அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருஅண்ணாமலை தரிசனங்கள்

பாண லிங்க முக தரிசனம் – இத் தரிசனம் கிட்டும் இடம் : ஸ்ரீஅருணாசலேஸ்வர ஆலயத்தில் வடக்கு கோபுரத்தின் முன் நின்று பார்த்திடில் கிட்டும் புனித தரிசனம்.
தரிசனப் பலன்கள் :- திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து வடக்கு கோபுரம் அருகே மலையின் பாண லிங்க முக தரிசனத்தைக் கண்டு பாயச தானம் அளித்திட கீழ்க்கண்ட தவறுகள், தோஷங்கள், பாவங்களுக்குப் ப்ராயச்சித்தம் கிட்டும்.
1) அழகு, அறிவு, உடல்வாகு, அந்தஸ்து, செல்வம், இளமை போன்றவற்றில் பிற பெண்களோடு தன் மனைவியை ஒப்பிட்டு அவளை இம்சித்துத் துன்புறுத்துதல்
2) பிற பெண்களை முறையற்ற காம எண்ணங்களோடு நோக்குதல்
3) தான் நேசித்த பெண்ணை அடைய முடியாவிடில் கோபம், பழி, குரோதம் கொண்டு அப்பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்தல்.
முகடுருவ சாயாலிங்க முக தரிசனம்
இத்தரிசனம் கிட்டும் இடம் : ஸ்ரீதுர்கை அம்மன் கோயிலில் இருந்து கிட்டும் புனித தரிசனம்.
தரிசனப் பலன்கள் : திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலயத்தில் முகடுருவ சாயாலிங்க தரிசனத்தைப் பெறறு கோபுரப் பட்சிகளுக்கு  நவதான்யம் அளித்திடக் கீழ்க்கண்ட தீவினைகளுக்குப் பரிகாரம் பெற்றிடலாம்.
1. நற்காரியங்களைப் பிறர் செய்யவிடாது தடுத்தல், (உதாரணம் – தனக்கு முக்கியப் பதவி தராததால் கோயில் விசேஷங்களை நடக்க விடாது தடுத்தல்)
2. வஞ்சம் தீர்க்கும், பழிவாங்கும் எண்ணங்களுடன் பிறருக்குத் தீங்கு அளித்தல்
3. நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதற்காகத் தகாத அசூயையான செயல்களில் ஈடுபடுதல்,
மாயக்குழி வடுதரிசனம்
தரிசனம் கிட்டும் இடம் : ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயில் அருகே அறுபத்து மூவர் மடத்தில் இருந்து கிட்டும் புனித தரிசனம்
தரிசனப் பலன்கள் : திருஅண்ணாமலை கிரிவலம் வந்து ஸ்ரீதுர்க்கைஅம்மன் கோயில் அருகே மாயக் குழிவடு தரிசனத்தைப் பெற்று வஸ்திர தானம் மற்றும் வாழைக்காய் பஜ்ஜியை தானம் அளித்து வரக் கீழ்கண்ட பாவங்கள் தீருவதற்கான நல்வழிகளைப் பெறலாம்.
1.பெண் மோகத்தால், முறையற்ற காமத்தால் தன் மனைவியின் நகைகள், பொருட்களை இழத்தல்.
2. மனைவி இருக்கும் போதே அதர்மமான முறையில் மறுமணம் புரிந்து கொள்ளுதல்
3. காமத்தால் பிற பெண்களிடம் வசப்பட்டு முறையற்ற வாழ்க்கை நடத்துதல்
4. மனைவியின் சிறு தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பெரிதுபடுத்தி, மன, உடல் வேதனைகளை அளித்தல்.

திருஅண்ணாமலையில் அஷ்டதிக்கு லிங்கங்கள்
திருஅண்ணாமலை மலையைச் சுற்றி எட்டு திக்குகளிலும் உள்ள லிங்கமூர்த்திகளுக்கு அஷ்டதிக்கு லிங்கங்கள் என்று பெயர். பூமியை மட்டுமன்றி பிரபஞ்சத்திலுள்ள் லோகங்கள் அனைத்தையும் எட்டு திக்குகளிலும் காக்கின்ற அஷ்டதிக்கு பாலகர்கள், அஷ்டதிக்கு கஜங்கள், அஷ்டதிக்கு நாகங்கள் என்று பலவகை உண்டு.
மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் மேற்கண்ட அஷ்டதிக்கு தேவதா மூர்த்திகள், தேவதைகளை அறிந்து, வணங்கிப் பயன்பெற வேண்டும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அலுவலகம், குடும்பம், உறவு, நண்பர்கள், வியாபாரம், நோய், கடன், பயணம் போன்று பல நிலைகளில் இருந்து பல துன்பங்களை அனுபவிக்கிறார். இவ்வாறு எட்டுவிதமான திக்குகளில் இருந்து அவன் பெறுகின்ற இன்னல்களுக்குரிய பிராயச்சித்தங்களை, நிவாரணங்களை அளிப்பவையே மேற்கண்ட அஷ்டதிக்கு மூர்த்திகளும் லிங்கங்களும் தேவதைகளும் ஆவர்.
ஆன்மீக ரகசியங்களான எண்திக்குப் பூஜை முறைகளை ஒருவன் முறையாக அறிந்து செய்து வருவானாகில், அவன் தன் வாழ்வில் எத்தகைய துன்பங்களையும் முன்னரே அறிந்து எளிதில் களைந்து விடுவான்! இதற்குப் பேரருள் புரிவதே அஷ்டதிக்கு லிங்கங்களின் தரிசனங்களுடன் கூடிய திருஅண்ணாமலை கிரிவலம் ஆகும்.

அஷ்ட திக்குகள்

திக்கு சக்திகள்

திக்கு கஜங்கள்

திக்கு தேவதா மூர்த்திகள்

கிழக்கு

ப்ரஹ்மணி

ஐராவதம்

இந்திரன்

தென் கிழக்கு

கௌமாரி

புண்டரீகம்

அக்னி

தெற்கு

வாராஹி

வாமனம்

யமன்

தென் மேற்கு

சித்தா

குமுதம்

நிருதி

மேற்கு

வைஷ்ணவி

அஞ்சனம்

வருணன்

வடமேற்கு

மஹேந்த்ரீ

புஷ்பந்தம்

வாயு

வடக்கு

சாமுண்டீ

சர்வபௌமம்

குபேரன்

வடகிழக்கு

மஹேஸ்வரி

சுப்ரதீபம்

ஈசானன்

இவர்கள் தவிர அஷ்டதிக்கு நாகங்கள், அஷ்டதிக்கு பட்சிகள், அஷ்டதிக்கு ஆயுதங்கள், அஷ்டதிக்கு மலர்கள் போன்றவையும் உண்டு. இவற்றையே தாம் நாம் வணங்கும் சர்வேஸ்வரனின் பலரூபங்களான ஸ்ரீபிள்ளையார், ஸ்ரீமுருகன், ஸ்ரீஅம்பாள், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசிவன், ஸ்ரீதுர்க்கை போன்ற தெய்வ மூர்த்திகள் தங்கள் சிரசு, கரங்கள், திருப்பாதங்களில் தாங்கியோ அமர்ந்தோ அருள்பாலிக்கின்றனர்.
அஷ்டதிக்கிலும் நம்மைக் காக்கும் இவற்றை அறிந்தால் தான் நாம் தெய்வ வழிபாட்டில் பரிபூரணமடைய முடியும். ஆகையால் திருஅண்ணாமலை கிரிவலத்தில் அஷ்டதிக்கு லிங்கங்களைப் பூஜை செய்து வணங்கி கிரிவலம் வந்திடில் அஷ்டதிக்குகளுக்குரிய வழிபாடு பரிபூரணமடைகிறது. இதற்காக வேறு எங்கும் சென்று ஹோம, வேள்வி, யாக பூஜைகளைத் தக்க வழிகாட்டியின்றி நிறைவேற்றிடல் வேண்டாம்!

கிழக்கு இந்திர லிங்கம்

ஆதிசிவனுடைய அடியையும், முடியையும் காணும் பொருட்டு ஸ்ரீவிஷ்ணுவும், ஸ்ரீப்ரம்மாவும் செய்த  பிரயத்தனங்களையே ஸ்ரீஈஸ்வரனின் திருவிளையாடல்களாக அறிந்துள்ளோம். ஸ்ரீவிஷ்ணு, வராஹ ரூபம் பூண்டு திருஅண்ணாமலையின் புனிதபூமியைக் குடைந்து வெகுதூரம் உள்சென்றார். அப்போது ஸ்ரீவராஹ விஷ்ணுவின் திருநாசியில் பட்ட மண்ணை ஸ்ரீமஹாலக்ஷ்மி சேகரித்தனள். திருஅண்ணாமலையே புனித பூமியல்லவா! சர்வேஸ்வரனே தம் திருமேனியே மலையெனத் தோன்றவிருக்கும் இடமல்லவா! ஆதிசிவனின் அங்கத்தைத் தாங்கும் புனித மண்ணில் ஸ்ரீவராஹ விஷ்ணுவின்  திருமேனிபடுகின்றதென்றால் அப்புனித மண்ணின் தெய்வீகத் தன்மையை என்னென்று விளக்குவது?
ஸ்ரீமஹாலக்ஷ்மி எத்தனையோ முறை ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்குப் பாதபூஜை செய்திருந்தும் அவர்தம் பாததூளியின் தரிசனத்தைக் கூடப் பெறமுடியவில்லையே என்று அதுவரையில் ஏங்கி நின்றாள். ஸ்ரீவராஹ மூர்த்தியின் சிரசு முதம் பாதம் வரை அனைத்து அவயங்களும் தீண்டின திருமண் என்றால் அதனை ஸ்ரீலக்ஷ்மி கிடைத்தற்கரிய பொக்கிஷமாகவன்றோ போற்றி பத்திரப்படுத்தினாள். ஸ்ரீமஹாலக்ஷ்மி பின்னர் செல்வமளிக்கும் அம்பிகையாய் ஆனதற்கு இதன்பின் ஒரு பெரிய புராணமே இருக்கிறது. இவற்றையெல்லான் சித்தபுருஷர்களுக்கே உரித்தான இருடிகள் மஹாபாரதத்தில் தான் காணமுடியும். ஸ்ரீவராஹ விஷ்ணு திருஅண்ணாமலை புனிதபூமியைத் தோண்டியதால் எழுந்த அனைத்து மண் துகள்களையும் ஸ்ரீமஹாலக்ஷ்மியை வேண்டி அம்மண்ணில் ஒரு சிறிதளவேனும் ஏனைய ஜீவன்களின் நன்மைக்காக பூமியில் விட்டு விடும்படி கேட்டுக் கொண்டனர், அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டி ஸ்ரீமஹாலக்ஷ்மி ஒருபிடி மண்ணை திருஅண்ணாமலையைச் சுற்றித் தெளித்தனள்., அதுவே உலகின் ஐஸ்வர்யமானது!
இந்திரனின் தவம் : கங்கை மணலைவிட் அதிகமான இந்திரர்கள் வந்துபோய் உள்ளனர். கிடைத்தற்கரிய பதவி இந்திர பதவி! மிகச் சிறப்போடு எவ்விதச் செருக்குமின்றி வாழ்ந்து அருள்பாலித்த இந்திரர்களுள் சசிதரபிரதாபன் என்ற இந்திரனும் ஒருவர் ஆவார். பல கோடி யுகங்கள், சுயநலமின்றி, தர்மம் சற்றும் பிறழாது, இறைசேவை புரிபவர்களே இந்திரர்கள் ஆகின்றனர். சசிதரப்ரதாபன் தக்க சற்குருவை நாடி இளமையிலேயே உத்தம இறை அனுபவங்களைப் பெற்றான். இந்திர பல்லக்கைத் தாங்கி நடந்து தக்க மரியாதைகளை அளிப்பர். அத்தகைய தெய்வீக சக்தி வாய்த்தது இந்திர பதவி!
சசிதரப்ரதாப இந்திரன், சம்பிரதாயப் படி ஏழு உத்தம சித்த புருஷர்கள்/மஹரிஷிகள் தம்பல்லக்கைத் தாங்கிய போது ஒரு சிறிதும் செருக்குறாது, அவ்வேழு மஹரிஷிகளுக்கும் பாதபூஜை செய்து சிறப்பிடம் பெற்றான். அவர்களைனைவரும் சசிதர ப்ராதாபனுடைய பணியை மெச்சி அவனுக்கு யாதுவரம் வேண்டுமெனக் கேட்க, அவனோ ஒரே ஒருவரத்தைக் கேட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான். அவன் கேட்டவரம் என்ன தெரியுமா?
“முனுபுங்கவர்களே! தங்களுடைய அருளாசியாலும், சர்வேஸ்வரனுடைய கனிந்த திருவருளாலும் இந்த இந்திர பதவியைப் பெற்ற யான் எக்காரணம் கொண்டும் சிறு தவறுகூடச் செய்யாது அடியேனுக்குரிய கடமைகளைச் செய்ய் அருள்புரிய வேண்டும்!”
ஏழுரிஷிகளுக்கும் ஒருபுறம் ஆனந்தம்! மறுபுறம் திகைப்பு! ஸ்ரீஅகஸ்தியர் மனமகிழ்ந்து, “சசிதர ப்ரதாப இந்திரா! இந்திரபதவியில் செருக்கின்றிச் சிறப்பாக வாழ்ந்தவர் ஒரு சிலரே! உன்னுடைய உண்மையான சேவை புரியும் பாங்குடைய குணத்திற்குரிய அவ்வரிய வரத்தைப் பெற நீஅருணாசல க்ஷேத்திரமான திருஅண்ணாமலை சென்று கிரிவலம் வந்தவாறே இறைப்பணிகளைச் செய்து வருவாயாக!“ என்று ஆசீர்வதித்தார். சப்தரிஷிகளின் அறிவுரைப்படி சசிதரப்ரதாப இந்திரன் அருணாசல க்ஷேத்திரத்திற்கு  வந்து இறைவன் முன்நிற்கும், கிழக்கு கோபுரத்திற்கும், கிளிகோபுரத்திற்கும் இடையில் உள்ள குதூகலநந்தியை வணங்கி, கிரிவலத்துக்காக அவரது அனுமதியைக் கோரிநின்றான்.
இந்திரனின் கிரிவலம்
பெறற்கரிய இந்திரபதவி பெற்றும் மமதையோ கர்வமோ இல்லாது பணிவுடன் நிற்கும் இந்திரரைக் கண்டு மகிழ்ந்த குதூகல நந்தீஸ்வரர், கிரிவலத்தை அங்கப்பிரதட்சிணமாகச் செய்யுமாறு அருளுரை வழங்கினார். பல சதுர்யுகங்களாக திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த இந்திரனுக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் அசரீரியாக, “சசிதர ப்ரதாபா! உன் திருவுடல் எங்கு தங்கமேனியாகின்றதோ அங்குதான் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் திருச்சக்கரம் பட்ட, ஸ்ரீவராஹவிஷ்ணுவின் புனித தேகம் ஸ்பர்சித்த இப்பூமியின் திருமண் பதிந்துள்ளது என்பதை உணர்வாயாக! அவ்விடத்தில் யான் தோன்றி உன்னுடைய அபிலாக்ஷைகளை நிறைவேற்றுவோம்!“  என்று அருளாசி வழங்கினார்.
அவ்வாறே அங்கப்பிரதட்சிண முறையில் கிரிவலம் வந்த இந்திரனின் திருவுடல் ஓரிடத்தில் தங்க நிறம் அடைந்தது. திருஅண்ணாமலையாரை வணங்கியவாறே ஆனந்தப் பெருக்கில் இந்திரன் சுவாமியை வணங்கிட, அவ்விடத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரரின் ஓர் அம்சமாக பினாக முரளீதர முகலிங்கமாய், சுயம்பு ரூபத்தில் காட்சியளித்தார். இதுவே இன்றைக்கு கோயிலின் கிழக்கு கோபுரத்தின் எதிரே தேரடி அருகில் இந்திர லிங்கமாக அருள்பாலிக்கிறது.
சசிதரப்ரதாப இந்திரபகவான் இந்த லிங்கத்தையே பூஜித்து  இந்திரர்களில் சிறப்பிடத்தைப் பெற்றார். தம் இந்திர பதவி முடியும்வரை ஒரு சிறு தவறு கூட இழைக்காது இன்றும் உத்தம தெய்வ லோகத்தில் உறைந்து அருள்பாலிக்கின்றார்.
இந்திரலிங்க பூஜாபலன்கள் : சந்திர கிரகம் கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் நாட்களில் இந்திர லிங்கத்தை பூஜிப்பது மிகச் சிறப்பானதாகும்.
1. புதிதாக வேலைக்குச் சேர்வோர், மாற்றலில் (Transfer ) பணிக்குச் செல்வோர்
2. பதவி உயர்வில்/பதவி மாற்றத்தில் புதிய பணியை ஏற்போர்
3. ஒரு பணியை விட்டு அடுத்த பணிக்குச் செல்வோர்
ஆகியோர் தங்களுடைய (புதிய) பணிகளில் எவ்விதத் துன்பங்களும் தவறுகளும் வீண்பழிகளும் வராமல் இருப்பதற்காக இந்திர லிங்கமென்னும் பினாக முரளீதர லிங்கத்தை வழிபடுவது விசேஷமாகும்.
சந்திரனின் கடகராசி சஞ்சார நாட்களிலும், வஸந்த பஞ்சமி, மஹாசிவராத்திரி, மாதசிவராத்திரி மற்றும் பௌர்ணமி பூஜைக்கான நாட்களிலும்

காலசந்தி

அபிஷேக முறைகள்

6 am to 10 am

பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சைக்கனி ரசம், திருநீறு அபிஷேகம்

10 am to 2 pm

முல்லை, பன்னீர் மலர்களால் அலங்கார ஆராதனை, அர்ச்சனைகள்

2 pm to 6 pm

கரும்புச்சாறு அபிஷேகம், வில்வ அலங்காரம்/அர்ச்சனை

6 pm to 10 pm

பால், தேன் அபிஷேகம்

10 pm to 2 am

சம்பங்கிமலர் அலங்காரம்/அர்ச்சனை

2 am to 6 am

வாசனாதி திரவிய அபிஷேக ஆராதனைகள்

இவ்வாறு ஆறு கட்டளை பூஜைகளுடன், இந்திர பகவானுக்குப் ப்ரீதியான வளையல்கள், பட்டாடைகள், சந்தனம், கண் மை, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், அலங்காரக் குங்குமச் சிமிழ் போன்ற மங்களகரமான அலங்காரப் பொருட்களை ஏழைப் பெண்களுக்கு எலுமிச்சை சாதத்துடன் தானமாக அளித்திட புதிய இடத்தில்/பணியில் உள்ள தடங்கல்கள், துன்பங்கள் மறையும்.
இந்திரபகவானே தம் பணியில் எவ்வித சிறுபிழையும் நேரக்கூடாது என்பதற்காக பூஜித்த லிங்கமாகையால், இந்த இந்திரலிங்கத்தை வணங்கிட புதுப்பணியில் எவ்விதத் தவறும் ஏற்படாது.

தென் கிழக்கு அக்னி லிங்கம்

பஞ்சபூத ஸ்தலங்களாக ஐந்து சிவஸ்தலங்கள் உள்ளன.
1. காஞ்சீபுரம் – ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் – ப்ருத்வீ
2. திருஆனைக்காவல் – ஸ்ரீஜம்புலிங்கேஸ்வரர் – ஜலம்
3. ஸ்ரீகாளஹஸ்தி – வாயு
4. சிதம்பரம் – ஆகாஸம்
5. திருஅண்ணாமலை – ஸ்ரீஅருணாசலேஸ்வரர் – அக்னி
இந்த பஞ்சபூத ஸ்தலங்களுள் அக்னியே முதன்மையானது. அக்னியிலிருந்தே ஏனைய நிலம், நீர், வாயு, ஆகாஸம் ஆகிய நான்கு சக்திகளும் தோன்றின. அதாவது சர்வேஸ்வரன் சிருஷ்டியின் போது ஜோதி ஸ்வரூபமாக மாறி அதிலிருந்து ஓர் அம்சமாக புனிதமான அக்னி ஏற்பட்டு அதிலிருந்து நான்கு பூதசக்திகள் உருவாகின்றன.
திருஅண்ணாமலையில் சர்வேஸ்வரனே மலைரூபத்தில் ஜீவன்களை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளியிருக்கின்றார். அதுமட்டுமன்றி, சர்வேஸ்வரன் இங்கு கார்த்திகை தீபப் பெருவிழாவில் ஜோதி ஸ்வரூபத்திலும் காட்சி தருகின்றார். பிரபஞ்சம் உருவாவதற்கே காரணமான அனைத்துப் பஞ்சபூத சக்திகளும், திருஅண்ணாமலையில் தான் உற்பவிக்கின்றன. பஞ்சபூதத்தில் அக்னிலிங்கமாகிய ஸ்ரீஅருணாசலேஸ்வர ஸ்வயம்பு ஜோதி லிங்கமும், திருஅண்ணாமலையின் ஸர்வேஸ்வர ஜோதி ரூபத்தில் எழுந்ததாகும்.
ருத்ராக்னி லிங்கங்கள்
இந்த அக்னிலிங்கத்திலிருந்து முதலில் ருத்ராக்னி லிங்கங்கள் பிறந்தன.
த்ரவிதாங்கி லிங்கம்
பலிபீடஸ்மரண ருத்ராங்கி லிங்கம்
ஸ்ம்ரண வந்தனாம்ருத லிங்கம்
ஆகிய மூன்று ருத்ரலிங்கங்கள் தான் தலைமையானவை. ஆதிசிவனே சர்வேஸ்வரனாவார். அவர் திருஆணையின் கீழ் ஆயிரமாயிரம் ருத்ரர்கள் உண்டு. அவர்களில் மேற்கண்ட ருத்ரர்கள் பூலோகத்தில் கற்பு, சத்யம், தர்மம் ஆகியவற்றைப் பேணுவதற்காக நியமிக்கப்பட்டார்கள். இவை மூன்றும் வாழ்க்கையின் உன்னதமான உத்தம நிலைகளைக் குறிக்கின்றன. எனவேதான் இவை மூன்றும் அக்னிலேயே பிறந்து அக்னிலேயே ஜக்யமாகின்றன. அதாவது எதையும் பஸ்பமாக்கும் அக்னி பகவான் இம்மூன்றையும் ஆராதித்து அரவணைக்கிறார். எனவேதான் கற்புக்கரசியாம் சீதாதேவியை அக்னி தீண்டவில்லை. மாறாக அக்னிப் ப்ரவேசத்தில் ஸ்புடம் போட்ட தெய்வீக ரூபத்தில் ஆர்த்தெழுந்தாள். சத்யவானாகிய ஹரிச்சந்திர ப்ரபு என்றைக்கும் அனைத்து மயானங்களுக்கும் அதிபராக நின்று அஷ்டதிக் பாலகராகப் ப்ரகாசிக்கின்றார். தர்மம் தவறாது கோலோச்சி ஒரு சிறு ஜீவனாகிய புறாவிற்கும் நீதி அளித்த சிபிச் சக்கரவர்த்தி இன்று அஷ்டதிக் பாலகராக ஒளிர்கின்றார். ஆனால் சீதாதேவி, ஹரிச்சந்திரன், சிபி ஆகிய மூவரும் கற்பு, சத்யம், தர்மம் ஆகிய மூன்றையும் போற்றிக் காக்க எத்தனை எத்தனை துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது என்பதை நாம் அறிவோம்.
சாதாரண மனித ரூபத்தில் வந்த இவர்களுக்கே இவ்வளவு சோதனைகள் என்றால் அளப்பரிய தபோபலன்கள், உன்னத யோக நிலைகள், செய்தற்கரிய பூஜா-ஹோம-வேள்விகள், போன்ற எல்லாவற்றையும் விட அரிய இறைப் பணிகளைப் புரிந்து ருத்ரர்களாய் அமையும் பேறுபெற்ற மேற்கண்ட ருத்ரர்கள் தங்களுக்குரித்தான தெய்வமூர்த்திக்குரிய பணியில் எத்தகைய கடும் சோதனைகளை ஏற்க வேண்டியிருக்கும்?
த்ரவிதாங்கி ருத்ரர்
பலிபீடஸ்மரண ருத்ரர்
ஸ்மரண வந்தனாம்ருத் ருத்ரர்
ஆகிய மூன்று ருத்ர மூர்த்திகளும் தங்கள் தெய்வாம்சப் பணிகளில் எவ்விதக் குறையும் நேரலாகாது என்று வேண்டித் திருஅணாசலத்தை நாடி வலம் வந்தனர். இங்ங்னம் தெய்வாம்ச மூர்த்திகளே போற்றி வழிபடுகின்ற திருஅண்ணாமலை கிரிவல மகிமையை எப்படி எடுத்துரைக்க முடியும்?
குதூகல நந்தீஸ்வரர்
மூன்று ருத்ர மூர்த்திகளும் தாங்கள் பிறந்த இடமான ஸ்ரீஅருணாலேஸ்வர மூர்த்தியின் இடத்திற்கு வந்து குதூகலநந்தீஸ்வரரிடம் அமர்ந்து தியானித்தனர். தேவர்கள், கந்தர்வர்கள், தேவதைகள், தெய்வமூர்த்திகளின் கிரிவலம் குதூகுல நந்தியிடம் தான் தொடங்குகிறது. பல அதிகார நந்திகளின் தபோபலன்களையும், தெய்வாம்சங்களையும் ஒருங்கே பெற்றவரே குதூகல நந்தீஸ்வரர் ஆவார். இவருக்குப் பல யுகங்களிலும் பல நாமங்கள் உண்டு. ருத்ரகபாலேஸ்வர நந்தீஸ்வரர், கீர்த்தீஸ்வரர், மாத்ருபூத நந்தீஸ்வரர் போன்ற பல நாமங்களைப் பெற்றவர்.
கலியுகத்தில், ஆதிசிவனின் உடுக்கை ஒலியிலிருந்து எழுந்த பீஜாட்சரங்களிலிருந்து பல ஸ்வரங்க்ள், எழுத்துக்கள் பிறந்தன. அவற்றில் ஏழு ஸ்வரங்களை மட்டுமே நாம் அறிவோம். இசைக்கெனவே பிறந்த கந்தர்வர்கள் இருபத்தி ஏழு ஸ்வரங்களில் இசை பாடுகின்றனர். இதற்கே காந்தர்வ கானம் என்று பெயர். பூலோகத்தில் ஏழு ஸ்வரங்கல் கொண்ட இசைக்கு அர்ப்பணித்துத் தன்னைத் தியாகம் புரிந்த இசை விற்பன்னர்கள் உத்தம காந்தர்வ நிலையை அடைகின்றனர். ஆதிசிவனின் உடுக்கை பீஜாட்சரங்களிலிருந்து பிறந்த ஆயிரமாயிரம் ஸ்வரங்களிலிருந்து நூற்றியெட்டு ஸ்வரங்களைக் கொண்டு உருவானவரே குதூகல நந்தீஸ்வரர். இவர் சந்நிதியில் கனககுதூகல ராகத்தில் பாடினால், வாத்தியங்களை இசைத்தால் இசைத்துறையில் உள்ளவர்கள் உன்னதப் புகழ் பெறலாம். ஆனால் இறைவனைப் பற்றியே பாட வேண்டும்.
குதூகல நந்நீஸ்வரர் அருகே தியானத்தில் ஆழ்ந்த மூன்று ருத்ர மூர்த்திகளுக்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் அசரீரியாக அருளாணையிட்டார். “நீங்கள் மூவரும் அங்கப்பரதட்சணம் செய்து கிரிவலம் வருவீர்களாக. ருத்ராக்னி மூர்த்திகளாய் ப்ரகாசிக்கும் உங்களுடைய திருமேனி எங்கு சீதள நிலையை (குளுமை) அடைகின்றதோ அவ்விடத்தில் யாம் தக்க முறையில் காட்சியளிப்போம்!“
ருத்ரர்களின் கிரிவலம்
மூன்று ருத்ரர்களும் பல யுகங்களாக அங்கப்ரதட்சிணமாக கிரிவலம் வந்தனர். குதூகல நந்தீஸ்வரர் அவ்வப்போது மூன்று ருத்ர மூர்த்திகளுக்கும் திருஅண்ணாமலை கிரிவல மஹிமையைப் பற்றி விளக்கினார்.
வராஹ மூர்த்தியாக விஷ்ணு பகவான் திருஅண்ணாமலையின் புனித பூமியைத் தோண்டிச் சென்ற போது மஹாவிஷ்ணுவின் கடாட்சமும் சேர்ந்த புனித மண்ணில் அங்கப்ரதட்சணம் செய்வதால் கிட்டும் பெரும்பேற்றை விளக்கவா முடியும்? ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதத்தூளியின் தரிசனத்திற்காகவே கோடி கோடியான தேவமூர்த்திகள் காத்துக் கிடக்கும்போது வராஹ ரூபத்தில் அவர் ஸ்பர்சித்த திருஅண்ணாமலை மண்ணில் புரண்டு அங்கப்ரதட்சணம் செய்வது கிடைத்தற்கரிய பாக்கியம் அன்றோ!
பல யுகங்களாக அங்க ப்ரதட்சணம் செய்து வந்த ருத்ர மூர்த்திகளின் திருமேனியில் சங்கர நாராயணனின் திருவருளாகத் திருஅண்ணாமலைத் திருமண்ணில் ஸ்ரீவராஹ மூர்த்தி ஸ்பர்சித்த மண்துகள்களின் அருள் கடாட்சம் சேர்ந்திட மூன்று ருத்ரர்களின் திருமேனியும் ஜகத்ஜோதியாகப் ப்ரகாசித்தது. அக்னி ஸ்வரூபர்களான அவர்களுக்கு ஜோதி ஸ்வரூபம் மேலும் மெருகூட்டியது. ப்ரபஞ்ச அக்னி ஜ்வாலைகளின் மொத்த ரூபத்தைப் போன்று தீண்டாத் திருமேனியர்களாக விளங்கினார்.
கற்பு, சத்யம், தர்மம் இவற்றில் புனிதம் பெற்ற்வர்களே இம்மூன்று ருத்ரர்களையும் தொட்டு வணங்க வேண்டும். இத்தகைய தெய்வீகப் பாங்குடையவர்களே தங்கள் பணியில் ஒரு சிறு பிழையும் வரக் கூடாது என்பதற்காக அங்கப் ப்ரதட்சிணத்துடன் கிரிவலம் வருகின்றனர். என்றால், சாதாரண மனிதர்களாகிய நாம் பக்தியில் எத்தகைய உயர்நிலையை அடைய வேண்டியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மூன்று ருத்ராதிபதிகளும் ஒரு புனித்மான செவ்வாய்க் கிழமையைன்று செவ்வாய் ஹோரையில் கிரிவலத்தின் ஓரிடத்தில் தங்கள் தேகம் பரிபூரணமாகப் பனிமலையில் இருப்பது போல் குளுமை பெற்றதை உணர்ந்து ஆனந்தித்தனர். அக்னியே தீண்டுகின்ற குளுமை என்றால் அவ்விடம் எவ்வளவு சக்தி வாய்ந்தது! மூன்று ருத்ரர்களும் எழுந்துநின்று திருஅண்ணாமலை நோக்கிக் கைகூப்பிக் தொழுது தாங்கள் குளுமை பெற்ற இடத்தைத் தோண்டிட அவ்விடத்தில்....
தேஜோமயமான லிங்கம் ஒன்று அங்கிருப்பது கண்டு குதூகலமடைத்தனர். அவரே தற்போது அஷ்டதிக்குகளில் தென்கிழக்குத் திசையில் அக்னி லிங்கமாகக் காட்சி தருகின்றனர். இந்த லிங்கத்திற்கு திவ்யாம்ருத லிங்கம் அல்லது தென்றலாம்ருத லிங்கம் என்று சித்தபுருஷர்கள் பெயர் சூட்டியுள்ளனர். அம்மூன்று ருத்ரர்களும் இந்த அக்னிலிங்கத்தை வழிபட்டுத் தங்கள் ருத்ராம்சத்தில் பரிபூரணம் பெற்றனர்.
பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஸ்வயம்பு லிங்கங்களும் திருஅண்ணாமலையிலிருந்து  உற்பவித்தவையே! வராஹ ரூபமூர்த்தியாய் ஸ்ரீமஹாவிஷ்ணு சர்வேஸ்வரனின் அடி (பாதம்) காணும் முயற்சியில் திருஅண்ணாமலையின் பீடத்தைக் குடைந்து செல்லும்போது ஆயிரமாயிரம் லிங்கங்கள் உருவாயின. எனவே திருஅண்ணாமலையினுள் இப்பிரபஞ்சத்திற்கும் உள்ளடங்கிய, இப்பிரபஞ்சத்திலும் விரிந்த அனைத்து லோகங்களும் கூடிய சர்வேஸ்வரனின் மூலரூபத்தைக் காணலாம்.
இறைவனின் அடியும் முடியும் அனைத்தும் திருஅண்ணாமலையே!
அக்னிலிங்கத் தரிசனப் பலன்கள் :
திருஅண்ணாமலைக்குத் தென்கிழக்கில் (அக்னிமூலை) ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளின் ஆசிரமம் செல்லும் வழியில், வலப்புறப் பாதையில் அக்னி லிங்கம் உள்ளது.
1. மனிதனை மயக்குவது காமம். முறையற்ற காமம் முதல் சிறுசிறு ஆசைகள், விருப்பங்கள், தகாததை அனுபவிக்கத் துடிக்கும் எண்ணங்கள் அனைத்தும் காமத்தில் அடங்கும். கற்பு என்பது ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டு. முறையற்ற காம எண்ணங்கள்/ செயல்களால் கொடிய கர்ம வினைகள் சூழ்கின்றன. இவற்றிற்குப் பிராயச்சித்தம் பெற்றால் தான் வாழ்வு சுபிட்சமாக இருக்கும்.
2. சத்யம் என்பது உண்மையான ரூபத்தைக் குறிக்கிறது. இறை நாமங்களை முறையாக ஜெபித்து வந்தால் வாக்கு சுத்தி கிடைக்கும். எனவேதான் அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமாவளிகளைப் பெரியோர்கள் அளித்துள்ளனர். வாக்குப் பொய்ப்பதும், வாக்கு தவறுதலும், பொய்பேசுதலும் கலியுகத்தில் சகஜமான தொழிலாகி விட்டன. இதனால் விளையும் கர்ம வினைகளோ ஏராளம். இவற்றிலிருந்தும் மனிதன் விடுதலை பெற வேண்டும்.
3. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இல்லம் அலுவலகம், உறவு, வெளிப்புற சூழ்நிலைகள் ஆகியவற்றில் பேராசை, காமம், இன்பம், காரணமாக மனிதன் தர்மம் பிறழ்ந்தே வாழ்கின்றான். இதனால் தான் திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் பெருகி வருகின்றன.
ஒரு பொருள் திருடு போய்விட்டது என்று திருடனை ஏசுவதைவிட நம்முடைய முன் ஜென்மத் தீவினை, காமத்தின் பிரதிபலிப்பாகவே நம் பொருள் திருடு போய்விட்டத்து. இது தர்ம தேவதை அளித்த தண்டனை என்று ஏற்கின்ற சீரிய மனப்பான்மையைப் பெற வேண்டும். பிறர் சொத்துக்களை அபகரித்தல், கடனைத் திருப்பித் தராது ஏமாற்றுதல், பிறருக்குத் துன்பம் விளைவித்து அலுவலகத்தில் உயர்பதவி, நன்மதிப்பைப் பெற முயற்சித்தல் போன்ற அதர்மச் செயல்களினால் விளைகின்ற கர்ம வினைகள் மிகவும் கொடியவையாகும். இவ்வாறாக கற்பு, சத்யம், தர்மம், இம்மூன்றையும் கடைப்பிடிக்காததால் தான் பிறவிகள் தொடர்கின்றனர்.
திருஅண்ணாமலையில் இந்த அக்னிலிங்கத்தை தரிசித்து, முறையாக பூஜை செய்து, மேற்கண்ட மூன்றிலும் பிறண்டமையால் தாம் பிறருக்கு அளித்த துன்பங்களை எண்ணி மனம் வருந்தி அக்னி லிங்கத்திடம் சரணடைய வேண்டும். உண்மையான சரணாகதியென்றால் அத்தவறுகளை மீண்டும் செய்யாமலிருப்பதோடன்றி தன்னால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் முறையான நிவாரணமும் அளிக்க வேண்டும்.
உதாரணமாக தன்னால் கைவிடப்பட்ட மனைவி, பிள்ளைகள், பெற்றோர்களுக்கு அவர்கள் வாழ்வு முழுதும் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும். இத்தகைய உண்மையான சரணாகதிக்கு அருள் வழங்கும் அம்சமாக இந்த அக்னிலிங்கத்தில் ஐக்கியமடைந்துள்ள கற்பு, சத்யம், தர்மம் மூன்றையும் போற்றிப் பாதுகாக்கும்.
            த்ரவிதாங்கி ருத்ரர்  - கற்பு
            பலிபீடமஸ்மரண ருத்ரர் – சத்யம்
            ஸ்மரண வந்தனாம்ருத ருத்ரர் – தர்மம்
ஆகிய மூன்று ருத்ராக்னி ருத்ர நாயகர்களும் பக்தர்களின் தீவினைகளைத் தாமே ஏற்று அவற்றை ருத்ராக்னியில் பஸ்மமாக்கி அவர்களுக்கு நல்வாழ்வு தருகின்றனர்.
அக்னி லிங்க வழிபாட்டு முறை :
செவ்வார் பகவான் விருச்கிக ராசியில் சஞ்சாரம் செய்கின்ற காலத்தில் குறிப்பாக, செவ்வாய் ஹோரைகளில் பஞ்சாமிர்தபிஷேகம் செய்திட வேண்டும். இந்நாட்களில் நான்குகாலப் பூசைகளாக பஞ்சாமிர்தம் , பால், தேன், கரும்புச்சாறு ஆகிய நான்கு அபிஷேகங்களுடன் ஏழைகளுக்கு சிவப்பு நிற ஆடைகளுடன் தக்காளி சாதம் தானம் செய்தல் விசேஷமானதாகும்.

தெற்கு எமலிங்கம்

திருஅண்ணாமலையின் தெற்கு திசையில் அருள்பாலிப்பவர் எமலிங்க மூர்த்தியாவார். எமபகவானை எமன் என்று கேலி பேசுவது மிகுந்த சாபத்தைத் தரும். எமபகவானுடைய வாஹனமே எருமை. ஆனால் வழக்கில் ‘எருமை மாடு’ என்று ஏசுவது நிரந்தரமாகி விட்டது. இவ்வாறு ஏசுபவர்கள் நோயில் வீழ்ந்து, துன்புறுவர். இத்தகைய தவறுகளில் இருந்து மனிதன் இனியேனும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
இதுவரையில் மூன்று சமுத்திரங்களில் உள்ள கடல்மண் அளவிற்கு எமபகவான்கள் தோன்றி அருள் பாலித்துள்ளனர் என்றால் இப்பிரபஞ்சத்தின் கால அளவை மனித மனதினால் எடைபோட முடியமா? விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது மெய்ங்ஞானம்!
“உனக்கு சாவு வராதா? நீ செத்து மடி!“ என்று ஏக வசனத்தில் சபிப்பது எத்தகைய தீவினைகளை உருவாக்குகின்றது தெரியுமா! இவ்வாறு  திட்டுபவர்களின் புண்ணிய சக்தி உடனடியாகக் கரைகின்றது. இவையெல்லாம் அவர்களே சாகும் தறுவாயில் இருக்கும்போது, எதிர்விளைவுகளாக நின்று மூச்சுத்திணறுதல், கோமா (coma) என்ற மயக்கநிலை போன்ற சொல்லொணாத் துயரங்களாகத் திரும்பி வரும்.
எமபயம்
எமபயம் என்பது அனைவருக்கும் உள்ள ஒன்று, இளமை, வலிமை, செல்வம், பதவி, அதிகாரம், ஆள்பலம் காரணமாகவும், அகங்காரம், மமதையினாலும் மனிதன் இறப்பைப் பற்றிக் கவலைப்படாது  சிற்றின்பங்களில் ஈடுபட்டு வாழ்கின்றான். பணமோ, உடல் வலிமையோ குறைந்து விடுகையில் அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பீதியும், அச்சமும் வந்துவிடுகின்றது. இதுவே எமபயத்தின் தொடக்கம்.
எமபயம் என்றால் மரணத்துக்கோ, எமனுக்கோ அச்சப்படுவது மட்டுமல்ல, நாளை என்ன ஆகுமோ? என்ற எவ்வகைக் கவலை ஏற்பட்டாலும் அதுவும் எமபயத்தின் அறிகுறியே! மரணத்தைப் பற்றி மட்டுமல்லாது காலத்தைப் பற்றிய கவலையும் எமபயமே!  நாளை அலுவலகத்தில் என்ன் பிரச்சனை வருமோ? வியாபாரத்தில் என்ன ஆகுமோ? குடும்பத்தில் என்ன துன்பம் வருமோ? என்று எதிர் காலத்தைப் பற்றிய எண்ணங்களில் தானே மனிதன் உழல்கின்றான். அப்படியென்றால் அவன் ஒவ்வொரு வினாடியும் எமபயத்தில்தானே வாழ்கின்றான்!
காலத்தைப் பற்றிய பயத்தைப் போக்குபவரே காலன் என்ற எமபகவான். அவர் மரணத்தை அளிப்பவர் அல்லர். மாறாக, ‘இறை அருளால்தான் வாழ்கிறோம்; அவன் கருணையால்தான் இவ்வுயிர் பிரிகிறது’ என்ற இறைச்சிந்தனையைத் தருபவரே காலன் பகவான். இரு பிறவிகளுக்கிடையே ஒரு அரைப் புள்ளியை வைப்பவரே காலன். இதையே கோலன் (Colon) என்று சொல்கின்றனர். மரணம் என்பது பிறவிக்கான முற்றுப்புள்ளி அல்ல. பிறவிகளுக்கு இடையே உள்ள இணைப்பே மரணமாகும்.
பிரபஞ்சமூலர் : - பிரபஞ்சமூல எமபகவான் என்னும் எம ருத்ரமூர்த்தி ஒரு முறை ஸ்ரீவிநாயகரிடம் “மூலமுதல்வனே! ‘பூலோகமெங்கும் எமன் வந்துவிட்டானே!‘ என்று எமன் கோடிக்கணக்கான மக்கள் என்னை ஏசுகின்றனர். இது அவர்களுக்குச் சாபமாகாமல் இருக்க வேண்டுமெனில் யாம் எத்தகைய தவத்தை மேற்கொள்ள வேண்டும்?“ என்று கேட்டுப் ப்ரார்த்தித்தார். ‘ப்ரபஞ்ச மூலரே! அறத்தை போதிப்பதால் நீ ‘அறன்’ என்று பெயர் பெற்றாய். தீயோரின் காலத்தை சம்ஹரிப்பதால் ‘காலன்’ என்று பெயர் பெற்றாய். இறைஅருனை மனிதன் பெறத் தவறும் போதும், அவனது இறைச் சிந்தனை குறையும்போதும் தான் எமபயமே உருவாகின்றது. எனினும், எமபயத்தை நீக்குவதற்கு எளிதான வழி சர்வேஸ்வரனே மலையாக வீற்றிருக்கும் அருணாசலத்தை வலம்வருவது தான்! நீ திருஅருணாசலத்தை வலம்வருமுன் எம்மை அங்கு தரிசனம் செய்வாயாக!“ – விநாயகரின் அருளாணையிட ,
பிரபஞ்ச மூல எமபகவான் திருஅருணாசலத்தை அடைந்தார். அங்கு கிழக்கு கோபுரத்தின் உள்வாயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சண விநாயகரைத் தொழுதார். ஸ்ரீவிநாயகர் ப்ரபஞ்சமூல எம மூர்த்தியை ஆசீர்வதித்து, “காலன்“ எனப் பெயர் பெற்ற நீ, உன் திருப்பாதங்களால் அடிப்பிரதட்சிணம் செய்து திருஅண்ணாமலையை கிரிவலம் வருவாயாக! எங்கு உன் அடிச்சுவடுகள் பட்ட இடத்தில் அவை தாமரை மலர்களாக மாறுகின்றனவோ, அவ்விடத்தில்தான் ஸ்ரீவராஹ விஷ்ணு தன் திருநாசியால் தோண்டி எடுத்த அருணாசல புனித பூமியில் உருவான லிங்க தரிசனம் கிட்டும். அதனை நீ முறையாக வழிபட்டுத் தவம் இருப்பாயாக!“ என்று அருள்வழி காட்டினார்.
பிரபஞ்ச மூல எமமூர்த்தியும் பல யுகங்களாய்த் திருஅண்ணாமலையை அடிப்பிரதட்சணம் செய்து வந்தார். திருஅண்ணாமலையின் தெற்குப் பகுதியில் கிட்டுவது திரிபுர சம்ஹார தரிசனம் ஆகும். அசுரர்களுடைய திரிபுரங்களை ஆதிசிவன் தன் பார்வையாலே சம்ஹரித்த இடம், மிகவும் விசேஷமான தரிசனம்! பார்த்தீர்களா! எமபகவான் கூடத் தனக்கென அன்றி பூலோக ஜீவன்களின் எமபயம் தீர்க்கும் நல்வழியைக் காட்டுவதற்காக திருஅருணாசலத்தை கிரிவலம் வருகின்றார் என்றால் என்னே கிரிவல மஹிமை! திரிபுர சம்ஹார தரிசனத்தை அடுத்த நிலப் பகுதியில் எமபகவான் அடிப்பிரதட்சணமாக வருகையில் அவர் திருப்பாதம் பட்ட இடங்களில், அடிச் சுவடுகளெல்லாம் தாமரைப் பூக்களாய் மலர்ந்தன. அவ்விடத்தில் ஜோதிமயமாய்த் தானே ஒரு லிங்கம் தோன்றி நின்றது. அதுவே தற்போது எம லிங்கம் என்று அழைக்கப்படும் ஜென்மசாப நிவர்த்தி லிங்கமாகும். தாமரைகள் பூத்த தடாகமே எம தீர்த்தமாயிற்று. எம பகவானின் பாதங்களில் உருவான தீர்த்தமென்றால் அதன் மஹாத்மியத்தை எவ்வாறு விளக்க முடியும்? எமபயத்தை நீக்கும் மாமருந்தல்லவோ இத்தீர்த்தம்! எம பகவானே பூஜித்து அதில் ஜக்கியமடைந்தாரென்றால் இதன் தரிசனமே விசேஷமானதல்லவா!
தரிசனப் பலன்கள் :
1. பிறருடைய வாழ்வைக் குலைத்தோர், கணவன் மனைவியைப் பிரித்தோர்.
2. சாதுவான பிராணிகளை இம்சித்தோர்
3. பெற்றோர்களுக்கும், முதியோர்களுக்கும் அவர்கள் நோயாளிகளாக இருந்த போதும், முதிய வயதிலும் சரீர சேவை செய்யாதோர்.
4. உணவுப் பொருட்களில் சுகாதாரத்தைக் கெடுக்கும் பொருட்களைக் கலப்படம் செய்தோர்.
5. அசிரத்தையாக அறுவை சிகிச்சைகளைச் செய்த மருத்துவர்கள்.
6. மிருகங்களை வதைப்போர்.
ஆகியோர் தங்களுடைய தவறுகளுக்காக வருந்தி புதன்கிரகம் வக்ர நிவர்த்தியாகும் நாளில் இந்த எமலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து மல்லிகை, வில்வத்தால் ஆராதனைகளுடன் கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகளின் நீரால்  அபிஷேகம் செய்து, தங்களுடைய செயல்களால் பாதிக்கப்பட்டோருக்குப் பொருளாலோ, உடல் சேவையாலோ ஈடுசெய்ய வேண்டும்.
இங்கு எமகண்ட நேரத்தில் நல்லெண்ணெய் தீபமேற்றி எள்ளுருண்டை, எள் சாதம் ஆகியவற்றைத் தாமரையிலையில் வைத்து தானமளிப்பது எமபயம் தீர்ப்பதற்கான மிகச்சிறந்த வழிபாடாகும்.

தென்மேற்கு நிருதி லிங்கம்

திருஅண்ணாமலையின் தென்மேற்குத் திசையில் இருப்பது நிருதி லிங்கமாகும். மனை சாஸ்திரத்தில் கூடநிருதி திக்கில் நிருதி சம்பந்தமான பொருட்களையே வைக்க வேண்டிய நியதிகளைக் காணலாம். மருத்துவ மனைகளில் கூட பெண்களின்  நோய் சம்பந்தமான பகுதி (GYNAECOLOGY) யை தென்மேற்குத் திசையில் வைப்பது சிறந்ததாகும். இல்லங்களில் மாதவிலக்கிற்காக  ஒதுங்கி இருப்பவர்கள் தென்மேற்குத் திசையில் ஒதுங்கியிருப்பது நல்லது. படுக்கையறையையும் தென்மேற்குத் திசையில் வைப்பதற்கான சில விதிமுறைகளை பெரியோர்கள் சொல்வதுண்டு. இவற்றைத் தக்க ஒர் சற்குருவிடம் கேட்டறிதல் வேண்டும்.
பெண்களின் துன்பங்கள்
சந்ததியின்மை கலியுகத்தில் ஒரு தலையாய பிரச்சனையாகக் கருதப்படும் என்பதை நிருதி பகவான் உணர்ந்தார். வரதட்சிணை, பலதார மணங்கள், உறவுகளில் மூத்த பெண்மணிகளால் ஏற்படும் கொடுமைகள், மாமியார், நாத்தனார், மருமகள்  இடையே ஏற்படும் துன்பங்கள், பெண்களைச் சித்திரவதை செய்தல், பிறன்மனை விழைதல், விபச்சாரம் போன்றவற்றால் கலியுகத்தில் பெண்கள் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளாவார்.
சிசுவதை, சிசுத் துன்பங்களால் இளவயதிலேயே பிச்சை எடுத்தல், கடினமான வேலைகளில் சிறுவர்களை வதைத்தல், குழந்தைகளை சித்திரவதை செய்தல் அற்பக் காரணங்களுக்காக குழந்தைகளைக் கடத்துதல், பலதார மணங்களில் குழந்தைகளைப் பலியாக்குதல், இவ்வாறாக பெண்களுக்கும் சிசுக்களுக்கும் கலியுகத்தில் ஏற்படும் துன்பங்கள் ஏராளம். கலியுகத்தில் பெண் குழந்தைகளை வெறுக்கும் தன்மையும் பெருகிவிட்டது. பெண் குழந்தை என்றாலே கருச்சிதைவு (abortion) செய்து கொடிய கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்வோரும் உண்டு. இத்தகைய துன்பங்களில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காகவும் அறிந்தோ, அறியாமலோ இத்துன்பங்களைச் செய்பவர்களுக்கு பிராயச்சித்தம் அளிப்பதற்காகவும் நிருதி பகவான், பராசக்தியின் ஆணைப்படி திருஅண்ணாமலையில் அடிப்பிரதட்சிணமாக கிரிவலம் வந்தார்.
நிருதி மூர்த்தியின் கிரிவலம்
ஒவ்வொரு முறையும் கிரிவலம் வந்தபின் குதூக்ல நந்தியின் அருகே அவர் தியானத்தில் அமர்ந்து விடுவார். தேவ, தெய்வ மூர்த்திகள் குதூகல நந்தீஸ்வர பகவானின் சன்னிதி வழியாகவே கிரிவலத்தைச் செய்ய வேண்டுமாதலின் அனைவருக்கும் திருஅண்ணாமலை மஹாத்மியத்தை விளக்குவதில் பேரானந்தம் கொண்டார் நந்தீஸ்வரர்.
ஸ்ரீஅருணாசேஸ்வரர் நிருதி பகவானுக்கு அவர் வேண்டிய வண்ணம் அனுக்ரக சக்தியை அளிப்பதற்காக, “நிருதீஸ்வரா! நீ அடிப்பிரதட்சணமாக கிரிவலம் வருகையில் எங்கு குழந்தைகளின் இனிய மழலை மொழி கேட்கின்றதோ, பெண்களின் சலங்கை சப்தம் கேட்கின்றதோ அவ்விடத்தில் தான் நீ கேட்கின்ற சக்தியை யாம் அளிக்க இயலும். “
“ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் மஹாவிஷ்ணு திருஅண்ணாமலையைக் குடைந்தெடுத்த  மண்ணை ஸ்ரீலக்ஷ்மிதேவி இவ்விடத்தில் தான் திரட்டி வைத்து பல லோகங்களுக்கும் எடுத்துச் சென்றாள். ஸ்ரீசந்தான லக்ஷ்மியாக அம்பிகை இவ்விடத்தில் அமர்ந்தமையால் அங்கே யாம் கர்ப்பாயாசன ப்ரதிரூப லிங்கமாய் காட்சி தருவோம்! மேலும் ஸ்ரீஉண்ணாமுலை அம்பிகை தம்முடைய தவத்திற்காக தேர்ந்தெடுத்த இடத்தில் அமர்வதற்கு முன்னர் இங்குதான் இளைப்பாறிச் சென்றனள். எனவே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீபராசக்தியின் ஒருங்கே திரண்ட  தெய்வீக சக்தி மிகுந்த அவ்விடத்தில் யாம் ஸ்வயம்பு லிங்க மூர்த்தியாக எழுந்தருள்வோம்.. நீ எம்மை பூஜித்து, வேண்டிய வரங்களைப் பெற்று அவ்விடத்திலிருந்தே அருள்புரிவாயாக!“ என்று அருள் பாலித்தார்.
 பல யுகங்கள் நிருதீஸ்வரர் அருணாசலத்தைக் கிரிவலம் வந்து தென்மேற்கு திசையில் மழலை ஒலியும், மாதரின் சலங்கை ஒலியும் கூடிய இடத்தில் “ஸ்ரீகர்ப்பாயாசன பிரதிரூப லிங்க” தரிசனம் பெற்று மேலும் தவம்புரிந்து  அதில் ஐக்யமுற்று இன்றும் “நிருதி“ லிங்கமாய் அருள் பாலிக்கின்றார்.
நிருதி லிங்கப் பூஜா பலன்கள் :
சுக்ரமூடம் நிவர்த்தியாகும் நாளிலிருந்து அடுத்த சுக்ரமூடம் காலம் வரையுள்ள நாட்களில் தற்போது ‘நிருதி லிங்கம்’ என்றழைக்கப்படும் கர்ப்பாயாசன ப்ரதிரூப லிங்கத்திற்குப் பசுவின் சீம்பால் (கடும்பால்) கொண்டு அபிஷேகம் செய்து பால் சாத நைவேத்தியத்துடன் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பால்பொங்கல், பால் பாயசம், பால் இனிப்புகள், பால் சாதம்தனை இங்கு தானம் செய்வது விசேஷமானது. இதனால் கர்ப்ப சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தி அடைவதுடன் சந்தான பாக்கியமும் கிட்டும். ஏழை கர்ப்பிணிகளுக்கு உதவுதல், உள்ளாடை, மருந்துகள், டானிக்குகளை அளித்தல், ஏழைப் பெண்களின் பிரசவத்துக்கு உதவுதல், அனாதையான பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி வசதிகளை அளித்தல் இவற்றால் பாலாரிஷ்ட தோஷங்களும், குழந்தை இல்லாமைக்கான ஜென்ம சாபங்களும் நிவர்த்தியாகும்.
இங்கு கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேங்காய்ப்பால் ஆப்பம் அளிப்பது சிறந்த நாகதோஷப் பரிகாரமாகும்.

மேற்கு வருண லிங்கம்

திருஅண்ணாமலையின் மேற்கு திசையில் அருள்பாலிப்பது வருண லிங்கமாகும். இமயமலையில் எத்தனை தூசித் துகள்கள் உள்ளனவோ, அந்த அளவிற்கு வருண பகவானின் அம்சமூர்த்திகள் தோன்றியுள்ளதாக சித்தபுருஷர்கள் அருள்கின்றனர். அப்படியானால் பிரபஞ்சத்தின் கால அளவை மனித அறிவினாலும், விஞ்ஞானத்தாலும் நிர்ணயிக்கவா முடியும்?
இறை தரிசனம் என்பது சற்குரு அருளால், அனுபவப் பூர்வமாக உய்த்து உணர்வதே தவிர, விஞ்ஞான ஆராய்ச்சிகளால் அறிவதில்ல. விஞ்ஞானத்தின் முடிவே மெய்ஞானத்தின் தொடக்கமாகும். விஞ்ஞானத்துக்கு எல்லையில்லை என்றால் மெய்ஞ்ஞானத்தின் ஆரம்பப் பாடமே துவங்கவில்லை என்றே பொருள்.
வருணனின் கருணை
வருண பகவானே பிரபஞ்சத்திற்கு நீரை அளிக்கின்றார். மஹான்கள் யாங்கணும் அபிஷேக ஆராதனைகள் செய்வதால்தான் தீர்த்தங்களில் புனிதநீர் இன்னமும் இருக்கின்றது. “ஏதோ மழை பொழிகின்றது, ஆற்றில் நீர் ஓடுகின்றது; கிணற்றில் நீர் ஊறுகின்றது “ என்று எண்ணுகின்றோம். உண்மையில், மஹான்களின் தபோசக்தியால்தான் வருண பகவான் தன் அனுக்ரஹத்தை நீராகப் பொழிகின்றார். வெள்ளமோ, பஞ்சமோ ஏற்பட்டால் அப்பகுதியில் கொடியவர்கள் மஹான்களை ஏசுகின்றார்கள், துன்புறுத்துகிறார்கள் என்றே பொருள்.
ஒரு சிறு நெல் பயிரின் மீது கூட அது தாங்கி நிற்கும் அளவிற்குத்தான் வருண பகவான் மழைத் துளிகளைப் பொழிகின்றார் என்றால் என்னே அவரருள்! மழைத் துளிகளைக் கூட  அடிக்கடி திசைமாற்றி எவ்விடத்தில், எதற்கு, ஏன், எதன்மேல், எவ்வளவு பொழிய வேண்டும் என்பதை வருண பகவான் சிரத்தையாகச் செய்கின்றார் என்றால் என்னே அவரது கருணை!
கர்ம வினைகளே காரணம்
‘ஏதோ மழை பெய்தது ; ஜலதோஷம் பிடித்தது‘ என்று இனியேனும் எண்ணுதல் வேண்டாம். இவ்வுலகில் காரண, காரியமின்றி எதுவும் நிகழ்வதில்லை. கோபமாகப் பேசி எத்துணை பேருடைய உணர்ச்சிகளுக்கு சூடு ஏற்றினோமோ, எங்கெல்லாம் நீரை (குறிப்பாக வீடு, வெளி, வாடகை வீட்டில், அலுவலகத்தில்) விரயமாக்கினோமோ அதற்கெல்லாம் தேவ தண்டனையாக மழையால் ஜுரமோ, ஜலதோஷமோ ஏற்படுவதுண்டு. நாம் செய்த வினைகளே நமக்கு நோய்களாக வருகின்றன. அதற்கு விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் இருந்தாலும் உண்மையான ஆன்மீக விளக்கங்கள் இதுவே!
உண்மையான இறை நம்பிக்கை இருந்தால் எதையும் நம் வினைகளின் பிரதிபலிப்பாக கஷ்டமோ, நஷ்டமோ, இன்பமோ, துன்பமோ, எதையும் இயல்பாக ஏற்போம். ஆனால், இத்தகைய சீரிய மனப்பக்குவம் இல்லாமையால் அத்தகைய உத்தம நிலையை அடையும் வரை மருந்துகளால் தான் உடல்நோய் தீரும் என்று வாழ்ந்தாக வேண்டும். ஆனால், மருத்துவர்களும், மருந்துகளும் இறைவன் படைப்பல்லவா? மருந்து, டாக்டர் பீஸ், ஊசி குத்தும்போது ஏற்படும் வலி, மருந்தின் கசப்பான அனுபவங்கள், அம்மருந்தின் எதிர் விளைவுகளான (Side effects) அலர்ஜி, வீக்கம் போன்றவற்றில் ஏற்படும் செலவுகள், துன்பங்கள், அலைச்சல்கள், மனப்பளு, (Tension) போன்றவை பரிகாரத்திற்கான செயல்களாக அமைந்து கர்மவினையைக் குறைக்கின்றன. அந்தந்த நோய்க்குரிய கர்ம வினைகள் கழிந்தால் தான் அந்நோயிலிருந்து குணமாக முடியும். அதுவரையில் விஞ்ஞானபூர்வமாக மருந்துகளையும், மருத்துவர்களையும் நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம், அவ்வளவே!
வருண பகவானின் தவம் : பூஜைகளின் மகத்வம்
உலகிலுள்ள கடல், ஆறு, கிணறு, குளம், ஏரி, குட்டை போன்ற நீர்நிலைகளில் உள்ள நீரும், கண்ணுக்குத் தெரியாத பூமியின் அடியிலுள்ள நீரோட்டங்களும் காலப்போக்கில் மாசுபட்டு அசுத்தமடைகின்றன. இதனால் பலவித நோய்த் தொல்லைகளுடன், உணவு தானியங்களின் ஊட்டச்சத்தும் குறைவுபடும். குறிப்பாகக் கலியுகத்தில் புண்ய நதி நீர் கொண்டு செய்யும் அபிஷேகங்கள், தானதருமம் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு நீர், பால், இளநீர் வளங்கள் அதிகமாகும். இவை குறைவடைந்தால் நீர், பால் பற்றாக்குறை ஏற்படும். பித்ருக்களுக்கு முறையாகத் தர்ப்பணங்கள் அளிக்கப்பட்டால்  கரும்பு விளைச்சல் அதிகமாகி  சர்க்கரை, வெல்ல உற்பத்தி பெருகும். சர்க்கரைப் பஞ்சம் ஏற்பட்டால், விலை உயர்ந்தால் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் சரிவர அளிக்கப்படவில்லை என்பது பொருள்.
நித்ய பூஜைகள் குறைந்துவிட்டமையால்தான் மனிதகுல நலத்திற்காக சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் இரவு பூஜைகள், மஹாபிஷேகம், மஹாளய அமாவாசை, ஆடி அமாவாசை, மாளய பட்சம் போன்ற விசேஷ தினங்களில் கூடுதல் அபிஷேக ஆராதனைகளும் தர்ப்பண பூஜைகளும் விதிக்கப்பட்டுள்ளன. நித்ய பூஜைகள், நித்ய தர்ப்பணங்களின் பற்றாக்குறையை மேற்கொண்ட விசேஷதின பூஜைகள் நிறைவு செய்கின்றன. இதுவே இத்தகைய பண்டிகைகளின் மகத்துவமாகும்.
மஹான்களும், சித்தபுருஷர்களும் தங்கள் கைப்படவே அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்தினால் அதுவே பல கோடி மனிதர்களின் நித்ய பூஜைகளுக்கு ஒப்பானதாகும். இதுவே மேற்குறித்த, நீரை அசுத்தமாக்கும் செயல்களினால் விளையும் எதிர் விளைவுகளுக்குப் பரிகாரமாகும். இதை தீர்க்க தரிசனமாக அறிந்த ப்ரபுசந்த்ர ரூப வருணன் என்ற வருணபகவான், ஒரு யுகத்தில், மகான்கள் செய்கின்ற அபிஷேகத்திற்குத் தீர்த்தம் தரும் திருப்பணியை மேற்கொண்டார். கேட்பதற்கு எளிமையாகத் தோன்றுகிறதே தவிர, இது மிகவும் கடுமையான விரதமாகும்.
சித்தர்களின் பூஜை
பிரபஞ்சத்தில் கோடிகோடியான் மகான்களும் , சித்தபுருஷர்களும் எங்கேனும் அபிஷேக, ஆராதனைகளைச் செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள், எங்கு, எப்போது, எவ்விடத்தில், பூஜை செய்வார்கள் என்பது பிரம்ம ரகசியமாகவே வைக்கப்படுகின்றது. அதுவும் “அவரது அபிஷேக நேரத்தின் போது தேவையான தீர்த்தத்தை அளிப்பேன்“ என்ற வைராக்கிய சங்கல்பத்தை மேற்கொண்டால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்பது நியதி, சிறுபிழை ஏற்பட்டாலும் மன்னிப்பே கிடையாது. மாறாக, வருணபகவானின் நிலையே மாறிவிடும். இதுவே தெய்வ மூர்த்திகளுக்குரிய மாயை! தேவமாயை என்றும், விஷ்ணு மாயை என்றும் இதில் பலபிரிவுகள் உண்டு.
அதிலும் தூர்வாசர் போன்ற மகரிஷிகள் சினத்திற்குப் பெயர் பெற்றவர்கள், ஆனால் சினம் மிகமிக அவருடைய தபோபலன்களும் விருத்தியாகும் என்பது அவருக்கே விதிக்கப்பட்ட தெய்வநியதி. ஆனால் அவரிடம் எப்போதுமே ஆயிரமாயிரம் பேர்களுக்கு மேலான சீடர்குழாம் இருந்தவாறே இருக்கும். அவர் ஒரே நாளில் பல சுயம்புலிங்க மூர்த்திகளை விசேஷமான மூலிகைகளைக் கொண்டு விசேஷமான தீர்த்தங்களால் அபிஷேகம் செய்திடுவார். ஆனால் எந்த மூலிகை, எந்த தீர்த்தம் என்பதை ரகசியமாகவே வைத்திருப்பார். காரணம், அவர் நடத்தும் தேவ ரகசிய ஹோமங்களுக்கும், அபிஷேகங்களுக்கும் அளப்பரிய பலன்கள் உண்டு. உத்தம மகரிஷியாதலின் அப்பலன்களை இறைப்பணி ஆற்றும் அடியார்களின் நலன்களுக்காக அர்ப்பணித்துவிடுவார். தனக்கெனக் கிஞ்சித்தும் பயன்படுத்துவதில்லை. ஆனால் இத்தகைய ஆன்மீக ரகசியங்கள் எவர் கையிலேனும் சிக்கினால் அவற்றைத்  தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி அபரிமிதமான புகழ், செல்வம், ஆற்றல் பெற்று அகங்காரத்தால் அனைவரையும் ஆட்டிப் படைப்பர். இவர்களே அசுரர்களாக மாறி லோகத்திற்கே கேடு விளைவிக்கின்றனர்.
உலக ஜீவன்களுக்கு நீர் என்பது காற்றிற்குப் பிறகு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அவர்களின் நல்வாழ்வுக்காக நல்ல நீரைப் பெற்றுத் தருவதற்காக சித்தபுருஷர்கள், மகான்களின் அருளாசியை வேண்டி அவர்களுடைய அபிஷேகத்திற்காகப் புண்ணிய தீர்த்தத்தை அளிக்கின்ற சங்கல்பத்தை வருண பகவான் ஒரு மாபெரும் தவமாக மேற்கொண்டாரல்லவா! இதில் எவ்வித இடையூறுமின்றி மகான்களின் இறைப்பணிக்கும், கால நேரம் தவறாத பூஜைக்கும், அவர்களுடைய சினம், சாபத்திற்கு ஆளாகாமல் நடைபெற வருணபகவான் திருஅண்ணாமலை ஈஸ்வரனின் அனுக்கிரகம் வேண்டி அருணாசலத்திற்கு வந்தார்.
வழக்கம்போல் குதூகல நந்தீஸ்வரர் அவருக்கு அருணாசல மகாத்மியங்களை விளக்கிட அவர் ஆனந்தமடைந்தார். பொதுவாக நீருற்றைக் காண்கையில் முட்டியிட்டும். பூமியின் ஆகர்ஷ்ண சக்திக்கு ஈடாக ஒற்றைக் காலில் நின்றும் நீரோட்டங்களை அறிவர். எனவே வருணபகவானும் முட்டிப் பிரதட்சணமாகவும், ஒற்றைக்காலால் தத்தியவாறும் திருஅருணாசலத்தை கிரிவலம் வந்தார்.
ஆதிசிவனின் அடிகாணும் முயற்சியில் ஸ்ரீவராஹ ரூப விஷ்ணு திருஅண்ணாமலையைக் குடைந்து செல்கையில் பல நீரோட்டங்களை முறைப்படுத்தி உலகெங்கும் ஜீவபூமிகளின் போக்கை நிர்ணயித்தார். அவர் ஸ்பரிசம் பட்ட புனித நீருடன் அவர் குடைந்து சென்ற திருஅண்ணாமலைப் புனித மண்ணும் சேர்ந்த தெய்வீகப் பூமியில் அங்கப் ப்ரதட்சிணம், அடிப்பிரதட்சிணம், முட்டிப் பிரதட்சிணம், நுனிக்கால் பிரதட்சிணம், குதிகால் பிரதட்சிணம், மாண்டூகப் பிரதட்சிணம், (தவளைபோல் தத்துவது) போன்ற பல பிரதட்சிண முறைகளில் கிரிவலம் வருதல் விசேஷமான தல்லவா? தெய்வத் திருமேனி தீண்டிய நீரிலும், மண்ணிலும் புரள்வது பெரும் பாக்கியமல்லவா?
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஜோதியாய் தரிசனமளித்து, “வருணா! நீ எம்மை கிரிவலம் வருகையில் ஓரிடத்தில் நீரூற்றுப் பிறக்கும். அவ்விடத்தில் யாம் வசுந்தரா சுந்தரலிங்கமாகத் தோன்றி அருள்பாலிப்போம்!! அவ்விடத்தில் பாயும் நீரோட்டத் துளிகள் வருண தீர்த்தமாக மாறும், வற்றாத தீர்த்தமிது. பல கோடி ஜீவநதிகள் உறையும்  தீர்த்தமாக அது விளங்கும். இதைக் கொண்டு உன் சங்கல்பத்தை நிறைவேற்றுவாயாக!” என்று அருள்பாலித்தார்.
அவ்வாறாக, வருண பகவானும் சிரத்தையுடன் கிரிவலம் வந்திட சூரிய லிங்கத்தைத் தாண்டி ஓரிடத்தில் நீரூற்று விண்ணளாவி உயர்ந்தது. புண்ணியமான அந்நீரை சிரசில் தெளித்து அண்ணாமலையாரை வணங்கினார் வருணபகவான். நீரூற்றின் அருகே சுயஞ்சோதியாய் வசுந்தரா சுந்தர லிங்கம் ஒளிமயமாய்ப் பிரகாசித்தது.
நீரூற்று வருண தீர்த்தமாய் மாறிற்று. அங்கே பல மகரிஷிகள் தரிசனம் தர ‘வருண தீர்த்தத்தின்‘ முதல் குடநீரை வருண பகவான் மகரிஷிகளிடம் அளித்தார். அவர்களனைவரும் ஒரு குடநீரிலேயே  வசுந்தரா சுந்தர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர். ஒரு குடநீரே ஓராயிரம் குடமாகப் பெருகியது. தேவலோகத்திலும் கிட்டாத இனியசுவையுடன் தடாக நீர் சிறந்து விளங்கியது.
இந்த லிங்கத்தைப் பூஜை செய்தவாறே, பல யுகங்களிலும் தூர்வாசர், கௌதம முனிவர் உட்பட பல கோடி ரிஷிகளின் அபிஷேகம் ஆராதனைகளுக்குப் புண்ணிய நதிகளின் புண்ணிய நீரைத் தந்து வருணபகவான் தன் சங்கல்பத்தை நிறைவு செய்தார்.
பிரபுசந்த்ர ஜீவவருண பகவானுடைய இத்தகைய செயற்கரிய தவத்தினால் தான் இன்றும் நன்னீர் மழை பொழிகின்றது. இல்லையேல், உப்பு நீரும், துவர்நீருமன்றோ மழையாகப் பொழியும். இது மட்டுமன்றி இன்று நாம் நல்ல குடிநீரை உண்டு வாழ்வதற்கும் பெருங்கருணை புரிபவர் ஸ்ரீவருணபகவான். ஆனால் வருணபகவானை எவர்தாம் நன்றியுடன் வழிபடுகின்றனர்.? அக்காலத்தில், வருணஜபம், இந்திர பூஜை போன்ற விசேஷமான பூஜைகள் மூலம் அஷ்டதிக்கு தேவதா மூர்த்திகளுக்கு வழிபாடு நடைபெற்றது. மகான்களும், சித்தபுருஷர்களும் நம்முடனே உலவி இன்றும் அபிஷேக ஆராதனைகளைச் செய்வதால் தான் நல்ல நீரைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம். ஆனால், நீரை மாசுபடுத்துவதால் எத்தனையோ கொடுமையான கர்மவினைகளுக்கு ஆட்படுகின்றோம்.
வருணலிங்க பூஜாபலன்கள்
1. மது, புகையிலை, அபின், கஞ்சா, ரசாயன விஷ்க்கலவை போன்ற காமவஸ்துக்களை உண்டு, குடித்து, துப்பி, கழிவுநீரில் வெளித்தள்ளி நிலத்தை மாசுபடுத்துதல், இதன் விஷச்சத்துக்கள் உள்ளிறங்கி பூமியின் நீரோட்டத்தை மாசுபடுத்துகின்றன.
2. விஷமுள்ள இரசாயன தொழிற் சாலைகள், ஏனைய உற்பத்திப் பொருட்களின் கழிவுநீரை முறையாகத் தூய்மைப்படுத்தாது கடல், ஆறு பூமியில் விடுதல்.
3. மல, ஜல, மூத்ராதிகளைக் கண்ட இடங்களில் கழித்துக் குளங்களையும், நீர் நிலைகளையும் மாசுபடுத்துதல் – கும்பகோணம் சக்கரப் படித்துறை, காவிரியாற்றங்கரையில், மற்றும் கோயில் குளங்களில், எந்த அளவிற்கு சுகாதாரக் கேடுகள் விளைவிக்கும் அசுத்தங்கள் கிடக்கின்றன என்பதைக் காணும்போது மனம் வேதனையுறுகின்றது. புனிதமான, சகல் பாவத்தையும் தீர்க்கவல்ல காவிரியாற்றங்கரையிலேயே, கங்கையில் பாவகாரியங்களைச் செய்யலாகுமா? இதைக் கண்டு கங்கை, காவிரி அன்னையே சாபமிட்டால் தன் விளைவுகளை நம்மால் தாங்க இயலுமா? எத்தகைய காருண்யத்துடன் கங்கை, காவிரி அன்னை நம்மை வாழவைக்கின்றாள்.
4. வீட்டின் கழிவுநீர்த் தாரைகளைத் திருட்டுத்தனமாக பக்கத்துவீட்டு நீரில் அல்லது ஆற்று நீரில் சேர்த்து விடுதல்.
5. பொதுமக்களுக்குரித்தான நல்ல சுகாதார நீரைத் திருட்டுத்தனமாக இணைப்புக் குழாய்கள் மூலம் நீரைத் திருடுதல்.
6. வீட்டில் நிறைய நீர் இருந்தும் பிறருடைய தாக சாந்திக்காக அளிக்க மறுத்தல்.
7. மனை சாஸ்திர நீரோட்ட விதிகளை மீறிக் கண்ட இடங்களில் கிணறு வெட்டுவது.
8. கிணறுகளை வெட்டுமுன் வருண ஜபம், பூமி பூஜை ஹோமங்களை செய்யாதிருத்தல்.
9. முறையோடு பித்ரு தேவர்கள், தேவதா, தெய்வ மூர்த்திகள், மகரிஷிகளுக்கு அர்க்யங்கள்/தர்ப்பணங்கள் அளிக்காதிருத்தல்.
10. வியாபாரத்தில் பால் முதலிய ஜலமய ஆகாரங்களில் நீர் கலத்தல்.
போன்ற குற்றங்களினால் பல  தோஷங்களும், சாபங்களும் விளைகின்றன. இவற்றிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு வருண பகவான் ஸ்ரீவசுந்தரா சுந்தர லிங்கத்தைப் பல ஆண்டுகள் பூஜித்து இன்றும் இவ்விடத்தில் அருவமாக எழுந்தருளி தம்மை முறையோடு தரிசிப்பவர்களுக்கு அருள் பாலித்து மேற்கண்ட குற்றங்களுக்குப் பிராயச்சித்தங்களை அருளுகின்றார்.
வருண பகவானின் பூஜைமுறை :
 மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளன்று வருண லிங்கத்திற்குப் பன்னீர் கலந்த பல புண்ணிய நதித் தீர்த்தங்களினால் அபிஷேகம் செய்து, வெண்பொங்கல், வெண்மை நிற ஆடைகள், வெள்ளையில் நீலப்பூக்கள் நிறைந்த சேலைகள், வெண்ணிற சால்வை ஆகியவற்றை  வருண லிங்கப் ப்ரீதிக்காக ஏழைகளுக்கு தானமாக அளித்திட ஜலத்தினால் விளைகின்ற தோஷங்கள் நீங்கும்.
சிறுநீரக வியாதிகளுக்கும், சர்க்கரை வியாதி போன்ற நீர் நோய்களுக்கும் வருண லிங்க பூஜையும், தான தர்மங்களும் விசேஷபலனளிக்கும்.

வடமேற்கு வாயுலிங்கம்

திருஅண்ணாமலையில் வடமேற்கு திசையில் காட்சி தந்து அருள்பாலிப்பவரே ஸ்ரீவாயுலிங்க மூர்த்தி.
வாயுக் குற்றங்கள்
கலியுகத்தில் ஜீவன்களுக்கு சுவாசம் இன்றியமையாததாகும். ஆனால் வாயுவை  மாசுபடுத்துகின்ற எத்தகைய தீவினைகளில் மனிதன் ஈடுபடுகின்றான் தெரியுமா?  புகை பிடித்தலால் ஒவ்வொரு மனிதனும் காற்றை மாசுபடுத்துவதோடன்றி, அக்காற்றை சுவாசிக்கும் மற்ற ஆயிரக்கணக்கான ஜீவன்களுக்கும் துன்பங்களைத் தருகின்றான். ஒரே ஒரு சிகரெட்டிலேயே/பீடியிலேயே  இத்தகைய கொடிய கர்மவினைகளை அவன் பெறுகின்றானென்றால், வாழ்நாளில் அவன் எத்துணைக் கோடித்துன்பங்களுக்கும், கர்மவினைகளுக்கும் காரணமாகின்றான் என்பதை எண்ணுகையில் மலைப்பாக இருக்கின்றது. தன்னுடைய புகைபிடிக்கும் வழக்கத்தால், தான் தீங்கிழைத்த அத்தனை கோடி ஜீவன்களுக்கும் எத்தனையோ கோடிப் பிறவிகளில் அவன் பரிகாரம் செய்தாக வேண்டுமே!
ஹோமத்தின் சக்தி
ஹோமங்கள், வேள்விகள் நடத்தப்படுவதற்கான காரணமே தெய்வீக சக்தியுடைய சமித்துக்களை அக்னியின் சக்தியோடு சேர்த்து  பரவெளியிலுள்ள தீய எண்ணங்களைப் பஸ்பமாக்கி நம் சூழ்நிலைகளைப் புனிதப்படுத்துவதே ஆகும். ஹோமத்திலிடும் பசுநெய், பசுவரட்டி, மூலிகைச் சத்துள்ள சமித்துக்கள் ஆகியவை அக்னியின் புனித சக்தியோடு சேர்ந்து ஹோம மந்திரங்களின் பீஜாட்சர சக்தியோடு இணைந்து வலுப்பெற்றுப் பரவெளியில் மிதக்கின்ற (புகைப்பிடித்தலால் ஏற்படும்) விஷ வாயு, தீய வார்த்தைகள், துர் எண்ணங்களை அழித்து, புனித எண்ணங்கள், அமைதி தங்குவதற்கான அமைப்பை ஏற்படுத்தித் தருகின்றன.
இதற்காகவே நித்ய வழிபாட்டு முறைகளில் ஔபாசனம், அக்னிசந்தானம், அக்னிஹோத்ரம் போன்ற நித்ய ஹோமபூஜைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் அக்னி ஹோத்ர மந்திரங்களை நன்றாக அறிந்தவர்களே புகைபிடிப்பது என்றால் ஸ்ரீவாயுபகவானையே நிந்திப்பதாகின்றதல்லவா? இதற்குக் கடும்சாபங்களுண்டு. இதற்காகவே, கோயில்களில் யாக சாலைகளில் ஹோமங்கள் நடத்தப் பெறுகின்றன. வீட்டில் நித்யபூஜை செய்ய இயலாதோர் கோயிலிலேனும் திரவியங்களை அளித்து ஹோமத்திற்கான சிறுசிறு உதவிகளையேனும் செய்து ஹோமபூஜையில் கலந்து கொண்டு ஹோமப் புகையினையே பிரசாதமாக சுவாசித்துப் பயன் பலன் பெறவேண்டும்.
எந்த தெய்வத்திற்காக ஹோமபூஜை நடக்கின்றதோ அத்தெய்வ மூர்த்தியின் அம்சங்கள் ஹோம அக்னியில் ஆவாஹனம் ஆவதால் தெய்வ ஸ்பரிசம் பெற்ற ஹோமப் பூகையை சுவாசிப்பது இறை தரிசனத்தை உணரும் வழிகளில் ஒன்றாகும். ஹோமப் புகைக்கு நம் உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளையும் சுத்திகரிக்கும் தெய்வ சக்தி உண்டு. உடல் தூய்மை, மனத்தூய்மை, உள்ளத்தூய்மை மூன்றையும் தரவல்லது ஹோமப்புகை.
முறையற்ற காம உணர்வுகளினால் அதர்மமான தீயகேளிக்கைகள், காரியங்களில் இறங்குவதால் இதுவும் வாயுவை மாசுபடுத்துகின்றன. இவையும் அங்கங்களினாலும், மனதாலும், புகைபிடிப்பது போன்ற செயல்களினாலும் பலர் வாயுவை மாசுபடுத்திப் பலருக்கும் கேடு விளைவிக்கின்றனர். இதற்கெல்லாம் என்று, எவ்வாறு, எங்கு பிராயசித்தம் தேடுவது?
சதாசர்வ காலமும் ஒவ்வொரு மனிதனும் இறை நினைவிலா வாழ்கின்றான்? வாழ்க்கைப் பிரச்சனைகள், இல்லறத் துன்பங்கள் நோய் நொடிகளின் இன்னல்களுக்கிடையே அவன் பல்லாயிரம் எண்ணங்களில் உழன்று, சுழன்று வருகின்றானே தவிர, அவனுடைய இத்தகைய சுயநலமான, பயனற்ற எண்ணங்களால் அவன் வாயு பரிமாணத்தை, பரவெளியை அசுத்தமாக்குகின்றான் என்பதை என்று உணரப் போகின்றான்? ‘சும்மா இருப்பதே சுகம்‘ என்பதன் பொருள் என்ன? எத்தகைய எண்ண ஓட்டங்களும் இல்லாது மனதை சாந்தத்தில் நிலை நிறுத்துவதே சும்மா இருப்பதாகும். ஆனால் நடைமுறையில் ஒரு நிமிடமாவது எதையும் எண்ணாது சும்மா இருக்க முடியுமா?
சுகப்ராண கல்பனா வாயுபகவான் என்னும் தெய்வமூர்த்தி ஜீவன்களுடைய எண்ணங்களால் பரவெளி வாயு மாசுபடுவதைத் தடுத்து அவர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக ஸ்ரீமகாவிஷ்ணுவை வேண்டிப் பிரார்த்தித்த போது அவர், “யாம் பூதநாராயணனாக பஞ்சபூதங்களின் ஒருமித்த சக்தியாய் எழுந்தருளியுருக்கும் திருஅருணாசலத்தை கிரிவலம் வருவாயாக!“ என்று அருளாணையிட, வாயுபகவானும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதற்கு முன்....
....... அங்கு ஆதிமூல வாயுபுத்திரனாகிய ஸ்ரீஆஞ்சநேயரும் கிரிவலம் வருவது கண்டு அதிசயித்து, குதூகல நந்தியின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். (திருஅண்ணாமலை க்ஷேத்திரத்தில் ஸ்ரீஆஞ்சநேய மஹாப்ரபு இன்றைக்கும் தினமும் கிரிவலம் வருகின்றார்).
 ஸ்ரீகிருஷ்ண பகவான், ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி போன்ற தெய்வமூர்த்திகளுக்கும் கிரிவல நியதிகள் உண்டா? நிச்சயமாக உண்டு! ஸ்ரீஆஞ்சநேயர் கண நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடக்கும் வல்லமை பெற்றவர்! அவர் திருஅண்ணாமலையை மூன்று மணி நேரத்தில் கிரிவலத்தை முடிப்பதாகச் சித்தர்களின் நாடிகள் கூறுகின்றன. அப்படியானால் அவருடைய  தேக ஆற்றலின்படி மூன்றுமணி நேரத்தில் கோடிகோடியான மைல்கள் நீளமுள்ளதாக அல்லவா கிரிவலப்பாதை அமைகிறது!
ஆம், இதுவும் உண்மையே! சாதாரண மனிதனுக்கே கிரிவலச் சுற்று சுமார் 14km ஆகும். தேவதைகள், மகான்கள், தேவர்கள், தெய்வ மூர்த்திகள் ஆகியோருக்கு அவரவர் தெய்வாம்ச நிலையைப் பொறுத்து அருணாசலச் சுற்றின் அளவுமாறும். அவர்களுக்குப் பலவித லோகங்களின் சுற்றளவு சேரும்!
இதுவே இறைவனாகிய திருஅண்ணாமலையானின் திருவிளையாடல்!
ஏன், நம் மூதாதையர்கள் கூட இன்றைக்கும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் செய்ய விரும்பினால், அவர்களுடைய வசு, ருத்ர, ஆதித்யப் பித்ரு நாயகர்களின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால் நம் மூதாதையர்களோ தற்போதைய கலியுகத்தில் காணப்படும் கிரிவலச் சூழ்நிலைகளை விரும்புவதில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன் தாங்கள் பூலோகத்தில் வசித்த போது எவ்வாறு திருஅண்ணாமலை காட்சியளித்ததோ அதே நிலையில் தான் மீண்டும் காணத் துடிக்கின்றனர். அவர்கள் செயற்கையான விஞ்ஞான மாறுதல்களை ஏற்பதில்லை.
எனவே, திருஅண்ணாமலையானது அவரவர் ஆன்மீக, தெய்வீக நிலைகளுக்கேற்றவாறு வெவ்வேறாகக் காட்சி தருகின்றது. இறைவனின் இத்தகைய திருவிளையாடலை மனிதன் என்று உணரப் போகின்றான்?
இவ்வாறாக, குதூகல நந்தியின் மூலம் அருணாசல மகிமையினைக் கேட்டு ஆனந்தித்த ஸ்ரீஅருணாசலேஸ்வரரின் தரிசனத்தை வேண்டி, பூலோக மக்களைப் பரவெளியை மாசுபடுத்தும் குற்றங்களினின்றும் விடுவிக்கும் பிராயச்சித்த முறைகளை அருளுமாறு வேண்டிச் சுழுமுனையில் சுவாசத்தை நிறுத்திக் கிரிவலம் வந்தார்.
“சுகப்ராண கல்பனா! நீ எம்மை கிரிவலம் வந்து எங்கு நீ இதுவரை உணர்ந்திரா தென்றல் காற்றை அனுபவிக்கிறாயோ, அவ்விடத்தில் யாம் வம்ஸீதரண பூப்ரஸ்த லிங்கமாய்க் காட்சிதருவேன்! அங்கு நீ எம்மை வழிபட்டுக் காரியசித்தியை அடைவாயாக“ என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் அருளாணையிட்டார். இவ்வாறாக சுகப்ராண கல்பனாவாயு பகவான் சுழு முனையில் சுவாசத்தை நிலைநிறுத்திக் கிரிவலம் வந்திட, அடிஅண்ணாமலைப் பகுதி தாண்டியவுடன் ஒரு சுகந்தமான நறுமணம் வீசுவதை உணர்ந்தார். இப்பகுதியில் தான் குறித்த, நட்சத்திரத்தில், திதியில், ஹோரையில் பஞ்சக்ருத்திகா முலிகை என்னும் ஓர் அற்புத மூலிகை பூக்கும். ஒரு நாழிகை நேரமே இப்பூக்கள் அதன் செடியில் தங்கும். அதன்பிறகு தேவர்கள் இதனை எடுத்துச் செல்வர். தேவலோகத்திலும் கிட்டாத அற்புதப் பூ இது! இன்றும் இவ்வதிசயம் நடக்கின்றது!
 சுகப்ராண கல்பனா வாயுபகவான் தாம் இதுவரை உணர்ந்திராத பஞ்சக்ருத்திகா வாயுவின் ஸ்பர்சத்தை அங்கு உணர்ந்து ஆனந்தித்தார் அவ்விடத்தில் பஞ்சக்ருத்திகா மூலிகையின் பூக்கள் ஒளிர்ந்து ப்ரகாசித்தன. அவற்றின் நடுவே வம்ஸீதரண பூப்ரஸ்தலிங்கம் சுயம்பு லிங்கமாய்ப் ப்ரகாசித்தது. இதுவே இன்று வாயுலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இதனை முறையாக வழிபட்டு வந்த வாயுபகவான் இதில் ஐக்கியமடைந்து இன்றும் தன்னை முறையாக வழிபடுவோர்க்குப் பல கொடிய கர்மவினைகளைக் கழிப்பதற்கு ப்ராயசித்த முறைகளை அருள்கின்றார்.
வாயுலிங்க வழிபாடு :- புதன்கிழமையில் புத ஹோரையில் மணமுள்ள  வாசனை திரவியங்கள் கலந்த புண்ணிய நதி தீர்த்தங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்து வாயுலிங்கத்திற்கு பச்சை ஆடை சார்த்தி, பச்சை நிற ஆடைகள், கீரை போன்ற உணவு வகைகளை ஏழைகளுக்கு தானமளிக்க வழிபட வேண்டும்.
வாயுலிங்க வழிபாட்டின் பலன்கள் :
1. புகைபிடித்தலால் பல கொடிய கர்மவினைகள் சேர்கின்றன. இக்கொடிய பழக்கத்தை ஒரே நாளில் நிறுத்த இயலாது. புகைபிடிப்போர் இந்த வாயுலிங்க மூர்த்தியின் சன்னதியில் குறைந்தது ஒரு மணி நேரமாவது சாம்பிராணித் தூபமிட்டு வழிபடல் வேண்டும். பின்னர், தங்கள் ஊர்களிலுள்ள கோயில்களில் தினந்தோறும் சாம்பிராணி தூபமிட  வேண்டும். இவ்வாறு செய்து  வந்தால் புகைபிடிக்கும் துர் பழக்கம் எளிதில் மறைந்துவிடும். இதைவிடச் சிறந்த எளிமையான வழிமுறை கிடையாது.
ஆனால் இதுவரை புகை பிடித்தமைக்குப் பிராயச்சித்தமாக தினசரி சிவ/விஷ்ணு/துர்கா சஹஸ்ர நாமப் பாராயணம், தினந்தோறும் ஏதேனும் ஒரு கோயிலில் தூபமிடுதல், சாம்பிராணித் தூபமிட்டவாறே திருஅண்ணாமலையை புதன்கிழமை தோறும் கிரிவலம்  வருதல் ஆகியவற்றை முறையாகச் செய்து பச்சை நிற வஸ்திரங்களை ஏழைகளுக்கு, குறிப்பாக செவிடு, குருடு, ,ஊமைகளுக்கு தானமளிக்க வேண்டும்.
மரகத லிங்கம் உள்ள சிதம்பரம்,  திருஆரூர், திருக்காறைவாசல், வைத்தீஸ்வரன் கோயில் திருக்கண்டீஸ்வரம் (செங்கல்பட்டு அருகில்) , சப்தவிடத் தலங்கள் ஆகியவற்றில் புதன்கிழமைகளில், புதஹோரையில் (காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9 அதிகாலை 3-4) சாம்பிராணித் தூபமிடுவது மிகவும் விசேஷமான பிராயச்சித்த முறையாகும்.
2. குளிர்சாதனத்துறை (Refrigeration), Spray  Painting, சுவாசக் கருவிகள், சுவாச மருத்துத்துறை, மயக்க மருந்துத்துறை மருத்துவர்கள் (Anesthethists), காற்று உபகரணங்கள் சுத்தம் செய்வோர் (Blowers, Vaccum Cleaners) போன்ற துறையினர் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து வாயுலிங்க பகவானை மேற்கண்ட அபிஷேக ஆராதனைகளுடனும், தான தர்மங்களுடனும் வழிபட, தங்கள் துறைகளில் சிறப்பிடம் பெறுவர்.
3. காசம் (T.B) சுவாச நோய்கள், இருதய நோய்கள், மாரடைப்பு போன்ற நோய்களை உடையோர் திருஅண்ணாமலையில் ஸ்ரீவாயுலிங்க பகவானை மேற்கண்ட முறையில் வழிபட்டுத் தரிசிக்க  வேண்டும்.

வடக்கு குபேர லிங்கம்

வடக்கு – குபேர லிங்கம்
திருஅண்ணாமலையில் வடக்குத் திக்கில் அருள்பாலிப்பவர் குபேரலிங்க மூர்த்தி ஆவார். ஆதிபராசக்தியிடம் பல ஆபரணங்களில் சிந்தாமணி என்ற ஆபரணம் ஒன்றுண்டு. குபேர பூஜை, லலிதாபரமேஸ்வரி பூஜை ஆகியவற்றில் சித்தி பெற்றவர்களுக்கு மட்டுமே சிந்தாமணி கிட்டிடும். இதன் சக்தியால் ஒருவன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தங்கம், நவரத்னங்களை வேண்டுகிறானோ, அவையனைத்தையும் பெற்றிடுவான் . ஆனால், இத்தகைய வல்லமை வாய்ந்த சிந்தாமணியைப் பெறுவது எளிதல்லவே!
குபேர பதவியைப் பெற.....
 நான்கு சதுர்யுகங்கள் ஈஸ்வரி உபாசனை – இதனால் சிந்தாமணியின் ஒளிக்கதிர்கள் ஒருமுறை மேல்படும்.  அடுத்த நான்கு சதுர்யுகங்கள் பரமேஸ்வரி உபாசனை – இதனால் குபேர சம்பத்து கிட்டும். அடுத்த நான்கு சதுர்யுகங்கள் சர்வேஸ்வரி பூஜை – இதனால் சிந்தாமணியின் கிரணங்கள் யாவும் உடலில் ஊடுருவும். அடுத்த நான்கு சதுர்யுகங்கள் பரப்பிரம்மேஸ்வரி பூஜை – இதனால் கனவில் சிந்தாமணியின் தரிசனம் கிட்டும். அடுத்த நான்கு சதுர்யுகங்களில் சர்வலோகேஸ்வரி பூஜை – இதனால் சிந்தாமணியின் தரிசனம் எதிரில் தெரியும். அதனை ஸ்பரிசிக்கும் பாக்யமும் கிட்டும்.  அடுத்த நான்கு சதுர்யுகங்களில் பராசக்தி பூஜை  இதனால் சிந்தாமணியை அடையும் நல்வழி முறைகளைப் பெறலாம். அடுத்த நான்கு சதுர்யுகங்களில் ஆதிபராசக்தி பூஜை – இதனால் சிந்தாமணியை அடைந்து விடலாம்.,
 இவற்றை முறையாகச் செய்து பெறுவதே குபேரபதவி!  கேட்பதற்கே மலைப்பாக இருக்கின்றதல்லவா?  ஆனால் இதுவரையில் மூன்று சமுத்திரங்களின் கரையில் உள்ள மண் துகள்களின் அளவுக்கு குபேரர்கள் தோன்றியுள்ளனர் என்றால் இவ்வரிய தவத்தை எவ்வளவு கோடித் தேவர்கள் நிறைவேற்றி, பெறற்கரிய குபேர பதவியைப் பெற்றிருப்பர்!
ஆனால் கோடி கோடியான குபேரர்களில் மிகத் திறமையுடன், இறை நினைவுடன், தியாக உள்ளத்துடன் செயல்பட்டு குபேர பதவியை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் ஒரு சிலரே. செல்வத்திற்கு நாயகி ஸ்ரீலட்சுமி தானே! பின் செல்வம் பெற குபேர பூஜையை ஏன் செய்தல் வேண்டும்? குபேரன் அளிக்கின்ற செல்வத்துக்கு குபேர சம்பத்து என்று பெயர். இது பூர்வ ஜென்ம புண்ணிய சக்தியால் பல்வேறு துறைகளில் இருந்தும் பெறுகின்ற சம்பத்தாகும். அதாவது, புண்ணிய சக்தியை தேவமூர்த்திகளே குபேர சம்பத்தாகப் பெற்றுத் தருகின்றனர்.
 லட்சுமி கடாட்சம் என்பது மஹாலட்சுமியே, பக்தனின் உத்தம ஆன்மீக நிலைகளைக் கருதித் தானே மனமுவந்து அளிப்பது.  குபேர சம்பத்திற்கும், லட்சுமி கடாட்சத்துக்கும் அப்பாற்பட்ட செல்வநிலைகளும் உண்டு. ஆனால், இவற்றைச் சற்குருவே உணர்த்துவார்!
புவனத்ரயம்பக குபேர மூர்த்தி, கலியுகத்தில் மக்கள் வறுமையினாலும், குறைந்த வருவாயினாலும் லட்சம் லட்சமாய்ச் சம்பாதித்தும் மனத் திருப்தியில்லாமலும் வாழ்வர் என்பதைத் தீர்க்க தரிசனமாய் அறிந்தார். செல்வம் என்பதை அதைப் பயன்படுத்தும் முறையைக் கொண்டுதான் குபேர சம்பத்து என்றும் லட்சுமி கடாட்சம் என்றும் பகுக்கின்றனர். எனவே வருகின்ற வருமானத்தையும், ஈட்டுகின்ற செல்வத்தையும் முறையாகப் பயன்படுத்த வேண்டுமென்பது தெய்வ நியதி. கலியுகத்தில் பணத்தைக் கொண்டு செய்யப்படும் காரியங்களினால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்தந்த மனிதனே பொறுப்பாவான். எனவே, ஈட்டுகின்ற ஒவ்வொரு பைசாவையும் முறையாகச் செலவிடுகின்ற கடமையும் மனிதனுக்கு உண்டு.
வரவு, செலவு நியதிகள் :
மது, சீட்டாடுதல், குதிரைப் பந்தயம், லாட்டரி, சூதாட்டம், விபச்சாரம், பலத்தைக்காட்டி, மிரட்டிச் சம்பாதித்தல் போன்ற தீய வழிகளில் ஒருவன் பணத்தைச் செலவழித்தால் அத்தீய செயல்களின் கர்ம வினைகளோடு, அப்பணத்தை முறையாக்ச் செலவிடாத பாவமும் வந்து சேரும். அதேபோல், பணத்தையும் முறையான தொழில், பணிகளின் மூலம் ஈட்ட வேண்டும். மேற்கண்ட தீய வழிகளில் பணத்தைப் பெற்றாலும் அதுவும் தீவினைகளுக்கே வழிவகுக்கும்.
உதாரணமாக, லஞ்சம், கள்ளக்கடத்தல், கொள்ளை, பிறரை வஞ்சித்து ஏமாற்றுதல், வரதட்சணை, விபச்சாரம் போன்ற தீய வழிகளில் வருகின்ற பணத்தினால் எத்தகைய நற்காரியங்கள் புரிந்தாலும் அவற்றின் புண்ணிய சக்தி அப்பொருட்களுக்கு உரித்தானவர்களையே சாரும். ஏதேனும் ஓர் காரியத்திற்காக லஞ்சமாகப் பணத்தைப் பெற்று அதனைக் கோயில் உண்டியலில் சேர்த்தால் அதன் புண்ணிய சக்தி லஞ்சம் கொடுத்தவனையே சென்றடையும். பிறர்க்கு ஒன்றும் வராது.
செலவழிக்கின்ற ஒவ்வொரு பைசாவையும் குறைந்தது 108 காயத்ரி மந்திரமாவது ஜபித்தே செலவழிக்க வேண்டும். அதே போல் பெறுகின்ற ஒவ்வொரு காசையும் குறைந்த்து 108 காயத்ரி மந்திரம் ஜபித்தே  பெற வேண்டும். இதனால் பணத்தை முறையற்ற வழிகளில் செலவழிப்பதால் ஏற்படும் கர்ம வினைகளிலிருந்தும் தப்பிக்கலாம். இவ்வாறாக, கலியுகத்தில் பணத்திற்காக மக்கள் படும் பாட்டையும், தீய செலவினங்களால் விளையும் கொடிய கர்மவினைகளில் இருந்தும் மக்களைக் காப்பாற்றும் ப்ராயசித்தங்களைப் பெறுவதற்காக, புவனத்ரயம்பக குபேரபகவான், ஸ்ரீமஹாலட்சுமியிடம் நல்வழி கேட்டு திருஅருணாசலத்தை வந்தடைந்தார்.

குபேர பகவானின் கிரிவலம்
வலது கட்டைவிரல் ஸ்ரீலட்சுமியின் அம்ஸமாகக் கருதப்படுகிறது. எனவே குபேரபகவான் முன் காலைத் தூக்கிய வண்ணம் குதிகால்களாலேயே மலையைப் பிரதட்சணம் செய்வதற்காக, குதூகல நந்தீஸ்வரரிடம் அமர்ந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரரைத் தியானித்தார். குதூகால நந்தீஸ்வரர் எடுத்துரைத்த அருணாசலத்தின் பெருமைகளைக் கேட்டுய்த்த குபேரபகவானுக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் அருளாணையிட்டார். “குபேரா! நீ அகஸ்திய முனிவரிடம் குருகுலவாசம் பயின்று வந்தால் அவரே உனக்குரிய வரசித்தியைப் பெறும் நல்வழியைக் காட்டுவார்!“ அவ்வாறாகவே, குபேர பகவான் இளைஞனாய் உருவெடுத்து ஸ்ரீஅகஸ்திய மகாசித்த புருஷரிடம் குருகுலம் பயின்று வந்தார். இதனையே தேவமாயை என்பர். தெய்வ மூர்த்திகளுக்கும் விஷ்ணு மாயை, தேவ மாயை, துர்கா மாயை என்று பல நிலைகள் உண்டு. ஸ்ரீஅகஸ்திய சித்த புருஷர்,  ஸ்ரீஅருணாசல ஈசனின் திருவருளால் குபேர பகவானின் தெய்வாம்சத்தை உணர்ந்து அவருக்கு லட்சுமி கடாட்சத் தத்துவங்களை எடுத்துரைத்தார். ஸ்ரீராமருக்கு, ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்தவர் அல்லவா! அவரே கலியுகத்தில் பணத்தால் மக்கள் பெற இருக்கின்ற தீய வினைகளில் இருந்து அவர்களை விடுவிக்க குபேர பகவானின் தெய்வாவதாரக் காரணத்தை உணர்ந்தார். குபேர பகவான் ஸ்ரீஅகஸ்தியர் அருளியபடி குதூகல நந்தீஸ்வரரிடம் தியானத்தில் ஆழ்ந்து, சிரசுக்கு மேல் இருகரங்களையும் கூப்பியவாறு குதிகால் நடையாக கிரிவலம் வந்திட பல யுகங்களுக்கும் பின்னர் ஒருநாள்.... திருஅண்ணாமலையின் வடக்குத் திசையில் ஸ்ரீமஹாவிஷ்ணுவும், ஸ்ரீமஹாலட்சுமியும் சேர்ந்து திருஅருணாசலேஸ்வரரை சக்ரபாணிக் கோலத்தில் தரிசனம் செய்வது கண்டு அதிசயித்தார்.
“என்ன இது! ஸ்ரீமஹா விஷ்ணு அன்றோ சக்ரபாணியாகவும் சாரங்கபாணியாகவும் அருள்பாலிப்பவர். ஸ்ரீசக்ரபாணிக்கு ஆதிசிவனே சக்ராயுதபாணியாகக் காட்சி தருகின்றனரே! எத்தகைய விசேஷமான இடமிது!“ என்று அவர் ஆன்ந்தித்திட ஸ்ரீமஹாவிஷ்ணுவும், ஸ்ரீமஹாலட்சுமியும் எழுந்தருளிய இடத்தில் ஒரு சுயம்பு லிங்கம் தோன்றியது. அதுவே சர்வ சம்பத் ப்ரீதிகர ஜோதிமுக லிங்கம் ஆகும். இதனையே தற்போது குபேரலிங்கம் என்று வழங்குகிறோம்.
இன்றும் குறித்த நாட்களில், நட்சத்திரத்தில் குறித்த யோக காலத்தில் குபேரபகவான் இங்குள்ள குபேர தீர்த்தத்தில் நீராடிச் செல்கின்றார். அவர் நீராடிய பின் எவரொருவர் இங்கு நீராடுகின்றாரோ, அல்லது தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொள்கின்றனரோ அவர்களே கோடீஸ்வரர்களாகின்றனர். குபேர பகவான் இந்த லிங்கத்தை வழிபட்டு இவ்விடத்திலேயே ஐக்கியமானார்.
குபேர லிங்கவழிபாடு : குருமூடம் விலகுகின்ற நாள் முதல் மீண்டும் குரு மூடம் ஏற்படும்வரை உள்ள நாட்களில் இந்த குபேரலிங்கத்திற்குப் பால், தேன், கரும்புச்சாறு, மாதுளைச் சாறு, பலாப்பழம் கலந்த பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகங்கள் செய்து கொய்யாப் பழத்தினாலான மாலையைச் சார்த்தி சர்க்கரைப் பொங்கல், பால் தானமளித்து மஞ்சள் நிற ஆடைகளையும் தானம் செய்தல் வேண்டும்.., இதனால்
1. பணத்தை முறையற்ற வழிகளில் செலவிட்டோர்.,
2. பணத்தை முறையற்ற வழிகளில் ஈட்டியவர்கள்
3. பணத்தை முறையற்ற தீய காரியங்களில் செலவழிப்போர்
ஆகியோருக்குப் பிராயசித்தம் கிட்டும். இவற்றைப் பெற்றுத் தருவதே குபேர லிங்க வழிபாடாகும்.

வடகிழக்கு ஈசான்ய லிங்கம்

திருஅண்ணாமலையின் வடகிழக்குத் திக்கில் அமர்ந்து அருள்பாலிப்பவர் ஈசான்ய லிங்க மூர்த்தி. ஆதிமூல பன்னிரு ருத்ரர்களும் பினாகீசன் என்ற ருத்ராதிபதியாய் தெய்வ அம்சம் பூண்டு தாங்கள் இறைவனிடம் ஐக்யமாக வேண்டும் என்று விரும்பினர். இதற்காகவே பினாகீச ருத்ரர் கண்களை மூடியவாறே திருஅண்ணாமலையைக் கிரிவலம் வர எண்ணி குதூகல நந்தியின் அருகே தியானத்தில் அமர்ந்தார்.
பினாகீச ருத்ர பகவான், குதூகல நந்தி எடுத்துரைத்த திருஅருணாசலத்தின் பெருமையைப் கேட்டுப் பேரான்ந்தம் கொண்டார். “பினாகீசா! நீ திருச்சோற்றுத்துறை ஈசனை எண்ணி தியானித்து கிரிவலம் வருவாயாக! நேத்திரங்களை மூடியவாறு நீ செய்யும் கிரிவலத்தில் உன்னுடைய பிரார்த்தனை நிறைவேறுவதற்காக திருச்சோற்றுத்துறை ஈசனைத் தாங்கும் பேறுபெற்ற அதிகார நந்தியே உன்னைத் தொடர்ந்து கிரிவலம் வருவார். எங்கு அதிகார நந்தி குலுங்கிக் குலுங்கிக் கண்ணீர் சிந்தி எம்மை நோக்கி ஆன்ந்தக் கண்ணீர் பெருக்குகின்றதோ அவ்விடத்தில் யாம் ஔஷத தீர்த்திஸ்வர லிங்க மூர்த்தியாகக் காட்சியளிப்போம்!” என்று அருணாசலேஸ்வரர் அருள்வழிகாட்டினார்.
பூமபுத்ரன் என்ற அதிகார நந்தீஸ்வரரே திருவையாறு அருகே உள்ள திருச்சோற்றுத்துறை ஈசனைத் தாங்கும் பேறு பெற்றவர். இவருக்கும் திருஅண்ணாமலைக்கும் தொடர்பு உண்டு. ஆதிசிவன் தம்முடைய அடியாருடைய நோய் நொடிகளைத் தீர்க்க பல லோகங்களுக்கும் சஞ்சாரம் செல்கையில் பூமபுத்ர அதிகார நந்தீஸ்வரரையே தம் வாகனமாக ஏற்பார். காரணம் பூமபுத்ர நந்தீஸ்வரருக்கே திருஅண்ணாமலையில் உள்ள மூலிகைகள், பாஷாண ஜோதிக் கற்கள் போன்றவற்றின் கிரகண வீச்சுக்களைத் தாங்கும் வல்லமை உண்டு. இதனால் இந்த நந்தியின் தரிசனமே பல கொடிய நோய்களைத் தீர்க்கும் சக்தி உடையதாகும்.
பீனாகீச ருத்ரர் கண்களாய் மூடியவாறே பலயுகங்களாகத் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வர, ஓரிடத்தில் யாரோ குலுங்கி அழும் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். சற்றுத் தொலைவில் பூமபுத்ர அதிகார நந்தீஸ்வரர் திருஅருணாசலத்தை வலம் வந்து தரிசனம் பெற்று மகிழ்ந்த இடம் அது! அருகே ஔஷத தீர்த்தீஸ்வரராக ஒரு லிங்கம் முளைத்தெழுந்தது. இதுவே தற்போதைய ஈசான்ய லிங்கமாகும்.
திருஅண்ணாமலையிலுள்ள அபூர்வ மூலிகைகள், பாஷாணங்கள், குளிகைகளின் திரண்ட சக்தியைப் பெற்றதோடன்றி, பல லோகங்களிலும் கிட்டிடா உயர்ந்த நிலையைத் தரும் கற்களின் ப்ரகாச ஜ்வாலைகளைத் தாங்கி ஈசான்ய லிங்கம் இன்றும் அருள் பாலிக்கிறது.
ஏழரை நாட்டுச் சனி எனப்படும் சனீஸ்வரரின் கோச்சார ரீதியான விளைவுகளில் இருந்து காத்து ரட்சிப்பவரே ஈசான்ய லிங்க மூர்த்தி! இவரை சனிக்கிழமையன்று நல்லெண்ணைக் காப்பிட்டு, அபிஷேக ஆராதனைகள் செய்து, எள் கலந்த உணவு, கறுப்புநிற ஆடைகளைத் தானமாக அளித்து வழிபட வேண்டும். கறுப்பு உடையணிந்த ஊனமுற்றோருக்குத் தானமளிப்பது அளப்பரிய பலன்களைத் தரும்.
ஈசான்ய லிங்க பூஜாபலன்கள் :
1. சனீஸ்வர ப்ரீதியைத் தரும்.
2. பல பெண்கள் கண்ணீர் சிந்துவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் தக்கதோர் பிராயச்சித்தமாக இங்கு ஈசான்ய லிங்கத்தை குதிக்கால் பிரதட்சணம் செய்து பெற்றோர்களுக்கும், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.
3. வாகன அதிபர்கள் தங்களுடைய வாகன்ங்களை ஈசான்ய லிங்கமூர்த்தி கோயிலில் நிறுத்தி, தூபமிட்டு; தீபம் காட்டி, திருஷ்டி கழிப்பதால் கண்ணேறுகளைத் தவிர்க்கலாம்.
4. தீராத நோய்களை உடையோர் ஈசான்ய லிங்கத்தை முறையாக வழிபட்டு, ஏழை மக்களுக்கு இலவச வைத்திய சேவையைச் செய்துவரல் வேண்டும். இதனால் எத்தகைய கொடிய நோய்களும் தீரும் அற்புதத்தை உய்த்து உணரலாம்.
பௌர்ணமி – கிரிவல மகிமை மௌர்ணமியில் திருஅண்ணாமலையில் கிரிவலம்
திருஅண்ணாமலையில் மாதப் பிறப்பு, பௌர்ணமி திதி, மலையில் தீபம் தெரியும் நாட்கள், ஏகாதசி ஆகிய தினங்களில்  தற்போது மக்கள் பெருமளவு கிரிவலம் வருகின்றனர். ஆனால் எந்நாளிலும் எந்நேரத்திலும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரலாம். அந்தந்த நாள் திதி, நட்சத்திரம், யோகம், கரணம், ஹோரை, லக்னங்களுக்கு ஏற்ப கிரிவல பலன்கள் மாறுகின்றன. ஒரே தரிசனத்தை  ஒரு முறை பார்த்து மறுமுறை பார்த்த உடனேயே ஒரு வினாடி கால மாறுதலில் கூட அந்தத் தரிசனத்தின் பலனும் மாறி விடுகின்றது. எனவே தான் இன்றைக்கும் நந்தீஸ்வரர் அருணாசல மஹாத்மியத்தை எடுத்துரைத்துவர ஸ்ரீஅகஸ்திய  சித்த புருஷர் அவற்றைக் கிரந்த நாடிகளாக வடித்து வருகின்றார்.

பௌர்ணமி விசேஷம்

 பௌர்ணமி அன்றுதான் சந்திர பகவான் 16 கலைகளுடன் பரிபூர்ணமாக ப்ரகாசிக்கின்றான். மதிகாரகன் என்று அழைக்கப்படும் சந்திரனே நம் மனதை ஆட்சி செய்கின்றார். உடல் தூய்மையும் மனத்தூய்மையுமே தெய்வீக நிலையில் மேம்பாட்டைத் தரும். மனமோ பலவித எண்ணங்களில் சுழன்று வருகின்றது. எண்ணங்களையும் கட்டுப் படுத்த இயலாது. மன ஓட்டங்களை ஒழுங்கு படுத்தினால்தான் மனோ சக்தியைப் பெறலாம். இதற்கு சந்திர பகவானின் அனுக்ரஹம் தேவை. இதைப் பெறுவதற்காகவே பௌர்ணமியில் கிரிவலம் வருகின்றோம்.
பௌர்ணமி திதியன்று சூர்ய பகவானின் தெய்வாம்சங்களில் பலவற்றை ஏற்றுத் தம்முடைய முழுமையான பதினாறு கலைகளுடன் சந்திரன் ப்ரகாசிக்கின்றார். அவருடைய அனுக்ரஹ சக்தி அவருடைய கிரணங்களின் மூலமாகவே நம் உடலிலும் சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் ஊடுருவுகின்றது.
பௌர்ணமி நிலவின் தெய்வீக சக்திகள்
சந்திரனுடைய அனுக்ரஹ சக்திகள் அனைத்தையும் ஒருவர் பெற வேண்டுமானால் அவருடைய உடலும் உள்ளமும் புனிதமாக இருக்க வேண்டும். பௌர்ணமி அன்று 16 கலைகளுடன் சந்திரன் பிரகாசிப்பதால் அந்த அமிர்த கிரணங்களை ஒரு மனிதன் தன் உடலில் ஏற்றால் அவனுக்கு அற்புதமான மனோசக்தியும் தபோபலனும் தெய்வ அனுக்ரஹமும் கைகூடும். ஆனால் அனைவராலும் இதைப் பெற முடியுமா? உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டுமே! இதற்கு சந்தியா வந்தனம், காயத்ரீ ஜபம், ப்ரம்ஹ யக்ஞம், சிவ பூஜை போன்ற நித்ய கர்மானுஷ்டானங்கள்,  ஹோமம், பித்ருபூஜை, குலதெய்வ பூஜை, இஷ்ட தெய்வ பூஜை, கோயில் தரிசனங்கள், தீர்த்த ஸ்நானங்கள், மகான்களின் தரிசனங்கள் – போன்றவற்றை முறையாகச் செய்து, பெற்று வரவேண்டும். ஆனால் கலியுகலகில் இவற்றை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியுமா?
 இதற்கு எளிய வழிமுறை உண்டா? ஆம்! உண்டு. அதுவே திருஅண்ணாமலை ஆகும். திருஅண்ணாமலையில் பித்ரு தர்ப்பணங்கள் செய்ய வேண்டிய கட்டங்கள் உண்டு. ஹோமம் வளர்க்க வேண்டிய இடங்களும் உண்டு. பல்வேறு தெய்வ மூர்த்திகளுக்கான பூஜைகளை நிறைவேற்ற வேண்டிய இடங்களும் உண்டு. இவற்றை முறையாக அந்தந்த இடங்களில் செய்து வந்திடில் நம் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ செய்யாமல் விட்ட பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணங்கள் போன்றவற்றிற்கு இவை பரிகாரங்களாக அமைகின்றன.
பௌர்ணமி நிலாக் கிரணங்கள்
பௌர்ணமி நிலவின் அற்புத சக்தி வாய்ந்த கிரணங்களை தெய்வீக சக்தியை, ஒரு சாதாரண மனிதனால் பெற இயலாது என்பதால் தான் திருஅருணாசலேஸ்வரரே தன்னுடைய திருமேனியான மலையின் மீது சந்திரனின் அமிர்தக் கதிர்கள் அனைத்தையும் பெற்று அதை ஒவ்வொரு மனிதனுடைய தேக சக்திக்கு ஏற்றவாறு அளிக்கின்றார். திருஅண்ணாமலையில் விசேஷமான கற்கள், மூலிகைகள், விருக்ஷங்கள் உண்டு. இவை பல கர்மவினைகளையும், நோய்களையும், தோஷங்களையும், பாவங்களையும் நீக்கும் சக்தி பெற்றவை. இவற்றில் சந்திர பகவானின் ஒளிக் கதிர்கள் பட்டுப் பிரதிபலிக்கும் போது அவற்றின் சக்தி பன்மடங்காகப் பெருகி கிரிவலம் வருபவர்களின் உடலில் ஊடுருவிப் பாய்கிறது.
இதற்காகவே பௌர்ணமி அன்று இயன்ற வரை ஆண்கள், மேல்சட்டை இன்றி பஞ்சகச்ச முறையுடன் சாதாரண வேஷ்டியை அணிந்து கிரிவலம் வருதல் வேண்டும். இதனால் திருஅண்ணாமலையில் இருந்து பிரதிபலிக்கின்ற ஸ்ரீஅருணாசலேஸ்வரரின் திருவருள் கூடிய சந்திரக் கிரணங்கள் பெருமளவில் நேரடியாக தேகத்தில் பாயும். இதன் சக்தியால் ஒவ்வொரு மனிதனும்
1. எத்தனையோ கோடிக் கர்மவினைகளைக் கழிக்கும் நல்வழியைப் பெறுகின்றனர்.
2. பாலாரிஷ்டம், கண்ணேறு, திருஷ்டி, பில்லிசூன்யம், கழிப்பு மிதித்தல், காத்துகருப்பு துஷ்ட வேலைகள் போன்ற சூன்யங்களிலிருந்து காப்பாற்றப் படுகின்றான்.
3. திருஅண்ணாமலையில் செய்யப்படும் தான தர்மங்களுக்கு ஆயிரம் மடங்கு பலன் உண்டு. அதிலும் பௌர்ணமி அன்று செய்கின்ற தான, தர்மங்களுக்கு ஆயிரம் மடங்கிற்கும் மேன்மையான பலன்கள் உண்டு. இவ்வாறு அபரிமிதமான புண்ய சக்தியைத் திரட்டித் தருவதே பௌர்ணமி கிரிவலம் ஆகும்.
4. பௌர்ணமியில் மகரிஷிகள், சித்தபுருஷர்கள், யோகிகள், தேவதைகள், தேவ, தெய்வமூர்த்திகளும் கலியுக மக்களின் நலனுக்காக கிரிவலம் வருவதால் தெய்வ சங்கல்பமாக அவர்கல் தங்களுடைய கிரிவலத்தின் புண்யங்களை/தெய்வ சக்திகளை அன்றைய தினம் கிரிவலம் வருபவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். எனவே சாதாரணமாக கிரிவலம் வருபவர்களுக்குக் கூட இத்தகைய அரிய அனுக்ரஹம் ஒரு பங்காக வந்து சேருகிறது. அப்பப்பா! ஒரு பௌர்ணமி கிரிவலத்திலேயே எவ்வளவு புண்ய சக்தி சேருகின்றது? மனிதப் பிறவி எடுத்த நாம் கிரிவலம் வருகின்ற அரிய வாய்ப்பை நழுவ விடலாமா?
விசேஷ மூலிகைகள், கற்கள், விருக்ஷங்கள்
திருஅண்ணாமலையில் மலை மேனியில் நம் கண்களில் படுபவையெல்லாம் பாறைகளாகவோ, குன்றுகளாகவோ தான் தென்படும். ஆனால் அவை உண்மையிலேயே சுயம்புலிங்க மூர்த்திகள். மலையே ஆதிசிவனின் திருமேனி என்றால் அதன் ஒவ்வொரு மண்துகளும் ஒரு லிங்கம் தானே! இறைவனின் திருமேனியில் இருக்கின்ற செடி, கொடிகளும், மரங்களும் எத்தகைய உத்தம நிலைகளை அடைந்திருக்க வேண்டும்!
ஒரு மகானின் தரிசனமே ஆயிரமாயிரம் கர்மவினைகளைக் கழிக்க வல்லது என்றால் இறைவனுடைய ஸ்தூலரூபமான திருஅண்ணாமலையின் மேல் உள்ள புல், பூண்டு, செடி, கொடிகள், மரங்களின் தரிசனம் கோடி கோடியாம் கர்மவினைகளை தீர்க்கவல்லதன்றோ! இதனால் தான் கிரிவலத்தின் ஒவ்வொரு அடிக்கும் மலையைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பது நியதி. திருஅண்ணாமலைமேல் அற்புதமான சாளக்கிராமங்கள், ஸ்படிக வடிவங்கள், பாண லிங்கங்கள் நிறைய உள்ளன. இவற்றின்மீது சூரியஒளி, சந்திரஒளி, மழை நீர் படுகையில் அவற்றின் தெய்வீக சக்திகள் பிரதிபலிக்கப்பட்டு கிரிவலம் வருவோருடைய தேகங்களில் பாய்ந்து அவர்களுடைய துன்பங்களைத் தீர்க்கும் அருமருந்தாய்த் திகழ்கின்றது. மலையின் மேலுள்ள தாவரங்கள் காண்பதற்கரிய கிடைத்தற்கரிய மூலிகைகளாகும். இம் மூலிகைச் சத்து காற்று சூர்ய, சந்திர கதிர்கள் மழை நீர் மூலமாக கிரிவலம் வருபவர்களுடைய தேகத்தில் பாய்ந்து நல் ஆரோக்கியம், தீர்க்க ஆயுளைத் தருகின்றது.
மனிதனை ஆட்டிப் படைப்பது அவன் மனமே. இம்மனதை ஆள்பவரே சந்திரபகவான். சந்திர பகவானுக்குரிய முறையான பூஜைகளையும் சந்திர ப்ரீதிக்குரிய தான தர்மங்களையும் செய்தால்தான் மனம் ஓரளவு அமைதியடையும். ஆனால் பதினாறு கலைகளுடன் பரிபூர்ணமாய்ப் பிரகாசிக்கும் சந்திரபகவானின் அமிர்தக் கிரணங்களின் சக்தியைப் பெறவேண்டுமெனில், திருஅண்ணாமலைக் கிரிவலமே மிகச் சிறந்ததாகும்.
சந்திரபகவான் பதினாறு கலைகளுடன் விளங்கும்போது அவருடைய அமிர்தமயமான கிரணங்கள் உத்தமமான தெய்வீக சித்தியை கொண்டிருப்பதன் காரணம் என்ன?
சந்திரபகவான் மணம் புரிந்த வரலாறு:- ஆதி முதலில் சந்திரன் தினந்தோறும் பதினாறு கலைகளுடனேயே பிரகாசித்தார். அதாவது, சிருஷ்டிக் காலத்தில் அமாவாசை, பௌர்ணமி என்ற இரண்டு மட்டுமே இருந்தன. தட்சனுடைய சாபத்திற்கு முந்தைய நிலை இது. அதாவது, அமாவாசையைத் தவிர ஏனைய நாட்களில் பூரண நிலவு இருந்தது.
அஸ்வினி முதல் ரேவதி வரை இருபத்தியேழு நட்சத்திர தேவியரையும் சந்திரபகவான் மணம் புரிந்து கொண்டார் அல்லவா? ஆனால் அந்த இருபத்தியேழு நட்சத்திர தேவியரையும் மணக்கு முன்  பல அரிய தவநிலைகளையும், செய்தற்கரிய யாக வேள்விகளையும், இன்னும் ஏனைய இறைப் பணிகளையும் அவர் செய்ய வேண்டி இருந்தது. ஒவ்வொரு நட்சத்திர தேவியும் ஒவ்வொருவிதமான நிபந்தனைதனை சந்திரனுக்கு விதித்திட அவற்றை நன்முறையில் நிறைவேற்றி 27 தேவியர்களையும் மணந்தார் சந்திரன்.
1. அஸ்வினி : கயிலாயப் பனிமலையில் வெறும் காலோடு அடிப்பிரதட்சிணம் செய்து அஸ்வினி நட்சத்திர தேவியை மணத்தல்.
2 பரணி : கடும்வெயிலில், நீர் அருந்தாமல் பூலோக மெங்கும் இறைவனுடைய திருப்பாதங்கள் பட்ட இடமெல்லாம் சென்று அவ்விடங்களில் தானதரும காரியங்களைச் செய்தல்.
3. கார்த்திகை : “மூலப் பிரபுவிற்குப் பாதசேவை செய்பவரைத்தான் மணம் புரிந்திடுவேன்” என்று நிபந்தனை விதித்த கார்த்திகை நட்சத்திர தேவியை எவ்வாறு அவர் மணந்தார் தெரியுமா? சந்திரன் தன் தமக்கையாம் ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் மூலப்பிரபுவாக வரித்து 1008 துவாதசி திதிகளில் பாதபூஜை செய்து கிருத்திகா தேவியை மணந்தார். இது கேட்பதற்கு எளிமையாகத் தோன்றும். ஆனால் இடையில் ஸ்ரீலக்ஷ்மிதேவியும் ஸ்ரீமன்நாராயணணும் பல யுகங்களில் கண்காணா இடத்திற்கு தவம் செய்யச் சென்றுவிட, சந்திரன் மிகவும் சிரமப்பட்டு இத்திருப்பணியை நிறைவு செய்தார்.
4.ரோகிணி : ஈசன் பால் நிறமாய் நிற்கின்ற பௌர்ணமித் திதியில் திருஅண்ணாமலையை வலம் வந்து ரோகிணி தேவியை மணந்தார். ஆனால் இறைவன் பல இடங்களில் தன் பால் நிறத்தையும் மலைரூபத்தையும் மறைத்துவிட அந்தந்த இடங்களில் ஆஸ்ரமங் கொண்டிருந்த கௌதமர், துர்வாசர், பரத்வாஜர், அகஸ்தியர் போன்ற மஹரிஷிகளுடைய ஆஸ்ரமங்களில் சந்திரன் சேவை செய்து அவர்களுடைய ஆசியுடன் இறைவனின் பால்வண்ண மேனியை தரிசனமாகப் பெற்றார். பார்த்தீர்களா, ஒவ்வொரு தேவியும் ஏதோ நிபந்தனையை விதித்தது போல் தோன்றுகிறதே தவிர உண்மையில் சந்திர பகவானுக்குப் பலவித தெய்வீக சக்திகளைப் பெற்றுத் தரவே இறைவனின் இத்திருவிளையாடல்!
5. மிருகசீரிஷம் : பிரபஞ்சம் எங்கும் இரட்டையாகப் பிறந்தவர்களில் இருவருக்குமே எப்போதும் நல்லெண்ணங்களே தோன்றி, நற்காரியங்களைச் செய்வோர்க்கு மதிகாரகனாக, தபோபலனை அவர்கட்கு அளிக்க வேண்டும் என்ற மிருகசீரிஷ தேவியின் வரத்தை மிகக் கடுமையான இன்னல்கட்கு இடையிலும் நன்கு நிறைவேற்றி மிருகசீரிஷ தேவியை மணந்தார்.
6. திருவாதிரை : நரசிம்ஹ அவதாரத்தை உக்ரஹத்தை தணிக்க சர்வேஸ்வரன் சரபேஸ்வரராக உக்ரஹ அவதாரம் எடுத்தாரல்லவா? சரபேஸ்வரர், நரசிம்மர், உக்ரஹப் பிரத்யங்கிரா, மாலினி, சூலினி, காளி போன்ற உக்கிரஹ மூர்த்திகளின் உபாசகர்கட்குக் கடுமையான நியதிகள் உண்டே! கரணம் தவறினால் மரணம் என்பதைப் போல் இந்த உபாஸனை நியதியில் சிறுபங்கம் ஏற்படினும் கடும் சாபங்கள் உண்டு. இத்தகைய உபாஸ்கர்கட்கு விரத, பூஜாநியதிகளில் உத்தமநிலை அளிக்க வேண்டும் என்ற திருவாதிரை தேவியின் வேண்டுகோளை நிறைவேற்றி அவளையும் மணந்தார் சந்திர பகவான்.
7. புனர்பூசம் :-
ஒவ்வொரு மனிதனுக்கும் கோபம் என்கிற குணாதிசயம் ஓரளவு தேவையே. கோபம் மிஞ்சினால் விபரீதம் விளையும். குறைந்தால் ஏமாற்றமும் இழப்பும் ஏற்படும். மதிகாரகனாகிய சந்திரன் கோப குணத்தை நற்காரியங்களுக்குப் பயன்படுத்த மக்களுக்கு அனுகிரகிக்க வேண்டும் என்ற இத்தேவியின் விருப்பத்தையும் பூர்த்தி செய்து மணந்தார்.

8. பூசம் : பூசத்தில் திருமணம் புரிந்திட குடும்பத்தில் அமைதி நிலவும், குடும்பத்தில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருப்பின் தம்பதியிரிடையே பொறுமை, தயாள குணம் போன்ற சுமூகமான நிலை ஏற்படும். இதுவே தெய்வீக வாழ்வின் முதற்படியாகும். பூச தேவியின் இத்தகைய உத்தம விருப்பத்தையும் பூர்த்தி செய்து, கோடிக் கணக்கான குடும்பங்களில் சாத்வீகம் நிலவுவதற்கு அருள்பாலித்து பூச தேவியை மணந்தார்.
9. ஆயில்யம் : மாட்டுப்பெண், மாமியார், நாத்தனார், ஓரகத்தி போன்ற குடும்பப் பெண்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எத்தனையோ குடும்பங்களில் பகைமை வேரூன்றி உள்ளது. இவ்வாறன்றி குடும்பப் பெண்களிடையே நல்லுறவு வேண்டி ஆயில்ய தேவி பிரார்த்தனை செய்திட சந்திரன் பல புண்ய நதிகளில் தாமரையிலைத் தீபங்களை ஏற்றிக் குடும்ப சௌக்யத்திற்கான ஹோம, தான தர்மங்களைச் செய்து ஆயில்ய தேவியை மணந்தார்.
இவ்வாறாக நம்முடைய வாழ்க்கையில் ஜாதக ரீதியாக பெரும்பங்கு வகிக்கும் அசுவினி முதல் ரேவதி வரை ஒவ்வொரு நட்சத்திர தேவியும் தனக்குக் கணவனாக வரப்போகும் சந்திரனிடமிருந்து, உலக வாழ்க்கையில், குடும்பத்தில் தெய்வீகம் மணப்பதற்கான நல்வரங்களைத் தியாகமாகப் பெற்றுத் தந்தனர். எனவே அவரவர்க்குரிய நட்சத்திரத் தேவியால் தான் அவரவர் வாழ்க்கை சீராக அமைகிறது என்பதையுணர்ந்து அவரவருக்குரித்தான நட்சத்திர லிங்கத்தை தினமும் தியானித்தேனும் வழிபட வேண்டும். குறைந்தது மாதம் ஒரு முறையேனும் அவரவர் நட்சத்திரத்தன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதல் அல்லது அந்தந்த நட்சத்திரலிங்கங்களின் வழிபாட்டு முறையுடன் துதித்து வர வேண்டும்.
சென்னை திருவொற்றியூர், ஸ்ரீபடம்பக்கநாதர் திருக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே நட்சத்திர லிங்கங்கள் உள்ளன. குறைந்தது 27 பேர் சேர்ந்து ஒரு சத்சங்க பூஜையாக தினந்தோறும் ஒவ்வொருவருடைய முறையாக எண்ணெய்க் காப்பு, அபிஷேக ஆராதனை செய்து வந்தால் எளிதில் 27 அற்புத லிங்க மூர்த்தியின் இறையருளைப் பெறலாமன்றோ?
10 மகம் : ஒவ்வொருவருக்கும் சனிதசை, புத்தி, அந்தரங்கம், மாரக தசை ஏற்படுகையில் கோசார நிலைகளுக்கேற்ப மரண பயம் ஏற்படுவதுண்டு. இதை நிவர்த்திக்க தக்க வழிமுறைகளையும், வழிபாடுகளையும் அளிக்க வேண்டும் என்ற மக நட்சத்திரத்தின் அவாவை நிறைவேற்றி மக தேவியை மணந்தார்.
இங்கு நாம் காண்கின்ற சந்திரபகவானின் மஹிமைகள், தட்சனுடைய சாபத்திற்கு முந்தையதாகும். அப்போது சந்திரன் தினந்தோறும் 16 கலைகளுடன் பிரகாசித்தார். ரோஹிணி தேவியின் மேல்கொண்ட வெறுப்பினால் ஏனைய 26 நட்சத்திரங்கள் தட்சனிடம் முறையிட, சரியாக ஆராயாமல், தட்சனும் “உன் பதினாறு பூரண கலைகளும் தேய்ந்து விடுவதாக“ என சாபமிடவே நித்ய பௌர்ணமியாக விளங்கிய முக்கியத்துவத்தை சந்திரபகவான் இழந்தார் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். ஆனால், இறைவனின் திருவிளையாடலை எவரால் தான் புரிந்து கொள்ள இயலும்? பதினாறு கலைகளுடன் கூடிய பூரணாம்சத்தைச் சந்திரன் இழக்க் நேரும். என்பதற்காகவே 27 நட்சத்திர தேவியர் மூலமாக இருபத்தேழு தெய்வாம்ச கிருத்யங்களை முன்னதாகவே சந்திரனுக்கு அளிப்பதற்கான திருவிளையாடலே இது!
எனவேதான் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் பௌர்ணமியின் பூர்ண சந்திரனாக பிரகாசிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் தான் 27 நட்சத்திர தேவியர்களை மணக்கும் முன்னர் 27 விதமான தெய்வீகப் பணிகளை ஆற்றி சந்திர பகவானுக்கு பூர்ண சந்திர இறையம்சங்களை அபரிமிதமாக இறைவன் பெற்றுத் தந்தான்.
11. பூரம் : உலகெங்கும் இறைப்பணிகளையும் சத்சங்கங்களைத் தொடங்கி கூட்டுநாம ஜெபம், நாம சங்கீர்த்தனம், ஹோமம் மற்றும் பலவகைத் தானங்களை நிகழ்த்தி ஜீவன்களிடையே தெய்வீகக் காரியங்களைத் தொடரச் செய்ய வேண்டும் என்பதே பூரம் தேவியுடைய விருப்பம், இதனையும் நிறைவேற்றி இத்தேவியை மணந்தார் சந்திர பகவான்.
12 உத்திரம் : ஒவ்வொரு பஞ்சமி திதியிலும் பராசக்தியானவள் ஐந்துவிதமான சக்திகளை ஒளியாகப் பரப்புகின்றாள். ருத்ர சக்தி, சத்ரு சக்தி, மித்ர சக்தி,  துவார சக்தி, விகல்ப சக்தி என்ற அந்த ஐந்துவித சக்திகளும் பஞ்சமியன்று அம்பாள் சந்நிதியின் கோபுரக் கலசங்கள்,  திருஅண்ணாமலை, சதுரகிரிமலை, கொல்லிமலை, மற்றும் 51 சக்தி பீடங்கள், கோயில் பிரகாரங்களில் அன்றைய தினம் இடப்படும் மாக்கோலங்கள், தீபங்கள் மூலம் பிரதிபலித்து பக்தர்களை அடைகின்றது. உத்திர தேவியே இவ்வைந்து சக்திகளுக்கும் அதிபதி, ஆனால் மன அமைதியுடன்  கூடிய இடங்களில் தான் இந்த பஞ்சமி திதியின் முழுசக்தியையும் பெற இயலும். எனவே பஞ்சமிதிதி நோன்பை ஏற்பவர்களுக்கு மனஅமைதியைத் தந்திட மதிகாரனாகிய சந்திரன் அருள்பாலிக்க வேண்டும் என்ற உத்திர தேவியின் விருப்பத்தை பூர்த்தி செய்து உத்திர தேவியை மணந்தார்.
13 ஹஸ்தம் : தியானம், பூஜை போன்று சங்கீதமும், செடி, கொடிகள், கால்நடைகள், மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவன்களுக்கும் ஆத்ம விருத்தி நிலையைத் தருகின்றது. மனிதன் வெவ்வேறு ஆன்மீக நிலைகளையும், தெய்வம்சங்களையும், தியானம், யோகம், கர்ம யோகம், வேதம் போன்ற பலவற்றின் மூலமாகப் பெறுகின்றான். இவற்றில் சங்கீதம் எழுவகைப் பிறப்புக்கள் அனைத்திற்கும் உய்வளிக்கும் சக்தியுடையது. எனவே சங்கீத ஞானம் இல்லாதோர்க்கும் சங்கீதத்தின் ஆத்ம விருத்தி நிலையைப் பெற்றுத் தரவேண்டும் என்ற ஹஸ்த  தேவியின் அபிலாட்சையையும் நிறைவேற்றி ஹஸ்த தேவியை மணந்தார் சந்திரபகவான்.
14 சித்திரை : விசேஷ தினங்களில் கடல் ஸ்நானம் செய்வதால் கடல் தேவதைகள் ஸ்நானம் செய்பவர்களின் கர்மவினைகளை ஏற்கின்றன. மற்ற நாட்களில் நீராடுவதால் கர்மவினைகள் கழிவதில்லை. மாறாக நீராடியவர்களின் கர்மவினைகள் சேர்கின்றன. எனவேதான் கடலில் நீராடுவதானது சில விசேஷ தினங்களில் தான் சாஸ்த்ரீயமாக அனுமதிக்கப்படுகிறது. அறியாமையால் பலர் விசேஷ தினங்களற்ற சாதாரண நாட்களில் கடலில் நீராடினால், அவர்களுக்கு எவ்வித கர்மவினைகளும் சேராமலிருக்க உன்னத தவநிலை ஏற்று சித்திரை தேவி வேண்டியவாறு செய்து சந்திரபகவான் சித்திரா தேவியை மணந்தார். எனவே சித்திரா தேவியின் விருப்பத்தால் தான் கோடிக்கணக்கான ஜீவன்கள் கூடுதல் கர்மங்களினின்றும் விடுபட்டு நன்னிலை பெற்றமையால் தான் சித்திரை தேவிக்கு நன்றியாக சித்திரா பௌர்ணமியில் கடல் ஸ்நானம் விசேஷமான அருளைப் பெற்றுத் தருகிறது.
16 சுவாதி : மனிதன் பலவித எண்ணங்களில் உழல்கின்றான். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று எண்ணங்களில் உழல்வதால் நற்காரியங்கள் பாதியிலேயே தடைபடுகின்றன. எனவே நற்காரியங்களைச் செய்கின்ற மனிதர்களுக்கு அக்காரியம் முடிவதற்காக ஸ்திரமான மனதை அளிக்க வேண்டும் என்று சுவாதி வேண்டி சந்திர பகவான் அதற்கான தவம், யோக நிலைகளை மேற்கொண்டு அதற்குரிய அனுக்ரஹத்தைப் பெற்று சுவாதியை மணந்து கொண்டார். எனவே ஒவ்வொரு தேவியையும் மணப்பதற்காக  சந்திரன் பல அரிய தவங்களை மேற்கொண்டு பல சதுர்யுகங்கள் இறைப்பணி ஆற்ற வேண்டியிருந்தது.
16 விசாகம்  ; அக்காலத்தில் குருவே சிஷ்யர்களைப் பேணிக் காப்பாற்றிட, காலப் போக்கில் சிஷ்யர்கள் குருவைப் போற்றிக் காத்திட வேண்டிய நிலை வரும் என்பதை தீர்க்க தரிசனமாக அறிந்த விசாகதேவி எந்த யுகத்திலும் குருவின் நன்மதிப்பு மாறிடலாகாது என்பதற்காக குருரட்சக நிலையைக் கட்டிக் காக்குமாறு வேண்டிய சந்திரபகவான் அதற்குரிய தவங்களை மேற்கொள்ள  குருமண்டலம் சென்று எக்காலத்திலும் எந்த யுகத்திலும் சகல சம்பத்துக்களும்  குருவுக்குக் கிடைத்திட வேண்டிய குருபகவானின் அருளாசியைப் பெற்று விசாக தேவியை மணந்தார்.
17 அனுஷம் : அக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் இறைப்பணி, புனிதமான சந்நியாஸிகளைப் போஷித்தல், கல்வி, வீரம் போன்றவற்றிக்காக குறித்த பங்கீடுகள் இருந்தன. பிரபஞ்சமெங்கும், குறிப்பாக பூலோகத்தில் அனைத்து அரசாங்கங்களிலும் இல்லங்களிலும் ஆஸ்ரமங்களை நிர்மாணித்தல், ஹோம, யாக, வேள்விகளைப் போஷித்தல் போன்ற இறைப் பணிகளுக்குரிய நிதிகளைச் சீரமைத்து அற நிலையைப் பேணுகின்ற தர்மத்தையே அனுஷதேவி தம் வரமாக முன்வைக்க அதனை சந்திர பகவான் நிறைவேற்றி, மணம் புரிந்தார்.
18 கேட்டை : அன்னதானம் போல் கன்னிகா தானமும் சிறப்புப் பெற்றதாகும். உலகில் பெண்கள் உயர்வான நிலையில் வைக்கப் பெற்று, தக்க பருவத்தில் திருமணமாகி புனிதமான் கற்புடன் வாழ்ந்து பதிவிரதா ஸ்த்ரீகளாக அவர்கள் விளங்குவதற்குரிய ஹோம, வேள்வி, யாகs, பூஜைகளை நிறைவேற்ற கேட்டை தேவி வேண்ட, சந்திரபகவான் அதற்குரிய நற்காரியங்களையும் இறைப் பணிகளையும் ஆற்றி கேட்டை தேவியை மணந்தார்.
19 மூலம் : மூல நட்சத்திரத்தில் அவிக்த மூலம், சாந்த மூலம், தீர்க மூலம், கடாட்ச மூலம் என்ற வகைகள் உண்டு. தார்மீகமான தர்மநெறி தவறாத அரசாங்கம் உலகெங்கும் நிலவ வேண்டும் என்ற மூல நட்சத்திர தேவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சந்திரன் முப்பத்திரண்டு விதமான அறங்களை நிறைவேற்றி, அவற்றைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்காக, சத்சங்கங்களை அமைத்து மூல நட்சத்திர தேவியை மணந்தார்.
20 பூராடம் : ஸ்ரீநிவாஸப் பெருமாள், அலமேலு மங்கையை மணக்குமுன்னர் அவருக்கு திரவிய ஸகாயம், வஸ்திர சகாயம், மாங்கல்ய சகாயம், ஸ்வர்ண சகாயம் போன்ற சகாயங்களை அளிப்பதற்கு சந்திர பகவான், குபேர பகவானிடம் சென்று பிரார்த்தித்தார். இதேபோல் உலகத்தில் திரவியமில்லாது தடங்கலாகும் திருமணங்களுக்கு அனைத்து உதவிகளையும் புரிய வேண்டுமென பூராட தேவி வேண்டிட சந்திரபகவான் அதற்குரிய குபேர பகவானுக்குரிய ஆராதனை, அபிஷேகங்கள் , பூஜை, ஹோமங்கள், யக்ஞ்ங்களை நிறைவேற்றிப் பூராட தேவியை மணந்தார்.
21. உத்திராடம் : அன்னம் கொதிக்கின்ற போது ஏற்படும் உலைக்குப் பல தெய்வீக சக்திகள் உண்டு. உலை கொதிக்கின்ற போது ஏற்படும் சப்தத்தில் பல பீஜாட்சரங்கள் உண்டு. இவை ஸ்ரீஅன்னபூரணி தேவியின் மூல மந்திர பீஜாட்சரங்களில் அடங்கும். உலை கொத்தித்தால் தான் நாட்டில் சுபிட்சம் ஏற்படும். உலை கொதித்துப் பொங்கும்போது அதில் ஆவாஹனமாகும் “சுபிட்ச அட்சய தேவியை“ வணங்கியே உலைப் பாத்திரத்திற்கு வஸ்திரமோ, மஞ்சள் செடியோ கட்டித் துதிப்பர். இந்த மங்கள தேவியின் மஹிமை எங்கும் பரவ வேண்டுமென்ற உத்திராட தேவியின் விருப்பத்தையும் பூர்த்தி செய்து சந்திரபகவான் அவளை மணந்தார்.
22 திருவோணம் : திருவோண நட்சத்திரத்தன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவை தொழுவோர்க்கு “சாந்தி பூஜைகளின்“ பலன்கள் அபரிமிதமாய் பொழியும். திருவோணத்தில் அனைவரும் சாந்தி பூஜைகள் செய்யுமாறு இறைச்சேவை புரிந்து உலகத்தாரை உய்விக்க வேண்டுமென்ற திருவோண தேவியின் இஷ்டத்தை நிறைவேற்றி மணம் புரிந்து கொண்டார் சந்திரபகவான்.
23 அவிட்டம் : ஜீவனுடைய தேக பலத்துடன் புத்தியும், யுக்தியும் சேர்ந்தால்தான் அதன் வாழ்க்கை நன்முறையில் அமையும்.. இதற்கு ஆயுள் பலத்துடன் நன்மதி சேரவேண்டும் என்ற அவிட்ட தேவியின் வேண்டுகோளுக்கிணங்க ஆதிசிவனை வேண்டி அவர் சந்திரமௌளீஸ்வரராக, சோமாஸ்கந்தராக சந்திர அம்சங்களுடன் விளங்க வேண்டும் என்று கடுந்தவமிருந்து நல்வரங்களைப் பெற்று அவிட்ட தேவியை மணந்தார். சந்திர அம்சங்களுடன் கூடிய சிவனைத் தொழுதால் தன் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுடன் சுமூகமான நட்பு ஏற்படும்.
24 சதயம் :  சனீஸ்வரனுடைய உக்ர காலத்தில் சதய நட்சத்திர கூடிய நாளில் சந்திர பகவானை வழிபட்டிட சனீஸ்வரரின் உக்ரஹ கடுமை குறையும். சதய தேவியும், சந்திரனும் குறைந்தது ஆறடி உயரம் கொண்ட சிவலிங்கங்களுக்கு வழிபாடு செய்து மேற்கண்ட அபூர்வ சக்தியைப் பெற்றுத் தம்பதிகளாயினர். (தஞ்சை பிரஹதீஸ்வரர், திருச்சி உய்யக்கொண்டான் மலையின்  அருகிலுள்ள சிவலிங்கம், திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானசுவாமி, திருப்புனவாசல் சிவலிங்கம், சென்னை திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் போன்ற பெரிய சிவலிங்கங்களுக்கு சதயமும் சனிக்கிழமையும் கூடும் நாளன்று எண்ணெய்க் காப்பு/சந்தனக் காப்பு இட்டு பால்பாயசம் பால் தானம் அளித்தால், கொடிய நோய்கள் சனி/மாரக தசையின் கடும் துன்பங்களிலிருந்து கூட நிவாரணம் பெறலாம். சதய நட்சத்திரத்திலும் பௌர்ணமியும், சந்திரப் பிறை வடிவில் (நல்லெண்ணையில்) அகல் தீபங்களை ஏற்றுவது மிகவும் விசேஷமானதாகும்.
25. பூரட்டாதி : பூலோகத்தில் பாகப் பிரிவினையால் குடும்பங்கள் சிதறலாகாது என்ற பூரட்டாதி தேவியின் வேண்டுகோளை நிறைவேற்றி அவளை மணந்த சந்திரபகவான் இதற்காகச் சிவன், அம்பிகை, விஷ்ணு மூவரும் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலங்களில் (சிதம்பரம், காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஸ்ரீகாமாட்சி அம்மன், பவானி) தவமியற்றி பூரட்டாதி தேவியை மணந்தார். பாகப்பிரிவினையால் ஒற்றுமை குலைந்த குடும்பங்கள் சிவன், விஷ்ணு, அம்பிகை மூவரும் அருள்பாலிக்கும் தலங்களில் பூரட்டாதி நட்சத்திரத்தன்று மூன்று வகை சித்ரான்னங்களைத் தானம் செய்து பூரட்டாதி தேவியைத் தியானித்து சந்திர பகவானுக்கும் அபிஷேக ஆராதனை செய்திடப் பிரிந்தவர்கள் கூடுவர்.
26. உத்திரட்டாதி : கருமித்தனம், உலோப குணம் என்ற இரண்டு தீய குணங்களுமே இறை நெறிக்காகாது. இவற்றை ஜீவன்களிடமிருந்து அகற்ற வேண்டுமென்ற உத்திரட்டாதி தேவியின் விருப்பத்தையும் நிறைவேற்றினார் சந்திர பகவான், இதற்காக ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி எழுந்தருளியுள்ள இடங்களில் அனைத்து வித தான தர்மங்களையும் செய்தார்.
27 ரேவதி : சுயநலம், சுயஸ்துதி, சுயபுராணம் இம்மூன்றால் நாத்திகம், அகந்தை பெருகி பக்தி மங்கும். எனவே தற்கொலைக்கு ஈடான சுயஸ்துதியை அழிக்க வேண்டி ரேவதி பிரார்த்திட சந்திர பகவான் திருப்பதி மலையில் அரிய தவம் செய்து அதனை சந்திர ஸ்தலமாக பிரசித்தி பெறச் செய்து ரேவதி தேவியை மணந்தார்.
இவ்வாறாக சந்திரபகவான் 27 நட்சத்திர தேவியர்களை மணக்குமுன் பலவித அற்புதமான தவநிலைகளையும், இறைப்பணிகளையும் புரிந்து ஜகஜ்ஜோதியாய்ப் பிரகாசித்தார். தெய்வீக அம்சங்கள் நிறைந்து பொலிந்து பரிபூர்ணச் சந்திரனாக, தினமும் அருள்பாலித்தார்.
இதன்பிறகே தன் தெய்வாம்சப் பொலிவினால் ஏற்பட்ட சிறு செருக்கினாலும், ரோஹிணி தேவிமேல் அதிக அன்பு காட்டுவதாக ஏனைய தேவியர் தங்கள் தந்தையாம் தட்சனிடம் புகார் கூறிட அதன் பலனாய் “தட்ச சாபம்“ ஏற்பட்டு சந்திரபகவானின் பதினாரு கலைகளும் தேய்வடையலாயின. ஆனால் சிவபெருமான், தெய்வமாம்சங்கள் நிறைந்து பொலிந்த சந்திர பகவானைத் தம் சிரசில் ஏற்பதற்காக நடத்திய திருவிளையாடலன்றோ இது!
26 தேவியரும் தம் செயலுக்காக வருந்தி, ரோகிணி தேவியுடன் சேர்ந்து 27 தேவியரும் திருஅண்ணாமலையை வலம் வந்தனர். அப்போதுதான் திருஅண்ணாமலையில் சந்திரபகவானுடைய பதினாறு கலைகள் மட்டுமன்றி, ஆயகலைகள் அறுபத்தி நாலும் மட்டுமின்றி, அனைத்துக் கோடி லோகங்களும் இங்கேயே உறைவதை உணர்ந்து அதிசயித்து பலவகைப் பிரதட்சிண முறைகளை மேற்கொண்டனர்.
இவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் கிரிவலம் தொடங்கியமையால் சூர்யபகவானின் அருட்கடாட்சமும் சேர்ந்தது. பக்தியும் பதிபக்தியும் இணைந்திட ஆதிசிவன் திருவருள் கொண்டு மூன்றாம் பிறைச் சந்திரனை தம் சிரசில் ஏற்று “ஒரு பட்சம் கலைகள் வளர்வதாக, மறுபட்சம் தேய்வதாக!” என்று அருளினார். “எவர் பௌர்ணமியன்று இங்கு அருணாசலத்தில் கிரிவலம் வருகின்றார்களோ அவர்கட்கு திருஅண்ணாமலைத் திருமேனியில் பிரகாசிக்கும் சந்திரனின் பதினாறு கலைகள், ஆதிபராசக்தியின் 64 கலைகளுடன் 27 நட்சத்திரத் தேவியரின் அருட்கடாட்சமும் ஒருங்கே திரண்டு கிட்டும்“ என்று அருளினார்.
எனவே பௌர்ணமியன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருபவர்களுடன் 27 நட்சத்திர தேவியரும் சேர்ந்து கிரிவலம் புரிந்து அருள்பாலிக்கின்றனர். நமக்குரிய நட்சத்திர தேவியர் அருளுடன் கிரிவலம் வருவது பெறுவதற்கரிய பாக்கியமல்லவா? அது மட்டுமா, 27 தேவியர்களை மணப்பதற்க்காக சந்திர பகவான் மேற்கொண்ட தவ, வேள்வி, யாக, பூஜை தான தர்மங்களின் சீரிய பங்கும் கிரிவலம் வருவோர்க்குக் கிட்டும் என்றால், திருவருளைப் பெறுவதற்கு எத்தகைய எளிய முறையை திருஅண்ணாமலை அளிக்கின்றது!
பௌர்ணமி கிரிவல பலன்கள்
1. சந்திரனின் பதினாறு பூரண கலைகளும் திருஅண்ணாமலைத் திருமேனியில் பட்டுப் பிரகாசித்து பிரதிபலித்து நம்முடலை அடைகின்றதெனில் எத்தகைய மகத்வம் வாய்ந்தது பௌர்ணமி கிரிவலம்!
2. பௌர்ணமியில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திட பதினாறு முக அதிசய தரிசனங்களைக் காணலாம். குருவுடன் முறையாகக் கிரிவலம் வந்தால் பதினாறு செல்வங்களைத் தரும் அற்புத தரிசனம் கிட்டும்.
3. அத்ரி மஹரிஷியின் பத்தினியாம் அனுசூயா தேவி,, பிரம்ம, விஷ்ணு, ருத்ர தெய்வ மூர்த்திகளைத் தன்னுடைய நித்ய (கணுவனுக்கான) பாதபூஜையின் பிரசாத தீர்த்தத்தால் (கர்ப்பவாசம் கடந்த தெய்வீகக்) குழந்தைகளுக்குப் பால் ஊட்டி தெய்வ மூர்த்திகளுக்கே அன்னையானவள் எனவே உண்ணாமுலைத் தாயாம் பார்வதியே தெய்வமூர்த்திகளுக்கு அன்னையாகிய அனுசூயாவிற்குப் பாதபூஜை செய்தனள். இத்திருநாளே பௌர்ணமியாகும்.
பௌர்ணமி திருநாளில் இன்றைக்கும் அத்ரி மஹரிஷியும் அனுசூயா தேவியும் மனிதரூபத்தில் கிரிவலம் வருகின்றனர். தெய்வங்களுக்கே அன்னையான அனுசூயா நடக்கும் பாதையில் நாமும் நடந்து வர என்னே பாக்கியம் செய்திருக்க வேண்டும்! அம்மாதாவின் ஒரு பாதத்தூளி பட்டாலே போதும், நம் கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
4. பௌர்ணமியில் சந்திர தீர்த்தத்தில் நீராடுவதோ, தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொள்வதோ நிறைந்த அருட்சக்தியை நமக்கு ஊட்டுமே!

வைகுண்ட ஏகாதசி

மஹாசிவராத்திரியும், வைகுண்ட ஏகாதசியும் பூலோகத்திற்கு மட்டும் உரித்தானவையல்ல! விஞ்ஞானத்தின் கண்களுக்குக் தெரியும் இந்த ஒரு பூமியைத் தவிர கோடிக்கணக்கான பூலோகங்கள் உண்டு! ஸ்ரீவித்யா பூஜை கிரமத்தில் இன்றும் கோடிக்கணக்கான தேவதைகளின் லோகங்கள் பீடங்கள் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.
மஹாசிவராத்திரியன்று வைகுண்டத்தில், ஸ்ரீமன்நாராயண மூர்த்தியே ஸ்ரீரங்க லிங்க மூர்த்தியாக அனைத்து வைகுண்டவாசிகளுக்கும் காட்சி தருகின்றார். வைகுண்ட ஏகாதசியன்று திருக்கயிலாயத்தில் சிவபெருமான் பள்ளிகொண்ட நாதராக அனந்த சயனரூபத்தில் காட்சி தருகின்றார். இதுவே மேலுலகங்களில் நிகழ்கின்ற அற்புத லீலைகள்! ஏகாதசிகளுள் 25க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இந்த யுவ வருட வைகுண்ட ஏகாதசிக்கு ஜபத்ரயனி ஏகாதசி என்று பெயர். மாணிக்கவாசகப் பெருமான் பத்தாயிரம் கிராமத்து ஜனங்களுடன் திருவெம்பாவை ஓதிய வண்ணம் மார்கழி முப்பது நாட்களிலும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்த திருநாட்களில் யுவவருட ஜபத்ரய வைகுண்ட ஏகாதசியும் ஒன்றாம்!
யுவ வருட ஜபத்ரய வைகுண்ட ஏகாதசியன்று :
1. திருஅண்ணாமலையைத் திருவெம்பாவையை ஓதியவாறு மும்முறை கிரிவலம் வந்து ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் சந்நதியில் சர்க்கரைப் பொங்கல் தானத்துடன் நிறைவு செய்தல் அல்லது
2. திருப்பதி மலையை  ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது “ஓம் நமோ நாராயணாய” என்ற அஷ்டாட்சரத்தை ஓதியவாறே கிரிவலம் வருதல் அல்லது
3. இராமநாதபுரம் அருகில் உள்ள திருப்புல்லாணிப் பெருமாள் ஆலயத்தில் 1008 முறை பிரதட்சிணம் செய்து நாம சங்கீர்த்தனம், ஹோமம், சர்க்கரைப் பொங்கல் தானம் மற்றும் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபாடுகளை நிகழ்த்துதல்
என்ற மூன்று வகையான பூஜை முறைகளை சித்தபுருஷர்கள் அருள்கின்றனர். அவரவர் வசதி, சூழ்நிலைக்கேற்ப எதையும் பின்பற்றிடலாம்.
கிரிவல ஏகாதசி விரதம்
ஏகாதசி திதி துவங்கும் போது பூஜை, கிரிவலத்தைத் தொடங்கி திதி முடியும் வரையிலோ அதற்கும் மேலோ பூஜையையும் கிரிவலத்தையும் தொடர்ந்து நடத்தி நிறைவு செய்தல் வேண்டும்.
இவ்வகையான கிரிவல ஏகாதசி, சரீர ஸ்ரம சேவா பூஜை வகையைச் சேர்ந்தமையால் பால், பழம், பழச்சாறு, சிற்றுணவினை அவ்வப்போது உடல் சோர்வை அகற்றுவதற்காக ஏற்பதில் தவறில்லை. மேலும் ஏகாதசியன்று அன்னதானம் கூடாது என்பது தவறான கருத்து. ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு அன்னமளிக்காமல் விட்டுவிடலாம். ஆனால் விரதமின்றிப் பசியால் வாடும், விரதநெறிகளே அறியாத ஏழை, எளியோர்க்கு ஏகாதசியன்று அன்னதானம் செய்வது பன்மடங்கு பலன்களைத் தரும். இது விரதபங்கமாகாது. ஏகாதசியன்று தற்போதைய கலியுகத்தில் இலட்சக்கணக்கான மக்களுமா விரதமிருக்கின்றனரா? வறுமையின் உச்சத்தில் பல குடும்பங்களில் நித்யமே ஏகாதசி தான்! எனவே ஏகாதசியன்று ஏழைகளுக்கு அன்னமிடுவதில் தவறில்லை!
கிருத, திரேத யுகங்களில் அனைவருமே ஏகாதசி விரதமேற்றனர். எனவே அந்த யுகநியதி வேறு! கலியுக நியதி வேறு! வெறும் வயிற்றோடு கிரிவலமோ, பிரதட்சிணமோ, அடிப்பிரதட்சிணமோ செல்ல இயலாது. எனவே இவ்வகை சரீர சேவை விரதத்தில், ஏகாதசியன்று உணவேற்பதிலும் தவறில்லை. வைகுண்ட ஏகாதசியன்று, திதிதுவங்கும் நேரத்தில் கிரிவல்த்தை திருஅருணாசலேஸ்வரர் ஆலயத்தில் மூலவரின் சந்நதிக்குப் பின்னால் உள்ள ஸ்ரீவேணுகோபாலரின் சந்நதியில் துவங்கி ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் சந்நதியில் நிறைவு செய்ய வேண்டும். ஏகாதசி திதி முடிவுறும் நேரத்திற்குள் எத்தனைமுறை வேண்டுமானாலும் கிரிவலம் செய்யலாம். ஏகாதசி திதி நேரம் முழுதும் திருஅண்ணாமலை கிரிவலத்தில் பயன்பட வேண்டும் என்பதே முக்கியமான நியதியாகும்.
விசேஷ தானங்கள்
வேணீ என்றால் மூங்கில் என்று பொருள். ஸ்ரீவேணு கோபாலன் சந்நதியில் துவங்கும் கிரிவலத்தில் மூங்கிலால் ஆன பாய், கூடை, புல்லாங்குழல், முதியோர்க்குத் கைத்தடிம் அன்னதானத்திற்கு, சமையலுக்கு மூங்கில், விறகு போன்ற பொருட்களை ஏழைகட்குத் தானமாக அளிப்பது விசேஷமானதாகும்.
சேது காசி யாத்திரையில் பிரயாகையில் மூங்கில் தானம் விசேஷமாகக் கருதப்படுகிறது. அத்தகைய விசேஷமான பலனைத் தரவல்ல்தே இந்த யுவ வருட வைகுண்ட ஏகாதசியில் திருஅருணாசல கிரிவலத்தில் மூங்கில் தானம்! மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்களை ஓதிய வண்ணம் இன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் உத்தமமானதாகும். பாகவத புராணம், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம், அஷ்டாட்சர ஜபம், ஹரிஹர வந்தன, நாம சங்கீர்த்தனம், பஜனை, தசாவதார ஸ்தோத்திரங்கள் போன்ற விஷ்ணு துதிகளுடன் கிரிவலம் வருதலும் சிறப்பானதே!
குபேர லிங்க தரிசனம் பகுதியில் சிவபெருமான், திருமாலுக்குச் சக்ராயுதம் தந்து, சக்ரபாணிக்குச் சக்ராயுதபாணியாகக் காட்சி  தந்தமையால் இங்கு சுதர்சனாஷ்டகம் பாராயணம் செய்வதால் கடுமையான நோய்கள் தீர்வதுடன் மரண பயமும் அகலும். வைகுண்ட ஏகாதசியன்று கிரிவலத்தில் தசமுக தரிசனப் பகுதியில் தசாவதார ஸ்தோத்திரங்களைத் துதித்துப் பத்து சிறுமிகளுக்கு (பத்து வயதுக்குக் குறைந்த கன்யா குழந்தைகள்) பாவாடை சட்டைகளைத் தானமாக அளித்திட சந்ததி விருத்தியாகும். இதனால் கன்னிப் பெண்கள் தக்க வயதில் பருவமுற்று நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து தக்க வயதில் திருமணம் கைகூடும் சௌபாக்யமும் கிட்டும். எவரும் ஆடைகளை, தானத்தை வேண்டாம் என்று சொன்னால் அபசகுனமாகக் கருதாதீர்கள். மன நிறைவு இருந்தால் தான் வேண்டாம் என்ற சொல் எழும். தானத்தைப் பெற பூர்வஜன்மத் தொடர்புடைய தக்க சிறுமி வரவில்லை என்றே இதன் பொருள்! பொறுமையுடன் காத்திருந்து தான தர்மங்களைச் செய்யுங்கள்!
வைகுண்ட ஏகாதசி கிரிவல மஹிமை
தசமுக தரிசன கிராமப் பகுதியில் வாழ்ந்த கோவிந்த ஈஸ்வர பட்டர் என்பவர் நல்ல பழுத்த வைஷ்ணவர். சிவ விஷ்ணு பேதங்களாய்க் கடந்த உத்தமர். வைஷ்ணவ சம்பிரதாய, ஆசார, அனுஷ்டானங்களில் சிறந்தவர். அவர் தினமும் திருஅருணாசல சிவாலயத்தில் ஸ்ரீவேணுகோபாலன் சந்நதியில் கிரிவலத்தைத் தொடங்கிடுவார். சிவராஜ சிங்க தீர்த்தமருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணன் சந்நதியில் தர்பக்ரந்தி என்னும் அபூர்வ யோக முறையில் தர்ப்பையைக் கொண்டு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தால் அது பத்தாயிரம் மடங்கு பெருகி அற்புதப் பலன்களைத் தரும். அதுவும் திருஅருணாசல க்ஷேத்திரத்தில், அதுவும் கிரிவலத்தில் மேலும் பன்மடங்காக, லட்சாதி லட்சமாகப் பெருகுமன்றோ! ஆனால் கோவிந்த ஈஸ்வரர் பட்டர் ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் சந்நதியில் கிரிவலத்தை நிறைவு செய்து தாம் தர்ப்ப க்ரந்தி முறையில் ஜபித்த ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜப பலனைப் பெருமாளின் திருவடிகளில், ஐந்து தர்ப்பைகளை சார்த்தி அர்ப்பணித்து விடுவார். இத்தகைய சுயநலமற்ற, புனிதமான அன்பினால் அவர் மஹாதேஜஸ்வியாய்ப் பிரகாசித்தார்.
ஒரு நாள்...... கோவிந்த ஈஸ்வர பட்டர் வழக்கம் போல் திருக்கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த பொழுது..... வழியில்...... ஒரு மரத்திலிருந்த பிரம்ம ராக்ஷஸன் அவரை வழிமறித்தான். “உம்மை நான் இப்போது விழுங்கப் போகிறேன்! நல்ல பக்தனை விழுங்கினால் தான் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பசியால் வாடும் என் போன்ற பிரம்ம ராக்ஷஸனின் வயிறு திருப்தியடையும், ஆனால் எவர் அனுமதியின்றியும் நான் யாரையும் தீண்டுவது கிடையாது! என்ன சொல்கிறீர்?
“ஆஹா, மிகவும் சந்தோஷம்! இத்தனை வருடங்களாக நான் யாருக்கும் பிரயோஜனமாக இல்லையே என்று வருந்தினேன்!  என் உடல் உன் பசியைத் தீர்க்குமானால் எனக்கு மெத்த மகிழ்ச்சியே! ஆனால் ஒன்று! நான் தினமும் என் இஷ்ட தெய்வமாம் ஸ்ரீவேணுகோபாலனைத் தரிசித்து, இந்த புல்லாங்குழலால் சில கீதங்களை இசைத்து வழிபடுகிறேன். இதில் நான் ஒரு நாள் கூடத் தவறியது கிடையாது! எனவே அதையும், கிரிவலத்தையும் முடித்து விட்டு வருகிறேன்!. “
“உம்மை நான் எப்படி நம்புவது? நீர் வராமல் வேறு வழியாகப் போய்விட்டால்....... “
“என்று நீ இந்த அருணாசல க்ஷேத்திரம் வந்து சேர்ந்து விட்டாயோ நீ மஹா புண்யவான் தான்! இத்தகைய புண்ய சக்தி கூடிய உன்னிடம் நாம் பொய் சொன்னால் என் உடல் அழுகி விடும் ..”
“ஊஹும்.... நான் விடமாட்டேன்.. நீர் ஒன்று செய்யுங்கள்! சொன்னபடித் திரும்பி வராவிட்டால் என்னென்ன சாபங்களை நீர் ஏற்பீர், அதைச் சொல்லிவிட்டு செல்வீராக!”
கோவிந்த ஈஸ்வர பட்டர் சொல்வாராயினார். :-
மனிதனின் கடமைகள்
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் பல கடமைகளைச் செய்யவேண்டும் :
1. தினமும் பெற்றோர்களைப் பாத பூஜை செய்து நமஸ்கரித்தல், சந்தர்ப்பம் இல்லாவிடில் மானசீகமாகவேனும் வணங்குதல்.
2. தினமும் மாலையில் சந்திவேளையில் மனைவியின் மாங்கல்யத்திற்கு மஞ்சள் பூசுதல்.
3. தினமும் குழந்தைகளுக்குத் திருமண்/திருநீறு இடுதல், இறைத் துதிகளைச் சொல்லி தருதல்.
4. தாயோ/தந்தையோ மட்டும் இருந்தால் பாதந்தொட்டு அவரை இருவேளையும் வணங்குதல்.
5. பெற்றோர் இல்லாவிடில் வீட்டில் ஏனைய பெரியோர்களை வணங்குதல்.
6. பூணூல் அணிந்து முறையாகப் பூஜைகளைச் செய்தல்.
7. கன்னிப் பெண்களுக்குத் தக்க பருவத்தில் திருமணம் செய்து வைத்தல்/உதவுதல்
8. அவரவர் பாரம்பரியத்திற்கேற்ப தீட்சை (குடுமி) வைத்தல்.
9. 32 விதமான அறங்களில் சிலவற்றையேனும் முறையாகச் செய்தல்.
10. லிகிதசாந்தி எனப்படும் தக்க கடிதங்களை உறவினர்கள்/நண்பர்களுக்கு அவ்வப்போதே எழுதுதல், இது பலருக்கு மனசாந்தியைத் தரும் மிக எளிய தவ முறையாகும்.
மேற்கண்ட கடமைகளை ஒருவன் செம்மையாகச் செய்தாலே போதும் இறை தரிசனம் எளிதில் கிட்டும். அடியேன் இவற்றை முறையாகச் செய்து வருகிறேன். நான் உன்னை ஏமாற்றினால் இந்தப் பத்து கடமைகளில் இருந்து ஒரு மனிதன் தவறினால் ஏற்படும் சாபங்களை நான் ஏற்கிறேன். பிரம்மராக்ஷஸ் நம்பிக்கையடைந்து பட்டரைப் போக அனுமதித்தான். அவரும் தம் நித்ய தரிசனம், காயத்ரீ ஜபம், கிரிவலத்தை முடித்து விட்டுக் கொடுத்த வாக்கின்படி வந்து சேர்ந்தார்.
கிரிவல பலன்கள்
“ஸ்வாமி! தங்களுடைய சத்யமான வாக்கு என்னை ஆனந்தப்படுத்துகிறது. தங்களை நான் விழுங்குவதை விட, தங்களுடைய தபோசக்தியைக் கேட்டுப் பெறலாமென்றிருக்கிறேன்! கோவிந்த ஈஸ்வர பட்டரிடம் அந்த, பிரம்மராக்ஷஸ், அவருடைய அன்றைய ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபத்தின்  ஒரு பங்கைத் தாரை வார்த்துத் தருமாறு கேட்டது. “ஸ்ரீகாயத்ரீ ஜபத்தின் ஓர் அணு அளவை அளித்தால் கூடத் தீராத இளமை, தீர்க்காயுள், பிரம்ம தேஜஸ் கிட்டும். அதனை நீ பெறுவதை விட வேறு எந்த ஜீவன் பெற்றாலும் நல்லதாயிற்றே! மேலும் இந்த சக்தியைத் தவறாகப் பயன்படுத்தினால் சாபங்கள் உனக்கு வந்து சேருமே! என் செய்வது? ”
பிரம்ம ராக்ஷஸ் யோசித்தது....
“சரி, தாங்கள் இன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்ததின் பலனின் ஒரு பகுதியை மட்டும் தாருங்கள்!”
“அப்பனே! என் உடலை வேண்டுமானால் எடுத்துக் கொள், சொல்லவும் பெரிதே இவ்வருணாசல கிரிவலம் மஹிமை! நீ என்ன, உன்னையல்லாது கோடி கோடியாம் பிரம்மராக்ஷஸ்களுக்கு உய்வைத் தர வல்லதே இக்கிரிவலம்! ஆனால் என்னுடைய கிரிவலப் பலனை ஸ்ரீபூத நாராயணப் பெருமாளிடம் அல்லவா சமர்ப்பித்து வருகிறேன். இன்றைய தினப்பலனையும், அவரிடம் அளித்து விட்டேன்! எனக்கு அதில் உரிமை ஒன்றும் கிடையாதே, மேலும் நீ கேட்கின்ற அந்த ஒரு பகுதிப் பலனால் பலகோடி தேவதைகளுக்கு மோட்சம் அளித்திடலாமே! ”
“அப்படியா! திருஅருணாசல கிரிவல மஹிமை அறியாது பேசுகிறேனா, அதுசரி, அதில் அரைப் பகுதிப் பலனையாவது தாருங்களேன். ”
“இலட்சக்கணக்கான பித்ருகளை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அந்த மகத்தான சக்தியைக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?”
இதன்பிறகு கோவிந்த ஈஸ்வரப் பட்டர் பிரம்ம ராக்ஷஸிற்கு திருஅருணாசல கிரிவல மஹிமையை ஓரளவு விளக்கலானார். இவ்வற்புதமான, புனிதமான புராணத்தைக் கேட்கக் கேட்க பிரம்மராக்ஷஸின் உடலில் ஒளி கூடி, அதன் கொடிய ரூபமும், கருமை நிறமும் குறையலாயிற்று!
“ஸ்வாமி! தங்களுடைய  ஒரு அடி கிரிவலப் பலனையாவது தருவீர்களாக  என்று பிரம்மராக்ஷஸ் வேண்டிட, “அப்பனே திரும்பித் திரும்பிச் சொல்வதையே சொல்லி என்ன பலன்? அடியேனுடைய கிரிவல பலன்களெல்லாம் ஸ்ரீபூத நாராயணப் பெருமாளுக்கே  சொந்தமானது. வேண்டுமானால் ஒன்று செய்! நீ என் உடலில் புகுந்து கொள்! உன்னைச் சுமந்து நான் ஒரே ஒரு அடியை எடுத்து வைக்கிறேன்,” என்று கூறியவாறு தன் முதுகில் பிரம்மாண்டமான அந்த பிரம்மராக்ஷஸைச் சுமந்தார்! பலத்த உருவமுடைய பிரம்மராக்ஷஸை அவரால் தாங்க இயலவில்லை! பிரம்மராக்ஷஸ் கீழே விழுந்து சற்றுப் புரண்டது! அதுவே கிரிவல அங்கப் பிரதட்சிணமாயிற்றே! அதன் பலனால் அது தோஜோமய ரூபம் பெற்று, பிரம்மராக்ஷஸ் குணம் நீங்கி, ஸ்ரீகோவிந்த பட்டரை வணங்கி சென்றது.
அப்போது அங்கு திருஅருணாசலேஸ்வரர் கோவிந்த ஈஸ்வர பட்டருக்குத் தசாவதார விஷ்ணு ரூபங்களுடன் காட்சியளித்தார். தசாவதார மூர்த்திகளும் சிவனுடன் ஒன்றி ஸ்ரீசங்கர நாராயண மூர்த்தியாய் திவ்ய தரிசனமும் தந்தனர். இவ்விடத்திருந்து மலையைத் தரிசனம் செய்வதற்கு ஸ்ரீஹரிஹர தரிசனம் என்று பெயர்.
ஜபத்ரய ஏகாதசி
வருகின்ற வைகுண்ட ஏகாதசிக்கு ஜபத்ரய ஏகாதசி என்று பெயர்.
1. இதுகாறும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை தினசரி சரிவர ஜபிக்காதோர்
2. சந்தியாவந்தனம், சூரிய நமஸ்காரம் போன்ற தினசரி பூஜைகளை (நித்யகர்மா) முறையாகச் செய்யாதோர்.
3. பித்ரு தர்ப்பணங்களை அமாவாசை, மாதப்பிறப்பு நாட்களில் ஒழுங்காகச் செய்யத் தவறியவர்கள்
ஆகியோர் மேற்கண்ட தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் தினசரி மூன்று முறை திருஅருணாசலத்தை கிரிவலம் வருதல் வேண்டும். குறிப்பாக ஜபத்ரய ஏகாதசியன்று கண்டிப்பாக ஏகாதசி திதி நேரம் முழுவதும் கிரிவலத்தில் இறைநாம ஜபம், பஜனை, தியானம் போன்ற நற்காரியங்களிலேயே ஈடுபட்டு ஸ்ரீஹரிஹர தரிசனத்தைக் கண்டு பரிபூர்ண பலன்களை பெறவேண்டும்.

ஸ்ரீசயனக்கோல ராமர்
திருப்புல்லாணி

தக்க பெரியோர்களை/ஆன்மீக நல்வழிகாட்டிகளை நாடி விளக்கம் பெறுதல் உத்தமமானது. யுவ வருட  ஜபத்ரய வைகுண்ட ஏகாதசியைத் திருஅண்ணாமலை க்ஷேத்திரத்தில் கொண்டாட இயலாதோர் இராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஸ்ரீதர்ப்ப சயனேஸ்வரர் ஆலயத்தில் 1008 முறை பிரதட்சிணம் வந்து மேற்கண்ட நற்காரியங்கள், தான தர்மங்களுடன் வைகுண்ட ஏகாதசியைக் கொண்டாடுதலும் உத்தமமானதாகும்.
தசாவதார விரதம் என்ற விசேஷமான விரதமொன்றும் உண்டு. முறையான இவ்விரதமேற்று சந்நதியில் கிரிவலத்தைத் தொடங்கி ஸ்ரீஹரிஹர தரிசனத்தைப் பெற்று ஸ்ரீபூதநாராயணர் சந்நதியில் குறித்த தானதர்மங்களுடன் கிரிவலத்தை நிறைவு செய்திட :
1. குழந்தை பாக்யம் கிட்டும்
2. பெண் சந்ததி இல்லாதோர்க்கும் பெண் குழந்தை பிறக்கும்
3. மனநோய்கள் அகலும் (தானாகச் சிரித்தல், பேசுதல் etc… )
4. திருவிடைமருதூர், திருப்பத்தூர் (மதுரை காரைக்குடி சாலையில் உள்ளது) போன்ற சிவத்தலங்களின் வாயிலில் பிரம்மஹத்தி உண்டு! இவ்வாயிலில் நுழைந்தால் அதன் வழியே திரும்பக் கூடாது, வேறு கோபுரம் வழியாகத்தான் திரும்ப வேண்டும் என்பது நியதி! அறிந்தோ அறியாமலோ இத்தவறைச் செய்தவர்கள் வைகுண்ட ஏகாதசியன்று திருஅருணாசலத்தை கிரிவலம் வந்து ஸ்ரீஹரிஹர தரிசனம் பெற்று ஸ்ரீபூதநாராயணன் சந்நதியில் பிரம்மஹத்தி ப்ரீதியாக மிகப் பெரிய அளவில் லட்டு, வடை, அதிரசம் போன்றவற்றைத் தானமாக அளித்தால் பிரம்மஹத்தி அமர்ந்தவாயிலில் வெளிவந்த தவறான தரிசனமுறையில் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். இதனை வைகுண்ட ஏகாதசியன்றோ தசாவதார விரதத்ன்றோ செய்திடலாம். தசாவதார விரதத்தில் ஸ்ரீபூதநாராயணன் சந்நதியில் கிரிவலம் தொடங்கி அங்கேயே நிறைவுறும். வைகுண்ட ஏகாதசி கிரிவலத்தில் ஸ்ரீவேணுகோபாலன் சந்நதியில் கிரிவலம் தொடங்கி ஸ்ரீபூதநாராயணன் சந்நதியில் நிறைவுறும்.
ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த புருஷரின் சில அருள் மொழிகள்
1. குருவருளின்றித் திருவருளில்லை! பிரபஞ்சத்தின் ஒவ்வொரு ஜீவனுக்கும் சற்குரு உண்டு!
2. சற்குரு ஒருவரே இறையருளைத் தரும் மேன்மை பெற்றவர். ஜோதிமயமான இறைவனே நமக்குப் புரியும் வகையில் சற்குருவாகத் தோற்றமளிக்கின்றார்.
3. சற்குருவைத் தேடி, நாடி, ஓடி அவரைச் சரணடைக! சற்குரு கிட்டும் வரை உலகறிந்த சித்தர், மஹான், யோகி, ஞானியரை ஜகத்குருவாக ஏற்பாயாக! அவர்களே தக்க குருவுடன் சரணடையச் செய்வர்.
4. இறைவனையடைய இல்லறமே எளிய ஆன்மீக வழியாகும்.
5. சத்சங்கங்கள் மூலம் அன்னதானம், வஸ்திர (ஆடை) தானம், மருத்துவ உதவி, நோயாளிகளுக்கு சரீர சேவை, ஏழை மாணவ, மாணவியரின் கல்விக்கான உதவி, கோயில்களில் உழவாரத் திருப்பணிகள் மூலம் சரீர சேவை போன்ற நற்காரியங்களை ஆற்றி வந்தால் தான் சுயநல புத்தியும், தகாத ஆசைகளும் விலகும். இதன் பிறகுதான் தியானத்தின் ஆரம்பப் பாடமே துவங்குகிறது.
6. வெறுமனே கண்களை மூடியமர்ந்தால் தியானம் கைகூடாது. மாறாகத் தகாத எண்ணங்களே சுற்றிச் சுற்றி வரும். தான தர்மங்களைச் செய்! அந்த நற்காரியங்களை எண்ணியவாறே கண்களை மூடிக் கொண்டு அமர்வாயாக! இவ்வாறு மனதை நற்காரியத்தில் இயற்கையாகச் செலுத்துதலே தியானத்திற்கான ஆரம்பப் பயிற்சி முறை.
7. ஜாதி, மத, இன, பேதமில்லாமல் தானதர்மங்களைச் செய்து கர்மவினைகளைக் குறைக்கும் நலவழிகளைக் காண வேண்டும். கர்மவினைகள் குறையக்குறையத்தான் இறைத் தரிசன வழிகள் ஆரம்பிக்கும். பணக்காரர்களால் தான் தான, தர்மம் செய்ய முடியும் என்பதில்லை. எளியோர்க்கும் உகந்த, கர்ம வினைகளைக் கழிக்கின்ற, எறும்பு, பசு போன்றவற்றிற்கு உணவளித்தல், கிரிவலம் வருவோர்க்கு நீர் அளித்தல், பூக்களை கோர்த்து இறைவனுக்குச் சார்த்துதல் போன்றவை எளியோர்க்குரிய தான தர்மங்களில் அடங்கும்.
8. இளமை, ஆர்வம், செல்வம், நல்மனம் இருக்கும் போதே இறைவனுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்து விடுவாயாக! மக்கள் சேவையே மஹேஸன் சேவை! ஆனால் இறையருள் கொண்டுதான் நாம் சேவை செய்கிறோம். எனவே அச்சேவையின் பலன்களை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும்.
9. சத்சங்கமும் இல்லற வாழ்வும் தான் தெய்வ தரிசனத்திற்கு உகந்தது. எனவே இல்லறத்தில் இருந்தவாறே சற்குருவை நாடிச் சரணடைவாயாக.
10 ஏதேனும் ஒரு நற்காரியமேனும் செய்தோம் என்ற உணர்வோடுதான் தினமும் இரவில் படுக்கச் செல்ல வேண்டும்.
11. ஒவ்வொரு நாளிலும் இறை நாம ஜபம், இறைத் துதிகளின் பாராயணம், உண்மையான தியானம், தானதர்ம நற்காரியங்கள் இவற்றில் செலவிடும் நேரமே நாம் உண்மையாக வாழ்ந்த நேரம்! ஏனைய நேரம் வீணாகக் கழித்த நேரம்! இவ்வாறு வீணாகக் கழித்த நேரங்களும் ஏனைய தீராத சாபவினைகளோடு மறுபிறவிகளாய் மாறுகின்றன.
12. ஆயிரம் பேருக்கு அன்னமிட்டால் ஆயிரத்து ஒன்றாவதாக சித்தரோ மஹானோ யோகியோ  ஞானியோ நேராக வந்து பெற்று ஆசீர்வதிக்கின்றார் இத்திருஅண்ணாமலை திவ்ய க்ஷேத்திரத்தில்!
13. திருஅண்ணாமலையில் காரண காரியமில்லாமல் சித்தர்கள் யாரும் எவருடைய இல்லத்திற்கும் செல்வதை விரும்புவதில்லை. அவர்கள் இருந்தால் வரும்போது விருப்பம் இருந்தால் தெருவில் கையேந்துவார்கள்! யாரெனத் தங்களைக் காட்டிக்கொள்ளாது கைகளை நீட்டி உணவேற்று, ஆசியை வழங்கிச் செல்வார்கள்.
14. அன்னதானத்தில் ஜாதி, மதம் இன வேறுபாடுகிடையாது. பாத்திரத்தில் இருக்கும் வரைபோடு, முடிந்து விட்டால் “ஓம்” என்று சொல்லி வணங்கிடு.
15. திருஅருணாசலத்தைக் கிரிவலம் வந்து அன்னம் பெறுவது மிகச் சிறப்புடையது ஆகும்.
16. திருஅண்ணாமலையில் முதலில் கிரிவலம் வந்தபின்னரே ஆன்மீக வழிகாட்டியைக் காணவேண்டும்.

ஸ்ரீஅகஸ்திய சித்த பாரம்பரியம்

ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் – ஸ்ரீஅகஸ்திய சித்த பாரம்பரியம்
ஸ்ரீஅகஸ்திய மஹாசித்த புருஷரின் பாரம்பரியத்தில் உதித்து அன்றும் இன்றும் என்றும் பிரபஞ்சமெங்கும் அருட்பெருஞ் ஜோதியாய்ப் பிரகாசிக்கும் எண்ணற்ற சித்த புருஷர்களில் ஸ்ரீஅஸ்தீக சித்தர், ஸ்ரீசதா தபசித்தரின் வரிசையில் கலியுகத்தில் திருவுடல் பூண்டு தோன்றியும் தோன்றாமலும் அருள்புரிபவரே ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த புருஷ ஸ்வாமிகள். இவருக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நாமமுண்டு!
ஸ்ரீலஸ்ரீ சிவகுரு மங்களகந்தர்வ இடியாப்ப ஈச சித்த புருஷரால் அரவணைக்கப் பெற்று அவரிடம் குருகுல வாசம் பயின்று இன்று நமக்கு அருள்புரிந்து வருபவரே ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள்.
ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த புருஷரால் திருஅண்ணாமலை ஜோதி அலங்கார பீடாதிபதியாக ஸ்ரீகிரந்த வாக்தத்வ ரீதியில் பொறுப்பேற்றுத் தம் சற்குருவின் அருளாணையை சிரமேற்கொண்டு அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தான தர்மங்களை மக்கட்சேவையே மகேசன் சேவையெனப் பூண்டவர்தாம் ஜோதி அலங்கார பீடாதிபதி, சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்.
தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த புருஷரின் ஆக்ஞைப்படி திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் தசமுக தரிசனம், அருகில் அதிகார நந்தி – எழுத்து மண்டபத்திற்கருகில் சிவசக்தி ஐக்ய ஸ்வரூப மலை தரிசனம் கிட்டும் இடத்தில் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தை நிர்மாணித்து வருகிறார் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்.
ஸ்ரீலஸ்ரீ சிவகுருமங்கள கந்தர்வா இடியாப்ப ஈச சித்த மஹாபுருஷரின் அருள்மொழிகளையே குரு கட்டளையாக ஏற்று அருட்தொண்டாற்றி வரும் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தம் எட்டுவயதில் இளம் பிராயத்திலிருந்தே செம்மையான அறப்பணிகளில் ஈடுபட்டு வேத, மந்திர ஞான வழிகளில் உத்தம சற்குருவால் உய்வு அடையப் பெற்று இன்று நம்மிடையே அருள்வழி காட்டி ஒளிர்கின்றார்கள்.
தாமே நல்லறமாம் இல்லறத்தை மேற்கொண்டு “இல்லற தர்மமே ஈசனை இங்கு எளிதில் காட்டும்” என்பதைப் பல்வேறு இல்லற அறப்பணிகளின் மூலம் போதித்து, தாமே கடைபிடித்து, நடைமுறையில் நிலை நாட்டியும் போதித்தும் வருகின்றார்கள்!
அருட்பணிகள்
ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தம்முடைய குருகடாட்சத்தால் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பாண்டிச்சேரி மற்றும் பல இடங்களில் பல சத்சங்கங்களை ஏற்படுத்தி அவை மூலம் ஆற்றி வரும் பல நற்பணிகளாவன :-
1. திருஅண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழா, மாதாந்திரப் பௌர்ணமி, மஹாளய அமாவாசை, மாசி மகத் திருநாள் போன்ற விசேஷ நாட்களில் அன்னதானம், படுக்கைகள் தானம் போன்ற பலவகை தான தர்மங்கள்
2. வாரந்தோறும் சென்னை, திருச்சி, தஞ்சை போன்ற இடங்களில் சத்சங்க அமைப்பின் மூலம் கோயில் உழவாரத் திருப்பணிகள் – திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தை மையமாகக் கொண்டு பல்வேறு இடங்களிலும், இல்லறத்திலுள்ள அன்பர்கள், பெரியோர்கள், அவர்தம் பிள்ளைகள், பேரன், பேத்திமார்கள் அனைவரையும் சத்சங்க அமைப்பில் பிணைத்து பழங்காலக் கோயில்கள் பாடல் பெற்ற ஸ்தலங்கள், 108 வைணவத் தலங்களில்  உழவாரத் திருப்பணிகள் புரிதல், அனாதையாக இறந்தோர்க்கு ஈமக்கிரியைகளை முறையாகக்ச் செய்தல்
இதுவரையில் இறையருளால் ஸ்ரீரங்கம் திருஆனைக்கோயில், தஞ்சை ஸ்ரீபிருஹதீஸ்வரர் ஆலயம், குணசீலம், திருவெள்ளறை, திருவாசி போன்ற 200க்கும் மேற்பட்ட சிவ-விஷ்ணு ஆலயங்களில் உழவாரத் திருப்பணிகளை இறைப் பெருங்கருணையால் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஏற்று நடத்தியுள்ளார்கள்.
3. சென்னையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் மாதந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி அளித்தல்
4. திருஅண்ணாமலையைக் கிரிவல்ம் வரும் அன்பர்களுக்கு கார்த்திகை தீபப்பெருவிழாவில் பத்து நாட்களுக்கு மேலாகவும் மற்றும் மாதாந்திரப் பௌர்ணமி தினங்களிலும் அன்னதானத்தோடு, தாகசாந்திக்கான பானங்களை வழங்குதல், திருஅண்ணாமலையின் பெருமையை விளக்குதல்.
5. ஜாதி, மத, இன பேதமின்றி, மஹாமகம், மாளய அமாவாசை, தீபாவளி போன்ற புனிதத் தினங்களில் திருவள்ளூர் (சென்னை), திருவிடைமருதூர், சக்கரப் படித்துறை (கும்பகோணம்) போன்ற இடங்களில் அன்னதானம், வஸ்திர தானத்துடன் தக்க முறைகளுடன் பலருக்கும் பித்ரு தர்ப்பண முறைகளை விளக்கி அவர்களுக்குத் தர்ப்பண பூஜைகளைச் செய்ய உதவி புரிதல்.
6. வீடு வாசலற்று நடைபாதைகளில் வாழும் ஏழைகளுக்கு வஸ்திர தானம், காலணிகள் தானம், பாய்- தலையணை போன்ற படுக்கை தானங்கள்
7. ஜாதி, சமய வேறுபாடின்றி பொன் திருமாங்கல்யம் அளித்து ஏழைகளின் திருமணங்களை நடத்தி வைத்தல்.
8. புராதனக் கோயில்களில் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்வதற்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் கைங்கர்யத்தை நடத்தித் தருதல்
9. மனநோய்/ஊனமுற்ற குழந்தைகளுக்கான மருத்துவமனை, குணசீலம் மன நோயாளிகள் விடுதி போன்ற பல மருத்துவமனை, விடுதிகளில் கிருமி நாசினிகள், டெட்டால் போன்றவற்றால் சுத்தம் செய்து நோயாளிகளுக்கு சரீரப் பணியை மேற்கொள்ளுதல்
10. 108 வைணவத் தலங்கள் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு திருப்பணியை ஏற்று நடத்தித் தரும் அறப்பணி
11. காவிரிக் கரையிலுள்ள 247 ஆலயங்களில் ஒவ்வொன்றிலும் ஏழை, எளியோர்களை ஈடுபடுத்தி அவர்கள் நல் வாழ்விற்காக ஹோமம் நடத்துதல்
12. ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் மேன்மையை ஸ்ரீகாயத்ரீ தபஸ் முத்திரைகளின் மூலம் மக்களுக்குப் பரப்புதல்
13. வாரந்தோறும் சத்சங்க கூட்டு நாம சங்கீர்த்தனம்
14. வசதியற்ற மாணவ-மாணவியருக்குப் படிப்புக் கட்டணம், சீருடை, புத்தகங்கள் ஏனையவையளித்தல்
15. ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஆன்மீக மாத இதழின் மூலம் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த புருஷரின் அருள்மொழிகள், விசேஷ தினங்களின் மஹிமை, திருஅண்ணாமலை கிரிவல மஹிமை, எளிய தியான, யோக முறைகள் போன்ற ஆன்மீக பொக்கிஷங்களை சாதாரண மக்களும் அறியும்படி வெளியிடுதல்
16. மாங்கல்ய மஹிமை, பிரதோஷ மஹிமை, சாம்பிராணி, தூபமஹிமை ஸ்ரீஆயுர்தேவி மஹிமை போன்ற ஆன்மீக  பக்தி நூல்களை வெளியிடுதல்
- மற்றும் ஏனைய நற்பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கிரிவலத்தின் போது திருஅண்ணாமலையில் அனுஷ்டிக்க வேண்டிய நியதிகள்
1. செருப்பு அணிந்து கொண்டு எக்காரணம் கொண்டும் கிரிவலம் வரலாகாது. கோயிலில் பிரதட்சிணம் வரும்போது செருப்பை அணிவதுண்டா? திருஅண்ணாமலையே சாட்சாத் பரமேஸ்வரனின் திருமேனி ஆகையால் கிரிவலப்பாதை என்பது கோயில் பிரகாரம் என ஆகின்றதல்லவா! அப்படியானால் கிரிவலத்தில் செருப்பு அணிவது  தவறு தானே!
2.  கால் ஆணி, வீக்கம் போன்ற கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் கூட ஆங்காங்கே அமர்ந்து நன்றாக உண்டு இளைப்பாறி மெதுவாக ஆனால் செருப்பின்றியே கிரிவலம் வரவேண்டும்,
3. இயன்றவரை ஆண்கள் சட்டை அணியாது, வேட்டியையும் பஞ்சகச்ச முறையில் அணிந்து கிரிவலம் வருவது விசேஷமானதாகும். இடுப்பில் வேட்டி துண்டுடன் மட்டும் பௌர்ணமியில் கிரிவலம் வருகையில் தான் மலையின் அபூர்வமான மூலிகைக் காற்றும், அற்புதமான கற்களின் ஒளிக் கிரணங்களும், சிரசு முதல் பாதம் வரை ஊடுருவிச் சென்று நன்மை பயக்கும்.
4. கிரிவலம் வருகையில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நடைபோல் மெதுவாக நடந்து வர வேண்டும் என்பது நம் பெரியோர்களின் நியதி. ஆனால் பிரார்த்தனை, வைராக்யம் காரணமாக மட்டும் ஒரே நாளில் இரண்டு மூன்று கிரிவலங்களை மேற்கொள்ள விரும்புவோர் வேகமாகவோ ஓட்டமாகவோ  கிரிவலம் வருவதில் தவறில்லை.
5. இயன்றவரை பிரார்த்தனை எதுவும் இல்லாமல் கிரிவலம் வருவதே சிறந்ததாகும். வலிய பிரார்த்தனை, நெடிய பிரார்த்தனை, கோர பிரார்த்தனை, அகோர பிரார்த்தனை, கபளீகரப் பிரார்த்தனை எனப் பல வகைகள் உண்டு.
கிரிவலத்தின் முழுப் பலன்களில் பெரும்பான்மையானவை பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கே சென்றுவிட்டால் பரிபூரண பலனை, அந்த சத் சித் ஆனந்தத்தை என்றுதான் அனுபவிப்பது?
கடினமான பிரதட்சிணங்கள் ஏன்?
6. அங்கபிரதட்சிணம், முட்டிப்ரதட்சிணம், நிர்ஜல விரதப் பிரதட்சிணம், தவழ் பிரதட்சிணம் போன்ற உடலை வருந்தும் ப்ரதட்சிண முறைகள் தேவைதானா என்ற வினா எழும்.
a) நம்முடைய அங்கங்களால் முறையற்ற காமம், பேராசை, நிராசை, க்ரோதம், கோபம், சினம் கொண்டு எத்துணை ஜீவன்களுக்கு உடல், மன வருத்தங்களை அளித்திருக்கின்றோம்.
b) அதிகாரம், ஆணவம், பதவி, உடல் வலிமை, செல்வம், செல்வாக்கு அரசியல் காரணமாக எத்துணை பேர்களை அடித்து, உதைத்து, வதைத்து, துன்புறுத்தி இருப்போம்.
c) இவற்றிற்குப் பரிகாரமாக மட்டுமல்லாது நாம் உண்டுகளித்த மீன், கோழி, நண்டு, ஆடு, மான், பன்றி போன்ற ஜீவன்கள் பெற்ற மிருகவதைகளுக்கும் ஜீவ காருண்யப் பரிகாரமாகவும், அத்தகைய ஜீவன்களை இம்சை செய்த வருத்தங்களை நம் உடலில் ஒரு சிறிதேனும் ஏற்க வேண்டுமல்லவா!
இதற்காகவே தான் இத்தகைய உடலை வருத்தும் நடைகிரிவலம், அடி அங்கப் ப்ரதட்சிணம் போன்றவை! கொடிய கர்ம வினைகளைக் கழிக்கும் வகையில் சற்றுக் கடினமான உடல் சேவை அவ்வளவே! இத்தகைய கடினமான பிரதட்சணங்களை மேற்கொள்ளும் முன் நல்வழி முறைகளை அறியத் தக்க சற்குருவை நாடுதல் நலம்.
7. கிரிவலத்தில் குடும்பக் கதைகள், அலுவலக விஷயங்கள், வேதனைகள் போன்று எதனையும் பேசாது, ஹரி, ஹர, முருக, ஐயப்ப, கோவிந்த போன்ற இறை நாமங்களை உரக்கவோ மனதினிலோ ஜபித்து வருவதே உத்தமமானது. கூட்டு நாம சங்கீர்த்தனத்திற்கு அதிக சக்தி உண்டு.
8. பஞ்சாட்சரம், அஷ்டாட்சரம், சடாட்சரம், சண்முக, சக்தி மந்திரங்களுக்கு கிரிவலத்தில் பன்மடங்கு சக்தி உண்டன்றோ!
9. பொடி, புகையிலை, மது, புகை, போதை பொருட்கள் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் கிரிவலத்தில் பயன்படுத்தலாகாது. மீறிடில் பஞ்சமா பாதகங்களின் விளைவுகளை எதிர்நோக்க வேண்டும். தாம்பூலத்தை (புகையிலை இன்றி) முறையோடு தேவையான சமயத்தில் மட்டும் தரிப்பதில் தவறில்லை.
10. பெண்கள் கிரிவலத்தில் மடிசார் முறையில் சேலை அணிந்து வருதலால் சுழுமுனையில் (இருநாசி சுவாசம்) சுவாசம் சீராக அணிகின்றது. திலகம், வளையல், மெட்டி, கொலுசு, ஆபரணங்கள், மஞ்சள் சரடு, மாங்கல்யம் இவற்றின் மூலம் பௌர்ணமி கிரணசக்தி, மூலிகைகள், அற்புதக் கற்களின் சக்தி அவர்கட்குக் கிட்டுகிறது. பெண்களின் நீள் முடியமைப்பும் ஆன்மீக, தெய்வீக சக்தியினை  ஆகர்ஷிக்கும் சக்தியுடையதாகும்.
11. திருஅண்ணாமலையில் செய்யப்படும் தான தர்மங்கள், ஹோம, வேள்வி, யாகங்கள்ம் பூஜைகள், போன்ற நற்காரியங்களுக்கு ஆயிரம் மடங்கு பலன் உண்டு. எனவே கிரிவலத்தின் போது இயன்ற தான, தர்மங்களைச் செய்தல், சாம்பிராணி தூபம் இட்டு வருதல் சிறப்பானதாகும்.
12. கிரிவலம் வருகையில் எக்காரணம் கொண்டும் பசுவை அடித்தலோ, விரட்டுதலோ, துரத்துதலோ கூடாது.
13. கிரிவலம் வருகையில் அன்னதானம், ஆடைதானம் மற்றும் நாய், குரங்கு, போன்றவற்றிற்கு பிஸ்கட்/உணவு அளித்தல், மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம், ஆடைதானம் போன்ற அனைத்து வித தானங்களையும் இயன்ற வரையில் செய்து வந்தால்தான் நம்முடைய பலவிதமான கர்மவினைகளு தீர்வுபெறும்.
கிரிவல முறை
பொதுவாக சித்தர்களுடைய கிரிவல முறையானது கோயிலினுள் தெற்கு கோபுரம் அருகே பிரம்ம தீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீபிரம்ம லிங்கத்தில் துவங்கி தெற்கு கோபுரம் வழியே ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயம், செங்கம் சாலைவழியே தொடர்ந்து இறுதியில் ஸ்ரீபூதநாராயணன் பெருமாள் ஆலயத்தில் நிறைவு பெறுகிறது. இதனை பொதுவான நியதியாக நாம் ஏற்கலாம்.
அஷ்டலிங்கம் தரிசனம், தீர்த்தவாரி, ஆலயதரிசனம் இவற்றோடு கூடிய கிரிவலமுறை சற்று மாறுபடும். பிரார்த்தனைகளுக்கேற்ப முறையான கிரிவலம் வருதற்குப் பல நல்வழி முறைகள் உண்டு. அவற்றைத் தக்க சற்குருவிடம் கேட்டறிந்து கிரிவலத்தின் பரிபூரணமான முழுப் பலன்களையும் பெறுவீர்களாக! சற்குருவே அனைத்தையும் அருளும் வல்லமை பெற்றவர்.
திருஅண்ணாமலை கிரிவலம் ஞாயிறு கிரிவல மஹிமை
திருஅண்ணாமலையை ஞாயிற்றுக்கிழமையன்று கிரிவலம் வருவதால் கிட்டும் ஆன்மீகப் பலன்களை இங்கு காண்போம். ஞாயிறு கிரிவலத்தின் லௌகீக பலன்கள் செப்டம்பர் 1995 இதழில் விளக்கப்பட்டுள்ளது.
 கலியுகத்தில் ஒரு சாதாரண மனிதன் தெய்வீகத்தில் நன்கு ஈடுபட்டு உத்தம நிலையடைய வேண்டுமெனில் நல்ல விஷயங்களையே நாட வேண்டும். நல்லெண்ணங்களிலே மனதைச் செலுத்த வேண்டும். நற்காரியங்களில் தான் ஈடுபட வேண்டும். இன்றைய கலியுகச் சூழ்நிலையில் இது சாத்யமா?
சத்சங்க அமைப்பில் இணைந்தால் மேற்கண்ட மூன்றும் சாத்யமே! கோயில் உழவாரத் திருப்பணிகள், ஏழை எளியோர்க்கு அன்னதானம், மருத்துவ உதவி போன்ற சேவைகள், தல யாத்திரைகள் போன்ற நற்காரியங்களை நிகழ்த்தி வருகின்ற, தெய்வீகப் பண்புகள் நிறைந்த ஆன்மீக, வழிகாட்டிகள், நடத்துகின்ற சத்சங்கங்கள் தற்காலத்தில் நிறைய உள்ளனவே! ஆழ்ந்த நம்பிக்கையோடு சற்குருவைத் தேடிடில் இவ்வரிய ஆன்மீகப் பிணைப்பாம் சத்சங்க பாக்யம் நிச்சயமாகக் கிட்டும்.
முன்னுக்கு வர உதவும் தெய்வ சக்திகள்
கீரை மிகுந்த சத்தானது, ஆனால் அதை உண்டால் தானே சக்தியைப் பெற முடியும். அதேபோல் நல்லெண்ணங்களையும், நல்விஷயங்களையும், நற்காரியங்களையும் நாடித் தேடி அலைந்தால் தானே பெற முடியும்! அப்படிப் பெற்றாலும் நல்லவை அனைத்தையும் கிரஹிக்கக் கூடிய சக்தியை புத்தியும், மனமும் பெற வேண்டுமே! எத்தகைய நல்விஷயங்களும் மனதில்  நீடித்து நிற்பதில்லையே!
புத்தியின் எட்டு விதமான செயல்களை முறைப் படுத்துவதே ஞாயிற்றுக்கிழமையன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதால் கிட்டும் அற்புதப் பலன்களில் ஒன்றாகும். கிரிவலத்தில் ஸ்ரீகாயத்ரீ தரிசனம் என்ற ஒன்றுண்டு. ஞாயிறு தினத்திற்குரிய ஸ்ரீசூரியபகவானும் ஞாயிறன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்றார். ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிப்பதின் பலனான நல்புத்தியைத் தூண்டுகின்ற ஜோதியாம் பரஞ்ஜோதி யாம் திருஅருணாசல சர்வேஸ்வரனே, ஸ்ரீகாயத்ரீ தரிசன ரூபத்தில், நம் புத்தியைத் தூண்டி அதன் எட்டுவித செயல்பாடுகளையும் புனிதப்படுத்தி தெய்வமயமாக்குகிறார்.
புத்தியின் எட்டுவித செயல்பாடுகள்
1. கேட்டல் (ஸ்ரவணம்) : கலியுகச் சூழ்நிலைகளில் ஆயிரமாயிரம் விஷயங்களைக் கேட்ட போதிலும் ஞாயிறன்று செய்கின்ற திருஅருணாசல கிரிவலம் மூலம் சத்விஷயங்களே, நல்விஷயங்களே நற்செவிகளையடையும். மலையில் உள்ள அற்புத தெய்வீக சக்தி வாய்ந்த கற்களின் பிரகாசமான ஒளிக் கீற்றுகள் நல்லதை மட்டும் கேட்கின்ற தெய்வீக சக்தியை புத்திக்கு அளிக்கின்றன. காதில் கடுக்கண் அணிந்து கிரிவலம் வந்திடில் இந்த தெய்வீக ஆற்றல் பல்கிப் பெருகும்.
2. தானம் : நல்ல விஷயங்களைக் கேட்டால் மட்டும் போதுமா, அவற்றை புத்தியின்பால் நிலைகொள்ளச் செய்ய வேண்டுமே! இதற்கான புத்தியின் நாளங்களைப் புனிதப் படுத்துவதே திருஅண்ணாமலை கிரிவலம்! மலையின் பரிசுத்தமான வாயுமண்டலக் காற்று இவ்வாற்றலை புத்திக்கு அளிக்கின்றது.
3. ஸ்மரணம் : புத்தியில் நிலை நிறுத்திடினும், தேவையானபோது நல்விஷயங்கள் நினைவிற்கு வர வேண்டுமே! தக்க  தருணத்தில் குறித்த நல்விஷ்யங்கள் நினைவில் கூறுவதற்குத் திருஅருணாசல கிரிவலம் துணை புரிகின்றது! மலையிலுள்ள அற்புத மூலிகைகளின் சக்தி இவ்வாற்றலைத் தருகின்றது.
4. பிரவசனம் : புத்தியில் நிலை நிறுத்தி, நினைவிற்குக் கொண்டு வருகின்ற நல்விஷயங்களை பிறருக்கும் எடுத்துரைத்தால் தானே நல்சக்தி பரிணமிக்கும். இந்த ஆற்றலைப் பரிபூரணமாகத் தருவதும் திருஅண்ணாமலை கிரிவலமே! திருஅண்ணாமலை தீர்த்தங்களின் தரிசனம், ஸ்பரிசம், புத்திக்கு இவ்வரிய ஆற்றலைத் தருகின்றது.
5. வியூகம் : அனுபவங்களை நற்பெரியோர்களுடன் பரிமாறிக் கொள்ளுத்லால் புத்திக்கு அரிய அனுபவ முதிர்ச்சி கிட்டுகின்றது. இதனைத் தரவல்லது திருஅருணாசல கிரிவலம். உருவ, அருவ, பல ரூபங்களில் கிரிவலம் வரும் கோடிக்கணக்கான சித்தர்கள், மஹரிஷிகள், ஞானிகள், யோகிகள், முமூட்சுக்கள், மஹான்கள், முனிபுங்கவர்களின் பாததூளிகள் இத்தகைய நல்அனுபவங்களின் சக்தியை புத்திக்கு அளிக்கின்றன.
6. ஆபோசனம் :  எதை, எங்கு, எங்ஙனம், எவ்வாறு உரைப்பது என்பதே வாக்கு சக்தியாகும். “வளம்பட உரை” எனப் பெரியோர்கள் இதனைக் கூறுவர். இத்தகைய வாக்சக்தியை புத்திக்கு அளிக்க வல்லது ஞாயிறு அன்று திருஅண்ணாமலையை வலம் வருவதாகும். இவ்வற்புத தெய்வீக சக்தியைத் தருவது கிரிவலத்தில் உள்ள பல நந்திகளின் தரிசனமாகும்.
7. அந்தர் தியானம் : எதை, எங்கு, எங்ஙனம், எவ்வாறு கூறலாகாது என்பதும் வாக்சக்தியின் ஓர் அம்சமான மௌன சக்தியாகும். “தகாதன உரையேல்” என்பது ஆன்றோர் வாக்கு. இச்சக்தியை அளிப்பதும் ஞாயிறு கிரிவலமே! அஷ்டதிக்கு லிங்கங்களின் ஆகர்ஷண சக்தி இத்தெய்வீக சக்தியைத் தந்தருள்கின்றது.
8. தத்வக்ஞானம் : மேற்கண்ட ஏழு தெய்வீக ஆற்றல்களின் தொகுப்பே மெய்யறிவு காண்பதாகும். அனைத்தும் இறைவனின் செயல்பாடே என்ற மெய்யறிவைத் தரவல்லது திருஅருணாசல கிரிவலமே. திருஅண்ணாமலையை தரிசித்தவாறே கிரிவலத்தில் ஒவ்வொரு விதவிதமாகத் தோன்றுகின்ற ஆயிரமாயிரம் மலைதரிசனங்களே மெய்யறிவு காணும் எட்டாவது ஆற்றலை புத்திக்கு அளிக்கின்றன.
ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் உட்பொருளும், மந்திர ஜப பலனும், புத்தியைத் தூண்டுமாறு செய்யும் ஜோதியும் மெய்யறிவின் ஞானமாகும். இத்தகைய எட்டு விதமான தெய்வீக ஆற்றல்களை அளிக்க வல்லது ஞாயிறு கிரிவலமாகும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam