றி சுழற்றி ஆட.... அதைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திரனோ “என் கட்டுப்பாட்டிலுள்ள அந்த மூன்று நரம்புகளின் துணை இல்லையென்றால் ஈசன் இப்படித் தலையைச் சுழற்ற முடியுமா?” என்று ஆணவம் கொண்டு விடுகிறான்.. அப்போது அங்கு ஒரு விபரீதம் ஆரம்பமாகிவிடுகிறது. ஆம்... இந்திரனுடைய தலை, கட்டுப்பாடில்லாமல் சுழல ஆரம்பித்து விடுகிறது... இந்திரன் திடுக்கிடுகிறான். அவனால் எதையுமே நேராகப் பார்க்க முடியவில்லை சீராக எதையுமே செய்ய முடியவில்லை. அவனுடைய பதவியும் பறிபோகின்ற நிலை..... எங்கெல்லாமோ சென்றும் பயனில்லை... முடிவாக.. அவன் பூலோகத்திற்கு வருகின்றான்..
பல தலங்களை முறையாகத் தரிசித்து வணங்கிய பின்னும் தலை ஆட்டம் நின்றபாடில்லை. அவன் இத்தலத்திற்கு (திருமுல்லைவாயில்) வருகிறான். மாசிலாமணீசனிடம் கதறுகிறான்...
“கம்பளிசித்தர்” எனும் உத்தம சித்தர் அங்கு நடமாடிக் கொண்டிருந்த நேரம்.. .அவர் இந்திரனின் நிலைமையைக் கண்டு மனமிரங்குகிறார். அந்த உத்தமர் இந்திரனிடம். “அப்பனே, உனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையைச் சரி செய்துவிடலாம்... அதற்கு நீ ஒன்று செய்ய வேண்டும். இளஞ்சிவப்பு (pink) நிறத்தில் பால் சுரக்கும் ஆடுகளின் ரோமங்களை நீ எடுத்து அதைத் துணியாக நெய்து வருவாயாக... உன் குறையை ஈசன் தீர்த்து வைப்பான்..” என்று கூற . இந்திரனும் மகிழ்ச்சியுடன் கிளம்பி விடுகிறான்.
எங்கெல்லாமோ தேடி... முடிவில் இமயமலைச் சாரலில் அத்தகைய ஆடுகளைக் காண்கிறான்... இதற்கிடையில்.. ஆடுகின்ற தலையுடன் அவன் பட்ட துன்பங்களை பலப் பல... சித்தர் கூறியது போல ரோமங்களைச் சேகரித்துக் கொண்டு திரும்புகின்றான்... வரும் வழியில் காற்றிலும் மழையிலும் அவன் பாதி முடிகளை இழக்க நேரிடுகிறது இருப்பினும் கடும் முயற்சிக்குப் பின் சில முடிகளோடு திருமுல்லை வாயிலுக்கு வந்துவிடுகிறான்... கம்பளி சித்தர் முன் நின்று வணங்குகிறான் .அந்த வேளையில்... முழுவதுமாகச் சுழன்று கொண்டிருந்த இந்திரனுடைய தலை.. முன்னும் பின்னும் மட்டும் அசைகின்றாற் போல்  மாறிவிடுகிறது... இந்திரனுக்கோ மகிழ்ச்சி.... ஆனால் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறதே!..
“நீ கொண்டு வந்த ரோமங்களைக் கொண்டு ஓர் ஆடையைத் தயார் செய்து வா “ என்று கம்பளி சித்தர் அருள்பாலிக்க, இந்திரனும் ஆடை நெய்து வரச் செல்கிறான். தறியிலே அந்த ரோமங்களை வைத்து... படாதபாடுபட்டு.. ஓர் ஆடையைத் தயார் செய்து விடுகிறான். அதை எடுத்துக் கொண்டு மாசிலாமணீசனிடம் அமர்ந்திருக்கும் கம்பளி சித்தரிடம் வருகிறான்.... “அப்பனே! இந்த ஆடை எனக்கெதற்கு? அதை நீயே ஈசனுக்குச் சாற்று”- என்று அவர் கூற, இந்திரனும் அதை ஈசனுக்குச் சாற்றுகிறான்.... சாற்றிய நிலையிலேயே முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்த தலை நின்று விடுகிறது....
 ஈசன் கருணையைக் கண்ட இந்திரனும், “ஐயனே! என் கட்டுப் பாட்டிற்குள் இருக்கும் நரம்புகளின் உதவி இல்லையென்றால் ஈசன் கழுத்து கூட ஆடாது என்று ஆணவம் கொண்டு விட்டேனே... அனைத்தும் அவன் கட்டுப்பாட்டிற்குள் அல்லவா இருக்கிறது! என்னுடைய ஆணவம் அழிந்து விட்டது. இனி நான் ஈசனுக்குச் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்க, சித்தரும்...... “நீ.... இங்கு ஈசனுக்கு அற்புதமாக விமானங்கள் அமைப்பாயாக...” என்று கூற, இந்திரனும் தேவ தச்சர்களாகிய... மயன் போன்றோரை வைத்து அற்புதமாகக் கோயிலைக் கட்டி முடித்து நன்றியுடன் தேவலோகத்துக்குச் செல்கிறான்.
குருமங்கள கந்தர்வா : குருவே! இந்திரனுடைய ஆணவம் அடங்கிய விதம் அற்புதமாகவே அமைந்து விட்டது.
சிவகுருமங்கள கந்தர்வா: ஆம் அப்பனே!... தேவலோகத்தில் பெற்ற சாபங்களைக் கூட.... பூலோகத்தில் வந்து தான் தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது பார்த்தாயா...? அப்படியென்றால்... பூலோகத்தின் மகிமையைத் தான் என்னென்பது.... அப்படியென்றால் மனிதர்களாகிய நாம் இதை உணர்ந்து நம்மை எப்படியெல்லாம் உயர்த்திக் கொள்ள வேண்டும்?”
குருமங்கள கந்தர்வா : குருவே ... மனிதர்களாகிய நமக்கு மாசிலாமணீஸ்வர ஈசனின் கருணை என்னவோ......?
சிவகுருமங்கள கந்தர்வா : நரம்பு வியாதிகள் அனைத்திற்கும் குணம் இவரிடம் தான் உள்ளது. அதுமட்டுமல்ல..... இளம் வயதில் மனிதர்கள் விந்துவை வீண் செய்வதுண்டு.... அப்படிச் செய்யக் கூடாது... அப்படியொருவன் தன் விந்துவை வீண் செய்திருப்பானேயாகில்.... அவன் இத்திலத்திற்கு வந்து ஈசனுக்குத் தொண்டு செய்திடில்..... ஒரே ஒரு முறை அவன் செய்த தவறுகள் மன்னிக்கப்படும்..
குருமங்கள கந்தர்வா : நரம்பு வியாதிகள் உடையோர் ஈசனுக்குக் கம்பளி ஆடைகள் சார்த்தித் திருப்பணிகள் செய்வது உத்தமம் அல்லவா குருவே....?
சிவகுருமங்கள கந்தர்வா : ஆம்! நீ சொல்வது போல் செய்வது தான் உத்தமம்...அப்படிச் செய்வதால் நம் பரம்பரையில் வந்த கம்பளி சித்தரின் ஆசியும் கிட்டிவிடும் தெரியுமா!.... மேலும் இத்தலத்தில் தங்கி அருள்பாலித்த “பிருங்கி சித்தர்களின்” மகிமையை அடுத்துச் சொல்கிறேன்...”
“சுந்தரானந்தம்“ தொடர்கிறது...........
செர்விகல் ஸ்பான்டிலிடீஸ் என்னும் ஒரு வகைவியாதிக்கு (இதற்காகக் கழுத்தில் கூட ஓர் வளையம் போல போட்டுக் கொள்வர்) மருந்தாகவும் இருப்பவர் நம் மாசிலாமணி ஈஸ்வரரே!

நந்தி வாகனப் பௌர்ணமி

யுவ வருட வைகாசிப் பௌர்ணமிக்கு “நந்தி வாஹனப் பௌர்ணமி” என்று பெயர். இறைவன் பல்வேறு கிருத்யங்களை நிறைவேற்றுவதற்காக பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், கணபதி, முருகன், கிருஷ்ணன், அம்பாள் போன்ற பல இறைமூர்த்திகளாகத் தோன்றி நந்தி, கருடன், அன்னம், மயில் போன்ற வாகனங்களையேற்றுச் சிருஷ்டி பரிபாலனத்தை நடத்துகிறார்.
இறைவனை எப்போதும் தொட வேண்டும் தொட்டுப் பணிந்து மகிழ வேண்டும் சிரசிலும், தோளிலும் தாங்கி ஆனந்திக்க வேண்டும் – போன்ற இறைபக்தி கமழும் – அடியார்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக இறைவன் அத்தகைய அடியார்களைத் தம் வாஹனமாக ஏற்கின்றார். இவ்வாறாகப் பல இறைமூர்த்திகளும், உத்தம மஹரிஷிகளும், யோகியரும் இறையருளால் ஈசனின் வாஹனமாக அமைகின்றனர். மஹேச்வர மூர்த்தியாம் ஆதிசிவன் முதன் முதலாக நந்திவாஹனத்தைப் பெற்ற இடம் சென்னை (கேம்ப் ரோடின் அருகில்) மாடம்பாக்கம் என்னும் ஊரிலுள்ள ஸ்ரீதேனுபுரீஸ்வர ஆலயமாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரே பிரபஞ்சமெங்கும் எழுந்தருளியிருக்கும் நந்தி மூர்த்திகளின் ஸ்ரீநந்தீஸ்வரர் ஆவார். பொதுவாக, வைகாசி மாதம் காளைக்குரிய மாதமாகும். நந்தீஸ்வரர், யுவ வருட வைகாசிப் பௌர்ணமியில் தான் அவதாரம் பெற்றார். ஸ்ரீபரமேஸ்வரமூர்த்தி ஸ்ரீஅம்பிகையின் வேண்டுகோளுக்கிரங்கித் தமக்கென முதல் நந்திவாஹனத்தைப் பெற்ற சிவாலயமே ஸ்ரீதேனுபுரீஸ்வரர் சிவாலயமாகும். இங்கு மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் சிவலிங்கம் கல்லால் ஆனதன்று. கொம்பினாலான விசேஷமான வடிவுடைய சுயம்பு மூர்த்தி.

பழனி, திருப்பதி, திருச்செந்தூர், சமயபுரம் போன்ற திருத்தலங்களில் முடிக்காணிக்கைக்கு வரும் ஏழைக் குடும்பங்களின் செலவு, நீராட வெண்ணீர் மற்றும் குளியல் கட்டணங்கள், உணவு, உடை, தம் கைப்பட (இறை நாமம் ஜபித்து) சந்தனம் அரைத்து அளித்தல் போன்றவற்றை ஏற்று மனதார ஏழைகளுக்குச் சேவைச் செய்தால் தலையில் உண்டாகும் சிரங்கு, பேன், பொடுகுகளுக்கு அற்புதமான முறையில் ஆன்மீகத் தீர்வைப் பெறலாம். மருத்துவர்களும் மருந்துகளை அளிப்பதோடு இத்தகைய ஆன்மீக வழிகளையும் அளித்திட மருத்துவர்களின் “கைராசி” எனப்படும் இறையருள் பல்கிப் பெருகும். நோய் தீர்க்கும் ஸ்ரீதன்வந்திரி மூர்த்தியின் இறையருளும் பரிபூரணமாகக் கிட்டும்.

பிரதிலீப மஹரிஷி – பிரதிலீப மஹரிஷி என்பவர் ஓர் அற்புத தவத்தை மேற்கொண்டார். பக்தர்கள் அங்க, அடி பிரதட்சிணம், கிரிவலம் செய்கின்ற இடங்களிலெல்லாம் இம்மஹரிஷி தலயாத்திரை சென்று இறையடியார்களின் திருப்பாதங்கள் பட்ட இடங்களின் அடிதுகள்களைச் சேகரித்து அவற்றை ஒரு பெரும் மஞ்சள் வஸ்திரத்தில் திரட்டிக் கட்டி அத்திருத்துகள் மூட்டையைத் தம் சிரசில் எப்போதும் தாங்கியிருப்பர் இருமுடிக்கட்டு போல தொண்டரடிப் பாதத் துகள் நிறைந்த அத்திருமூட்டையை பக்தி, சிரத்தையுடன் தம் தலையில் தாங்கியவாறே பல திருத்தலங்கள் சென்று அத்திருவடி மண்ணையே திரு நீற்றுப் பிரசாதமாக அளித்து கொடிய பிணிகளையும், வறுமை, துன்பங்களையும் நீக்கி அருள் வழி காட்டினார்.
தொண்டர்தம் திருவடித் துகள் தாங்கும் திருப்பணி பல வருடங்களுக்குத் தொடர்ந்தது. கோதூளி (பசுவின் திருக்குளம்புகள் பட்ட மண்துகள்) போல அடியார்க்கு அடியவரின் அடிப்பாதத் திருமண்ணைக் கொண்டு இம்மகரிஷி ஒரு சிவலிங்கத்தை ஓரிடத்தில்  பிரதிஷ்டை செய்தார். அதற்கு “மஹாகார்ய சித்தி புருஷ லிங்கம்” என்று பெயர். இன்றும் அவ்விடத்தில் சித்த புருஷர்களால் பாதுகாக்கப்பட்டு பூஜிக்கப்படும் லிங்கம்..
இதன் தரிசனமே முக்தி நிலையையும், மோட்சபுரியையும் தரவல்லதாம். எனவேதான் பிரதிலீப மஹரிஷியால் பிரதிஷ்டிக்கக்ப்பட்ட இவ்வபூர்வ லிங்கம் இன்றும் சித்தர்களாலும், யோகிகளாலும், ஞானிகளாலும் தினந்தோறும் அந்த ரகசியமான தலத்தில் பூஜிக்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்தோர்க்கு இந்த லிங்க தரிசனம் சற்குரு அருளால் கிட்டும். யுவ வருட வைகாசிப் பௌர்ணமியில் தான் இச்சிவலிங்கம் பிரதிலீப மஹரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இத்தலத்தை அறியும் வரையில் யுவ வருட வைகாசிப் பௌர்ணமியாம் நந்திவாஹனப் பௌர்ணமியில் மாடம்பாக்கம்  தேனுபுரீஸ்வரர் ஆலயம், மாயவரம் அருகே திருபுன்கூர் ஸ்ரீநந்தனார் மஹரிஷிக்காக நந்தி இடம் விலகி சிவதரிசனம் தந்த சிவத்தலத்திலும், வைகாசிப் பௌர்ணமியை ஸ்ரீபிரதிலீப மஹரிஷியின் தியானத்துடனும் ஸ்ரீமஹாகார்யசித்திபுருஷ லிங்கத்தை மானசீகமாகத் தொழுது, இவ்வான்மீக இரகசியத்தை நமக்கருளிய சற்குருவையும் தியானித்து, இயன்ற பூஜை, வழிபாடு, தான, தருமங்களுடன் கொண்டாடிட பல விசேஷமான அனுக்ரஹங்கள் கிட்டும்.
இதன் பலன்களை எழுத்தில் வடித்திட இயலாது. சொல்லவும் பெரிதே யுவ வருட நந்திவாஹனப் பௌர்ணமி மஹிமை! இந்நாளில் எக்கோயிலிலும் ஸ்ரீநந்தீஸ்வரருக்கு எண்ணெய்க் காப்பிட்டு வழிபடுதல் உத்தம பலன்களைத் தரும்..

ஸ்ரீகாயத்ரீ தபஸ் – ஸ்ரீகாயத்ரீ முத்திரைகள் – 1
1. ஓம்
2. பூர்புவஸ்ஸுவஹ
3. தத்ஸவிதுர் வரேண்யம்
4. பர்கோ தேவஸ்ய தீமஹி
5. தியோ யோந ப்ரசோதயாத்
என்று இந்து பகுதிகளாகப் பிரித்து ஜபிக்கப்படும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஸ்ரீகாயத்ரி தேவியை வணங்கித் துதிக்கும் இருவரி மந்திரமாகும். ருக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் சாரமாக விளங்குவது. அதிஅற்புத தெய்வீக சக்தி வாய்ந்தது. ஜாதி, இன பேதமின்றி அனைவர்க்கும் உரித்தானது.
1. ஓம் என்பது பிரணவம்
2. பூர்வபுவஸ்ஸுவஹ என்பது பூலோகம், புவர்லோகம்,சுவர்  லோகம், என்று வியாஹ்ருதிகளைக் குறிக்கிறது.
3. தத்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி என்பது 24 அட்சரங்கள் கூடிய ஸாவித்ரீ மந்திரமாகும்.
ஸாவித்ரீ மந்திரமானது ஓம் என்னும் பிரணவத்துடன் பூர்புவஸ்ஸுவஹ என்ற வியாஹ்ருதிகளுடன் சேர்ந்திட ஸ்ரீகாயத்ரீ மந்திரமாகிறது.
நான்கு வேத சாரம் : நான்கு வேதங்களின் சாரமாக ஸ்ரீகாயத்ரீ மந்திரம் விளங்குவதால் தேவமொழி (சமஸ்கிருதம்) வேதங்கள், தமிழ் மறைகளில் பயிற்சி பெறவில்லையே என்று ஏங்குவோர்க்கு திருவருள் கூடிய அமிர்தப் பிரசாதமாக மிளிர்கின்றது. பரவெளியில் நிறைந்து கிடக்கும் வேத மந்திரங்களைப் பெரிய மஹரிஷிகள் கிரஹித்து நமக்கு அளித்துள்ளனர். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை நமக்குப் பெற்றுத் தந்தவர் ஸ்ரீவிஸ்வாமித்திர மஹரிஷி ஆவார். இவ்வாறாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் மஹிமையை விவரித்துக் கொண்டே செல்லலாம்.
ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் பரிபூர்ண பலனைப் பெறுவதற்கான மந்திர, யந்திர, தந்திர, தாந்திரீக, யோக, ஹோம, வேள்வியாக முறைகள் பல உண்டு. இவற்றைப் பல்வேறு யுகங்களில் கடைபிடித்து உத்தம நிலையடைந்தோரே அரும்பெரும் மஹரிஷிகள், யோகிகள் போன்றவராவர்.
ஆனால் கலியுகத்தில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் பரிபூர்ண பலனை எவ்வாறு பெறுவது ? யோக, மந்திர, தந்திர முறைகளில் கடுமையான நியதிகள் நிறைந்திருக்குமே, இவற்றைச் சாதாரண மனிதனால் பின்பற்ற இயலாதே? அப்படியானால் கலியுகத்தில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் முழு அனுக்ரஹத்தைப் பெறுவதற்கு எளிய வழிமுறைகள் கிடையாதா? ஏன் இல்லை? சற்குருவைப் பெற்றிடில் அனைத்தும் தானே கனியும்!
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பரிபூர்ணமான இறைசக்தியைச் சாதாரண மனிதனும் பெறுவதற்கான எளிய வழிமுறைகளை ஸ்ரீகாயதிரீ மந்திர முத்திரைகளாக நமக்கு அளித்துள்ளார்கள். அவற்றையே இக்கட்டுரைத் தொடரில் தொடர்ந்து மாதந்தோறும் வெளியிடவுள்ளோம்.
ஸ்ரீகாயத்ரீ முத்திரை என்றால்...
முத்திரை என்றால் கைவிரல்களால் வெவ்வேறு வடிவங்களை அமைத்து, தியானத்தை மேம்படுத்துவதாகும். கோயில்களில் காலக்கிரம பூஜைகளில் அர்ச்சகர் பல முத்திரை பாவனையுடன் கைவிரல்களை வடிவமைத்து அர்ப்பணிப்பதைக் காண்கிறோம். ஒருசில அரிய முத்திரைகள் சகஸ்ரநாம பூஜாபலனைப் பெற்றுத் தருவதாகும்.
ஸ்ரீகாயத்ரி மந்திரத்தின் பூரணசக்தியைப் பெற வேண்டும் எனில் உடலும், உள்ளமும் ஒன்று சேர வேண்டும். உதடு மந்திரத்தை ஜபிக்க மனம் எங்கோ பறந்து கொண்டிருந்தால் ஸ்ரீகாயத்ரி மந்திரத்தின் முழு ஆத்ம சக்தியை எவ்வாறு பெற முடியும்?
உடலும் மனமும் ஒன்று சேர உதவும் நல்வழிமுறையே முத்திரை விதானமாகும். நம் குருமங்கள கந்தர்வா ஐம்பதுக்கும் மேற்பட்ட முத்திரை வகைகளை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்துடன்  பிணைத்துத் தியானிக்கும் எளிய முறையை  கலியுக மக்களின் நல்வாழ்விற்கென வழங்கியுள்ளார்கள். இவையெல்லாம் பெறற்கரிய ஆன்மீக இரகசியங்களாகும்.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam